எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
பானுமதி ராமகிருஷ்ணாவின் ‘அத்தகாரு’ கதைகள் படித்திருக்கிறீர்களா? மாமியாரும் ஒரு சாதாரணமான ஆசாபாசமுள்ள பிறவி தான் என்று வலியுறுத்த நிறைய விதமாக அவரை படம் பிடித்துக் காட்டியிருப்பார்.
அப்பாவியாக அழுத்தமான ஒரு மனுஷியாக பாசக்காரத் தாயாக என்று வலம் வரும் அந்த பெண்மணியின் குணநலன்கள்களை கொஞ்சமும் குறையாமல் எடுத்துக் காட்டியிருப்பார்..
நான் வியந்து ரசித்த அந்த கதாபாத்திரம் என் வாழ்விலும் வரும் என்று எதிர்பார்க்கவே இல்லை. என் மாமியார்தான் அது.
ஐந்து பெண்கள் இரண்டு மகன்கள் . நான் மூத்த மருமகளாகப் போய் சேர்ந்தேன். இன்னொரு குடும்பத்தில் போய் சேரும் எல்லாப் பெண்களுக்கும் ஏற்படும் தடுமாற்றமும் தயக்கமும் எனக்கும் இருந்தது
எல்லோருமே வாயைத் திறந்தால், ‘ப்ளீஸ் கொஞ்சம் ஸ்டாப் பண்ணிக்கோங்க’ என்று சொல்லும் அளவுக்கு வாய். எம்.ஜி.ஆரின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ‘வாய்தான் காது வரை நீளம்’ என்று ஒரு டயலாக் வரும்.
‘காது வரைக்குமா! சுத்தி அடுத்த காதைத் தொட்டுவிடும் ‘என்று இவர்களை சொல்லலாம் நானோ மூன்று சகோதரர்களுக்கிடையில் ஒற்றைப்பெண்ணாக வளர்ந்தவள் . எக்கச்சக்க கட்டுப்பாடுகள் கண்டிப்பில் வளர்ந்த எனக்கு இவர்கள் வித்தியாசமாக தெரிந்தார்கள். அதிலும் என் அத்தகாரு ரொம்பவுமே ஸ்பெஷல்.
யாரைப் பார்த்தாலும் ஒரு பத்து நிமிடமாவது பேசிவிட்டு தான் வருவார். சமையலறைக்குள் வருவதே இல்லை. காய்கறிகளை அழகாக நறுக்கித் தருவார்.
பார்த்த உடனே சமைக்கவே வேண்டாம் அப்படியே சாப்பிடுகிறேனே என்று சொல்லத் தோன்றும். அதிலும் வாழைத்தண்டு, கீரை எல்லாம் இன்னும் பொடிப் பொடியாக அருமையாக இருக்கும்.
விளக்கு தேய்த்தாலும் பளிச்சென்று இருக்கும். இந்த கையில் இவ்வளவு பலமா என்று நினைக்கத் தோன்றும் ஆளுயர விளக்குகளை தேய்த்து ஈரம் போக துடைத்து சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து முடிக்கும் வரை ஒரே சிந்தனையாக செய்வார்.
95 வயது வரை வாழ்ந்த அவர் மறைவதற்கு இரண்டு மாதம் முன்பு வரை எல்லாமே செய்து கொண்டிருந்தார். நம்ப முடிகிறதா! கோலம் போடுவது மிகவும் பிடிக்கும். நிறைய கோலங்களை நோட்டுப் புத்தகங்களில் போட்டுக் கொடுத்திருக்கிறார்
பவளமல்லிப் பூக்களை யாரையாவது விட்டு கொண்டு வரச்சொல்லி கோர்ப்பதும் பிடிக்கும். அழகாக அடர்த்தியாக பூ கட்டுவார். துணிகளை துவைத்தாலும் பளிச்சென்று இருக்கும். ‘வண்ணாத்தி கெட்டா போ’, என்று என் மாமனார் கிண்டல் பண்ணுவது உண்டு.
துணிகளை மடிப்பதும் அப்படித்தான். கைகளால் நீவி நீவி சுருக்கமே இல்லாமல் மடிப்பதில் கெட்டி. ஒரு பெட்டியில் நம்மால் பத்து புடவைகள் வைக்கமுடியும் என்றால் அவரால் கூட இரண்டு புடவை வைக்கமுடியும்.
துணிகளில் காட்டும் அந்த மென்மையை மனிதர்களிடம் காட்டலாமே என்று நான் சீண்டுவேன். அப்படி ஒரு கோபம் வரும். அந்த சத்தத்துக்கு மாமனாரிலிருந்து எல்லோருமே பயப்படுவோம்.
ஒரு கார்ப்பரேஷனையே வேலை வாங்கி விடுவார் என்று சொல்லும் அளவுக்கு ஆளுமை. பின்னாளில் கடைசிப் பெண்ணுடன் இருக்கும் போது அவளுடைய ஹிந்தி மாணவர்களுடைய பெற்றோர் அத்தனை பேருக்கும் ஏதாவது வேலை கொடுப்பார்.
அம்மா டெய்லர் என்றால் பழைய புடவைகளை மடித்து போட்டு மெத்தை மாதிரி தைத்து தர சொல்லுவார்.
தங்கநகை செய்யும் ஒருவரின் மனைவி மாட்டினார். சங்கிலி, செயற்கை மணி, கிரிஸ்டல், முத்துமாலை என்று செய்து கொண்டே இருப்பார். பணவிஷயத்தில் மிகவும் சரியாக இருப்பார் என்பதால் என்ன சொன்னாலும் நடக்கும்.
மறைந்து போன மாமனாரின் பென்ஷன் பணத்தில் அட்டவணை மாதிரி போட்டுக் கொண்டு பெண்களுக்கு செய்து கொடுப்பார்.
காது சுத்தமாக கேட்காமல் போன போதும் வீட்டுக்கு வரும் அத்தனை பேருடைய விவரமும் தெரியும்.
மணமான புதிதில் என்னை மீனாட்சி அம்மன் கோயிலின் ஆடி வீதி சித்திரை வீதி என்று எல்லா வீதிகளையும் நடத்தியே சுற்றி காட்டியிருக்கிறார்.
நடப்பதற்கே யோசிக்கும் என்னை சர்வசாதாரணமாக நடக்க வைத்து தானும் நடப்பார். பஸ்ஸில் போனால் இந்த ரோடு ராமநாதபுரம் போகும் அந்த ரோடு திருச்சி என்று அத்தனை விவரமும் சொல்லிக்கொண்டு வருவார்.
இதெல்லாம் தெரிந்து நான் என்ன செய்யப் போகிறேன் என்று அலுப்பாக வரும். இதை தவிர இன்னும் பல பல குணாதிசயங்கள்.
ஒருநாள் முழுக்க முழுக்க சாப்பிடாமல் முற்றோதல் (திருவாசகம்) படிப்பார். மறுநாள் கணவனே கண்கண்ட தெய்வம், தூக்குத்தூக்கி என்று பழைய படங்களின் அணிவகுப்பு நடக்கும். எந்த சானலில் எந்த படம் என்பது அத்துப்படி.
எந்த புடவை வாங்கி வந்தாலும் குறிப்பிட்ட நீளம் கட் பண்ணி கட்டுவார். புடவை கனம் தாங்கலை என்று சொல்லுவார்.
அதுவே பிடிக்காத புடவையால் இருந்தால் அது ஜன்னல் ஸ்கிரீன் ஆக மாறிவிடும். அருமையாகத் தேடி தேடி வாங்கிக் கொடுத்தவர்கள் பார்க்கும்போது மூச்சே நின்றுவிடும்.
அவர் இருந்தவரை யாராவது பார்க்க வந்து கொண்டே இருந்தார்கள்.
கதைப் புத்தகங்கள் படிப்பதில் அவ்வளவு இஷ்டம். பொன்னியின் செல்வன் கதையில் வரும் தேவாரப் பாடல்கள் எந்த இடத்தில் வருகிறது என்று மிக சரியாக சொல்லுவார். அப்படி ஒரு நினைவாற்றல்.
அவர் மறையும் போது எல்லோருமே கூட இருந்தோம். தேவாரம் அபிராமி அந்தாதி எல்லாம் வாய் விட்டு நாங்கள் சொல்ல கண் முன்னால் அந்த உயிர் அமைதியாக உடலை விட்டு நீங்கியது. நான்கு வருடங்கள் கடந்த பின்பும் இன்றும் ஏதாவது ஒரு விதத்தில் நினைவுபடுத்திக் கொண்டே தான் இருக்கிறார்.
எழுத்தாளர் காந்திமதி உலகநாதன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings