எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ராமன் சாகக் கிடக்கிறார். இன்றைக்கோ நாளைக்கோ… முடிந்துவிடும்…
அந்த செய்தி இரண்டு நாட்களுக்கு முன்பே வந்துவிட்டது. தனிமையில் உட்கார்ந்து அழுதழுது முகம் சிவந்து போனதுதான் மிச்சம் காமாட்சிக்கு. ஆனால் எப்படி அங்கே போய் அவரது முகத்தைப் பார்ப்பது என்றுதான் தயக்கம்.
பத்து வருடங்களுக்கு முன்பே அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு போனது. காமாட்சியும் எவ்வளவோ பேசிப்பார்த்தாள், அவர்தான் கேட்பதாய் இல்லை.
அவளது வீட்டிற்கு போனால் தற்கொலை செய்து கொள்வதாய் மிரட்டிப் பார்த்தாள். பலனில்லை.
யோசித்துப் பார்த்தவள் வேறுவிதமாகக் கேட்டாள். ‘ நீங்கள் அவளது வீட்டிற்கு போகாமல் இருக்கவேண்டுமானால் நான் என்ன செய்யவேண்டும்… ‘ எதையும் அவர் கேட்டுக் கொள்வதாய் இல்லை.
‘ நீங்களா பார்த்து பேசித்தானே என்னை கட்டிக்கிட்டீங்க. ஒரு பிள்ளையும் கொடுத்தீங்க. உங்களுக்கு ஏற்ற விதமா நான் நடந்துக்கலையா இல்லை நான் பார்க்க சகிக்காதமாதிரி போயிட்டேனா. ஏன் அவ வீட்டுக்கு போவேன்னு அடம் பிடிக்கறீங்க… ‘
‘ இதோ பார்… அவளோட இருக்கறது எனக்கு பிடிச்சிருக்கு… ‘
‘ தலைக்கு மேல வளர்ந்த பிள்ளை வீட்டிலே இருக்கும்போது, நீங்க இப்படி நடந்துக்கறது நல்லாவா இருக்கு. உங்களைப் பார்த்து அவனும் நாளைக்கு இப்படியே நடந்துக்க மாட்டான்னு உங்களுக்கு உறைக்கலையா…இதோ படிப்பு முடிஞ்சிடிச்சு… வேலைக்கே போயிடுவான். அவனுக்கும் ஒரு கல்யாணம் பண்ணனும். ஏற்கனவே நான் போற இடத்துலேல்லாம் ஒரு மாதிரி பார்க்கறாங்க, பேசறாங்க… நாளைக்கு நாம எந்த முகத்தை வெச்சிக்கிட்டு போயி பொண்ணு கேட்போம்…
இதையெல்லாம் கொஞ்சமாவது நினைச்சுப் பார்த்தீங்களா… நாலஞ்சு வருஷமா வியாபாரம் ஒழுங்காவே நடக்கலைனு புலம்பிட்டிருந்தீங்களே, அதைப் பத்தி யோசிக்கனும் … இந்த சூழ்நிலையில ஏன் உங்களுக்கு இப்படி புத்தி பேதலிச்சு போய்டுச்சு… நம்ம எதிர்காலத்த பாருங்க… நம்ம பையனோட எதிர்காலத்த பாருங்க.. தயவுசெஞ்சு உங்க மனச மாத்துக்காங்க… வீடு விட்டா நேரா கடைக்குப் போங்க, கடை விட்டா நேரா வீட்டைப் பார்த்து வாங்க… மனசுக்கு ஒருமாதிரிய இருந்தா கோவிலுக்கு போங்க… இல்லையா வாங்க எங்கேயாவது வட இந்தியா டூர் போயிட்டு வரலாம். அதை விட்டுட்டு….’
அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே பேண்ட்டை எடுத்து மாட்டிக் கொண்டு, ‘ நீ எனக்கு அட்வைஸ் பண்ணவேண்டாம்… நான் போறதை நீ தடுக்கறதா இருந்தா, இனிமே நான் இங்கே வரவே மாட்டேன்… ‘
அதுதான் அவர் கடைசியாக இங்கே கால் வைத்தது. பத்து வருடங்கள் ஓடிவிட்டன. அந்த வீட்டிலேயேதான் கிடக்கிறார். இங்கே வருவதும் இல்லை, எங்கேயும் பார்த்துவிட்டாலும் அப்படியே ஒதுங்கிப் போய்விடுவார்.
xxxxxxx
கணேஷ்க்கு வேலை கிடைத்து ஹைதராபாத் போய் பயிற்சி முடிந்து அங்கிருந்தே புனேக்கு அனுப்பி விட்டார்கள். மூன்று வருடங்கள் வேலை செய்த அவனும் திடீரென்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டான்.
‘ என் கூட வேலை செய்துமா. நல்ல பொண்ணு… ஆனா நம்ம ஜாதி இல்லை… ‘
தூக்கி வாரிப் போட்டது இவளுக்கு. அப்பன் அந்த வழியில் போனால் பிள்ளை இந்த வழியில் போகிறானே என்று கதறினாள், அழுது ஆர்ப்பாட்டம் பண்ணினாள்.
‘ ஏன்மா… அழகான அன்பான உன்னை விட்டுட்டுப் போய் எவளோ ஒருத்தியோட ஏன்மா என்னை கம்பேர் பண்றே… உனக்குத் தெரியுமா… வைசாளியோட அம்மா அப்பா ரெண்டு பெரும் டாக்டர்ங்க. ஒரு தம்பி அமெரிக்காவுல இஞ்சினீயர். நல்ல குடும்பத்து பொண்ணு. எல்லாரும் சம்மதம்னு சொல்லிட்டாங்க. எனக்கு உன்னோட சம்மதம் மட்டும்தான் வேணும்… ‘
கடைசியில் மகனது எதிர்காலம்தான் முக்கியம் என்று முடிவு செய்து சரி சொல்லிவிட்டாள். ஹைதராபாத்திலேயே கல்யாணம் நடந்து முடிந்தது. முதல் முதலாக அம்மாவுக்கு விமானத்தில் டிக்கட் போட்டு கூட்டிப் போனான். கவலை முடிந்து சந்தோஷம் வந்து அப்பிக்கொண்டது அவளுக்குள்.
ஒருநாள் அவரது நண்பர் ராமசாமி ஒருதடவை பேச்சுவாக்கில் சொன்னார், ‘ அவருக்கும் ரொம்ப வருத்தம்தான், பிள்ளையோட கல்யாணத்தை கூட இருந்து பார்க்க முடியவில்லையே… ‘
அழாத குறையாய் புலம்பினாராம். இப்போதெல்லாம் பைசாவுக்கு அந்த அம்மாவைத்தான் எதிர்பார்க்கிறாராம். எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டாலாம்…
அழுவதா… துக்கப் படுவதா… இல்லை நம்மை வஞ்சித்த இந்த மனிதருக்கு இதுவும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று சந்தோசப் படுவதா என்று புரியாமல் தவித்தாள் இவள்.
xxxxxxxxx
திடீரென்று கதவைத் தட்டிக்கொண்டு வந்து நின்றார் ராமசாமி. அழுத முகத்தைத் துடைத்துக் கொண்டு போய் கதவை திறந்து அவரை வரவேற்று சோபாவில் உட்காரவைத்தாள்.
‘ சேதி வந்திருக்குமே… ஏன் போய் அவனைப் பார்க்கவில்லை ‘ என்றார். இவள் பேசாமல் கண்களை மட்டும் துடைத்துக்கொண்டாள்.
‘ எனக்குத் தெரியும் காமாட்சி… நடந்தது நடந்து போச்சு… இத்தனை காலாம அவ வீட்டிலேயேதான் அடை பட்டுக்கிடக்கறார். பிசினெஸ்ஸும் மூடியாச்சு… உடம்புக்கும் முடியலை. உடனே அந்தம்மா அவரை திண்ணையில ஒரு கட்டில்ல போட்டிடுச்சு.. போனவாரம் போய் பாத்தப்போ இப்போவாவது வீட்டுக்கு வந்திடு. கடைசி காலத்தயாவது காமாச்சியோட கழின்னேன். அவரால பேசமுடியல. கண்ணுல கண்ணீர் தாரையா வழிஞ்சிச்சு…. ‘
இடையில் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு தொடர்ந்தார்.
‘ பணமும் தெம்பும் இருந்தப்போ தப்பு பண்ணினான். நான் இல்லைங்களே… இப்போ எல்லாமே போச்சு. ஆனாலும் அவனுக்கு குற்ற உணர்ச்சி உறுத்துது… அதான் கண்ணீரா வடிக்கறான். கவனிச்சிக்க ஆளில்லை… நீ உடனே கணேஷுக்கு போன் போடு… அவனும் குடும்பத்தோட வந்துடட்டும். ஒரு வேலை இன்னிக்கோ நாளைக்கோ முடிஞ்சுடுச்சுன்னா கட்டின பெண்டாட்டி நீதானே தாலி அறுக்கனும்… அதுக்காவாவது நீ அங்கே போகணுமில்லையா… ‘ என்றார்.
‘ இல்லண்ணே அவனுக்கும் பிரண்டுங்க மூலமா சேதி போயிடுச்சாம். கூப்பிட்டு சொன்னனான். ராத்திரிக்கு கிளம்பி வந்திடறேன்னிருக்கான்… ‘ என்றவள் மூக்கைச் சிந்திவிட்டு, ‘ எந்த முகத்தை வெச்சுக்குட்டுண்ணே நாங்க அங்கே போவோம்… ’ என்று புலம்பினாள்.
‘ சரி நான் காலைல வர்றேன்.. அதுவரைக்கும் கூட உசிர் தாங்குமான்னு தெரியலை. ஒருவேளை முடிஞ்சு போயடுச்சுனா, காரியத்தை முடிச்சுட்டு உடனே கிளம்பிடுங்க… இல்லை உசிர் ஊசாலாடிக்கிட்டே இருந்தா, ஒரு தடவை பார்த்துட்டு உன் கையால பால் ஊத்திட்டு வந்திடு, அப்புறம் பார்த்துக்கலாம்… ‘ என்றுவிட்டு கிளம்பிவிட்டார்.
விடியற்காலையில் கணேஷ் வந்துசேர்ந்தான். காரிலேயே மனைவி குழந்தையையும் கூட்டிக் கொண்டு வந்திருந்தான். ராமசாமிக்கு செய்தி போய், அவர் இங்கே வந்து இவர்களை காரிலேயே கூட்டிச் சென்றார்.
ரொம்பவும் பழைய வீடு. வாராண்டாவிலேயே கட்டிலில் படுத்திருந்தார் ராமன். கண்கள் மூடித்தான் இருந்தன. பக்கத்தில் நான்கைந்து பேர் உட்கார்ந்திருந்தனர். அவளைக் காணவில்லை. ‘ ரெண்டு நாளாவே அந்தம்மா இங்கே இல்லை… திண்டுக்கல்லுக்கு போயிடுச்சு போல… ‘ என்றாள் ஒருத்தி.
ஒரு பெண்மணி ஸ்டூல் மேல் இருந்த பால் டம்ளரை எடுத்து நீட்ட காமாட்சி அதை வாங்கிக்கொண்டு அவரது வாயருகே கொண்டு போனாள். அதற்குள் நாடிப் பிடித்துப் பார்த்த கணேஷ் அவசரமாய் தடுத்தான்.
‘ அம்மா… வேண்டாம்மா… அவசியமே இல்லை… ‘ துக்கம் தொண்டையை அடைத்தது. மற்றவர்களும் பார்த்துவிட்டு, ‘ போய்ட்டார்… ‘ என்றனர்.
கதறியழுதாள் காமாட்சி. ஒரு டாக்ஸி பிடித்து உடலை இவர்களது வீட்டிற்கு எடுத்து வந்தனர்.
அமைதியாய் கிடந்த வீடு சாவு வீடாய் காட்சி கொடுத்தது.
‘ உம்… உம்… டைம் ஆகுது… குளிப்பாட்டிட்டு பாடை போல்டலாம்… ‘ என்றனர்.
அவரைத் தூக்கி பெஞ்சில் உட்காரவைத்தனர். உறவினர்கள் தளிக்கு என்னையும் சீயக்காயும் வைத்தனர். ஆற்றிலிருந்து எடுத்து வந்திருந்த தண்ணீரை ஊற்ற தயாராகினர். சட்டையை கழற்றினர்.
‘ உம்… உம்… மறைப்பு புடிங்கப்பா… துணி மாத்தணும்…’
ஒரு ஆள் ‘ என்னவோ பேப்பருப்பா… ‘ என்றபடி அவரது சட்டையின் மேற்பையில் இருந்து ஒரு மடித்து கசங்கிய பேப்பரை எடுத்து விரித்தார்.
கணேஷ் ஓடிப்போய் பிடுங்கினான்.
‘ காமாட்சியும், கணேசும் என்னை மன்னிச்சிடுங்க… உங்களை பார்க்கவோ உங்ககிட்ட பேசவோ என் தன்மானம் இடங்கொடுக்கலை… நான் உங்களுக்கு செஞ்ச துரோகத்துக்கு கடவுள் நல்ல என்னை தண்டிச்சுட்டான்… அவ என்கிட்டே இருந்து எல்லாத்தையும் புடுங்கிகிட்டு என்னை தண்ணி தெளிச்சி விட்டுட்டா… என்னை திரும்பவும் மன்னிச்சிடுங்க… ’
கணேஷ் லெட்டரை படிக்க படிக்க காமாட்சிக்கு கண்களில் அருவி போல கண்ணீர் கொட்டியது.
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings