எழுத்தாளர் மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“ஏப்பா ஒருவாட்டி சொன்னா புரியாதா… எனக்கு தலைக்கு மேல வேலை இருக்கு” என்று குரலை உயர்த்தினான் கண்ணன்.
“அதுக்கில்லப்பா… கண்ணுல மருந்து விட்டாங்கன்னா மசமசன்னு தெரியும்… இருளா இருக்கும் மயக்கம் வர மாதிரி இருக்கும்… அதான் கூட வரமுடியுமான்னு கேட்டேன்”
“அப்படி இருந்தா ஒரு அரமணி நேரம் அங்கேயே உட்கார்ந்து இருந்துட்டு… ஆட்டோவுக்குக் காசு கொடுக்கிறேன் மெதுவா வாங்க… இங்க வந்து என்ன பண்ணப் போறீங்க?”
“சரிப்பா… நீ கிளம்பு பொறுமையா போ நான் பார்த்துக்கிறேன்” என்றார் கண்ணனின் தந்தை குணசேகரன்.
வண்டியை கிளப்பி வேகத்தைக் கூட்டி தெருவினைத் தாண்டி முக்கியச் சாலைக்கு நுழைந்தான் கண்ணன். பரபரப்பான சாலையில் நிதானமான வேகத்தில் போய்க் கொண்டிருந்த கண்ணனின் வண்டியின் குறுக்கே வந்தார் வயதான பெண்மணி.
நல்ல வேலையாக அவர்மீது மோதவில்லை… சாமர்த்தியமாக வண்டியை நிறுத்திய கண்ணன் கோபத்தில் கொப்பளிக்கத் தொடங்கினான்.
“ஏய் பாட்டி… வயசான காலத்துல வீட்டுல கெடக்க வேண்டியது தானே… எதுக்கு இப்படி ரோட்டுல வந்து என் வண்டியில தான் விழணுமா? கண்ணு கிண்ணு தெரியுமா தெரியாதா?”
“கோச்சிக்காதா தம்பி… நான் கண்ணு செக் பண்ணத்தான் அந்தப்பக்கம் இருக்கிற கண் மருத்துவமனைக்குப் போறேன். கொஞ்ச அந்தப்பக்கம் விட்டுடுயா உனக்குப் புண்ணியமா போகும்”
இமயத்திற்கு ஏறியிருந்த கோபம் ஏனோ சட்டென்று குமரிக் கடலின் ஆழத்திற்குக் குறைந்து ..குளிர்ந்தான் கண்ணன் .
“கொஞ்ச இருங்க ..வண்டிய ஓரமா நிறுத்திட்டு வரேன்” என்று சொல்லிவிட்டு வண்டிய சாலையோரம் எஞ்சியிருந்த புங்க மரத்தடியில் நிறுத்திவிட்டு வந்தான். அந்த அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு சாலையைக் கடந்து …அருகில் இருந்த அந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தான் .
அதுவரை அமைதியாக வந்த அந்த அம்மா … “தம்பி நீ நல்லா இருக்கணும் …உன்ன பெத்தவங்க ரொம்பக் கொடுத்து வச்சவங்க…யாருன்னே தெரியாத எனக்கு உதவியிருக்கியே …ம் நானும் தான் ஒண்ண பெத்தேன் …ஆஸ்ப்பிடலுக்குக் கூட்டிட்டுப் போகச் சொன்னா …காசு கொடுக்கிறேன் நீ போய்ப் பாத்துட்டு வா அப்படின்னு சொல்லி அனுப்புது …அவனுக்கு இப்படியே இருப்பான்னு நெனப்பு …அவனுக்கு வயசு ஆகாதே போயிடுமா …இப்ப உயிர்மேல எனக்கு இருக்கிற ஆச அவனுக்கு வராமலேயே போயிடுமா …பார்த்துப் பொறுமையா போ பா” என்றாள் .
மருத்துவமனையை விட்டு வெளியே வந்த கண்ணனுக்கு நெஞ்சிக்குள் நெருஞ்சி முள் குத்தியது .
தனது அலைபேசியை எடுத்தான் …சில மணித்துளிகளில், “அப்பா எங்க இருக்கீங்க …?!”
“இப்பதான்பா கண்ணுக்கு மருந்து விட்டாங்க… மருத்துவமனையிலேயே தான் இருக்கேன்”
“அங்கேயே இருங்க நான் வரேன்… ஆட்டோவில் போக வேண்டாம்” என்று சொல்லிவிட்டு அலைப்பேசியைப் பையில் வைக்கப் போக அது ஒலித்தது..எடுத்துப் பார்க்க கண்ணனின் மகன் கல்லூரி படிப்பவன்.
“சொல்லுப்பா …?”
“இந்த மாதம் உங்க மருத்துவப் பரிசாதனைக்கு என்னால வரமுடியாது …நிறைய வேலை இருக்கு நீங்களே போயிட்டு வந்திடுங்க”
“சரிப்பா…நீ உன் வேலையைப் பாரு” என்று சொல்லிவிட்டு கிளம்பிய கண்ணனுக்கு உள்ளுக்குள்……
“அவனுக்கும் வாழ்வில் திருப்பங்கள் வராமலா போயிடும்” புன்னகைத்துக் கொண்டே வண்டியைத் திருப்பினார் கண்ணன்
எழுத்தாளர் மலர் மைந்தன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings