in ,

காதலர் இருவர் கருத்தொருமித்து (சிறுகதை) – உமா.M

Screenshot

எழுத்தாளர் உமா எழுதிய அனைத்து கதைகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

முன்னுரை: நான் பலமுறை அமரர் திரு. கல்கி அவர்களின் “பொன்னியின் செல்வன்” கதையை படித்திருக்கிறேன். அமரர் திரு. விக்ரமன் அவர்களின் “நந்திபுரத்து நாயகி” படித்திருக்கிறேன். இரண்டையும் படித்ததன் விளைவு வந்தியதேவன், குந்தவை  காதலை வைத்து கற்பனையான ஒரு சிறுகதையை எழுதினேன்

நந்திபுரத்து மாளிகை தோட்டம் அது. எங்கேயோ மெல்லியதாக சலங்கை ஒலி கேட்டு எண்ணங்கள் மட்டும் வேறுங்கோ பயணிக்க நந்திபுரத்து நாயகியான குந்தவைப் பிராட்டி மெல்ல  நடந்து வந்து கொண்டிருந்தாள். தான் பிறந்த வளர்ந்த எப்பொழுதுமே தனக்கு பிடித்த நகரமான மிகப் பழையதான பழையாரை  நகருக்கே வந்து விட்டிருந்தாள் பிராட்டி.  

பழையாரை நகரை நந்திபுரம் என்று பெயர் மாற்றியமைத்ததை அவளால் ரசிக்க முடியவில்லை. ரசிக்க முடியாத நிலையில் தான் இருப்பதை பொருட்படுத்தாத நிலையிலும் அவள் இருந்தாள். அப்படி என்றால் அவள் எண்ணத்தை ஆக்ரமித்த விஷயம் தான் என்ன? அடிவயிற்றிலிருந்து பொங்கி பிரவகித்து வந்த துக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மேலேறி இதயத்தில் முட்டி மோதி அங்கே அது மகிழ்ச்சி பிரவாகமாக பொங்கி வழிவதைஉணர்ந்தாள்.

           அந்தப் பரந்த தோட்டம். அவள் அடிக்கடி அமரும் மேடை. மேடையை சுற்றிலும் மாதவி பந்தல். ஒரு பக்கம் மகிழ மரங்கள். இன்னொரு பக்கம் மல்லி முல்லை சம்பங்கி செடிகளும், அதிலிருந்து வரும் நறுமணமும், அவளுக்கு அப்போது ஆறுதலை அளித்தன.  ஒரு குயில் கூவிக்கொண்டே மகிழமரத்தின் உச்சியில் உட்கார, இன்னொரு குயில் தூரத்தில் குரல் கொடுத்துக் கொண்டிருந்தது. இரண்டு குரல்களும் ஒன்றை ஒன்று தேடுவது புரிகிறது. இன்னும் நெருங்கி வரவில்லை. ஆனால்…………….. அதோ…… அவை கூட நெருங்கி விட்டன…………..! தூரத்தில் இருந்து வந்த மற்றொரு குயில் மாதவி பந்தலில் உட்கார்ந்துவிட்டு அங்கே இருந்த தன் ஜோடி மகிழமரத்தில் உட்கார்ந்திருப்பதை பார்த்து வேகமாக கூவியபடி பறந்து வந்து அதன் அருகில் உட்கார்ந்து விட்டது.  ம்……..  பறவைகள் கூட மிக எளிதாக வந்து சேர்ந்து விடுகின்றன. குந்தவை பிராட்டி பெருமூச்சு விட்டாள். ஏன்? தனக்கு மட்டும் என்ன குறை? நாங்களும் ஒன்றாக சேரத்தான் போகிறோம் என்கிற நினைவு வந்த பொழுது தான் காண்பது கனவா என்று சந்தேகம் வந்து வலது கை விரல்களால் இடது கையை கிள்ளிப் பார்த்துக் கொண்டாள்.

          

           எத்தனை ஆண்டுகள் இருக்கும்? ……………. கிட்டத்தட்ட பத்து, பன்னிரண்டு

 ஆண்டுகள்?……. வல்லவரையர் சிறையில் இருந்தார். அந்த மாமாங்கம் முழுவதுமே அவளும் மன இருட்சிறையில் இருந்தாள். ஆனால் என்றுமே அதை அவள் வெளிக்காட்டிக் கொண்டதில்லை.  சகோதரன் ஆதித்த கரிகாலன் காஞ்சியில் கட்டிய பொன்மாளிகையில் கடைசி காலத்தில் இருந்த சுந்தர சோழருக்கு பணிவிடை செய்து கொண்டே அவருக்கு ஆறுதலாக இருந்தாள். சுந்தர சோழரும் புத்திரசோகம் தாங்காமல் இறந்தும் போய்விட்டார். அதன் பிறகு அவளுக்கு எல்லாமே வெறுமையாக விட்டிருந்தது. சகோதரன் ஆதித்த கரிகாலனின் அகால மரணம் ஒரு பக்கம் வாட்டினாலும் தன் இளவல் அருண் மொழியை தேசாந்திரம் போக அனுப்பி விட்டிருந்தது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதை    போல் தான் இருந்தது. அதிலும் அறியாப் பெண் வானதியையும் அருண் மொழியையும் தான் பிரித்து வைத்தோமோ என்ற குற்ற உணர்ச்சி வேறு சேர்ந்து கொண்டது. இப்போது அருள் மொழியும் நாடு திரும்பி ஆயிற்று. வானதியின் திருமுகம் பூரித்து பொங்கிய தையும் பார்த்தாயிற்று. மனதிற்கு ஓரளவு நிம்மதி ஏற்பட்டிருந்தது.

             

                   பல அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு அருண்மொழி அரியணை ஏறப்போகிறான். தாம் வல்லவரையறை மணக்கப் போகிறோம், சரித்திரத்தின் முக்கியமான நிகழ்வுகள் நடக்கப் போகின்றன. இவ்வாறு மனதில் அசை போட்டபடியே குந்தவை பிராட்டி  மெல்ல நடந்து வந்து கொண்டிருந்தாள்.

              

            வல்லவரையர் வந்தியதேவர்!  அவரை நினைத்தபோது அவளுக்கு குற்ற உணர்ச்சி சில சமயங்களில் வந்து வந்து போகும். அன்று பாதாள சிறையில் வானதி பாதை தவறி வந்து மயங்கி விழுந்த போது, குந்தவை விரைவாக வந்து வானதியை தாங்கிப் பிடித்தாள். அப்பொழுது நேர் எதிரே சிறையில்  வந்தியதேவனின் தாடி மீசையோடு சோர்ந்து போன முகத்தையும் பார்த்தும் பாராதது போல் சற்றும் கவனியாது போல் வானதியை அனைத்தவாறு விரைவாக அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

           

           ஐயகோ!…….. அவரை ஒரு கனிவான பார்வை பார்த்திருக்கலாம் அல்லவா? எத்தனை வருடங்களாக ஒரு நிரபராதியாக அந்த பாதாள இருட்டு அறையில் இருந்திருக்கிறார்! ஒரு தடவை கூட குந்தவை அவரை சிறையில் சந்தித்து ஆறுதல் வார்த்தைகள் கூறினாள் இல்லை. ஏன் செய்யவில்லை? அவளுக்கு முகம் இல்லை. அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கும் சாட்சிகள் இல்லாமல் போனதால் அவளால் ஏதும் செய்ய முடியாமல் போயிற்று. நாட்டில் பல குழப்பங்களோடு மதுராந்தகரின் ஆட்சியில் பழுவேட்டறையர்களின் கண்டிப்பான சட்டம் ஒழுங்கினாலும் வல்லவரையறை காப்பாற்ற தகுந்த சாட்சிகள் சேகரிக்க இயலாமல் அமைதியாகி விட்டிருந்தாள். அந்த குற்ற உணர்ச்சி வல்லவரையறை பார்க்கும் முகம் இல்லாது அப்பால் சென்று விட்டாள். உண்மையான காதலை மறைத்து வைப்பது என்பது எவ்வளவு வேதனைகுரிய விஷயம்! குந்தவை மேலும் மெல்ல நடந்து வந்து கொண்டே இருந்தாள், நூப்புரத்தின் ஒலி வந்த திசையை நோக்கியவாறு.

               

         வாணர்குலவீரர் வல்லவரையர் வந்தியதேவர் ஆலோசனை கூடத்தில் அருள் மொழியோடு அமர்ந்திருந்தார். அவர்களின் உரையாடல் ஆதித்த கரிகாலரைக் கொன்றவர்களைப் பற்றி இருந்தது. அவர்களை பிடிப்பதற்காக சோழ வீரர்களை எத்தனை பேரை எங்கெங்கு அனுப்புவது, எங்கெங்கே நிறுத்துவது, மேலும் பல அரசியல் விஷயங்கள் அவர்கள் உரையாடலில் இருந்தது. வாணர் குல வீரரின் உரையாடல் வெறும் உதட்டளவிலேயே  இருந்ததைதஅருள்மொழி கவனித்தார். இந்த உத்தமமான சுத்த வீரருக்காகவே சகோதரர்   குந்தவையை நந்திபுரத்திற்கு  வரவழைத்திருந்தார். அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ள வேண்டும் அது மிகவும் முக்கியம். ஏரிக்கரையில் படகு கூட தயார் நிலையில் இருந்தது .

                                                                                                                           

இவர்கள் இருந்த ஆலோசனை கூடத்திற்கும் சகோதரி குந்தவை தங்கி இருந்த மாளிகைக்குமிடையே  மிக அழகானதொரு நந்தவனம் இருந்தது. இந்த மாலை நேரத்தில் அக்கா கட்டாயம் தனக்கு பிடித்த மாதவி  பந்தல் அருகே  உட்கார வருவார்கள். எதிர்காலத்தில் தென்னிந்தியாவின் முழுக்க வியாபிக்க கூடிய சோழ மகா சாம்ராஜ்யத்தை ஒரே குடையின் கீழ் ஆளப்போகும் ராஜராஜ சோழராக பெரும் புகழ்பெறப்போகும் அருள்மொழி தன் இருக்கையிநின்று சட்டென்று என்று எழுந்து கொண்டார். “ வாணர் குலவீரரே  நீங்கள் மிகவும் களைத்து போய் இருக்கிறீர்கள் சற்று நந்தவனத்தில் இளைப்பாரி விட்டு வரலாமே” என்ற படி அவ்விடத்தில் நின்று நகர்ந்தார்.

              

               பெருமூச்சொன்று விட்டபடி வல்லவரையர் கூடத்தின் வெளிப்புறம் வந்து நந்தவனத்தை ஒரு நோட்டம் விட்டார் நூபுரத்தின் மெல்லிய ஒலி தூரத்தில் இருந்து வருகிறது. அப்படியே நந்தவனத்திற்குள் நுழைந்தார். இந்த அழகிய நந்தவனம் அவருக்குள் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது. முல்லை, மல்லி, சம்பங்கி கொடிகளும் மகிழ, செண்பக மரங்களும் அவற்றின் வாசனையும் மாலை நேர பறவைகளின் கீச் கீச் குக் குக் சத்தங்களும் நீலவண்ண வானமும் அதில் ஆங்காங்கே வெண்பஞ்சு  மேக தேவதைகளும் அவருக்கு ஒரு புது மலர்ச்சியை ஏற்படுத்தியது. புதுவாழ்வு வரப்போவதற்கான அறிகுறியாக தெரிந்தது. ஆனாலும் அவருக்குள் ஒரு சிறு துக்கம் மனதுக்குள் உறங்கிக் கிடந்தது தெரிந்தது. தானோ ஒரு நாடற்ற சாதாரண வாணர்குல வீரன். குந்தவைபிராட்டியோ சோழ சாம்ராஜ்யத்தின் இளவரசி.  அவர் நினைவில் இன்றும் நாம் இருப்பதாவது! ஆம், அப்படித்தானே? இல்லாவிட்டால் அன்று அந்த பாதாள சிறையில் தன்னை கண்டும் காணாதது போல் சென்றிருப்பாரா? அந்தப் பாதாள இருட்டு அறையில் தன்னந்தனி ஆளாக எத்துணை ஆண்டுகள் இருந்திருப்போம். ஆறுதலாக பேச இயலாவிட்டாலும் ஆறுதலாக ஒரு பார்வையாவது பார்த்திருக்கலாம் அல்லவா?  இல்லையே………. பார்க்கவில்லையே!

                 இல்லை……. இல்லை………. அங்கே அப்போது பழுவேட்டறையர் வந்து விட்டிருந்தார் இந்த பயம் கொள்ளி வானதிபெண் வேறு மயக்கமுற்றிருந்தாள. அதனால் தான் பிராட்டி தன்னை கண்டும் காணாமல் சென்று விட்டார். அந்தப்பல்லவஇளவல் பார்த்திபேந்திரன் என்னவெல்லாம் மாயாஜாலம் செய்து குந்தவைபிராட்டியின்  மனதை கவர்ந்திருப்பானோ?

                

             வாணர்குல வீரருக்கு மிக வேகமாக எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தது. நாடில்லை தனக்கு. உற்றார் உறவினர் வேறு  யாரும் இல்லை. உயிருக்கு உயிர் நண்பன்ஆன ஆதித்த கரிகாலரும் இல்லை.  இவற்றினூடே குந்தவையின் நேசத்தையாவது பெற்றோம்  என்கிற ஆறுதலும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து விட்டிருந்தார். இளைய பிராட்டி……! அத்தகைய கொடூர நெஞ்சம் கொண்டவர் இல்லை. குடந்தையிலும் வெண்ணாற்றங்கரையிலும்  அவர் தன்னை பார்த்த பார்வை! சிவந்த முகத்தில் நாணம் பரவ அவர் தன்னை பார்த்த பார்வை அந்த கூர்மையான பெரிய விழிகளில் எத்தனை எத்தனை வார்த்தைகள் வெளிவந்தன.  அவற்றையெல்லாம் தன்னால் எளிதில் அன்று படிக்க முடிந்ததே! அரண்மனையிலும் அந்தப்புரத்திலும் நாட்டு மக்களிடையேயும் மிக அன்பான வார்த்தைகளாலும், கனிவான பார்வையாலும், அக்கறையான விசாரிப்புகளாலும், அடக்கமாக பழகுவதிலும் மக்களின் நல்லெண்ணத்தை பெற்ற இளைய பிராட்டி குந்தவை தேவியார் மனதில் நாம் இன்னும் இருக்கிறோமா?….. வீரமும் துடுக்குத்தனமும் முன்யோசனை இல்லாமல் எதிலாவது மாட்டிக் கொண்டு பின்னர் சமயோசிதமாக அதிலிருந்து வெளிவந்து வீரத்தை காட்டும் வாணர்குலவீரர் வல்லவரையர் வந்தியதேவர் கலக்கமுற்றிருந்தார்.

யோசனையோடு அவரும் மாதவி பந்தலை நோக்கி வந்து கொண்டிருந்தார். குந்தவைக்கு மிகவும் பிடித்த இடம் அல்லவா? பந்தலின் மறுபக்கத்திலிருந்து யார் வருவது?……….. ஆம் குந்தவைப் பிராட்டியே தான்.! சந்தேகம் இல்லை எதிர்பாரா இன்ப அதிர்ச்சி! பல ஆண்டுகளாக காதலை சுமந்து கொண்டிருந்த அந்த நான்கு கண்களும் கலந்தன. நான்கு கண்களிலும் லேசான ஆனந்தக் கண்ணீர். வியப்பு, மகிழ்ச்சி எல்லாமே! சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டிய காதல் ஓவியங்களவை! பொறுமையும்  சகிப்புத்தன்மையும் கொண்ட காதல் காவியங்களவை! இந்த காதல் இதற்கு முன் எப்போதாவது தோன்றியதா? இல்லையே! பின் எப்போதாவது தோன்றுமா ? சந்தேகமே!

          

      எத்தனை கால பிரிவு! வார்த்தைகள் வரவில்லை. அங்கே சற்று நேரம் அமைதி நிலவியது.” என்னவாணர் குல வீரரே! வார்த்தைகள் வரவில்லையா? அல்லது பேச யோசிக்கிறீர்களா? தேவி சற்றே ஏறிட்டு கேட்டே விட்டாள்.

              

      அந்த சோழ நாட்டு பெண் புலியின் கம்பீரமான பெண்மையை பார்த்து சற்றே தடுமாறித்தான் போனார் வாணர்குல வீரர். காதலில் விழுந்தால் எப்பேர்ப்பட்ட வீரனும் பெண்மையின் முன் தாழ்ந்து தான் போகிறான்

           

                  “தேவி!… தாங்கள்……தாங்கள்…….. தங்களை தரிசிப்பேன் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை”  இன்னும் அந்த வீரன் தடுமாறிக் கொண்டுதான் இருந்தான் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி தேவி”  “ அப்படியா?…. பின்னர்  ஏன் பெண்கள் உலவும்  இந்த நந்தவனத்திற்குள தாங்கள் நுழைந்தீர்களாம?  குந்தவையின்  கண்களில் குறும்பு தெரிந்தது.

          

               ஹி….. ஹி…. ஹி…. என்று தன் எப்போதும் போல அசட்டுத்தனத்தை காட்ட முற்பட்ட வாணர்குலவீரர்    சற்றே சுதாரித்து பேச்சை மாற்றிக் கொண்டார். “தாங்கள் தங்கும் மாளிகையில் வசதிகள் எப்படி இருக்கிறது தேவி? …. அதை மேற்பார்வை பார்க்கத்தான் வந்து கொண்டு இருந்தேன். அதற்குள் தாங்களே வந்து விட்டீர்கள். அது சரி, பிரயாணம் சௌகரியமா இருந்ததா தேவி?  வழியில் தங்களுக்கு பிரச்சனைகள் ஏதும் ஏற்பட வில்லையே?”

          

          அருள்மொழிவர்மர் தன் சகோதரி நந்திபுரத்துக்கு வருவதை அறிந்து அவர் வருவதற்கு முன்பாக மாளிகையை புதுப்பிக்க வேண்டிய ஏற்பாடுகளை செய்ய வேண்டி வல்லவரையரை  அனுப்பி விட்டிருந்தார். எல்லாம் ஒரு காரணத்திற்காகவே! இல்லாவிட்டால் தன் தமக்கையாரும் சரி வல்லவரையரும் சரி தங்கள் தங்கள் கடைமைகளில் மூழ்கி போயிருப்பார்கள். சந்தித்துக் கொள்ளவே மாட்டார்கள் .கடந்த பல ஆண்டுகளில் தனக்கும் இந்த சோழ சாம்ராஜ்யத்திற்கும்  பெரும் தொண்டு ஆற்றிய வல்லவரையரின் உணர்ச்சிகளுக்கும் எல்லோரையும் போல் இளவயதிலேயே திருமணத்தில் நாட்டமில்லாமல் அரசியல் விவகாரங்களில் ஈடுபட்ட தன்னை பெரும் வீரனாக்கிய  குந்தவை பிராட்டியின் உணர்ச்சிகளுக்கும் அச்சந்தர்பத்தில் மதிப்பளிக்க முற்பட்டார் மாபெரும் வீரரான அருள்மொழிவர்.

                          “தாங்கள் ,… தங்கள்…. தேவி…. என்ன வீர்ரே ! நான் எந்த நாட்டின் பட்டத்து ராணியோ இளவரசியோ அல்லவே. மரியாதை ரொம்ப பலமாய்  இருக்கிறதே!” குந்தவை  குரலில் சற்றே வருத்தம் தொனித்தது.

        

      “ தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் எங்கள் வாணர்குல தேசத்துக்கு அரிசியாகலாம் இல்லையா?”  வந்திய தேவர்  துணிந்து கேட்டே விட்டார்.

       

        குந்தவை பிராட்டியின் முகம் என்று சிவந்தது. “தங்களை போன்ற மாபெரும் வீரருக்கு பட்டத்து ராணியாகும் வாய்ப்பை யாரேனும் நழுவ விடுவார்களா வீரரே!?”         

                 “ தாங்கள் மட்டும் வீரரே வீரரே என்று அழைக்கலாமா தேவி?”   “ ஆம் தாங்கள் பெரும் வீரர் அல்லவா?”

“ ஆம் நீயும் என் தேவி அல்லவா?”      

            நீயும் என்பது சற்று அழுந்தச் சொன்னார் வல்லவரையர் சோழ நாட்டுப் பெண் புலி என்று சோழ நாட்டு விரோதிகளால் வர்ணிக்கப்படும் குந்தவை பிராட்டி அந்த வீரனின் முன்னால் கூண்டுக்கிளி ஆனாள். தலை குனிந்தாள்.

       

            வந்தியதேவர் மெல்ல பிராட்டியின் கைவிரல்களை மென்மையாக பற்றி மாதவிபந்தல் மேடை அருகே அமர வைத்து தானும் அமர்ந்தார்.

            

              இருவரும் வெகு நேரம் ஏதேதோ பேசிக் கொண்டார்கள், அருண்மொழி ஆளப்போகும் சோழ சாம்ராஜ்யத்தின் நலன் பற்றி, அப்போது சோழ நாட்டிற்கு சவாலாக இருந்த கடற்கொள்ளையர்களின் கொட்டத்தை அடக்குவதை பற்றி, அப்போது நாட்டில் பரவி இருந்த சமூக விரோதிகளை பற்றி, சோழ நாட்டை தன்னிறைவு அடைந்த  நாடாக்கி அதிகப்படியான அதன் செல்வங்களை கடல் வணிகத்திற்கும்,  எங்கும் பரவி இருந்த சைவ சமயத்திற்கு தொண்டாற்றிக் கொண்டிருக்கும் சமயத் தொண்டர்களுக்கு உதவுவது பற்றி, முடிவில் தங்கள் எதிர்கால வாழ்க்கையைப் பற்றி.

           வந்தியதேவர்  எழுந்து குந்தவையின் கையை பற்றி, “தேவி சற்றே அந்தப் படகில் உலா வரலாமா?” என்று கூறி படகில் பிராட்டியை அமர வைத்து தானும் அதில் அமர்ந்து கொண்டார்.

           படகு அந்த இரு மென்மையான காதல் உள்ளங்களை சுமந்து கொண்டு மென்மையாக நகர்கிறது. மேலே நீலவர்ண வானமும், அதில் மிதந்து கொண்டிருந்த வெண்பஞ்சு மேக தேவதைகளும் அங்கே சாட்சியாக பார்த்துக் கொண்டிருந்தன ! சலசலத்தோடும் நீரும் அதில் துள்ளி ஓடும் கண் சிமிட்டும் மீன்களும்  சாட்சியாக பார்த்துக் கொண்டிருந்தன ! விஸ்தாரமான ஏரியை சுற்றிலும் இருந்த பச்சை பசேல் மரங்களும், செடிகளும், கொடிகளும் அதில் குதூகலத்துடன் கொட்டமடித்துக் கொண்டிருந்த பறவைகளும் சாட்சியாக பார்த்துக் கொண்டிருந்தன! வானத்தில் பறந்து கொண்டிருந்த பருந்துகளும், காக்கைகளும், கிளிகளும் ஒன்றுக்கொன்று பேசி, “அதோ பார் வல்லவரையரும் பிராட்டியும் போவதை” என்று சொல்லி குதூகலத்துடன் பறக்கின்றன!  வானத்தில் மேற்கே அஸ்தமித்து கொண்டிருந்த சூரியனும், கிழக்கே உதயமாகி கொண்டிருந்த ஏகாதசி சந்திரனும் அவர்கள் இருவரையும் வாழ்த்தியபடி நகர்கின்றன! ஆம் இன்றும் கூட அந்த இயற்கை வளங்கள் அவர்களின் காதலுக்கு சாட்சி பாவங்களாகத்தான் நிற்கின்றன.                  

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    இதனை இதனால் (சிறுகதை) – செல்வம். T

    இந்த மண்ணின் தேவதைகள் (பகுதி 2) – சுஶ்ரீ