இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“இரண்டு பேரும் ஒரு நிமிஷம் இங்க வாங்க” வீட்டிற்குள் வந்திருந்த பக்கத்து வீட்டு அக்கா எங்கள் இருவரையும் எழுந்து வரச் சொன்னார்.
கையில் ஒரு பெரிய தட்டுடன் வந்திருந்தார். அதில் வாழைப்பழம் தேங்காய் மல்லிகை பூ இரண்டு மாங்காய் இரண்டு மாதுளை இரண்டு ஆப்பிள் பழங்கள் இருந்தன.
எங்கள் இருவரையும் அழைத்து கையில் கொடுத்தார். நாங்கள் அவர் காலில் விழுந்து வணங்கிவிட்டு தட்டை வாங்கினோம். தட்டை கொடுத்து விட்டு வெளியில் சென்றார்.
“ஒரே நிமிஷம் இருங்க வந்தட்றேன்” என்று சொல்லிக் கொண்டே சென்றார்.
சுவரொட்டியை சாப்பிட பிடிக்காமல் வந்த கண்ணீர் இப்பொழுது எங்களை வாழ்த்த வந்த பக்கத்து வீட்டு அக்கா பாசத்தில் ஆனந்த கண்ணீராய் மாறியது. அவர் திரும்பி வருவதற்குள் கண்களை துடைத்துக் கொண்டேன்.
இரண்டு நிமிடங்கள் கழித்து மீண்டும் கையில் ஒரு பாத்திரத்தோடு வந்தார்.
“இதுல மாங்காய் சாதம் இருக்கு ரெண்டு பேரும் சாப்டுங்க”
“எதுக்கு கா இதெல்லாம்”
“மாசமா இருக்க புள்ளை தனியா இங்க ஈரோட்டுல வந்து வேலை பாத்துட்டு இருக்க.. எதாவது செஞ்சி கொடுக்கணும்னு நினைப்பேன் நேரம் அமைல.. அதான் இன்னிக்கு கொண்டு வந்தேன்”
“ரொம்ப தேங்க்ஸ் கா”
“எதாவது சாப்டனும்னு தோணுச்சினா சொல்லு கவி, செஞ்சி தரேன்”
“பரவால்ல கா”
“என்ன பரவால்ல எதாவதுனா சொல்லு.. ஏன் நான் உள்ள வரும்போது அழுதுட்டு இருந்த”
“சுவரொட்டி எடுத்துட்டு வந்தேன். கவியே அசைவம் செஞ்சி சாப்ட்டதுல அவளுக்கு ஒப்பலை. சாப்பிட முடிலன்னு அழுதுட்டா”
“அட புள்ளையே.. என்கிட்ட கேட்டா செஞ்சி குடுப்பேன்ல”
“இன்னிக்கு தான் முதல் தடவை செஞ்சேன்.. அம்மா அடுத்த வாரம் வரேன்னு சொன்னாங்க.. நாங்க பாத்துக்குறோம் அக்கா.. எதாவது வேணும்னா கண்டிப்பா சொல்றேன்”
பக்கத்து வீட்டுப் பெண் கர்ப்பமாக இருக்கிறாள் என்பதற்காக மனம் உவந்து உதவி செய்ய முன் வருகிறார்கள். இவ்வுலகில் என்றுமே மனிதம் சுரந்து கொண்டு தான் இருக்கிறது.
அலுவலகத்தில் கீழே கால் விட முடியாமல் தூக்கி தூக்கி மேலே வைத்துக் கொண்டு அமர்ந்தேன். பின் வெகு நேரம் அமர முடியாமல் அவ்வப்போது எழுந்து நடந்தேன். நடக்க முடியாமல் சில நிமிடங்கள் மீண்டும் அமர்ந்தேன்.
அலுவலக நாட்களும் சவாலாகத் தொடங்கின. உட்கார்ந்தே பார்க்கும் வேலை எனக்கு. இப்பொழுதெல்லாம் அப்படி வெகு நேரம் அமர முடியவில்லை.
உள்ளே குட்டி வேறு அடிக்கடி உதைக்கத் தொடங்கிவிட்டது. கவனங்கள் சிதறுகின்றன.
ஆதியுடன் இருக்கும் பொழுது அசையவே மாட்டேன் என்கிறது. அலுவலகத்திலோ உதைப்பதென்ன இங்கும் அங்கும் ஓடுவதென்ன. பாவம் ஆதி ஒவ்வொரு முறையும் வயிற்றில் கை வைத்து ஏமாறுகிறார்.
சில நேரங்களில் குழந்தையின் துடிப்பை உணருவதாக கை வைத்துப் பார்த்து கூறுவார். ஆனால் அசைவை உணர இன்னும் ஏங்கிக் கொண்டே இருக்கிறார்.
“சார் எனக்கு அஞ்சு நாள் லீவு வேணும்” அலுவலகத்தில் மேனேஜரிடம் தயங்கிக் கொண்டே கேட்டேன்.
“என்னாச்சு கவி”
“பிளட் கம்மியா இருக்கு.. மூணு ஐயன் இன்ஜெக்சன் போடணும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் போகணும். ஆறு நாள் ஹாஸ்பிடல் போய்ட்டு வரணும். சேலத்துல போடணும் சார்.. உடம்பும் ரொம்ப சோர்வா இருக்கு.. இதெல்லாம் பார்த்துட்டு தயாராகி அடுத்த வாரம் வரேன் சார்”
“எவ்ளோ ஒர்க் இருக்கு.. இப்படி ஒட்டுக்கா ஒரு வாரம் கேக்கலாமா”
“ரெண்டு மாசமா லீவே போடல சார்.. சமைக்கவே கஷ்டமா இருக்கு.. சரியா சாப்பிட முடில.. ஊருக்கு போய் தான் செக் அப் போணும்.. ப்ளீஸ் இந்த ஒரு வாரம் மட்டும் சார்”
“சரி அப்ளை பண்ணிடு கவி”
சந்தோஷத்தில் மேனேஜர் அறையை விட்டு வெளியே வந்தேன்.
எனக்குப் பின் என்னுடைய டீமில் இருந்த முருகன் சார் அறைக்குள் சென்றார்.
அவருக்கும் அடுத்த வாரம் விடுப்பு தேவைப் போல் தெரிந்தது.
“நானும் ஏற்கனவே உங்ககிட்ட சொல்லி இருந்தேன். இப்போ எனக்கு லீவு குடுக்க மாட்டிக்கிறீங்க.. எப்போவுமே இந்த பொண்ணுங்களுக்கு தான் எல்லாம் கிடைக்குது. டிஸ்கிரிமினேஷன்..” அறைக்குள் முருகன் சார் கத்துவது என் காதில் விழுந்தது.
எனக்கு விடுப்பு தருவதை டிஸ்கிரிமினேஷன் என்கிறாரா! அதாவது பெண்களுக்கு இங்கே பாகுபாடு பார்க்கப்படுகிறது என்கிறாரா! நாங்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறோம். அதற்கு இவர்கள் வைக்கும் பெயரா இது!
என்னால் முடிந்த வரை எல்லோருக்கும் சரிசமமாக எல்லா வேலைகளையும் செய்கிறேன். இப்பொழுதெல்லாம் பரிசோதனைக்கு கூட விடுமுறை நாட்களில் தான் செல்கிறேன்.
வேலைக்காக நானும் அவரும் தனியாக இருந்து எல்லா வேலைகளையும் செய்து கொண்டே அலுவலக வேலைகளையும் பார்க்கிறோம்.
உடல்அளவிலும் மனஅளவிலும் எவ்வளவு பெரிய போராட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். எங்கள் நிலையை புரிந்து கொள்ளவில்லையெனினும் பிறர் புரிந்து கொள்வதையும் ஏன் தடுக்க வேண்டும். ஏன் குறை கூற வேண்டும்.
“உனக்கு எப்போ ரொம்ப முக்கியமோ அப்போ நீயும் லீவு எடுத்துக்கோ முருகன்”
“எனக்கு புதன் வியாழன் வேணும் சார்”
“எடுத்துக்கோ.. நானே அன்னிக்கி பாத்துக்குறேன்”
எங்கள் மேனேஜருக்கு நன்றி கூறிவிட்டு கிளம்பினேன்.
விடுப்பு கிடைத்ததில் நானும் ஆதியும் சேலத்திற்கு கிளம்பினோம். பேருந்துலேயே ஈரோட்டில் இருந்து சேலத்திற்கு வந்தோம்.
சேலத்தில் இறங்கிவிட்டு பேருந்து நிலையத்தில் இருந்து வீட்டிற்குச் செல்ல நகரத்து பேருந்தில் ஏறினோம். நின்ற இடத்திலேயே பேருந்து வந்தது. சரி எதற்கு ஆட்டோவிற்கு பணம் செலவழிக்க வேண்டும் என்று பேருந்திலேயே நானும் ஆதியும் ஏறினோம்.
ஏறும் பொழுது இடம் இருப்பது போல் தான் தெரிந்தது. ஆனால் உள்ளே சென்று பார்த்தால் எல்லா இருக்கையிலும் அமர்ந்து இருந்தார்கள்.
வீட்டிற்குச் செல்ல கால் மணி நேரம் ஆகும். கால் மணி நேரம் தானே நின்று கொண்டே போக ஒன்றும் சிரமமில்லை. ஆனால் வண்டி எடுத்தவுடன் திடீரென்று போட்ட பிரேக்கில் ஒரு குலுங்கு குலுங்கி நின்றேன்.
என் வயிற்றை பார்த்த பெண்மணி ஒருவர் எழுந்து நின்று கொண்டு எனக்கு அமர இடம் கொடுத்தார். நான் பரவாயில்லை என்று கூறியும் அவர் விடவில்லை. என்னை அமர வைத்தார்.
எனக்கும் குலுங்கி குலுங்கி பேருந்து சென்றதில் உட்காருவது தான் பாதுகாப்பாக இருக்கும் எனத் தோன்றியது. இன்னும் இவ்வுலகில் கர்ப்பிணி பெண்கள் நின்று கொண்டு போவதை பார்த்து இடம் கொடுக்கும் மக்கள் இருக்கிறார்கள்.
நானும் இதற்கு முன் பேருந்தில் செல்லும் பொழுது கர்ப்பிணிகளை பார்க்கும் பொழுது எழுந்து நின்று விடுவேன். அவர்கள் நின்று கொண்டிருக்கும் பொழுது நம்மால் எப்படி நிம்மதியாக அமர முடியும்.
இன்றே மூன்று விதமான நல்ல உள்ளங்களை சந்திக்க நேர்ந்தது.
பக்கத்து வீட்டு அக்கா, விடுப்பு கொடுத்த மேனேஜர் மற்றும் பேருந்தில் இடம் கொடுத்தவர். கர்ப்பிணி பெண்களை இந்த உலகம் எப்படி எல்லாம் பார்த்துக் கொள்கிறது. மகிழ்ச்சி பூரிப்படைந்தேன். இன்னும் என்னவெல்லாம் நிகழப் போகிறது என்று தெரிந்து கொள்ள ஆர்வம் அடைந்தேன்.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings