இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
தமிழும் அமுதும் அருகருகே அமர்ந்து இருந்தனர்.
நேற்று வரை யார் யாரோவாக இருந்த தமிழ் மாமாவிற்கும் அமுதினிக்கும் இன்று திருமண நிச்சயதார்த்தம்.
புடவையில் நேர்த்தியான அலங்காரத்தில் ஒரு ஆண் பக்கத்தில் அவளை பார்க்கும் பொழுது எனக்கே புதிய உணர்வு ஏற்பட்டது.
உள்ளுக்குள் பலமுறை என் மனம் கூறியது என்ன ஆனாலும் கடைசிவரை உன்னுடன் நான் இருக்கிறேன் அமுதினி உன் இன்ப துன்பங்களை நான் பகிர்ந்து கொள்வேன்.
“வைகாசிலயே கல்யாணத்தை வெச்சிக்கலாமா?” மாப்பிள்ளையின் அப்பாவாகிய எங்கள் மாமா கேட்டார்.
“ஆனில அமையல ஆடி மாசம் வெக்க முடியாது ஆவணி புரட்டாசின்னு தள்ளி போகும்.. பொண்ணோட அக்கா முழுகாம இருக்குனு சொல்றாங்க.. குழந்தை பொறந்துட்டா அப்புறம் அவங்களுக்கும் நிக்க நேரம் இருக்காது” சபையில் இருந்த ஒரு பெரியவர் கூறினார்.
“எங்களுக்கு அடுத்த மாசமே கல்யாணத்தை வெச்சிக்கிட்டாலும் சம்மதம் தான்” அப்பா அவர் கருத்தை கூறினார்.
எல்லோரும் சேர்ந்து ஜூன் மாதத்தை முடிவு செய்தனர். அப்பொழுது எனக்கு ஒன்பது மாதம் பிறந்திருக்கும். நிறை மாதம் என்பார்களே அப்படி இருப்பேன்.
அதற்கு இன்னும் வெகு நாட்கள் இல்லை. இன்னும் இருபத்தி ஏழு நாட்களில் தங்கையின் திருமணம்.
* * *
இருக்கையில் அமரும் பொழுது மெல்ல கணினிக்கு முன் நின்று அமரும் பொழுது மேஜை வயிற்றின் மேல் இடித்து விடுமோ என்கிற பயத்தில் ஒரு கையால் வயிற்றை தாங்கிப் பிடித்துக் கொண்டு அமர்ந்தேன்.
என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு முப்பத்தி இரண்டு வாரங்கள் முடிந்தன. இன்னும் எத்தனை நாட்கள் அலுவலகம் வருவது.
கடைசி நாள் வரை கூட சிலர் அலுவலகம் வருகின்றனர். என்னால் அப்படி இருக்க முடியாது. எனக்கு சற்று ஓய்வு தேவைப்படுகிறது.
ஓய்வு என்பது வீட்டில் படுத்து உறங்க அல்ல.. எனக்கு பிடித்தமான வேலைகளை செய்ய வேண்டும்.
அம்மா வீட்டிற்கு செல்ல வேண்டும். காலையில் எழுந்து அலுவலகம் கிளம்பும் அவசரம் இல்லாமல் பொறுமையாக காலை உணவு சாப்பிட வேண்டும். புத்தகங்கள் படிக்க வேண்டும். பாடல்கள் கேட்க வேண்டும்.
மதிய உறக்கம் வேண்டும். பின் உடற்பயிற்சி செய்ய வேண்டும். மாலையில் தெருவில் வந்து நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டே காற்று வாங்க வேண்டும். சிறிது தூரம் நடைபயிற்சி செல்ல வேண்டும். பிடித்ததை எல்லாம் உண்ண வேண்டும். இரவில் என் குழந்தையோடு பேசி சிரிக்க வேண்டும். மனஅழுத்தம் இல்லாமல் குழந்தையை மட்டும் நினைத்து கொண்டிருக்க வேண்டும்.
இன்னும் இருபது நாளில் என் தங்கைக்கு திருமணம்.
திருமணத்திற்கு முன் ஒரு வாரமாவது அவளோடு இருக்க வேண்டாமா.. என் திருமணத்தின் போது அவள் எனக்கு எவ்வளவு பக்கபலமாக இருந்தாள். எல்லா வேலைகளையும் செய்தாள். இப்பொழுது அவளுக்கு நான் அதை செய்ய வேண்டுமா..
இதையெல்லாம் விட்டுவிட்டு வேலை வேலை என்று ஓடி என்ன சாதிக்கப் போகிறேன்.
அலுவலகத்தில் மேனேஜரிடம் சென்று பேசினேன்.
இன்னும் இரண்டு வாரங்களில் எல்லா வேலைகளையும் முடித்து கொண்டு ஜூன் மாதத்தில் இருந்து விடுப்பு கோரி விண்ணப்பித்தேன். விடுப்பு எடுப்பதற்கு முன் ஒருமுறை ஈரோடு மருத்துவமனைக்கு செல்ல முடிவெடுத்தோம்.
“ஆதி இந்த மாச செக் அப் இங்கயே முடிச்சிட்டு சேலம் போறோம்னு டாக்டர்கிட்ட சொல்லிடலாமா?”
“சொல்லிடலாம்.. அவங்க நல்லா பேசுவாங்கல்ல.. அம்மா வீடு அங்கதான்.. லீவுல போறோம்னு சொல்லிட்டு போய்டலாம்” என்றார்.
மறுநாள் மருத்துவமனைக்குச் சென்றோம்.
“பேபி வெயிட் முப்பத்தி மூணு வாரத்துக்கு ரெண்டு கிலோ வந்துருக்கணும்.. ஆனா த்ரீ ஹன்ட்ரட் கிராம் கம்மியா இருக்கே”
அவர் கூறியது சற்று வருத்தம் அளித்தது.
“இனிமே வெயிட் போட்ற மாதிரி பாத்துக்குறேன் மேம்”
“நல்லா ஹெல்த்தியா சாப்பிடணும்”
“ஓகே மேம்”
“ப்ளட் லெவல் சுகர் லெவல் எல்லாம் நார்மல்.. பேபி வெயிட் மட்டும் ஏறணும்.. தண்ணி கூட நல்லாருக்கு.. வெயிட் ரெண்ட்ரை கிலோ மேல வந்தா பிரசவம் நல்லபடியா இருக்கும்”
“பாத்துக்குறேன் மேம்”
“இனிமே பதினஞ்சு நாளுக்கு ஒரு தடவை செக் அப் வரணும்”
“மேடம் நாங்க ஊருக்கே போறோம்.. சேலம்.. ஆபீஸ் லீவு எடுத்துட்டு போறோம்”
“செக் அப் தான் போறிங்கன்னு பாத்தா.. டெலிவரியும் அங்கதானா.. நான் எல்லாம் பாத்து பாத்து பேபிய ரெடி பண்ணி வெச்சா அங்க போறீங்களா?”
“ரெண்டு பேருக்குமே சேலம் தான் சொந்த ஊரு மேம்.. கவியினியாள் தங்கச்சிக்கு ஜூன்ல மேரேஜ்.. அதான் அப்படியே அங்கயே போயிரலாம் அப்படின்னு”
“சும்மா கேட்டேன் பா.. பிரசவம் எங்க பாக்க போறோங்கிறது உங்க விருப்பம்.. நீங்க நல்லா கோ ஆப்ரேட் பண்ணிங்க.. நார்மல் டெலிவரி ஆக நிறைய சான்ஸ் இருக்கு..”
“தேங்க் யூ மேம்… ஈரோடுல இருந்தா இங்கயே வரோம் மேம்”
“நோ ப்ராப்லம்.. உங்க கன்வீனியன்ட் தான்” என்றார் பெருந்தன்மையோடு.
நாங்களும் சிரித்த முகத்துடன் விடைபெற்றோம்.
மே மாதத்தின் இறுதி நாள்
“ஏன் கவியினியாள் தங்கச்சி கல்யாணம் முடிஞ்சி வரலாம்ல.. அப்புறம் ஒரு மாசம் டைம் இருக்குல்ல”
“இல்லை மதி எனக்கு அப்போ கொஞ்சம் வீட்ல இருக்கணும்னு ஆசையா இருக்கு.. ஆபீஸ் டென்ஷன் இல்லாம.. குழந்தைய மட்டும் நினைச்சிட்டு”
“பேபி பொறந்தப்புறம் லீவு தேவைப்படும்”
“இந்த லீவும் பேபிக்காக தான் போட்றேன்.. லாஸ் ஆஃப் பேல கூட அப்புறம் லீவு வேணும்னா எக்ஸ்ட்டெண்ட் பண்ணிகிறேன்”
“முடிவு பண்ணிட்டனா ஓகே.. அப்ளை பண்ணிடு.. சார்கிட்ட சொல்லிட்டியா?”
“சொல்லிட்டேன்.. அப்ரூவ் பண்ணிட்டாரு”
“அப்போ ஓகே.. ஹாப்பி ஹாலிடேஸ்.. பத்திரமா இரு.. பேபி பொறந்ததும் இன்பார்ம் பண்ணு”
“கண்டிப்பா”
“மிஸ் யூ கவி”
“நானும் ஆபீஸ ரொம்ப மிஸ் பண்ணுவேன்”
“உடம்பு பாத்துக்கோ”
அறிவுரைகளோடும் வாழ்த்துக்களோடும் அலுவலகத்தில் இருந்து விடைபெற்றேன்.
ஈரோடு வீட்டை காலி செய்து கொண்டு புறப்பட்டோம்.
மேல் வீட்டு பாட்டியிடம் அக்காவிடம் நன்மதி பாப்பாவிடம் பக்கத்து வீட்டு அக்காவிடம் என எல்லோரிடமும் கூறிவிட்டு கிளம்பினோம்.
வீட்டைப் பூட்டி சாவி கொடுக்கும் பொழுது மனம் வலித்தது. என்னதான் கொஞ்ச நாள் பழகிய வீடாக இருந்தாலும் நாங்கள் வாழ்ந்த வீடாயிற்றே.
கிளம்பும்பொழுது பயங்கர மழை. இத்தனை நாள் அலுவலகம் செல்லும் பொழுது வாட்டி வதைத்து என்னை வியர்க்க வைத்த வெயில் கொடுத்த வானம் இன்று கிளம்பும்பொழுது மழை பொழி வித்து குளிர்விக்கிறதே.
என்னால் மழையின் மேல் கோவம் கொள்ள முடியவில்லை. மே மாத மழையே ரம்மியமான அழகு தான். அதில் சொக்கி ரசித்தேன்.
ஒருபுறம் இவையாவையும் விட்டுச் செல்ல மனம் வலித்தாலும் ஒருபுறம் சொந்த ஊருக்கே செல்கிறோம் என்கிற மகிழ்ச்சியும் தங்கையின் திருமண விழா கொண்டாட்டமும் பரவசத்தை தந்தது. எல்லாம் கலந்த உணர்வோடு சேலம் வந்து சேர்ந்தோம்.
அம்மா வீட்டிற்குச் சென்றேன். வீடெங்கும் டும் டும் டும் ஓசை கேட்டது.
மஞ்சள் வைத்து மடித்து வைத்திருந்த மீதம் இருக்கும் பத்திரிக்கை.. அங்கங்கே இருந்த புதிய பாத்திரங்கள்.. அப்பாவின் கையில் புதிதாக இருந்த கடிகாரம்.. சமையல் அறையில் இருந்து வீசிய அம்மாவின் கை மணம்.. அமுதினியின் புது புடவைகளின் குவியல்கள்.. அவள் முகத்தில் தெரிந்த பிரகாசம் என ஒவ்வொன்றிலும் கல்யாண வாசம் வீசியது.
இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் என்கிற மகிழ்ச்சியில் நானும் ஒன்று சேர திடீரென கீழ் முதுகில் தாங்கி கொள்ள முடியாத அளவிற்கு ஒரு வலி ஏற்பட்டது. அது பரவி அடி வயிறும் வலித்தது. வலி தாங்க முடியாமல் அம்மாவை கத்தி அழைத்தேன்.
“ஒருவேளை பிரசவ வலியா இருக்குமோ.. உனக்கும் என்ன மாதிரியே குறை மாச வலி பிடிச்சிருக்கா?” குழப்பத்தோடு கேட்டார் அம்மா.
பிரசவ வலியா!! நான் இன்னும் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென ஆசைப்பட்டிருக்கிறேன் அதற்குள் பிரசவமா!!
அப்படியென்றால் அமுதினியின் திருமணம்!
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings