எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
‘எம்மோவ்… ஊட்டுல யாருங்க… ‘
குரலைக் கேட்டதும் பாத்திரத்தை அப்படியே போட்டுவிட்டு எட்டிப் பார்த்தாள் இருளாயி. வீராசாமி நின்று கொண்டிருந்தான்.
வடக்குப்பட்டி அவள் பிறந்த ஊர். தெற்குப்பட்டி அவள் ஓடிவந்து கட்டிக்கொண்ட ஊர். இரண்டையும் பிரிப்பது ஒரு ஏரிதான். ஆனாலும் பஞ்சாயத்து ஒன்றுதான். இரண்டு ஊருக்கும் பொதுவான வெட்டியானும் அவன்தான்.
மாடுகளுக்கு தொழுவத்தில் தண்ணீர் காட்டிக்கொண்டிருந்த மாரியம்மாவும் அரவம் கேட்டு திரும்பிப் பார்த்தாள்.
‘ யாராப்பாது… ‘
‘ ஏன் ஆத்தா… தெரியலையா…நாந்தான் வீராசாமி… ‘
‘ ஓ… நீயா… என்ன விஷயம்… ‘
‘ஆத்தா… பஞ்சாயத்தை கூட்டறாங்க… உங்க மகனையும் மருமகளையும் கையோட கூட்டிவரச் சொன்னாங்க… ‘
திக்கென்றது மாரியம்மாவுக்கு. ஊருக்குள் எந்தப்பொண்ணாவது வீட்டைவிட்டு யாருடனாவது ஓடிப்போனால் இப்படி கூட்டம் போட்டு அபராதம் விதிப்பது வாடிக்கைதான். மூன்று நாட்களாக அப்படி ஒன்றும் நடக்கவில்லையே என்று ஆச்சரியப்பட்டும் நிம்மதியாகவும் இருந்தாள்.
இப்போது நடந்தே விட்டது. ஆனாலும் நெஞ்சை திடப் படுத்திக்கொண்டு, ‘புள்ளை வேலைக்குப் போயிருக்கான்பா… ‘ என்றாள்.
‘தெரியும் ஆத்தா… இருளாண்டி இல்லேனாலும் மருமகப் புள்ளையை மட்டுமாவது கூட்டி வான்னாங்க… ’ என்றான்.
மருமகளைப் பார்த்து, ‘கண்ணு… நீ ஒரு நடை போயிட்டு வந்துடு… எனக்குப் புடிச்சவனோட ஓடிப்போனது தப்பில்லைனு சொல்லு… தண்டம் போட்டா, தம்பி போயி பார்த்துக்குவான். நீ வந்துடு…‘ என்றாள்.
இருளாயி கிளம்பிப் போனாள்.
xxxxxx
மூன்று நாட்களுக்கு முன்னால், நள்ளிரவு. வெளியே அரவம் கேட்டு தூக்கம் களைந்து புரண்டு படுத்தாள் மாரியம்மாள். யாரோ குசுகுசுவென்று பேசிக்கொள்வது கேட்டது. சட்டென எழுந்தவள் உடனே மகனைக் கூப்பிட்டாள். பதிலில்லை.
உஷாராக தடிக்குச்சியை எடுத்துக்கொண்டு மெல்ல வெளியே வந்தாள். நிலா வெளிச்சத்தில் இரண்டு பேர் நிற்பது தெரிந்தது.
‘ யே… யாரப்பாது…இந்நேரத்துல… இங்கே… ‘
‘ அம்மா நாந்தான்… ‘
அப்போதுதான் புரிந்தது அங்கே நின்றுகொண்டிருப்பது இருளாண்டிதான் என்று.
‘ இந்த நேரத்துல இங்கே என்னய்யா பண்றே… ‘ என்றபடி வாசலுக்கு வந்தாள். நிலாவின் வெளிச்சத்தில் அவனுக்குப் பின்னால் ஒரு பெண் உருவமும் தெரிந்தது.
‘ அம்மா… இது இருளாயி… என்னைத் தேடி ஓடி வந்துடுச்சு… ‘ என்றான்.
திக்கென்றது மாரியம்மாவுக்கு. மெல்ல வெளிப்பட்டு முன்னே வந்தவ இருளாயி கையிலிருந்த பையுடன், சடாரென்று மாரியம்மாவின் கால்களில் விழுந்தாள்.
‘அத்தை… என்னை ஏத்துக்கங்க… இருளாண்டியை நான் மனசார நேசிக்கறேன்… அவுங்களும் என்னை நேசிக்கறாங்க… ‘
திகைப்பு உண்டானாலும், மகனுக்காக அவளை ஏற்றுக்கொண்டு தூக்கிவிட்டாள். ‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழுவே, எழுந்திரு… ‘ மகனோ அம்மாவை பரிதாமாகப் பார்த்தான்.
‘ அம்மா… இருளாயி நல்லவம்மா… நமக்கு ஏத்தப் பொண்ணு… நீ சரின்னு சொல்லும்மா… ‘
ஒரு கணம் செத்துப் போன தன் புருஷனை நினைத்துப் பார்த்துக் கொண்டாள். தானும் இதுபோல துணிமுடிச்சுடன் இந்த வீட்டுக்கு ஓடிவந்ததையும் நினைத்துப் பார்த்துக் கொண்டாள் மாரியம்மாள்.
அப்புறம் எல்லாம் மடமடவென நடந்து முடிந்தன.
‘அரவாயி… என் ரெண்டு புள்ளைகளையும் நீதான் வச்சுக் காப்பாத்தணும்… ‘ என்று சாமியை வேண்டிக்கொண்டு, சாமி படத்தின் முன்னாள் அவர்களை நிற்கச் சொல்லிவிட்டு மடமடவென வேலைகளைப் பார்த்தாள்.
சாமிப் படத்தின் முன்னாள் இருக்கும் விளக்கை ஏற்றினாள். அதற்கு இருலாயியும் ஓடிவந்து உதவினாள்.
பழைய இரும்புப் பெட்டியைத் திறந்து ஒரு மஞ்சள் முடிச்சை எடுத்தாள். அதில்தான் அவளது தாலி இருந்தது. சோப்புப் போட்டுக் கழுவி, மஞ்சள் தூளை குழைத்து சரடில் தடவினாள். இப்போது அது புதுத் தாலி போல மின்னியது.
கற்பூரத்தை ஏற்றி சாமிக்கு காட்டியபடி, ‘தாயே… என் புள்ளைங்க ரெண்டையும் காப்பாத்து… ‘ என்று வேண்டிக்கொண்டு விபூதியை அள்ளி அவர்களது நெற்றியில் இட்டுவிட்டு தாலிச் சரடை மகனின் கையில் கொடுத்து, ‘ கட்டுய்யா… ‘ என்றாள்.
இரவோடு இரவாக அந்த வீட்டுக்கு மருமகளானாள் இருளாயி. நான்கு நாட்கள் ஓடிவிட்டன.
xxxxxx
பிள்ளையார் கோவில் சிமென்ட் மேடையில் நான்கைந்து பேர் உட்கார்ந்திருக்க, முப்பது நாற்பது பேர் ஆங்கங்கே உட்கார்ந்து கொண்டும் நின்றுகொண்டுமிருந்தனர். எல்லோரும் ஆளாளுக்கு பேசிக்கொண்டுமிருந்தனர்.
இருளாயியை பார்த்தவுடன் அவளது பெரிய அண்ணன் திடீரென்று ஓடிவந்தான். ‘திருட்டுக் கழுதை… எங்களை ஊர் சிரிக்க வச்சிட்டியே… ‘ சத்தம் போட்டபடி கையை ஒண்டிக்கொண்டு ஓடிவந்தான்.
சட்டென மூன்று நான்கு பேர் அவனைப் பிடித்துக் கொண்டனர்.
‘அடே… ரெங்கா… எங்களை கூப்பிட்டு வச்சிகிட்டு… இப்போ நீ அடிக்கப் போனா என்ன அர்த்தம்… எதுக்கு கூட்டத்தை கூடினே… நீங்களே அடிச்சுக்க வேண்டியதுதானே… ‘ என்று அதட்டினார் ஒரு பெரியவர்.
இருளாயி யோ கொஞ்சமும் அசராமல் நின்றிருந்தாள்.
‘ அடடா… தொனதொனன்னு பேசாதீங்கப்பா… ‘ என்று கூட்டத்தைப் பார்த்து சத்தம் போட்ட பெரியவர், இருளாயையைப் பார்த்து சொன்னார், ‘ பாரம்மா… நீ சின்னப் பொண்ணு… வீட்டை விட்டு ஓடிவந்தது தப்புன்னு சொல்லி புகார் கொடுத்திருக்காங்க உங்கண்ணன்மாருங்க… உன்னை வீட்டுக்கு வரச் சொல்றாங்க… நீ என்ன சொல்றே… ‘
‘ அய்யா… எனக்கு இருபது வயசாவுதுங்க… அடுத்த வருஷமே அவங்களுக்கு ஒரு மருமவனைப் பெத்ததுக் கொடுக்கற பக்குவம் இருக்கு எனக்கு… நான் ஒன்னும் சின்னப் பொண்ணு இல்லை… திரும்பிப் போகல்லாம் முடியாது… வந்து வாழ்த்திட்டுப் போகச் சொல்லுங்க… ‘
மறுபடியும் எகிறிக் கொண்டு எழுந்தான் அவளது பெரிய அண்ணன்.
‘ திருட்டுக்கழுதை உறவு கொண்டாடறதைப் பாருங்க… அவ பத்துப் பவுனு நகையை திருடிக்கிட்டு ஓடிவந்துட்டா… அதை திருப்பிக் கொடுத்துட்டு ஒழிஞ்சுப்போகச் சொல்லுங்க… ‘
அவனை அடக்கினார் பெரியவர். ‘ அடே… என்ன இருந்தாலும் அவ உன் கூட பொறந்த பொறப்புடா… எங்கே இருந்தாலும் நல்லா இருக்கட்டும்னு வாழ்த்தாம… இப்போ என்ன… அந்தப் பொண்ணு நகை எடுத்துக்கிட்டு ஓடிவந்திடுச்சு… அதை திருப்பித் தரச் சொல்றே… அவ்வளவுதானே…’ என்றார்.
‘ இல்ல திருடி எடுத்துக்கிட்டு… ‘ என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே குறுக்கிட்டு, ‘ அய்யா… நான் திருடி எடுத்துக்கிட்டு ஓடிவரலைங்கய்யா… சாமி மேல சத்தியம்… ‘ என்றாள் அவள்.
யோசித்தார் பெரியவர். ‘ சரி… இந்தாப்பா அந்த சூடத் தட்டை எடுத்து வா…’ என்றார் இன்னொருவரிடம், தட்டு கொண்டு வரப்பட்டது. சூடத்தை ஏற்றி, ‘ இதை அணைச்சு சத்தியம் பண்ணு ‘ என்றார் பெரியவர். சத்தியம் செய்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தாள் இருளாயி.
xxxxxxx
அதற்குள் கூலிவேலை முடித்து வீடு திரும்பியிருந்த இருளாண்டி, குளித்துவிட்டு வந்து சாப்பிட உட்கார்ந்தான். தட்டில் சோற்றைப் போட்டு சுடச் சுட குழம்பை ஊற்றிக் கொண்டுவந்து அவனிடம் வைத்தாள் அவள்.
‘ அம்மா சொல்லுச்சு… கூட்டம் போட்டாங்களாமே… ‘
‘ ஆமா எங்கண்ணன் நகைகளை திருடி எடுத்துக்கிட்டு வந்துட்டேன்னு புகார் குடுத்திருக்கார்… ‘ என்றவள் எழுந்தாள். ‘ நா இல்லைன்னு சத்தியம் பண்ணிட்டு வந்துட்டேன்… ‘ என்றபடியே அடுக்களையில் இருந்து ஒரு துணிப்பையை எடுத்தவள், அப்படியே கொண்டு வந்து அவன் முன் உட்கார்ந்து விரித்தாள்.
நகைகள் பளபளவென மின்னின. திடுக்கிட்ட இருளாண்டி, ‘ இந்தாப் புள்ள… அப்போ பஞ்சாயத்துல நீ பொய் சத்தியமா பண்ணினே… ‘ என்றான்.
‘ நான் ஏன் பொய் சொல்லணும்… ‘ உன் தாய்மாமனை கட்டிக்கத்தான் உனக்கு இஷ்டமில்ல… வேற யாரைத்தான் கட்டிக்க இஷ்டம் ‘னு எங்க ஆத்தா கேட்டதும், உன் பேரைத்தான் டக்குனு சொன்னேன். நம்ம ரெண்டு பண்ணைக்கும்தான் பகை இருக்கே. எங்க அண்ணனுங்க விடமாட்டானுங்கன்னும் தெரியும். அதான், உடனே எங்கம்மா இந்த நகைகளை எல்லாம் எடுத்துக்கொடுத்து, ‘ உங்கண்ணன்கள் கண்ணுல பட்டுடாம ஓடிப் போய்டு… உனக்குப் பிடிச்சவனை கட்டிக்கிட்டு சந்தோஷமா இரு… ‘னு சொல்லி ராவோட ராவா அனுப்பி வெச்சிட்டாங்க.. ‘ என்றவள் நகைகளை அள்ளிக் காட்டி, ‘ இது எனக்கு தாய் வீட்டு சீதனம். திருட்டு நகை இல்லே… ’ என்றாள். கண்களில் நீர் கசிந்துகொண்டிருந்தது.
மனைவியை பெருமிதமாகப் பார்த்தபடி சாப்பிடவும் மறந்து உட்கார்ந்திருந்தான் இருளாண்டி.
எழுத்தாளர் நாமக்கல் வேலு எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
இருளாண்டி முகம் பிரகாசம் ஆனது என கதையை முடித்து இருக்கலாம்