இந்தக் குறுநாவலின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
தேர்வின் முடிவும் எதிர்கால பயமும் குடும்ப வறுமையையும் துர்காவை தற்கொலை முடிவுக்குத் தள்ளியது. அவள் அரளி விதையை அரைத்து தற்கொலைக்கு முயன்ற போது சரியான நேரத்தில் சக்திகனி கண்டதால் உயிர் பிழைத்தாள் துர்கா. ‘என் வாழ்வில் மண்ணைப்போட பார்த்தியே’ என்று தாய் சொல்ல இருவரும் கட்டிப் பிடித்து அழுதனர்.
தன் எதிர்காலமும் தன் நம்பிக்கையும் துர்கா தான் என்பதை அவளிடம் எடுத்துக் கூறினாள் சக்திகனி. மனமாற்றத்திற்காகவும் குடும்ப வறுமைக்காகவும் சென்னையில் துணிக்கடைக்கு வேலைக்கு செல்ல முடிவெடுத்தாள்.
சிங்காரச் சென்னையின் துணிக்கடைகளுக்கு நெல்லைச் சீமையிலிருந்தே அதிகப்பெண்கள் வேலைக்குச் சென்றனர். அங்கு கொடுக்கப்படும் அடிமாட்டுச் சம்பளத்திற்கு வேறு யார் வேலை பார்ப்பார்? நுகர்வோர் வாழ்வை அறியாத தெக்காட்டுச் சனம் மட்டும்தான் குறைந்த சம்பளத்துக்கும் போடுகிற சோத்துக்கும் கூடுதலான விசுவாசத்தோடு வேலை பார்க்கும்.
இளம் பெண்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் அந்த வேலைக்கு தன் குடும்பத்திற்காக முதல் முறையாக சென்னை சென்றாள். கருப்போ சிவப்போ இல்லாத அவள் மாநிற மேனி உடன் பணிபுரியும் சில இளசுககளுக்கு பிடித்துப் போக அவளுக்கோ வறுமையின் நிறம் மட்டும் தான் நினைவில் நின்றது.
கல்லூரிக்கு செல்லாமலே பட்டம் பெறலாம் என்று உடன் பணிபுரியும் இருவர் பேசியது மீண்டும் அவளின் கல்வி கற்கும் ஆசையை துளிர்விடச் செய்தது.
அன்னையிடமும் அண்ணனிடமும் தன் ஆசையைச் சொல்ல அவர்களும் ஆமோதிக்க அந்த தொலைதூர கல்வி பயிற்றுவிக்கும் மையத்திற்கு பறந்தாள். அங்கு பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க இருநாட்களே மீதம் உள்ளது என்றனர்.
எப்படியோ கட்டணத்தைத் திரட்டிக் கொண்டு அண்ணனுடன் அந்த மையத்திற்கு சென்று விண்ணப்பக் கட்டணத்தைக் கேட்டாள். அம்மைய ஆசிரியர்களோ சற்று பொறுங்கள் தமிழ் பாடம் மட்டும் தான் இன்னும் மாணவர்களால் நிறைவடையாமல் உள்ளது அதைப் படிக்க விருப்பம் உள்ளதா? என கேட்க அவளோ தமிழே என்னைத் தேர்ந்தெடுக்கும் போது தான் தடையாய் இருப்பேனோ? என்றாள்
இதையறிந்த அத்தை சக்திகனியிடம் ‘ஏன் இந்த வேண்டாத வேலை? இப்போதுதான் குடும்பம் ஓரளவு நல்ல கஞ்சி குடிக்குது. அது பொறுக்கலையா?’ என சினந்தாள்.
அண்ணன் குகன் அருகிலுள்ள கடையில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணுடன் காதல் வயப்பட்டான். தயங்கியபடியே அவளைப் பற்றி விசாரிக்க அவளின் பெயர் வள்ளி என்பதைத் தெரிந்து மகிழ்வடைந்தான். குகனுக்கு வள்ளி மீது ஈர்ப்பு இருக்கத்தானே செய்யும். ஆனால் தகப்பன் விட்டுச் சென்ற தாயுடன் தங்கை மூவரின் பொறுப்பு தன் தலையில் என்ற நினைப்பு அவனை வாட்டியது.
மூன்றாண்டுகள் ஓட பட்டப்படிப்பு ஒருவழியாக முடிந்தவுடன் கடையில் விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தாள் துர்கா. சாயங்காலம் நெல்லையிலிருந்து ஒரு பெரும் இளைஞர் கூட்டம் அவளுடன் பேருந்தில் ஏறியது. தென்னகத்தின் ஆக்ஸ்போர்டான பாளையங்கோட்டையில் கல்லூரி மாணவர்களுக்கு என்ன பஞ்சமா? என மனதில் நினைத்துக் கொண்டாள். ஆனால் எல்லோரின் கையிலும் ஒரே மாதிரியான புத்தகங்கள் இருப்பதைக் கண்டதும் அவளுக்கு சிறு சந்தேகம் வந்தது.
அருகிலுள்ள ஒருத்தியிடம் விசாரிக்க அவளோ ‘கல்லூரி படிப்பு முடித்துவிட்டு அரசுப்பணி தேர்வு எழுதுவதற்காக ஒரு புகழ் பெற்ற பயிற்சி மையத்தில் படிக்கிறோம். சென்ற ஐந்து வருடங்களில் தமிழ்நாட்டிலேயே அங்கு படித்தவர்கள் தான் அதிகம் பேரு அரசு பணிக்கு போயிருக்காங்க. ஒரு முறை கட்டணம் செலுத்தினால் போதும் அரசு வேலைக்கு போற வரைக்கும் படிக்கலாம்’ என பல செய்திகளைச் சொன்னாள்.
தன்னுடைய முந்தைய தேர்வு தோல்வியைச் சொல்லி சந்தேகங்களை அடுக்க இடைமறித்து ‘நம்பிக்கைதான் அக்கா வாழ்க்கை’ என்று கூறி விடை பெற்றாள்.
ஊருக்கு சென்று தன் தாயைப் பார்த்த மாத்திரத்தில் பேருந்து நடந்த செய்திகளைச் சொல்ல அமைதியாக இருந்தாள் சக்திகனி. தினமும் திருநெல்வேலி செல்ல நூறு ரூபாய் ஆகும். ஒருமுறைக் கட்டணத்தை செலுத்தி விடலாம். ஆனால் அடுத்தடுத்து புத்தகங்கள் வாங்கச் சொன்னால் என்ன செய்வது? என பல யோசனைகள் அவளைத் தூங்கவிடவில்லை.
பக்கத்து வீட்டுத் தோழி ஒருத்தி அவளைப் பார்க்க வந்தாள். தானும் அந்த திருநெல்வேலி மையத்தில் படித்து அரசு வங்கியில் வேலை பார்ப்பதாக சொன்னாள். ‘எப்படி தினமும் திருநெல்வேலிக்கு போய் படித்த? பயணத்துக்கே நேரம் சரியாக போய் இருக்ககுமே?’ என்று துர்கா கேட்க அங்கு விடுதியில் தங்கிப் படித்ததாக கூறினாள்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த துர்காவின் அத்தை ‘அவளோ பணம் பெருத்த குடும்பத்தில் பிறந்தவள் பணம் பணத்தோடு தான் சேரும்’ என்றவுடன் துர்கா எதிராக முழிக்க அவள் சட்டென்று ‘டம்’ என்று பாத்திரத்தை கீழே போட்டு விட்டு விரைவாக வீட்டை விட்டு வெளியே சென்றாள்.
துர்காவும் தோழியும் பயிற்சி மையத்தை அடைந்தவுடன் திடுக்கிட்டாள். தேரோட்டத்தில் கூட இவ்வளவு கூட்டம் கிடையாதே என் மனதில் நினைத்துக் கொண்டே வகுப்பறையில் நுழைய முயன்றாள். ஒரு வகுப்பில் ஆயிரம் பேரா! என பிரம்மித்தாள். சுற்றி நாலு பேரு சரியான நேரத்திற்கு வரவேண்டும் தினமும் பொது அறிவு கேள்விக்கு பதில் சொன்னால் தான் வகுப்பில் அனுமதி முக்கியமாக ‘கட்டணம் செலுத்திய அட்டையுடன் வர வேண்டும்’ என்றனர்.
இருக்கைகள் கிடைக்காத 50 பேரு நின்று கொண்டே பாடத்தை படித்துக் கொண்டிருந்தது கண்டவுடன் அவளின் போட்டித் தேர்வு குறித்த பார்வை மாறியது. தோழியுடன் மையத்தின் அலுவலகத்தை அடைந்தவுடன் அங்குள்ளவர்கள் பேச நேரமில்லாதவர்களாக பேச நேரமில்லாதவர்களாய் கட்டண விவரமும் கூறி கட்டணம் கட்டி விட்டார் அடுத்த நாளே வகுப்பில் கலந்து கொள்ளலாம் என்றனர்.
திரும்பிப் பார்த்தபோது இரண்டு கட்டிடம் நிறைய மாணவர்கள் புத்தகத்தோடு இருந்தனர். இவர்கள் யார் ஏன் இவர்கள் வகுப்பிற்கு செல்லவில்லை என்று கேட்க ‘இவர்கள் சென்ற முறை வகுப்பிற்குச் சென்றவர்கள். எத்தனை முறை பாடம் கேட்க என நொந்தவர்கள். சிலருக்கு முதல் முயற்சியிலேயே வெற்றி கிடைக்கும். சிலருக்கு சில ஆண்டுகளில் வெற்றி கிடைக்கும். வெற்றி கிடைக்காமல் விட்டுச் சென்றவர்களும் இங்கு உண்டு என்றாள் தோழி.
பல சிந்தனைகளோடு பயணித்த அவளிடம் திடுக்கென்று சாத்தான்குளத்தில் சிறிய அளவில் முற்றிலும் இலவசமாக இதே போன்று ஒரு மையம் உள்ளது அதையும் பார்த்துவிட்டு வருவோமா என்று தோழி கேட்க ஒளிர்ந்த முகத்துடன் சரியென்றாள்.
தன் வாழ்வின் தலைகீழ் மாற்றம் தரும் அத்தியாயம் அங்கு நிகழப்போவது அப்போது அவளுக்குத் தெரியாது.
இந்தக் குறுநாவலின் மற்ற அத்தியாயங்களை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings