in ,

இன்று முதல் இவள் செல்வி (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

            ஈஸிசேரில் சாய்ந்து அமர்ந்திருந்த நாகராஜனின் மூளைக்குள் சிந்தனைப் பூச்சிகள் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன. 

            அவர் மனைவி பார்வதி தரையில் அமர்ந்திருந்தாள்.  அவள் விரல்கள் முறத்திலிருந்த அரிசியைக் கிளறிக் கொண்டிருக்க,  மனசு மட்டும் ஏதோ சிந்தனையில் லயித்திருந்தது.

             “வர.. வர ஜனங்க புத்தி ரொம்பக் கெட்டுப் போயிடுச்சுடி” என்றார் நாகராஜன்.

            அவர் அந்த வார்த்தைகளை ஏன் சொல்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட பார்வதி, “எங்க பெரியண்ணன் இப்படி இருப்பார்ன்னு நான் எதிர்பார்க்கலைங்க” என்றாள்.

            “பணம்ன்னா பொணமும் வாய் திறக்கும்”னு சும்மாவா சொன்னாங்க?” புன்னகையோடு சொன்னார் நாகராஜன்.

             “ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இதே பெரிய அண்ணன்கிட்ட நான் வாய் விட்டுக் கேட்டேன்… “கொழந்தைகளுக்குத்தான் பரிட்சை லீவு விட்டாச்சே… எங்க ஊருக்கு அனுப்பி வைக்கலாமில்லே?… ஒரு மாசம் இருந்திட்டு வரட்டும்”ன்னு…. அதுக்கு “நீங்கெல்லாம் கிராமத்துக்காரங்க! அதுக எல்லாம் டவுன்லேயே வளர்ந்த கொழந்தைக!…. உங்க ஊரும்…. வீடும்… அதுகளுக்கு சரிப்படாது!… இன்ஃபெக்‌ஷன் ஆயிடும்”ன்னு!… பேசினாரு” பார்வதியின் முகத்தில் கோபம் தெரிந்தது.

             “இப்ப நாம வசதியாயிட்டோம்… வருஷக்கணக்குல இழுத்திட்டுக் கிடந்த சொத்துக்கேஸ் முடிஞ்சு… பூர்வீக சொத்து மொத்தத்துக்கும் நானே உரிமைக்காரன்!னு தீர்ப்பாயிடுச்சு!…. சுத்தமா ஏழு கோடி”.

     “நாம ஒரு குழந்தையைத் தத்தெடுக்கப் போறதா வேற சொல்லியிருக்கோம்!… சும்மா இருப்பாரா எங்க அண்ணன்?.. அதான்  வந்து  “எங்க வீட்டுக் கொழந்தைகள்ல ஒண்ணைத் தத்தெடுத்துக்கங்க!…”னு நிக்கறாரு!…. இப்ப மட்டும் இந்த வீடும்…. ஊரும் அவங்க குழந்தைகளுக்கு சரிப்படுமாக்கும்?” கழுத்தை நொடித்தாள் பார்வதி.

            “’அட பெரிய அண்ணன்தான் அப்படி… சின்ன அண்ணனாவது சரியா இருப்பாரா?ன்னு பார்த்தா…. அதை விடக் கில்லாடியாவல்ல இருக்காரு”

             “பெரிய அண்ணனாவது தன்னோட ரெண்டு கொழந்தைகள்ல ஒண்ணைத்தான் தத்தெடுத்துக்கச் சொன்னார்… சின்னவரோ தனக்கு இருக்கற ஒரே பையனைத் தத்துக் குடுக்கறேங்கறார்…. “எனக்கு குழந்தை இல்லைன்னா பரவாயில்லை”ங்கறார்…. எல்லாம் சொத்துக்காக!”

             பார்வதி எழுந்து சமையலறைக்குள் புகுந்ததும், ஈஸி சேரில் சாய்ந்து படுத்தார் நாகராஜன்.  மனம் தன் இளைய சகோதரி சாவித்திரியைச் சந்தித்த நிகழ்வை அசை போட்டது.

             “அண்ணே… மாப்பிள்ளை பொறுப்பில்லாத மனுஷன்!.. அதை வெச்சுக்கிட்டு  மூணு பிள்ளைகளையும் எப்படிக் கரையேத்துவேன்னு நெனச்சா… எனக்கு பயமாயிருக்கண்ணே”

             “……………………………”

             “நீ கவலைப்படாதே… உன் பொண்ணுல ஒண்ணை நான் தத்தெடுத்துக்கறேன்’ன்னு சொல்ல வாய் வருதா?…. யாரோ பெத்துப் போட்ட அனாதைக் குழந்தைய தத்தெடுக்க போறேங்கறியே… நீயெல்லாம் அண்ணனா?”  கண்ணைக் கசக்கியவளிடம் வந்த பார்வதியிடம்,

             “அண்ணி…. நீங்களாவது சொல்லப்படாதா?” ஆதரவைக் கோரினாள் சாவித்திரி.

            ஆறு மாதங்களுக்கு முன் தன்னை “மலடி” என்று கிண்டல் செய்ததும்,   அதற்காக பல நாட்கள் தான் கண்ணீரும் கம்பலையுமாய்க் கிடந்ததும் பார்வதியின் ஞாபகத்தில் வர முறுவலித்தாள். “சரி… சரி…. நான் சொல்றேன்…” சும்மாவாகிலும் சொல்லி வைத்தாள்

             “சார்… போஸ்ட்”

            எழுந்து சென்று வாங்கி வந்த நாகராஜன் அனுப்பியவர் முகவரியைப் பார்த்தார்.

            மூத்த சகோதரி சரஸ்வதி அனுப்பியிருந்தாள்.  

            ஒரு நமுட்டுச் சிரிப்புடன் பிரித்தவர் மொத்தத்தையும் படித்து விட்டு  “பார்வதி…” சமையலறையைப் பார்த்துக் கத்தினார்.

            வந்தவளிடம் கடிதத்தை நீட்டினார்.  வாங்கிப் படித்தவள் ‘க்ளுக்” கென சிரித்தாள்.

             “கல்யாணமாகி எட்டு வருஷமாச்சு…. இது வரைக்கும் நாம கண்ணுக்குத் தெரியலை… இப்ப சொத்து வந்ததும் என் அக்காவுக்கு தம்பி ஞாபகம் வந்திடுச்சு!… பாசம் பொத்துக்கிடுச்சு… கிளம்பி வர்றாளாம்…!” வெறுப்பாய்ச் சொன்னார் நாகராஜன்.

             “பார்வதி…. அந்தப் பொண்ணு பொறந்தப்ப நாமே போய்  “இந்தக் குழந்தைய  தத்துக் குடுங்க”ன்னு கேட்டோமே?”

            “நாங்க என்ன குழந்தைகளைத் தயாரிச்சு வியாபாரம் செய்யற கம்பெனியா வெச்சிருக்கோம்”ன்னு சொன்னாங்களே?” என்றாள் பார்வதி

             “அப்ப நான் சாதாரண குமாஸ்தா…. வருமானம் கம்மி… ஓட்டு வீடு.. ஓட்டை சைக்கிள்…. இப்ப பெரிய சொத்துக்காரன்… காரு… பங்களா..ன்னு வசதி ஆயிட்டேனல்ல?…அதான் ஒட்டிக்க வர்றாங்க!”

            இருவரும் வாய் விட்டுச் சிரித்தாலும் அடி மனதில் சோகத்தின் ஆணி வேர் இறுக்கமாய்ப் பிடித்திருந்தது இருவருக்கும்.

            “என் கூடப் பொறந்தது ரெண்டு பெண்கள்… ரெண்டு பேரும் சுயநலப் பிசாசுகள்” நாகராஜன் சொல்ல,

             “என் கூடப் பொறந்தது ரெண்டு அண்ணனுக… ரெண்டு பேரும் வெட்கம் கெட்ட பொறப்புக” என்றாள் பார்வதி.

            சில நிமிடங்களுக்குப் பிறகு “ஏங்க… நாம எந்த விதத்திலும் நமக்கு சொந்தமே அல்லாத இடத்துலிருந்து குழந்தையை தத்தெடுத்து வளர்த்தால் என்ன?”

            நிதானமாய் யோசித்த நாகராஜன் “பார்வதி… கௌம்பு… வெளிய போயிட்டு வரலாம்” என்று சொல்லிக் கொண்டே எழுந்தார்.

            யோசித்தவாறே எழுந்தாள் பார்வதி.

            தெருவில் இறங்கி ஆட்டோ பிடித்து, “மேலத்தெரு போப்பா” என்றார்

            மேலத் தெருவில்  சாக்கடைகளின் நாற்ற மாநாடு நடந்து கொண்டிருந்தது. மூக்கைப் பொத்திக் கொண்டே நடந்தனர் நாகராஜனும், பார்வதியும்.

சற்றுத் தாழ்வான ஓட்டு வீட்டினுள் குனிந்து நுழைந்த நாகராஜனைப் பின் தொடர்ந்த பார்வதியின் முகத்தில் குழப்பம். “இங்க எதுக்கு என்னைக் கூட்டிட்டு வந்திருக்கார்?”

            இவர்களின் வரவு கண்டு எழுந்து நின்ற அந்தப் பெண்ணைப் பார்த்ததும் “நூர்ஜஹான்…?…உங்க வீடா இது?” பார்வதி கேட்டாள்.

            அவளும் “பார்வதியம்மா… எப்படி இருக்கீங்க?” வேகமாய் வந்து பார்வதியின் கைகளைப் பற்றிக் கொண்டாள்.

           சுவரோரமாய் மூன்று குழந்தைகள் எலும்பும் தோலுமாய் அமர்ந்திருந்தன. 

          “நீங்க… என் வீடு தேடி?…” நூர்ஜஹான் கேட்க,

          “நாங்க உன்கிட்ட உதவி கேட்டு வந்திருக்கோம்”  என்றார் நாகராஜன்

         “அய்யா… நான் உங்க வீட்டுல வேலைக்காரியா இருந்தவ…. நீங்க… என் கிட்ட உதவி?… புரியலையே?”  

             “அம்மா… நூர்ஜஹான்!… என் மனைவி மூணு தடவை கரு உண்டாகி…. மூணு தடவையும் கருக்கலைந்து… உடல் நலம் பாதிக்கப்பட்டுக் கிடந்தப்ப…. ஒரு சகோதரி மாதிரி கூட இருந்து… அருவருப்புக் காட்டாம நீ பணிவிடைகள் செய்தாய்!…”

     “அய்யா…?” நூர்ஜஹான் சங்கோஜப்பட்டாள்.

     “சமீபத்துல இங்க சிட்டில நடந்த கலவரத்துல உன் வீட்டுக்காரர் இறந்த விஷயம் எங்க காதுக்கு வந்த போது… உடனே வரலாம்னுதான் நினைச்சொம்!… ஆனா அப்ப சூழ்நிலை சரியாய் இல்லாததால்… வரலை!.. அதான் இன்னிக்கு வந்திட்டோம்!…”சொல்லி விட்டு, தன் கோரிக்கையைச் சொன்னார் நாகராஜன்.

     அதைக் கேட்டு நூர்ஜஹான் அதிர்ச்சியடைய, பார்வதி கைதட்டி தன் கணவரின் முடிவை ஆமோதித்தாள்.

            “நீங்க… எங்க குடும்பத்துக் குழந்தையைத் தத்துக் கேட்டு….”

             “அதிலென்ன தப்பு?” நாகராஜன் கேட்டார்.

             “இது சரிப்பட்டு வருமா..?ன்னு”

             “தத்து எடுக்கற எங்க மனசும்… தத்துக் குடுக்கற உங்க மனசும் சரியா இருந்தா.. எல்லாம் சரிப்பட்டு வரும்”

            அவள் யோசிக்க,

            “உங்க குடும்பத்தைச் சேர்ந்த பெரியவங்க கிட்டே பேசணும்னா சொல்லும்மா பேசறோம்” என்றார் நாகராஜன்.

            ‘தேவையில்லைங்க!… எங்க வீட்டுக்காரர் இறந்ததற்குப் பிறகு என்னோட நெருங்கிய சொந்தக்காரர்களெல்லாம் என்னையும் என் குழந்தைகளையும் விட்டு விலகிப் போயிட்டாங்க… எங்கே நாங்க அவங்களுக்குப் பாரமாயிடுவோமோ?…ன்னு பயந்துக்கிட்டு யாருமே எங்களைத் திரும்பிக் கூடப் பார்க்கறதில்லை…” சட்டென அழ ஆரம்பித்தாள்.

            சிறிய அழுகைக்குப் பின் “’இந்த மூணு குழந்தைகளையும் வெச்சுக்கிட்டு தனியா எப்படிப் பொழைக்கப் போறோம்ன்னு நெனச்சு தினமும் அழுதிட்டிருக்கேன்… என் அழுகையைப் பார்த்து அந்த அல்லாதான் உங்களை இங்க அனுப்பி வெச்சிருக்காரோ?ன்னு தோணுதுங்க அய்யா”

          ‘அம்மா… பெரிய வார்த்தைகளெல்லாம் வேண்டாம்….  ஏதோ எங்களால் முடிஞ்ச அளவுக்கு உன் சுமைல கொஞ்சம் நாங்க சுமக்கறோம்… என்ன சொல்றே?”

          சில நிமிடங்கள் கீழே குனிந்து யோசித்த நூர்ஜஹான்,  “அதோ என்னோட குழந்தைகள்… எந்தக் குழந்தைய நீங்க விரும்பறீங்களோ எடுத்துக்கங்க” அவள் தன் குழந்தைகளை நோக்கி கை நீட்ட,

        பார்வதி ஓடிச் சென்று ஒரு பெண் குழந்தையைத் தூக்கிக் கொண்டாள்.  “இவள் பேர் என்ன…நூர்ஜஹான்?” பார்வதி கேட்க,

        “ஷெரீன்”

       “இன்று முதல் இவள் செல்வி” என்றாள் பார்வதி.

       எல்லோரும் “கல…கல”வென்று சிரிக்க, அதன் எதிரொலி விண்ணில் ஒலிக்க,

       ஈஸ்வரனும், அல்லாவும் கை குலுக்கிக் கொண்டார்கள்.

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)                                                   

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பொன் நிறத்தில் ஒரு பறவை (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    ஈஸ்வர அல்லா (சிறுகதை) – முகில் தினகரன், கோவை