in ,

டிபன் பாக்ஸ் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

      தன் பைக்கை யாருமில்லாத சாலையில் நிறுத்தி, சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, கண்ணுக்கெட்டிய தூரம் யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, சாலையோரமிருந்த மரத்தடிக்குச் சென்றான் கிரி.

     பேண்ட் பாக்கெட்டிலிருந்து அந்த மொபைல் போனை எடுத்து எண்களை நசுக்கினான்.  எதிர் முனை இணைப்புக் கிடைத்ததும், “சார்…. கிரி பேசுறேன்!… நீங்க சொன்ன மாதிரியே கே.பி.எஸ்.மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ல டிபன் பாக்ஸ் வெடிகுண்டை  ஒரு சிறுமியோட புத்தகப் பைக்குள்ளார வெச்சிட்டேன்!… அநேகமா இன்னும் அரை மணி நேரத்துல அது வெடிக்கும்” ரகசிய குரலில் அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டே சொன்னான் கிரி.

      “வெல்டன் கிரி… நீ என்ன பண்றே?… உடனே சிட்டியை விட்டுக் கிளம்பிடு!…. பழைய குற்றவாளிக லிஸ்ட்ல உன் பேர் இருக்கறதுனால போலீஸ் உன்னை நோண்ட ஆரம்பிச்சிடும்!… நேரா ரயில்வே ஸ்டேஷனுக்குப் போ… வெளிய ரோஸ் கலர் ஜிப்பா போட்டுக்கிட்டு ஒரு வடக்கன் பானி பூரி வித்திட்டிருப்பான்… அவன் கிட்டே போய் “சனம் தேரி கஸம்”ன்னு சொல்லு… அவன் டிக்கெட் தருவான்!… வாங்கிட்டு ரயில் ஏறிடு” எதிர்முனைக் குரல் படபடப்பாய்ப் பேசியது.

      “சார்… அது எங்க போற டிக்கெட் சார்?…

     “அதை அந்த வடக்கன் சொல்லுவான்… சீக்கிரம் கிளம்பு”

     “எப்படி சார்?… நான் ஃபேமிலி மேன்… வீட்டுக்குப் போய் பொண்டாட்டி கிட்டே சொல்லிட்டு… கொஞ்சம் துணிமணிகளை எடுத்திட்டுத்தானே சார் போகணும்” கிரி சொல்ல,

     “சரி… சரி… பேசிட்டே டைம் வேஸ்ட் பண்ணாதே… உடனே போ… நீ இங்கிருக்கற ஒவ்வொரு நிமிஷமும் உனக்கு ஆபத்து… எவ்வளவு சீக்கிரம் இந்த ஊர் எல்லையைத் தாண்டறியோ அவ்வளவு சீக்கிரம் தாண்டிடு!… அதுதான் உனக்கும் நல்லது… எனக்கும் நல்லது”

      “சார்… ஹி…ஹி… அமௌண்ட்?”

      “வடக்கன் தருவான்”

      பேசி முடித்ததும் வேகமாய் பைக் அருகே வந்து ஸ்டார்ட் செய்தான்.   அவன் கெட்ட நேரம்… அது ஸ்டார்ட் ஆக மறுத்தது. “ச்சை… சனியன்!..” முனகியவாறே கால் வலிக்க உதைத்தான். 

      “நீ என்னை உதைப்பே… நான் ஸ்டார்ட் ஆகி உன்னைச் சுமந்திட்டுப் போகணுமா?… அந்த வேலையே ஆகாது” பைக் தொடர்ந்து மக்கர் செய்ய, பெட்ரோலின் இருப்பைச் சோதித்தான்.

     அங்கே வறட்சி உட்கார்ந்திருந்தது.

     “எப்படி?… டூ வீலர் பார்க்கிங்கில் பைக்கைப் போடும் போது ஐநூறு ரூபாய்க்கு பெட்ரோல் அடிச்சிட்டுத்தானே போட்டேன்… அந்தப் பெட்ரோல் எங்கே போச்சு?” கீழே குனிந்து எங்காவது ஒழுகுகின்றதா? என்பதை ஆராய்ந்தான்.  அப்படி எதுவும் ஒழுகிய மாதிரித் தெரியவில்லை.

     “டேய் கிரி… எந்தக் காரணத்தைக் கொண்டும் அந்த ராஜன் காம்ப்ளக்ஸ்ல இருக்கற டூவீலர் பார்க்கிங்கில் பைக்கைப் போடாதே… பயங்கரமா பெட்ரோல் திருடறானுக…” போன வாரம் தன் நண்பன் சொன்னது ஞாபகத்தில் வர, “ச்சை… ஒரு செகண்ட் ஏமாந்திட்டேனே… டூ வீலர் பார்க்கிங் ஆசாமி மொத்த பெட்ரோலையும் உறிஞ்சுக்கிட்டான் போலிருக்கு!” பைக்கின் இருக்கையை ஓங்கிக் குத்தினான்.

     நின்று கொண்டிருக்கும் ஒவ்வொரு நிமிஷமும் டென்ஷன்தான் ஏறும், என்பதை உணர்ந்து பைக்கைத் தள்ளிக் கொண்டு வேகமாய் நடந்தான். “ஹும்… பெட்ரோல் பங்கிற்குப் போகணும்ன்னா… சுத்தமா ஒன்றரை கிலோ மீட்டர் தள்ளிட்டு நடக்கணும்… எல்லாம் விதி”

     பாதி தூரம் கடந்து விட்ட நிலையில் கிரியின் மொபைல் ஒலித்தது.  தள்ளுவதை நிறுத்தி விட்டு எடுத்துப் பேசினான்.  “என்னாச்சு?… வீட்டை விட்டுக் கிளம்பிட்டியா?” எதிர்முனை கர்ஜித்தது.

      “அது செரி… இன்னும் வீட்டுக்கே போகலை” என்றான் கிரி எரிச்சலுடன்.

      “என்னய்யா சொல்றே?… இன்னும் வீட்டுக்கே போகலையா?… ஏன்?” எதிர் முனை கத்தியது.

      “பைக்ல பெட்ரோல் டிரை தள்ளிக்கிட்டுப் போயிட்டிருக்கேன்!” எரிச்சலோடு சொன்னான் கிரி.

      “யோவ்.,.. நீயென்ன லூஸா?… எவ்வளவு பெரிய அஸைன்மெண்டைச் செய்யப் போறோம்… செஞ்சு முடிச்சதும் தப்பிச்சுப் போகணும்,.. அதுக்காக டேங்க் நிறைய பெட்ரோல் ஃபுல் பண்ணி வைக்கணும்… தெரியாதா உனக்கு?” கத்தியது எதிர்முனை.

      “சும்மா ரொம்பக் கத்தாதீங்க சார்… நான் ஃபுல் பண்ணித்தான் பார்க்கிங்கில் போட்டேன்… அந்த டூ வீலர் பார்க்கிங்காரன் உறிஞ்சிட்டான்… என்னை என்ன பண்ணச் சொல்றீங்க?”

     பதிலேதும், பேச முடியாத எதிர்முனை, “சரி…சரி… வேகமாய்ப் போ… எனக்கென்னமோ நீ ரயிலைத் தவற விட்டுடுவியோ?ன்னு தோணுது” என்றது.

      “வந்திட்டேன் சார்… பெட்ரோல் பங்க்கிற்கு வந்திட்டேன் சார்… ரெண்டு நிமிஷத்துல பெட்ரோல் போட்டுக்கிட்டு… இப்ப உடனே கிளம்பிடுவேன்”

      “சரி… சரி” எதிர்முனை கட்டானதும், வண்டியில் பெட்ரோலை நிரப்பிக் கொண்டு, ஸ்டார்ட் செய்து வீட்டை நோக்கிப் பறந்தான்.

      அடுத்த பதினைந்தாவது நிமிடம் வீட்டை அடைந்ததும், “கலா…நான் அவசரமாய் வெளியூர் கிளம்பறேன்… வர எப்படியும் ஒரு மாசமாகும்…” சொல்லியவாறே சென்று தன் பேக்கை எடுத்து.. அதனுள் தன் துணிகளைத் திணித்தான்.

      “என்ன திடீர்னு?” கலா அவனருகில் வந்து கேட்க,

      “இப்ப பேச நேரமில்லை… போன்ல சொல்றேன்…” என்ற கிரி தன் மகளைப் பார்க்க அது சோகமாய் அறையின் மூலையில் அமர்ந்திருந்தது.

      “என்னம்மா?… என்னாச்சு உனக்கு?… ஏன் முகம் வாடியிருக்கு?” என்று அதனருகே சென்று அன்போடு அவன் கேட்க, அது தன் தாயைக் காட்டியது.  “ஏண்டி குழந்தையைத் திட்டினியா?” மனைவியை பாவ்லாவாய் முறைத்து, போலியாய் மிரட்டினான்.

      “உங்க மகள் செஞ்சிருக்கிற வேலைக்குத் திட்டாம என்ன செய்வாங்க?” கழுத்தை நொடித்துக் கொண்டு சொன்னாள் கலா.

      “அப்படி என்னடி செஞ்சுட்டா?… திருடிட்டா வந்திட்டா?”

      “ஆமாம்… திருடிட்டுத்தான் வந்திட்டா…! ஸ்கூல்ல இவளோட டிபன் பாக்ஸை தொலைச்சிட்டு…. வீட்டுக்கு வந்தா நான் திட்டுவேன்னு பயந்துட்டு…. பஸ்ஸில் வரும் போது வேற யாரோ ஒரு பொண்ணோட…. அதுவும் அந்த கே.பி.எஸ்.மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ல படிக்கற பொண்ணோட பேக்கிலிருந்து அவளோட டிபன் பாக்ஸை திருடிட்டு வந்திருக்கிறா!…” முன் நெற்றியில் அடித்துக் கொண்டு சொன்னாள் கலா.

      “கே.பி.எஸ்.மெட்ரிகுலேஷன் ஸ்கூல்…!… “கே.பி.எஸ்.மெட்ரிகுலேஷன் ஸ்கூல்” ” அந்தப் பெயரைத் திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்த கிரி, மகளிடம் ஏதோ கேட்க வாயெடுக்க,

      “டாடி… “’டிபன் பாக்ஸ் தொலைஞ்சிடுச்சு!”ன்னு வந்து சொன்னா அம்மா தொடைல ‘நறுக்’குன்னு கிள்ளி வைக்கும் டாடி அதான்” என்று இழுத்தபடியே அவள் தான் திருடி வந்த டிபன் பாக்ஸை எடுத்து  நீட்ட,

     நெற்றி சுருக்கினான் கிரி, “அட…. இதை எங்கோ பார்த்த மாதிரியே இருக்கே?” என்று யோசிக்க ஆரம்பித்த அதே வினாடி….    “ட….மா….ல்.”

எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பழைய அரிசி (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    சத்தமில்லாமல் ஒரு தியாகம் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை