in ,

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 31) – ரேவதி பாலாஜி

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“செஞ்சிட்டியா.. சாப்டலாம் வா” என்றார் அறையில் இருந்து வெளியே வந்த ஆதி.

நான் எதுவும் பேசாமல் ஹாலில் இருந்து சமையலறைக்குள் சத்தமிட்டு அழுது கொண்டே சென்றேன்.

“நைட்டே சாப்டல.. வா சாப்பட்லாம்” கீழே இருந்த தட்டை எடுத்து கழுவிக் கொண்டு வந்து என் கைபிடித்து அழைத்தார்.

“எனக்கு வேண்டாம். எங்கம்மா வீட்ல கொண்டு போய் என்னை விட்ருங்க” கூறிவிட்டு அழுதேன்.

அழுது அழுது தேம்பினேன். அவர் ஆறுதல் சொல்ல வந்துவிட்டார் என்ற குஷியில் கண்ணீர் வெள்ளமாக பெருகி வழிந்தது.

“நான்தான் உனக்காக என் அம்மாவ விட்டுட்டு வந்துருக்கேன். உன்னை கொண்டு போய் விட சொல்ற. என்னை கொண்டு போய் நீ விடு” சிரித்துக் கொண்டே கூறினார்.

மெல்ல மெல்ல சூழல் மாறுவதை இருவராலும் உணர முடிந்தது. வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டேன்.

“நான் அம்மாகிட்ட போறேன்”

“சரி போ. இப்போ சாப்டு வா”

கையைப் பிடித்துக் கொண்டு என்னை இழுத்து வந்து அமர வைத்தார்.

தட்டில் உப்புமாவை போட்டார். சட்னி வைத்தார். என்னிடம் நீட்டினார். நான் வாங்க மறுத்தேன்.

“நம்ம குழந்தைக்கு பசிக்கும் கவியினியாள். அடம் பண்ணாம சாப்புடு”

“இப்போவும் நீ குழந்தைக்காக தான சொல்ற.. எனக்காக இல்லல்ல”

“ரெண்டு பேருக்காகவும்தான்”

அதற்கு மேல் ஆதியிடம் அடம் பிடிக்கத் தோன்றவில்லை. சாப்பிடத் தொடங்கினேன்.

ஆதியும் தட்டில் எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்தார்.

“என்ன சுவை. உப்மாவும் சட்னியும் சூப்பரா இருக்கு”

முதல்முறையாக என் உப்புமாவை பாராட்டினார். இந்த முறை சிரிப்பை அடக்கிக் கொள்ள முடியாமல் சிரித்தேன்.

“போடா.. உன்னால நேத்து என் பணியாரம் எல்லாம் வேஸ்ட்.. உனக்கென்ன அவ்ளோ கோவம்”

“சட்னி கொஞ்சம் வெக்கவா” ஆதி எப்பொழுதும் இப்படித்தான். ஒரு சண்டை வந்தால் சமாதானம் ஆனப் பின் அதைப்பற்றி பேச மாட்டார். 

“கை ஓங்குற.. அவ்ளோ தைரியமா.. இரு உங்கம்மாகிட்ட சொல்றேன்”

எதுவும் பேசாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

“கீழ படுத்துட்டு இருக்கேன். மனசாட்சியே இல்லாம நீ பாட்டுக்கு தூங்குற” நானும் விட மாட்டேன். சண்டையில் நடந்ததை கேட்டுத் தீர்ப்பேன்.

“அதான் தலவாணி எடுத்துக்கிட்டல.. நல்ல படம் பாத்துட்டு ஒன்பது மணி வரை தூங்குனல்ல”

“அப்போ எல்லாத்தையும் நோட் பண்ணிட்டே பேசாம இருந்தியா”

“ஹாஹா.. போடி என் கண்மணி” சாப்பிட்டு முடித்த ஆதி என் தலையில் செல்லமாக கொட்டி விட்டு எழுந்தார். எப்பொழுதாவது இப்படி ஆசையாக கண்மணி என்பார்.

சண்டை சமாதானம் ஆகிவிட்டது. ஆனால் சண்டை வந்த காரணம். ஊசி போடவா வேண்டாமா அது இன்னும் பேசி முடிவுக்கு வரவில்லை. இப்பொழுது அதை பேச வேண்டாம். பிறகு பேசிக்கொள்ள முடிவெடுத்தேன்.

“காய்கறிலாம் வாங்கணும். கடைக்குப் போலாமா”

“மதியம் சமைக்க இருக்கா”

“என்ன செய்றது.. தக்காளி கூட இல்லையே”

“கவியினியா” நாங்கள் பேசிகொண்டிருக்கும் பொழுது மேலிருந்து கூப்பிடும் சத்தம் கேட்டது.

வெளியே வந்து பார்த்தோம். மேல் வீட்டு பாட்டி இருந்தார்.

“மேல வா.. இல்லைனா உன் வீட்டுக்காரர்ர ஒரு நிமிஷம் அனுப்பு” மேல் மாடியில் இருந்து பாட்டி கூப்பிட நானே சென்றேன்.

“மீன் குழம்பு வெச்சிருக்கேன்.. கொஞ்சம் எடுத்துட்டு போ”

மீன் குழம்பையும் பொறித்த மீனையும் பாத்திரத்தில் போட்டுக் கொடுத்தார்.

“காலைல என்ன செஞ்ச”

“உப்புமா பாட்டி”

“ஞாயித்து கிழமை நாளு நல்லா கறியும் சோறும் திங்க மாட்டீங்க”

“எழுந்திருக்க நேரம் ஆயிடுச்சு பாட்டி”

“வேலைக்கு போறா ஒரு நாள் தூங்கட்டுமே” அவர் பேரனின் மனைவி கூறினார்.

“மாசமா இருக்க.. நல்லா செஞ்சி சாப்புடு.. ரெண்டு பேரு தான்னு கண்டதையும் தின்னுட்டு ஓடாத”

“சரிங்க பாட்டி”

குழம்பும் மீனும் எடுத்துக் கொண்டு வந்தேன்.

“என்ன குழம்பு குடுத்தாங்களா பாட்டி”

“மீனும் ரெண்டு திட்டும் குடுத்தாங்க”

“என்ன சமைக்கிறதுன்னு யோசிச்சோம் பரவால்ல உனக்கு பிடிச்ச மீன் குழம்பு. இனி டெலிவரி வரைக்கும் உனக்கு எல்லாரும் செஞ்சி குடுப்பாங்கள்ல”

“உனக்கு மீன் பிடிக்காதுல முட்டை வாங்கிட்டு வரியா செஞ்சி தரேன்”

“எதுக்கு இந்த குழம்பே நானும் ஊத்திக்குறேன்.. ட்ரெஸ் வாஸ் பண்ணும் முடிச்சிட்டு வீடு சுத்தம் பண்ணிட்டு மார்க்கெட் போற வேலைலாம் பாப்போம். சமையல் வேலை மீதில”

“எனக்கு ட்ரெஸ் வாங்கலாமா. துணிலாம் டைட் ஆயிடுச்சு”

“இன்னும் உடம்பே போடல.. அதுக்குள்ள புதுத் துணியா”

“ரெண்டு கிலோ கூடியிருக்கேன்”

“இன்னும் வயிறு தெரிலயே”

“இன்னர்லாம் இறுக்கமா இருக்கமாதிரி இருக்குங்க.. உடம்பே அகண்ட மாதிரி இருக்கு”

“வாங்கிக்கலாம்.. சும்மா கேட்டேன்”

ஆளுக்கொரு வேலையாக செய்தோம். துணி மெஷினில் போட்டு காய வைத்துவிட்டு பாத்திரம் கழுவி வீடு கூட்டி குளித்து முடிக்க மூன்று மணி ஆனது.

சாப்பாடு மட்டும் வைத்துக் கொண்டு மீன் குழம்பில் சாப்பிட்டோம். நல்ல ருசியாகத் தான் இருந்தது. பாட்டி இன்றும் அம்மியில் மசாலா அரைத்து சேர்ப்பார். பொறித்த மீனும் அருமையான சுவையில் இருந்தது.

பின் கடைக்குச் சென்று எனக்கு துணிகள் எடுத்துக் கொண்டு காய்கறி பழங்களும் வாங்கி வந்தோம். ஆரோக்கியமானதை சாப்பிட உண்மையில் அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.

சூப்பர் மார்க்கெட்டில் மளிகை பொருட்கள் வாங்கச் சென்றோம்.

“இதென்ன”

“வீட் நூடுல்ஸ்”

“நூடுல்ஸ் கெட்டதுனா சாப்பிடவே கூடாது. பாதி நல்லது பாதி கெட்டது எதுக்கு. எல்லாம் சாப்பட்ற, அப்புறம் வாய் மட்டும் பேசுறது”

“நான் என்ன பண்றது. இது கெட்டதுன்னு தெரிறதுக்கு முன்னாடியே சின்ன வயசுலயே டேஸ்ட் பழகிட்டாங்க. கொஞ்சம் கொஞ்சமா தான விட முடியும்”

“மாசமா இருக்கப்ப ஏன் சாப்பட்ற”

“ப்ரண்ட் ஒருத்தி சொன்னா பிடிச்சத சாப்புடு உன் ரத்தம் தான பாப்பாக்கு போகும்னு”

“நீ சாப்பட்றது தான ரத்தத்துல கலந்து போகுது”

“அட ஆமால்ல”

“என்னனவோ சொல்லு”

“அது வேணாம் மீதிய போய் பில் போடுங்க கிளம்பலாம்”

“பரவால எடுத்துக்கோ. உண்மையாவே அது கோதுமை நூடுல்ஸ்சா இருந்தா சந்தோசம்”

எல்லாம் வாங்கிக்கொண்டு கிளம்பினோம். மணி எட்டு இருக்கும். ஆதி எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள பணியாரம் சுடும் பாட்டி கடை ஒன்றின் அருகில் வண்டியை நிறுத்தினார்.

“வீட்ல சாப்பாடும் மீன் குழம்பு இன்னும் இருக்கு. நான் அதே சாப்பட்றேன்”

“எனக்கு பணியாரம் வேணும் ஒரு ப்ளேட் வாங்கி ஷேர் பண்ணிக்கலாம்”

பத்து ரூபாய்க்கு ஆறு பணியாரம். ஒரு குழம்பு இரண்டு சட்னியுடன்.

பரவாயில்லை நடுத்தர குடும்பம் இதை சாப்பிட்டு வயிறை நிறைத்து கொள்கின்றனர்.

கொஞ்சம் மேல் வர்க்கத்தினர் பெரிய பெரிய கடைகளுக்குச் சென்று பீட்சா, பொறித்த சிக்கனுடன் மயோனைஸ், சாஸ் என்று சாப்பிட்டு உடம்பை கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

காலம் செல்லச் செல்ல எல்லோரும் அதை விரும்ப ஆரம்பித்து விட்டார்கள். இதெல்லாம் எங்கு கொண்டு நிறுத்தப் போகிறதோ!

“கவி எடுத்துக்கோ”

பணியாரத் தட்டை நீட்டினார். ஒன்றை எடுத்து வாயில் வைத்தேன். சட்னி குழம்புடன் சாப்பிட சுவையாக இருந்தது.

“நல்லாருக்கா”

“நல்லாருக்கு ஆதி. நீயும் எடுத்துக்கோ”

“ஒரு வாரம் பத்து நாள் நீ என்ன பண்றியோ பண்ணு.. நான் ஊசி போடுன்னு தொல்லை பண்ண மாட்டேன். பணியாரம் ஆசையா சாப்பிட போயிருப்ப.. சாரி கவி கோவத்துல கை ஓங்கிட்டேன்” ஆதியின் வார்த்தையில் குளிர்ந்து போனேன்.

பணியாரம் சாப்பிடும் பொழுது ஆரம்பித்த பிரச்சனையை பணியாரம் சாப்பிடும் பொழுதே முடித்து வைத்துவிட்டார்.

இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 30) – ரேவதி பாலாஜி

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் (அத்தியாயம் 32) – ரேவதி பாலாஜி