எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
அன்று கோவிலில் அறங்காவலர் ரங்கநாதன் தலைமையில் பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது.
ஒரு வாரத்திற்கு முன்பே தனது கோரிக்கை மனுவை கோவில் அறங்காவலர் கையில் கொடுத்து வைத்திருந்த கலைவாணி, தனது கோரிக்கைக்கான முடிவு இன்று தெரிந்து விடும் என்பதால் கூட்டத்திற்கு சற்று முன்னதாகவே வந்து காத்திருந்தாள்.
கூட்டம் துவங்கியதும் கோவிலுக்கு வெளியே பூக்கடை, பொரிக்கடை, பலசரக்குக் கடைகள் வைத்திருப்போர் குறித்த பேச்சுக்கள் முதலில் பேசப்பட்டன.
அடுத்து, திருவிழா நடத்துவது குறித்த பேச்சு வார்த்தையும், பண வசூல் குறித்த திட்டங்களும் அலசப்பட்டன.
அதைத் தொடர்ந்து வேறு ஏதேதோ பேசப்பட, கலைவாணிக்கு வெறுப்பாயிருந்தது. “என்ன இந்த அறங்காவலரய்யா… ஒரு வாரத்துக்கு முன்னாடியே என் மனுவைக் குடுத்தாச்சு… அதைப் பத்திப் பேசவே மாட்டேங்கறாரே?… ஒருவேளை அதை குப்பைக் கூடைல போட்டுட்டாரோ?…”
ஒரு கட்டத்தில் முற்றிலுமாகப் பொறுமை இழந்தவள், தானே கேட்டு விடுவது என்கிற முடிவிற்கு வந்த போது அறங்காவலரே அதைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்.
“நம்ம கலைவாணியோட புருஷன் மூர்த்தி கடந்த இருபத்தியஞ்சு வருஷமா… சம்பளமே வாங்கிக்காம… இந்தக் கோவிலிலே கணக்குப்பிள்ளையாய் இருந்து நேர்மையா… பத்துப் பைசா திருடாம கணக்கு வழக்குகளை… பார்த்துக்கிட்டான்!… ஹும்… யார் கண்ணு பட்டுதோ… “பொசுக்”குன்னு ஒருநாள் மாரடைச்சு செத்துப் போயிட்டான்!”
எல்லோரும் அதை ஆமோதிப்பது போல் மேலும், கீழுமாய்த் தலையாட்ட,
“அந்த நல்ல மனுஷனுக்குச் செய்யற பிரதியுபகாரமா… அவன் மனைவி கலைவாணியோட கோரிக்கையை நிறைவேற்றணும்ன்னு நான் நினைக்கறேன்!” என்று அறங்காவலர் சொல்ல,
“கோரிக்கை என்ன?ன்னு முதல்ல சொல்லுங்க தலைவரே” புதுப் பணக்காரன் புருஷோத்தமன் கேட்டான்.
“ஒண்ணும் பெரிய கோரிக்கை இல்லைப்பா!… கோவில் தென்னை மரங்கள்ல விழுற மட்டைகளை எடுத்து, கீற்றுக்களைப் பிரித்து, விளக்குமாறு செய்து அவற்றை விற்றுக் கொள்ளும் உரிமையை எனக்குத் தர வேண்டும்னு கோரிக்கை வெச்சிருக்கா!… நானும் அதை ஒரு நிபந்தனையோட ஏத்துக்கலாம்னு நினைக்கறேன்” சொல்லி விட்டு அவர் நிறுத்த,
கலைவாணி உட்பட எல்லோரும் அவர் முகத்தையே கூர்ந்து பார்த்தனர்.
“நிபந்தனை என்ன?ன்னா… அந்த விளக்குமாறுகளை விற்று வர்ற பணத்துல கால் பகுதியை இந்தக் கோவிலுக்கு செலுத்திடணும்… ஏன்னா?… சும்மா கொடுத்தா எந்தப் பொருளுக்குமே மதிப்பில்லை பாருங்க” அறங்காவலர் ரங்கநாதன் சொல்ல,
ஒரு சிறிய யோசனைக்குப் பின், கலைவாணி தன் ஒப்புதலை தலையசைப்பின் மூலம் தெரிவித்தாள்.
கூட்டம் முடிவிற்கு வந்த நேரத்தில் அறங்காவலர் சட்டென்று சீரியஸானார். “இங்க பாருங்கப்பா… திருவிழா சமயத்துல ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பொறுப்புக்கள் பிரித்துக் கொடுக்கப்படும்…. அதாவது கோவிலுக்கு வர்ணம் பூசுற பொறுப்பு ஒருத்தருக்கு தரப்படும்… அவரே தனக்குத் தோதான காண்டிராக்டரைப் பிடிச்சு… பேரம் பேசி… அந்த வேலையை பொறுப்பா முடிச்சிடணும்!… அவர் காட்டுற ஆளுக்கு… அவர் சொல்ற தொகையை நாங்க தந்திடுவோம்!… அதே மாதிரி அன்னதானப் பொறுப்பு ஒருத்தருக்கு கொடுக்கப்படும்.. அவரேதான் சமையல் காண்டிராக்டரை ஏற்பாடு பண்ணிடனும்!… பூ காண்டிராக்ட் பொறுப்பு ஒருத்தருக்கு… இப்படி… எல்லாப் பொறுப்புக்களும் பிரித்துக் கொடுக்கப்படும்… அதைச் சுதந்திரமாச் செய்ய உரிமையும் தரப்படும்!”
“ஆமாம்… அதுதானே சரி… அப்பத்தானே எல்லாமே சரியான நேரத்துல… சரியான முறையில் நடக்கும்” யாரோ ஒருவன் சொல்ல,
“இதுல முக்கியமான விஷயம் என்ன?ன்னா… யாரும் கமிஷனுக்கு ஆசைப்பட்டு காண்டிராக்டரைப் பிடிக்கக் கூடாது!… யாரும் தனிப்பட்ட வருமானத்திற்கு ஆசைப்படக் கூடாது!… இந்தக் கோவில்ல இருக்கற அகிலாண்டீஸ்வரி அம்மனுக்கு ஆயிரம் கண்கள்… அவ ஒரே நேரத்துல எல்லா இடத்தையும் பார்த்திட்டிருப்பா… அதை மனசுல வெச்சிட்டு… நியாயமா… நேர்மையா… வேலைகளைப் பார்க்கணும்… என்ன?”
பொதுக்குழுவில் கலந்து கொண்ட அனைவரும் அதை ஒருமனதாய் ஏற்றுக் கொள்ள, கூட்டம் இனிதே நிறைவுற்றது.
மூன்று மாதங்களுக்குப் பிறகு, தன்னைத் தேடி வந்திருந்த தன் மாமியாரிடம் கலைவாணி கோவில் பொதுக்குழுக் கூட்டத்தில் தனக்கு வழங்கப்பட்ட உரிமையைக் கூறன், “அட.. பரவாயில்லையே” என்ற மாமியார்க்காரி, ஒரு சிறிய யோசனைக்குப் பின், “ஆமா… கோயில்ல எத்தனை தென்னை மரங்கள் இருக்கு?” சாதாரணமாய்க் கேட்டாள்.
“ம்ம்ம்… கோவிலுக்குப் பின்னாடி பதினஞ்சு… நந்தவனத்துல பத்து… அப்புறம் கோவிலுக்குச் சொந்தமான தோட்டத்துல ஒரு முப்பது முப்பத்தியஞ்சு மரங்கள் இருக்கும்”
“அப்படியா?…” என்று வாயைப் பிளந்த மாமியார்க்காரி, “மாசம் உனக்கு எவ்வளவு தேறுது?”
“அப்படியும்… நாலாயிரம்… அஞ்சாயிரம் வரை கிடைக்கும்” என்றாள் கலைவாணி.
“அதுல முக்கால்வாசி உனக்கு மீதி கோயிலுக்கா?”
“ஆமாம்… அதுதான் நிபந்தனை”
“நீ ஏன் நாலாயிரம் கிடைக்குது… அஞ்சாயிரம் கிடைக்குது”னு சொல்றே?… ஆயிரம்தான் தேறுது”ன்னு சொல்லு… அதுல கால்வாசியைக் கட்டிட்டு மீதியை நீயே வெச்சுக்க” மாமியார்க்காரி தவறான அறிவுரையைச் சொல்லிக் கொடுக்க,
நேர்மையான கணக்குப்பிள்ளையின் மனைவியான கலைவாணி ஆணித்தரமாய் மறுத்ததோடு, தன் மாமியார் என்று கூடப் பாராமல் அவளைத் திட்டித் தீர்த்தாள்.
“த பாரு… சும்மாவாச்சும் தென்னை மரத்துல மட்டைகளை… கீற்றுக்களையெல்லாம் கரையான் அரிச்சு வெச்சிருக்கு… ஒரு மட்டைக்கு ஒரு விளக்குமாறு கூடத் தேற மாட்டேங்குது… மாசம் பூராவும் கை எரிய கீற்றுக்களைச் சீவிச் சீவி வெளக்குமாறு செஞ்சு வித்தா வெறும் ஆயிரம்தான் கிடைக்குது!”ன்னு சொல்லி அழு!…”
“கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்”, என்று சொல்வார்கள் இரவு முழுவதும் பல்வேறு தொணிகளில் பேசி, விதவிதமான உதாரணங்களைக் காட்டி, மருமகளின் மனத்தை மாற்றுவதில் வெற்றி கண்டாள் மாமியார்.
அடுத்த மாதத்திலிருந்தே தன் வருமானத்தை வெகுவாய்க் குறைத்து, கோவிலுக்கு சொற்பத் தொகையையே கட்டினாள் கலைவாணி.
ஏழெட்டு மாதங்களுக்குப் பிறகு, கோவிலின் வரவு செலவுக் கணக்குகளை ஆய்வு செய்தார் அறங்காவலர் ரங்கநாதன். கடந்த ஆறு மாதங்களாகவே கலைவாணி கட்டி வந்த தொகை மிகவும் குறைவாயிருக்க, நேரில் அழைத்துக் கேட்டார்.
ஏற்கனவே ஒத்திகை பார்த்து வைத்திருந்தபடி, ‘அய்யா…மட்டைக பூராவும் ஒரே கரையானுங்க… கீத்தே தேறலே… பூராவும் கரையான் அரிச்சுக் கெடக்கு, ஒரு மட்டைக்கு ஒரு துடைப்பம் கூட ஆகலே… கை எரிய விடிய விடிய வேலை பார்த்தும் பிரயோஜனமில்லை!… கரையான்களாலேதான் பிரச்சினையே!… அதுகளால்தான் வருமானமும் கம்மி” பொய்யைச் சொல்லி விட்டு கண் கலங்கினாள்.
தன் எதிரில் ஒரு பெண், அதுவும் கணவனை இழந்த ஒரு பெண் அழுவதைக் கண்டு மனம் தாங்காத அறங்காவலர் ரங்கநாதன், “சரிம்மா… அழாதம்மா… ஆளுங்க கிட்டே சொல்லி… கரையான்களை ஒழிக்க என்ன செய்யணுமோ… அதைச் செய்ய ஏற்பாடு பண்ணிடறேன்!… உனக்கு நல்ல வருமானம் வர்ற வரைக்கும் நீ கோவிலுக்கு கட்ட வேண்டிய கால் பகுதியைக் கட்ட வேண்டாம்!… பின்னாடி நல்ல வருமானம் வர ஆரம்பிச்சதும் கட்டுவோம்!” என்று சொல்லியனுப்பினார்.
அங்கிருந்து நேரே வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாய், திருட்டுத்தனமாய் சேர்த்து வைத்திருக்கும் அந்தப் பணத்தை உடனே செலவழித்து விடும் நோக்கில், பரண் மேலிருந்த பானையை எடு;த்தாள். அதிலிருந்த பணத்தையெல்லாம் தரையில் கொட்டியவள் அதிர்ந்து போனாள்.
எல்லா நோட்டுக்களும் கரையான் அரிப்பால் செல்லா நோட்டுக்களாகி இருந்தன.
“யாரும் தனிப்பட்ட வருமானத்திற்கு ஆசைப்படக் கூடாது!… இந்தக் கோவில்ல இருக்கற அகிலாண்டீஸ்வரி அம்மனுக்கு ஆயிரம் கண்கள்… அவ ஒரே நேரத்துல எல்லா இடத்தையும் பார்த்திட்டிருப்பா…”
பொதுக் குழுக் கூட்டத்தில் அறங்காவலர் ரங்கநாதன் சொன்ன வார்த்தைகள் அவள் காதுகளில் ஓங்கி ஒலிக்க, கதறி அழுதாள்.
தன் தவறுக்காக அழுதாளா?… இல்லை தான் சேமித்த பணம் இப்படிப் போய் விட்டதே… என்பதற்காக அழுதாளா?… என்பது அந்த ஆயிரம் கண்ணுடைய அகிலாண்டீஸ்வரிக்கு மட்டுமே தெரியும்.
எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings