எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
பண்ணை வீட்டின் பெரிய கேட்டிற்குள் நுழைந்த காரிலிருந்து அவசரமாய் இறங்கினார் பெரிய பண்ணை நாகேந்திரன்.
பண்ணையாள் துரைசாமி ஓடோடி வர, “யோவ் தொரசாமி…. போன தடவ அடிச்ச மழையில் ஐம்பது… அறுவது அரிசி மூட்டைக நனைஞ்சு….நாசமாப் போயி… புழு வெச்சிடுச்சு”ன்னு சொன்னியே?… அதெல்லாம் எங்கிருக்கு?” கேட்டார்.
“பின்னாடி குடோன்ல… போட்டு வெச்சிருக்கேனுங்க!” பவ்யமாய்ச் சொன்னான் அவன்.
“அந்த அம்பது மூட்டையையும் பிரிச்சு.. அஞ்சு கிலோ பைல பேக் பண்ணு!”
“அய்யா….அது எதுக்கு?ன்னு தெரிஞ்சுக்கலாமா?” தயங்கியபடி கேட்டான்.
“என்னோட பங்காளி… பரமசிவம்… கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து நிக்கற குப்பத்து ஜனங்களுக்கு ஆளுக்கு அஞ்சு கிலோ அரிசி இலவசமா குடுத்திட்டிருக்கான்!… அதை போஸ்டர் அடிச்சு…. ஊரு பூராவும் ஒட்டியிருக்கான்!… நானும் அதே மாதிரி போஸ்டர் அடிச்சு ஒட்டி …. இலவசமா அரிசி குடுக்கப் போறேன்!” சொன்னார் நாகேந்திரன்.
“அய்யய்யோ!…. அதுக்கு இந்த அரிசி வேண்டாம்ங்க!” பதறிச் சொன்னான் துரைசாமி.
“ஏன்…. இந்த அரிசி…. அவங்க வயித்துக்குள்ள இறங்காதா?” கேட்டார்.
“இதைச் சாப்பிட்டா அஜீரணக் கோளாறு ஏற்படும்… வயித்தால போகும்… உயிர் போற அளவுக்குக் கூட வியாதிகள் வரும்!… அதனால….”
“இங்க பாரு தொரை…. இந்த ஏழை ஜனங்களால நமக்கு பத்து பைசா பிரயோஜனம் இல்லை!… அதுக இருந்தா நமக்கென்ன?…. செத்தா நமக்கென்ன?… என் பங்காளிக்குப் போட்டியா நானும் குடுக்கணும்… அதைப் போஸ்டடிச்சு ஊர் பூராவும் ஒட்டணும்!… நீ சொல்ற மாதிரி ஜனங்களுக்கு ஏதாச்சும் எக்குத் தப்பா ஆயிட்டாலும்… கொரோனா பாதிப்பு!ன்னு சொல்லிடலாம்…என்ன?”….
“அய்யா…நீங்க ஏழைகள் உயிரோட விளையாடறீங்க!”
“வாக்குவாதம் பண்றதை நிறுத்திட்டு… மொதல்ல நான் சொன்ன வேலையைச் செய்!… இன்னைக்கு சாயந்திரத்துக்குள்ளார பேக்கிங் முடியணும்… நாளைக்கு காலையில நாம குப்பத்துக்குப் போய் அதை ஜனங்களுக்கு கொடுக்கணும்! அச்சாபீஸ்காரனைப் பார்த்துச் சொல்லிட்டு வந்திட்டேன்…அவனே போஸ்டடிச்சு விடியறதுக்கு முன்னாடி ஊர் பூராவும் ஒட்டிடுவான்!”
மறுநாள் காலை அந்தப் போஸ்டரைப் பார்த்து விட்டு குப்பத்து ஜனங்கள் ஊர்ப் பள்ளிக்கூடத்தில் குவிந்தனர்.
டிராக்டரில் அரிசிப் பைகளை ஏற்றிக் கொண்டு வந்து காத்திருந்தார் துரைசாமி.
நாகேந்திரன் வந்து சேர்ந்ததும், அரிசிப்பை வினியோகம் நடைபெற்றது. பத்திரிக்கைக்காரர்கள் விதவிதமாய் போட்டோ எடுத்துத் தள்ளினர்.
மூன்றாம் நாள் காலை நேரம், பதறிக் கொண்டு வந்தாள் நாகேந்திரனின் மனைவி சொர்ணம், “அய்யய்யோ… …எப்படி இருந்த நாய் இப்படி ஆயிடுச்சே….”
நியூஸ் பேப்பர்களில் வந்திருந்த தன் புகைப்படங்களை ரசித்துக் கொண்டிருந்த நாகேந்திரன், “ஏண்டி கத்தறே?… என்னாச்சு உனக்கு?” கோபமாய்க் கேட்டார்.
“ரெண்டு நாளாவே பண்ணை நாய் ஒரு மாதிரியா இருந்திச்சு!… என்ன கர்மத்தைத் தின்னு தொலைச்சுதோ தெரியலை… வாந்தியா எடுத்துத் தள்ளிச்சு!…இப்ப மயங்கிக் கிடக்கு!…”
“மிருக வைத்தியரை வரச் சொல்ல வேண்டியதுதானே?” நிதானமாய் எழுந்த நாகேந்திரன், பண்ணை நாயின் இருப்பிடம் நோக்கிச் சென்றார்.
அங்கு அவர் கண்ட காட்சி அவரை நிலை குலையச் செய்தது.
புலிக்குட்டியைப் போல் தோற்றமளித்துக் கொண்டிருந்த பண்ணை நாய் எலும்புக்கூடாய், ஒட்டிய வயிறுடன், கண்களில் பஞ்சடைந்து கிடந்தது.
“தொரை சாமீ… வைத்தியருக்கு சொல்லியனுப்பிட்டியா?” கோபமாய்க் கேட்டார்.
“நான்தான் வைத்தியரைக் கூப்பிட வேண்டாம்!”ன்னு சொல்லிட்டேன்” என்றாள் பூர்ணிமா. நாகேந்திரனின் ஒரே மகள். செல்ல மகள்.
“ஏன்?” கேட்டார் நாகேந்திரன்.
“ம்ம்ம்…. விஞ்ஞானிகெல்லாம் ஒரு மருந்தைக் கண்டுபிடிச்சா இந்த…எலி…முயல் மாதிரியான சின்னச் சின்ன உயிரினங்களுக்குக் குடுத்து சோதனை செய்வங்கல்ல?…அது மாதிரி நானும் இந்தப் பண்ணை வீட்டு நாயை ஒரு சோதனை எலியா வெச்சிருக்கேன்… அதாவது… நான் புது வகை உணவு தயாரிச்சிருக்கேன்… அதை நம்ம பண்ணை நாய்க்கு ரெண்டு மூணு நாளா சாப்பிடக் குடுத்திட்டிருக்கேன்!” பூர்ணிமா சொல்ல,
அப்போது, குற்றுயிராய்க் கிடந்த அந்தப் பண்ணை நாயிடமிருந்து வினோதமான சத்தம் வர, எல்லோரும் குனிந்து பார்த்தனர்.
“வெடுக்…வெடுக்”கென்று உடலை இழுத்துக் கொண்டு அது உயிரை விட்டது.
“அப்பா…நாய் செத்திடுச்சுப்பா” என்றாள் பூர்ணிமா.
“என்னம்மா….“செத்திடுச்சு”ன்னு சாதாரணமா சொல்றே?…இது பத்து வருஷத்துக்கு முன்னாடி ராஜபாளையம் போய் பெரிய தொகை குடுத்து வாங்கிட்டு வந்த நாய்…. பத்து ஆளுகளைச் சமாளிக்கும்!” கொதித்தார்.
பூர்ணிமா புன்னகைக்க,
“சிரிக்காதம்மா!…அது நம்ம குடும்பத்துல ஒரு ஆளா இருந்த ஜீவன்ம்மா”
“அப்பா… உயிர் போகிற அளவுக்கு அதுக்கு என்ன உணவு போட்டே?”ன்னு ஒரு வார்த்தை கேளுங்களேன்” என்றாள் பூர்ணிமா.
“நீயே சொல்லித் தொலை” எரிச்சலைக் காட்டினார் நாகேநதிரன்.
தன் அறைக்குச் சென்று திரும்பிய பூர்ணிமாவின் கையில் ஒரு பாத்திரம்.
அதை தந்தை முகத்துக்கெதிரே அவள் நீட்ட, எட்டிப் பார்த்தவர், “சாதாரண சாப்பாடு மாதிரித்தானே இருக்கு?” கேட்டார்,
“சாதாரண சாப்பாடேதான்…. நம்ம குடோன்ல இருக்கற அரிசி மூட்டையிலிருந்து எடுத்து சமைச்ச சாப்பாடு” என்றாள் பூர்ணிமா.
“அதைச் சாப்பிட்டா செத்திச்சு” சந்தேகமாய்க் கேட்டார்.
“நீங்க குப்பத்து ஜனங்களுக்காக பேக் பண்ணி வெச்சிருந்தீங்களே அரிசி அதைத்தான் சமைச்சு… நாய்க்குப் போட்டேன்… நாலு நாள்ல செத்திட்டுது!.. இதுதான் அந்த அரிசியோட மகத்துவம்” என்றாள் பூர்ணிமா.
“அது… புழு வெச்ச அரிசியாச்சே?” என்றபடி யோசித்தவர், “அப்படின்னா..இந்த அரிசியைத்தான் நாம அங்க குப்பத்து ஜனங்களுக்கும் குடுத்திருக்கோமா…?” பயக் குரலில் சொன்னார் நாகேந்திரன்.
“இன்னிக்கு ராத்திரியோ… நாளைக்குக் காலையிலோ “ஜனங்க செத்துச் செத்து விழறாங்க!”ன்னு தகவல் வரும்… அப்புறம் போலீஸ் வரும்… அப்புறம்… நாளைக்கு எல்லா பேப்பரிலேயும்… எல்லா டிவியிலேயும் உங்க போட்டோவும் செய்தியும் வரும்!… பார்த்து ரசியுங்க” பொரிந்து தள்ளினாள் பூர்ணிமா.
“அய்யய்யோ… பங்காளிக்குப் போட்டியா செய்யணும்!னு நெனச்சு… இப்படி இக்கட்டுல மாட்டிக்கிட்டேனே?…என்ன பண்றது?” புலம்ப ஆரம்பித்தார் நாகேந்திரன்.
“நீங்க அவருக்குப் போட்டியா செய்யணும்!ன்னு நெனச்சது தப்பில்லைங்க அய்யா… மோசமான அரிசியைக் குடுத்தீங்க பாருங்க அதான் தப்பு” என்றாள் பூர்ணிமா.
“நான் திரும்பத் திரும்ப “வேண்டாம்”ன்னுதான் சொன்னேன்!…நீங்கதான் கேட்கலை!” என்றான் துரைசாமி.
கோபமாய் அங்கிருந்து நகர்ந்து, வேக வேகமாய் வீட்டினுள் சென்றார்.
இரவு முழுவதும் அவர் உறங்காமல், பண்ணை வீட்டின் முன்புற பெரிய கேட்டையே பார்த்துக் கொண்டிருந்தார். “ஹும்… எந்த நேரத்துல போலீஸ் ஜீப் வந்து நிக்குமோ?””
“திக்…திக்”கென்று அதிரும் நெஞ்சுடன் விடிய விடிய பால்கனியிலேயே உலாத்திக் கொண்டிருந்தார்.
மறுநாள் காலை, வழக்கமாய் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து, வெளியே கிளம்பி விடும் நாகேந்திரன் இன்று மணி ஒன்பதாகியும் படுக்கையிலிருந்து எழாதது கண்டு, அவர் மனைவி சொர்ணம் சென்று தட்டியெழுப்பினாள்.
“என்னங்க?…என்னாச்சு உங்களுக்கு?…ராத்திரி பூராவும் தூங்காம அங்கேயும் இங்கேயும் நின்னுட்டிருந்தீங்க!…?” அக்கறையோடு கேட்டாள்.
“இல்லை சொர்ணம்… நாய் செத்த மாதிரி குப்பத்து ஜனங்களும் செத்து விழ ஆரம்பிச்சா என் கதி என்னாகும்?ன்னு நெனச்சா குலை நடுங்குது சொர்ணம்!…”
“கவலைப்படாதீங்க அப்படி எதுவும் நடக்காது!…ஏன்னா நீங்க கொண்டு போய்க் குடுத்தது அந்த அரிசியில்லை!…நல்ல அரிசி…” என்றாள் அங்கு வந்த பூர்ணிமா.
“என்னம்மா சொல்றே?”
“தொரைசாமி புழுத்த அரிசி விஷயத்தை என் கிட்டே சொல்ல… நான் நல்ல அரிசியை பேக் பண்ணச் சொல்லிட்டேன்!….”
“அப்ப… நான் குடுத்தது நல்ல அரிசியா?…” முக மலர்ச்சியோடு கேட்டார் பண்ணையார் நாகேந்திரன்.
“ஆமாம்…” என்று பூர்ணிமா சொன்னதும், “அப்பாடா” என்று தன் நெஞ்சில் கையை வைத்துச் சொன்னவர் மகளைப் பார்த்து, “ரொம்ப நன்றிம்மா…என்னை பெரிய ஆபத்திலிருந்து காப்பாத்தி… எனக்கு நல்ல புத்தி சொல்லிக் குடுத்திட்டேம்மா…” என்றார் நாகேந்திரன்.
“உங்க நன்றியை எனக்குச் சொல்லாதீங்க… செத்துப் போன பண்ணை நாய்க்குச் சொல்லுங்க… அதுதான் உயிரைக் கொடுத்து உங்களுக்கு நல்ல புத்தி சொல்லிக் குடுத்திருக்கு!”
அந்த ஐந்தறிவு ஜீவனுக்காக முதல் முறையாக கண்ணீர் சிந்தினார் பண்ணையார் நாகேந்திரன்.
எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings