எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“ரம்யா, நேத்து ஊர்ல இருந்து வந்ததுமே கேட்கணும்னு நினைச்சேன், மறந்தே போச்சு. உங்க அண்ணன் புது வீடு வாங்கப் போறானாமே. ட்ரெயின்ல உங்க ஒண்ணுவிட்ட அத்தை கமலா என்கூடவே தான் வந்தாங்க. இங்கே ஏதோ கல்யாணமாம், அதுக்காக வராங்க போல. ட்ரெயின்ல பேசிட்டே வந்தாங்க. அவங்கதான் என்கிட்ட சொன்னாங்க, இந்த மாதிரி உங்க அண்ணன் வீடு வாங்கப் போற விஷயத்தை. நீ என்கிட்ட எதுவும் சொல்லலையே.”
என்ன பதில் சொல்வது சற்று திணறிவிட்டு, வழக்கமாகச் சொல்வது போலவே இந்த முறையும் சமாளித்தேன்.
“அப்படியா அத்தை? எனக்குத் தெரியாதே, சூப்பர் இல்ல.”
“என்ன ரம்யா, உங்க வீட்டு விஷயம் உனக்குத் தெரியாதா? ஆனாலும் நீ ரொம்ப வெகுளியா இருக்கியோன்னு தோணுது. (இப்போது மட்டும் என் மாமியாருக்கு நான் நல்லவளாகப் போய்விட்டேன்).
ம்ம்ம், உன் அண்ணிதான் இப்பவே உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு சொல்லியிருப்பா. இருந்தாலும் உங்க அம்மாவாவது சொல்லியிருக்கலாம். உங்க ஒண்ணுவிட்ட அத்தைக்குத் தெரிஞ்சிருக்கு. அந்த வீட்டுப் பொண்ணு நீ, உனக்குத் தெரியாம ரகசியமா செய்றாங்க பார்த்தியா. நீயும் இதெல்லாம் பழகிக்கோ. நம்ம வீட்டுல ஒரு தும்மல் போட்டாக் கூட எல்லாத்தையும் ஒப்பிக்கறே நீ. சாமர்த்தியம் பத்தாது உனக்கு.”
பதில் சொல்லத் தெரியவில்லை எனக்கு. இப்படி அடிக்கடி பிறந்த வீட்டிற்கும், புகுந்த வீட்டிற்கும் இடையில் பூசி மொழுகி சமாளித்தே வாழ்க்கையில் பாதி நாட்கள் கழிந்து விடுகின்றன. திரிசங்கு சொர்க்கம் போல் ஒரு நிலைமை. இங்கேயும் விட்டுக் கொடுக்க முடியாமல், அவர்களையும் காட்டிக் கொடுக்க இயலாமல், உஸ்ஸ்ஸ் அப்….பா…..
உண்மையில், அண்ணன் வீடு வாங்கப் போவதாக ஒரு மாதம் முன்பே அண்ணனும், அம்மாவும் என்னிடம் சொல்லி விட்டார்கள். கூடவே ஒரு கண்டிஷன் வேறு.
“ரம்யா, இப்போதான் வீடு பார்த்திருக்கு. லோன் விஷயம் இன்னும் ஃபைனலைஸ் ஆகல. வீடும் இன்னும் முழுசா கட்டி முடிக்கல. அதனால நீ இப்பவே இந்த விஷயத்தை உங்க வீட்டுல யாருக்கும் சொல்ல வேண்டாம், புரியுதா? எல்லாம் கூடிவந்த பிறகு நானே உங்க வீட்டுக்காரர்கிட்ட சொல்றேன். அதுதான் முறை. மரியாதையும் கூட.”
இப்படிச் சொன்ன பிறகு நான் இந்த விஷயத்தை எப்படி என் புகுந்தவீட்டில் பகிர்ந்து கொள்வது? அதனால்தான் அத்தையிடம் என்ன பதில் சொல்வது என்ற திணறல். இல்லையா பின்னே, அண்ணன் வீடு வாங்கும் விஷயம் எனக்குத் தெரியும் என்று சொன்னால், ஏன் தன்னிடம் சொல்லவில்லை என்று அதற்கு ஒரு பேச்சு பேசுவார்.
தெரியாது என்று சொன்னால் என் வீட்டு உறவுகளின் தலையை உருட்டுவார். இதில் எது உசிதம்? இரண்டாவதாக உள்ளதுதான் இப்போதைக்குப் பிரச்சனை இல்லாமல் சுமுகமாக சமாளிக்கக் கூடியது
அதனால்தான் எனக்குத் தெரியாது என்றேன். இப்படி அடிக்கடி இரண்டு இடத்திலும் மாட்டிக் கொண்டு மத்தளம் போல் இடிபடும் நிலைமை பெண்களுக்கு மட்டும்தான் அதிகமாக இருக்கும் போல.
இதே சூழ்நிலை என் பிறந்த வீட்டிலும் நிறைய முறை வந்திருக்கிறது. சென்ற வருடம் என் பெரிய நாத்தனார் பெண்ணுக்குக் கல்யாண ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. நாத்தனார் என்னிடம் நேரடியாகச் சொல்லவில்லை. என் கணவரிடம் பேசியதுதான். என்ன சொன்னாரோ தெரியவில்லை.
என் கணவர் என்னிடம், “நம்ம வனஜாக்கா பெரிய பொண்ணுக்கு வரன் பாக்கறாளாம். ஒரு இடம் நல்லா பொருந்தி வரும்போல இருக்குனு அக்கா என்கிட்ட சொன்னா. இப்போ உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு சொன்னா. உடனே நீ உங்க வீட்டுல சொல்லிடுவியோனு யோசிக்கறா, அதான்.
ஆனாலும் என்னால உன்கிட்ட சொல்லாம இருக்க முடியாது. அதனால உங்கிட்ட சொல்றேன். நீ உடனே உங்க அம்மாவுக்கு ஃபோன் போட்டு இதெல்லாம் சொல்லாதே. எல்லாம் பொருந்தி வந்து, பேச்சுவார்த்தை எல்லாம் முடிஞ்சு, தீர்மானமான பிறகு சொல்லிக்கலாம். சரியா.”
பூம்பூம் மாடுபோல தலையாட்டி வைத்தேன். என் நாத்தனார் பெண்ணுக்குத் திருமணம் ஏற்பாடாவதை என் வீட்டில் சொல்லி என்ன கிடைக்கப் போகிறது? அல்லது சொல்லாமல் விட்டால் எனக்கு என்ன கிடைக்கும்? ஒன்றுமே புரியவில்லை.
அப்போதும் இதேபோல் என் அம்மாவிடம் வசமாக சிக்கிக் கொண்டேன். ஃபோனில் ஒரு நாள் என் அம்மா கேட்டார்.
“ஏண்டி ரம்யா, உன் பெரிய நாத்தனாரோட பெரிய பொண்ணுக்குக் கல்யாண ஏற்பாடு நடந்துட்டிருக்கு போல? நம்ம அபார்ட்மெண்ட்ல ரெண்டாவது பிளாக்ல இருக்காங்களே சாரதா, அவங்களுக்கு ஏதோ தூரத்து சொந்தம் போல. வாக்கிங் போகும் போது சாரதா என்கிட்ட கேட்டாங்க. நீ எதுவும் என்கிட்ட சொல்லவே இல்லையே.”
இப்போது என் அம்மாவிடம் எனக்குத் தெரியும் என்று சொன்னால், ‘நீ ஏன் என்கிட்ட சொல்லல? வேற யாரோ சொல்லி நான் தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு’ என்று சொல்வார்.
அதனால் வழக்கம்போல, “அப்படியா, எனக்கு எதுவும் தெரியாதே. சந்தோஷமான செய்திதான்” என்று சமாளித்தேன்.
“என்னடி ரம்யா, அந்த வீட்டு மருமக தானே நீ? உனக்குத் தெரியாமலா இதெல்லாம் நடக்கும்? உன் நாத்தனார் தன் தம்பிகிட்ட கூடவா இந்த விஷயத்தைச் சொல்லியிருக்க மாட்டாங்க? என்னவோ போ, உங்க வீட்டு விஷயம் உனக்கே தெரிய மாட்டேங்குது. அவ்வளவுதான் அந்த வீட்டுல உனக்கு மதிப்பு போல.”
இப்படித்தான் அம்மாவிடம் இருந்து பதில் வந்தது. இதே சமாளிப்பைத்தானே என் அம்மாவும், என் மாமியாரும் அவர்கள் மருமகள்களாக இருந்தபோது செய்திருப்பார்கள். அப்படியானால் ஏன் என் நிலைமை அவர்களுக்குப் புரியவில்லை?
உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், என்னைக் காப்பாற்றிக் கொள்ள இரு வீட்டாரிடமும் மாற்றி மாற்றி பொய் பேச வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளி விடுகிறார்கள் என்னை.
என்னிடம், உங்க வீட்டுல சொல்லாதே சொல்லாதே என்று சொல்லிவிட்டு, அவர்களே ஊருக்கெல்லாம் சொல்லி விடுவார்கள். கடைசியில் நான் ஏதோ இரண்டு பக்கமும் தகவல்களை சரியாகப் பரிமாறாமல், வேண்டுமென்றே அமுக்கி போல் இருக்கிறேன் என்று எனக்குப் பட்டப்பெயரும் அவர்களே வைத்து விடுகிறார்கள்.
என் கணவரும் இதேபோல்தான் செய்வார். போன வருடம் அவருக்கு வேலையில் ப்ரமோஷன் கிடைத்தது. அதிகாரப்பூர்வமாகக் கடிதம் வரும் முன்பாக, அலுவலகத்தில் மேலதிகாரி கூப்பிட்டு சொல்லி விட்டார். அதை அவரும் வந்து இங்கு வீட்டில் சொன்னார். மகிழ்ச்சியான விஷயம் சொன்னதோடு நிறுத்திக் கொண்டிருந்தால் பரவாயில்லை.
“இதப் பாரு ரம்யா, இன்னும் அஃபீஷியல் லெட்டர் என் கைக்கு வரல. எம்டி சொன்னாரு, அதனால உங்ககிட்ட எல்லாம் சொல்லிட்டேன். நீ இதை உடனே உங்க வீட்டுக்கு ஃபோன் போட்டு சொல்லிடாதே. அஃபீஷியல் லெட்டர் கிடைச்ச பிறகு நானே சொல்லிக்கறேன். நீ முதலிலேயே சொல்லிட்டா நான் சொல்லும்போது அவங்க சுவாரஸ்யமா கேக்க மாட்டாங்க. அதான் தெரியுமே அப்படின்னு சொல்வாங்க. நான் பிரமோஷன் வாங்கினதை நான்தான் எல்லாருக்கும் சொல்லணும். முந்திரிக்கொட்டை மாதிரி நீ சொல்லிடாதே.”
வழக்கம்போல் அதே பூம்பூம் மாடு வேலையைத்தான் செய்தேன். இந்த முறை என்னை மாட்டி விட்டவர் என்னுடைய அப்பா. என்னவர் பிரமோஷன் விஷயத்தை என்னிடம் சொல்லி நான்கு நாட்கள் கூட ஆகியிருக்காது. என்னுடைய அப்பா நேரடியாக என் கணவருக்கே ஃபோன் செய்து விட்டார்.
“என்ன மாப்ள, உங்களுக்குப் ப்ரொமோஷன் கிடைச்சிருக்காமே, கேள்விப்பட்டேன். ரொம்ப சந்தோஷம். நல்வாழ்த்துகள்,” என்று அவர் பாட்டுக்கு பேச, இங்கே என் கணவர் என்னை முறைக்க ஆரம்பித்து விட்டார். என்ன, ஏது என்று புரியாமல் நான் பேந்த பேந்த விழித்துக் கொண்டு நின்றிருந்தேன்
ஃபோனை வைத்துவிட்டு என்னிடம் கோபத்துடன் பாய்ந்தார்.
“உன்கிட்ட என்ன சொன்னேன்? அஃபீஷியல் லெட்டர் கைக்குக் கிடைக்காம ப்ரோமோஷன் விஷயத்தை உங்க வீட்டுல சொல்லாதேன்னு சொன்னேனில்ல. அப்படி என்ன உனக்கு அவசரம்? பாரு உங்க அப்பாவே ஃபோனைப் போட்டு விஷ் பண்றாரு. எவ்ளோ சொன்னாலும் பொம்பளைங்களைத் திருத்தவே முடியாது. எதையும் ரகசியமாகவே வச்சுக்கத் தெரியாது.”
சம்பந்தமே இல்லாமல் நான் என் கணவரிடம் திட்டு வாங்கிக் கொண்டிருந்தேன். இப்போது நான் என்ன செய்வது?
“எங்கப்பாகிட்ட நான் சொல்லவே இல்ல” என்று என் கணவரிடம் வாதிடுவதா? இல்லை என் அப்பாவுக்கு ஃபோனைப் போட்டு,
“நீங்களாவே அவசரப்பட்டு ஏன் அவர்கிட்ட பேசறீங்க? அவர் உங்ககிட்ட விஷயத்தைச் சொன்னபிறகு நீங்க வாழ்த்து சொல்லலாமே,” என்று என் அப்பாவைக் கடிந்து கொள்வதா?
மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பது என் விஷயத்தில் சரியாக இருக்கிறது.
உர்ர்ர்ரென்று இரண்டு, மூன்று நாட்களுக்கு உறுமிக் கொண்டே இருந்த என் கணவர், நான்காவது நாள் வேலையில் இருந்து வந்தபிறகு அவரே ஆரம்பித்தார்.
“ரம்யா, உங்க அப்பாகிட்ட என் ப்ரமோஷன் விஷயத்தை நீ சொன்னியா, இல்ல சொல்லலையா?”
“நீங்க சொல்ல வேண்டாம்னு சொல்லியிருக்கும் போது நான் ஏன் சொல்லப் போறேன்?”
“அப்பவே எனக்கு சந்தேகம்தான், நீ சொல்லியிருக்க மாட்டியோன்னு. (சந்தேகம் இருந்துமா என்னை வறுத்தெடுத்தார்). என்கூட வேலை பார்க்கறானே ஜெகன், அவன் அவங்க அப்பாகிட்ட சொல்லியிருக்கான் போல. அவங்க அப்பாவும் உங்க அப்பாவும் ஃப்ரெண்ட்ஸ் ஆச்சே. அவர்தான் உங்க அப்பாகிட்ட சொல்லியிருக்காரு. அப்படித்தான் உங்க அப்பாவுக்கு இந்த விஷயம் தெரியும். ஜெகன் இன்னைக்கு சொன்னான். ‘எங்க அப்பா உங்க மாமனார்கூட பேசிட்டு இருந்தாரு டா. உன்னோட ப்ரமோஷன் விஷயத்தைப் பத்தி பேசிட்டிருந்தாரு’ அப்படிங்கறான். அப்பத்தான் நீ சொல்லலன்னு எனக்குத் தெளிவாச்சு. நான் அவசரப்பட்டு உன்னைத் தப்பா நினைச்சட்டேன்.”
இதற்கும் பூம்பூம் மாடு தான். என்னைத் திட்டியதற்கு ஒரு சாரி கூட இல்லை.
இப்படி ஆளாளுக்கு நம்மைப் பந்தாடுகிறார்கள். சொன்னாலும் தப்பு, சொல்லவில்லை என்றாலும் தப்பு. ஏதோ நாள் முழுவதும் இங்கு இருக்கும் தகவல்களை அங்கேயும், அங்கு இருக்கும் தகவலை இங்கேயும் போட்டுக் கொடுப்பதுதான் என் வேலை என்று இவர்களாகவே நினைத்துக் கொண்டு, எல்லாவற்றிலும் என் தலையை உருட்டி, என்னையே சிக்கவைத்து வேடிக்கை பார்க்கிறார்கள்.
மத்தளம் போல் அடிபட்டு, இடிபட்டு வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. நான் இங்கே சொன்னது ஒன்றிரண்டு மட்டும்தான். இதுபோல் நிறைய இருக்கிறது.
உங்களுக்கும் இதே நிலைதானா?
எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings