எழுத்தாளர் அர்ஜுனன்.S எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“சை.. இவனும் கேன்சல் பண்ணிட்டான்.. “
மொபைலை பார்த்தபடியே சலித்துக் கொண்டார் ஆனந்தராஜ்.
“நான் தான் முதல்லயே சொன்னேன்ல?.. ரெண்டு தெரு தாண்டி தானே ஆட்டோ ஸ்டான்ட் இருக்கு.. நேரில போய் கூட்டிட்டு வந்திருந்தா இந்நேரம் இரயில்வே ஸ்டேஷன் போய் சேர்ந்திருப்பீங்க..”
மனைவி கனகத்தின் பதில் கிச்சனில் இருந்து கேட்டது.
ஆனந்தராஜ் மணியைப் பார்த்தார். மணி இரவு எட்டரை. 9.10க்கு தாம்பரத்தில் பொதிகையை பிடிக்க வேண்டும். வீட்டிலிருந்து பத்து நிமிட பயணம் தான். ஆனால் அவருக்கு எப்போதும் கடைசி நேர பரபரப்பு பிடிக்காது. குறைந்த பட்சம் கால் மணி நேரம் முன்பாக சென்று, பிளாட்ஃபார்ம் கொசுக்களுக்கு கொஞ்சம் வாழ்வு கொடுத்தால் தான் நிம்மதி.
அவர் மட்டும் தான் ரயிலைப் பிடிக்க வேண்டும். லக்கேஜ் இல்லையென்றால், பைக் டாக்ஸி தான் அவரது சாய்ஸ். இப்போது சுமை வேறு இருக்கிறது. ஆட்டோ புக் செய்தால், அதில் போட்ட தொகைக்கு மேல் அதிகம் கேட்டு தகராறு. மூணாவது ஆட்டோ கேன்சல் ஆகிவிட்டது.
“யோசிச்சிட்டு இருக்கிறதுக்கு பதிலா ஸ்டாண்டுக்கு போய் ஆட்டோவை கூட்டிட்டு வாங்க..”
மனைவியின் சப்தம் கேட்டு மீண்டும் சுய நினைவுக்கு வந்தார்.
“சரி.. இதோ போறேன்..” என்று வேகமாக கிளம்பினார்.
பொதுவாகவே ஆட்டோ ஸ்டான்ட் ல உள்ள ஆட்டோக்காரர்களை அவருக்குப் பிடிக்காது. சும்மாவுச்சும் உட்கார்ந்து பேசிக்கிட்டு அரசியல், சினிமானு பேசிக்கிட்டு இருப்பாங்க, நாம போய் கூப்பிட்டா ரிட்டர்னுக்கு உள்ள காசையும் சேர்த்து டபுள் அமௌன்ட் நம்மகிட்ட கேப்பாங்கணு அவருக்கு ஒரு எண்ணம். எனவே ஏதாவது சவாரி முடிச்சு திரும்ப போகும் வண்டி கிடைச்சா பார்க்கலாம்னு நினைத்தார்.
தெருமுனையில் உள்ள வீட்டு வாசலில் ஒரு ஆட்டோ நின்று கொண்டிருப்பதை பார்த்தார். சரி, இந்த ஆட்டோ வருமானு கேட்கலாம் என நினைத்து, டிரைவரை அணுகினார்.
ஆட்டோ டிரைவருக்கு ஐம்பது வயதிருக்கலாம். ஆட்டோ உள்ளே வெளிச்சத்திற்கு ஒரு லைட்டை எரியவிட்டு தீவிரமாக ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டும், அவ்வப்போது பென்சிலால் அடிக்கோடிட்டுக் கொண்டும் இருந்தார்.
“ஹலோ.. ஆட்டோ..” ஆனந்தராஜ் அழைக்கவும், கையில் உள்ள புத்தகத்தை மூடிவிட்டு நிமிர்ந்து பார்த்தார் ஆட்டோ டிரைவர்.
புத்தகத்தின் அட்டையில் “வணிக அடிப்படை கூறுகள்” என தலைப்பிட்டு இருந்தது. ஏதோ ஒரு பல்கலைக் கழகத்தின் பாடநூலாக அது இருப்பது தெரிந்தது.
***
ஆனந்தராஜ் அந்த ஆட்டோ டிரைவரை அழைக்கவும், தான் படித்துக் கொண்டிருந்த பட்டப்படிப்பு பாடப் புத்தகத்தை மூடி விட்டு நிமிர்ந்து பார்த்தார் டிரைவர்.
“ஆட்டோ.. சவாரி வருமா..?”” என்ற ஆனந்தராஜின் கேள்விக்கு ஒரு நிமிடம் யோசித்த டிரைவர்..
“எங்க போகணும்?” என்றார்.
“தாம்பரம் இரயில்வே ஸ்டேஷன்..”
“ம்ம்..”
“எவ்வளவு கேப்பீங்க..?”
சென்னையில் தான் யாரும் ஆட்டோவுக்கு மீட்டர் போடுவதே கிடையாதே!
அவர் சொன்ன தொகை ஒத்துப் போக, ஆட்டோ வை வீட்டுக்கு வேகமாக அழைத்து வந்து, லக்கேஜோடு ஆட்டோ ஏறி, மனைவியிடம் விடைபெற்று ஆட்டோ கிளம்பிய பிறகு தான் ஆனந்தராஜ்க்கு நிம்மதி வந்தது.
“டிரைவர்.. உங்க பேரு என்ன..?”
“பரமசிவம்.. ஸார்..”
“ஒன்னு கேட்டா தப்பா நினைச்சிக்க மாட்டீங்களே.. பரமசிவம்..?”
“கேளுங்க ஸார்..” ஆட்டோ வை ஓட்டிக் கொண்டே பேச்சைத் தொடர்ந்தார்.
“இல்ல.. உங்களுக்கு வயசு ஐம்பது இருக்கும்னு நினைக்கேன்.. ஆனா நீங்க ஏதோ தீவிரமா படிச்சிக்கிட்டு இருந்தது மாதிரி தெரிஞ்சது..”
“ஆமா ஸார்.. பி. காம்… கரஸ்பான்டன்ஸ்ல படிக்கேன்..”
“ஓ..” என ஒரு நிமிஷம் வியந்த ஆனந்தராஜ் தொடர்ந்து, “படிக்கிற வயசில குடும்ப சூழ்நிலையால உங்களால படிக்க முடியாம போயிடுச்சா..? சொல்ல விருப்பம் இருந்தா சொல்லுங்க..” என்றார்.
“ஸார்.. எங்க குடும்பம் நடுத்தர குடும்பம் தான்.. நான் தான் மூத்தவன்.. எனக்குப் பிறகு ரெண்டு தங்கச்சிங்க.. எங்கப்பா கஷ்டப்பட்டு என்னை காலேஜில சேர்த்து விட்டார்.. நான் தான் சேர்க்கை சரியில்லாம ஒழுங்கா படிக்கல.. மொத வருசம் மொத்தம் அரியர்ஸ்.. ரெண்டாவது வருஷம் சுத்தமா காலேஜ் போகவே பிடிக்கல.. இதுக்கிடையில எங்கப்பா இறந்திட்டாரு..”
“ஓ..”
“அப்புறம் குடும்ப செலவை சமாளிக்க வேலை தேடி போய்ட்டேன்.. என்னன்னவோ வேலை பார்த்து கடைசில ஆட்டோ ஓட்டற தொழிலுக்கு வந்தேன்..”
“இது உங்க சொந்த ஆட்டோ வா..?” ஆர்வமாக கேட்டார் ஆனந்தராஜ்.
“பேங்க் லோன் போட்டு சொந்தமா தான் ஆட்டோ வைச்சிருந்தேன்.. தங்கச்சிகளை கரையேத்திட்டு, நானும் கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா தான் இருந்தேன்.. இடையில கொஞ்சம் கிறுக்கு பிடிச்சிருச்சு..”
“கிறுக்கா..? யாருக்கு?..” என ஆச்சரியமான ஆனந்தராஜ், டிரைவர் பரமசிவத்தை மறுபடி ஒருமுறை முழுசாக ஆராய்ந்தார்,
‘நாம ஒரு பைத்தியத்து கூட இவ்வளவு நேரம் பேசுறோமா?’ என்ற சிந்தனையோடு. தேவையில்லாமல் வடிவேலு காமெடி வேறு ஞாபகம் வந்தது.
பரமசிவம் அதைப் பற்றிக் கவலைப்படாமல் தொடர்ந்தார்..
“எனக்குத் தான் ஸார்.. ஓரளவு வருமானம் ரெகுலரா வரவும், மீண்டும் கெட்ட சகவாசம், குடிப் பழக்கம்..”
“குடிப் பழக்கமா..?”
“ஆமா ஸார்.. குடிக்கு அடிமையாகிட்டேன்.. அதனால ஒழுங்கா சவாரிக்குப் போகாம.. டியூ கட்ட முடியாம வண்டியும் போயிடுச்சு.. வீட்டில தினமும் சண்டை.. “
“சரி.. எப்படி அதிலிருந்து மீண்டு வந்தீங்க..?”
ஸ்டேஷன் வருமுன் மீதிக் கதையையும் கேட்டுவிடும் ஆர்வத்தில் இருந்தார் ஆனந்தராஜ்.
ஒரு நீளமான பெருமூச்சு விட்ட டிரைவர் பரமசிவம்.. “எல்லாம் என் பொண்ணால தான்..” என்று பெருமிதமாக சொன்னார்.
“உங்க பொண்ணாலா..? அவளுக்கு என்ன வயசு..?”
“இருபது வயசு ஸார்.. காலேஜ் ஃபைனல் இயர் படிக்கா..”
“ஓ..”
“ஒரு தடவ ஓவரா தண்ணி அடிச்சு.. கால் போன போக்கிலே நடந்து.. ஒரு முட்டுச் சந்துல ஒரு நாள் முழுசும் நினைவில்லாம கிடந்தேன்.. என் வீட்டுக்காரி கூட என்னைத் தேடிப் பாக்கனும்னு நினைக்கல.. தானும் சம்பாதிக்காம அவகிட்ட இருக்கிற காசையும் பிடுங்கிட்டு போறவன யாருக்குத் தான் பிடிக்கும்..? என் பொண்ணு தான் அவளையும் வற்புறுத்தி கூட்டிட்டு ஊர் முழுசும் அலைஞ்சு என்னை தேடி கண்டுபிடிச்சு..”
பரமசிவம் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே பழைய நினைவுகளால் தாக்கப்பட்டதால் விழியோரம் இரண்டு சொட்டு கண்ணீர் வர.. ஒரு நிமிடம் சுதாரித்து மீண்டும் தொடர்ந்தார்..
“அன்னைக்கு தெளிஞ்சவன் தான் ஸார்.. அன்னைக்கே என் மக தலையில கையை வைச்சு இனி குடிக்க மாட்டேன்னு சத்தியம் செஞ்சேன்..”
“உங்க மக தலையிலா..?” ஆச்சரியமானர் ஆனந்தராஜ்.
“ஆமா ஸார்.. எனக்கு என் உசிர விட என் மக உசிரு தான் பெரிசு.. அப்படி சத்தியம் செஞ்சா தான் நான் ஃபாலோ பண்ணுவேன்னு எனக்கு நம்பிக்கை இருந்துச்சு..”
“சரி.. எப்படி டிகிரி படிக்கணும்னு தோணுச்சு..? இந்த காலத்தில டிகிரி படிச்சு இளைஞர்களே வேலையில்லாம சுத்திக்கிட்டு இருக்காங்களே..?” என்று மறுபடியும் முதல் கேள்விக்கு வந்தார் ஆனந்தராஜ்.
“நான் குடிக்க மாட்டேன்னு சத்தியம் பண்ணின அன்னைக்கு என் மக ரெண்டு விசயத்துல என் நடவடிக்கைல மாற்றம் கொண்டு வந்தா..”
“என்ன விசயம்..?”
“அதுவரைக்கும் கங்கா நகர் பஸ் ஸ்டாப் ஆட்டோ ஸ்டான்ட்ல இருந்து தான் ஆட்டோ ஓட்டிக்கிட்டு இருந்தேன்.. அதில நீங்க சொன்ன மாதிரி நிறைய நேரம் சும்மா இருந்ததால தான் தேவையில்லாத பேச்சு, சகவாசம், கெட்ட பழக்கம் எல்லாம்.. அதனால வண்டியை ஓலாவுக்கு அட்டாச் பண்ணி ஓட்டணும்னு மொத கண்டிசன்.. “
“நல்ல கண்டிசன் தான் பரமசிவம்.. நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் ஓட்டிறீங்க.. எவ்வளவு நேரம் சும்மா இருக்கிறீங்கனு உங்க மொபைல் காண்பிச்சு குடுத்திடும்..”
“ஆமா.. அத்தோட நைட்டு ஒன்பது மணிக்கு முன்னாடி எடுக்கிற சவாரியோட நிறுத்திவிட்டு வீட்டுக்கு வந்திடனும்.. அப்படி ஓலாவ ஆஃப் பண்ணி இருக்கும்போது தான் நீங்க நேரில் வந்து கூப்பிட்டீங்க.. எனக்கு வீடு இந்தப் பக்கம்கிறதால ஒத்துகிட்டேன்…”
“ஓ..”
“ஆமா ஸார்.. ரெண்டாவது கண்டிசன்.. சும்மா இருக்கிற நேரத்தில உருப்படியா ஏதாவது செய்யணுமே?.. அதனால டிகிரி படிங்க.. சந்தேகத்தை நான் உங்களுக்கு சொல்லித் தாரேன்னு சொன்னா..”
“சூப்பர்.. உங்க பொண்ணு பேரு என்ன..?”
“சுப்பம்மா..” என்று சொன்னவர் டக்கென நாக்கைக் கடித்தபடி “சுதா..” என்றார்.
“முதல்ல சுப்பம்மானு சொன்னீங்களே..? அது அவளோட பாட்டி பேரா..? ஸ்கூல் ரெக்கார்டுக்கு சுதானு வைச்சிருக்கீங்களா..?”
“இல்ல ஸார்.. அப்பனுக்கு பாடம் சொல்லித் தந்த சுப்பன்..னு சொல்லுவாங்க.. இது பொண்ணாச்சே.. அதனாலே சுப்பம்மானு வீட்டில நான் செல்லமா கூப்பிடுவேன்..” என்றார் பரமசிவம்.
அதே வேளையில் ஆட்டோ இரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து விட்டதால்.. “ஓகே.. உங்க பொண்ணுக்கு என்னோட வாழ்த்தையும் சொல்லுங்க..” என்றபடி விடைபெற்றார் ஆனந்தராஜ்.
எழுத்தாளர் அர்ஜுனன்.S எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings