இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
மறுநாள் வினீத், சரியாக 9 மணிக்கு நெப்ட்யூன் ஸ்டுடியோல இருந்தான். டைரக்டர், கதாசிரியர், கேமராமேன், இசையமைப்பாளர்னு ஒரு 10 பேர் ஏற்கனவே குழுமியிருந்தனர்.
அங்கே ஒரு பரந்த ஹாலில் பல பிளாஸ்டிக் சேர்கள் போடப்பட்டு ஒரு பக்கம் சிற்றுண்டி வகைகள், காபி ஒரு பெரிய பிளாஸ்க், டீ ஒரு பிளாஸ்க், டிஸ்போசபிள் பேப்பர் கப். வேண்டியதை கொடுக்க இரண்டு உதவியாளர்கள்னு பரபரப்பான காலைப் பொழுது. எல்லாரும் அருணாசலம் செட்டியாருக்காக காத்திருந்தனர்.
அவர் தன்னுடைய ஆடி காரில் 9.30 மணிக்கு மேல் அவருடைய டிரேட் மார்க் தூய வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டையில் வந்தார். கருத்த மேனி ஆனாலும் களையான முகம், கம்பீரமான நடை, தெளிவான கணீர் பேச்சு, எவரையும் கவரும் வசீகரம் இதுதான் 64 வயது அருணாசலம் செட்டியார்.
தேவகோட்டையில் அவருடைய குடும்பம் பேர் பெற்றது. பலசரக்கு மொத்த வியாபாரம், தேங்காய் மொத்த வியாபாரம், கூடவே பைனான்ஸ் பிசினஸ்னு ஆரம்பித்து, திரைப்படங்கள் வாங்கி டிஸ்ட்ரிப்யூட் செய்யவும் தொடங்கினார்கள். எதைத் தொட்டாலும் பணம் ரெண்டு நாலாக திரும்பி வரும் லட்சுமி கடாட்சம் பொருந்திய கைகள்.
காரைக்குடியில் ஸ்டீல் ரோலிங் மில்லை துவக்கி வெற்றிகரமாக நடத்தி வந்த அருணாசலம் செட்டியாருக்கு திடீரென்று சொந்தமாக திரைப்படம் தயாரிக்கும் ஆசையை தூண்டி விட்டது கமலா ஆச்சிதான்.
அவர் மனைவி கமலா ஆச்சிக்கு விதம்விதமாய் நகைகள் பூட்டிக் கொண்டு, பட்டுப்புடவை சரசரக்க தங்கள் சொந்தக் காரில் கோவில் கோவிலாக சுற்றுவது பிடிக்கும்.
அப்படி ஒரு தடவை தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயம் போன போது பார்த்தார் கோவிலுக்கு உள்ளே உள்ளதை விட வெளியே கூட்டம். ஏதோ ஒரு ஊந்துதலில் என்ன நடக்கிறது என பார்க்க விளைந்தார். ஆனால் கூட்டத்தை பிளந்து கொண்டு உள்ளே செல்ல முடியவில்லை.
சினிமா ஷூட்டிங் நடக்கிறது நடிகை தேவிஶ்ரீ, பிரபல நடிகர் ரூபன் கலந்து கொள்கிறார்கள் என்று தெரிந்தது. செல்வாக்குள்ள குடும்பத்தில இருந்தும் தன்னால் ஷூட்டிங் பார்க்க முடியவில்லையே என்பது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அன்று இரவு செட்டியாரிடம் கோரிக்கை வைத்தார் கமலா ஆச்சி.
“என்னங்க எப்படியும் சென்னைக்கு போய் ஒரு ஷூட்டிங் பாக்கணும்”
ஆச்சி மேல் அளவு கடந்த பாசம் கொண்ட செட்டியார் மனைவி எது கேட்டாலும் மறுப்பின்றி செய்யக் கூடியவர். மறுநாளே சென்னைக்கு மனைவியுடன் புறப்பட்டார். ஏற்கனவே பட டிஸ்ட்ரிப்யூஷன் செய்பவர் என்பதால், சினிமா இண்டஸ்ட்ரியில் பலரை சென்னையில் தெரியும் அவருக்கு. அரு.கோலப்பன் மூலம் ஏ.வி.எம் தியேட்டரில் டாப் ஸ்டார் ரூபன், தேவிஶ்ரீ ஷூட்டிங் நடக்கிறது என்பதை அறிந்து அங்கு மனைவியை அழைத்துச் செல்ல முடிவு செய்தார்.
கோலப்பன் செட்டியார் இவர்களை ஏ.வி.எம் ஸ்டுடியோ கூட்டிட்டு போனார். இவர்கள் இருவருக்கும் ஷூட்டிங் நடக்கப் போகும் இடத்தில் வசதியாக உக்காந்து பார்க்க ஸ்டீல் சேர்கள் போடப்பட்டன.
டைரக்டர் வந்தாச்சு, கேமரா செட் பண்ணியாச்சு, எல்லா உதவியாளர்கள், அசிஸ்டன்ட் டைரக்டர்கள் என பெரிய கூட்டம் தயாராக இருந்தது. என்ன, 10 மணிக்கு வர வேண்டிய ஹீரோ, ஹீரோயின் இன்னும் வரவில்லை.
மணி 10.45 மெதுவாக மேக்அப் உமன், ஒரு உதவிப்பெண், மற்றும் தன் தாயாருடன் தேவிஶ்ரீ விஜயம். டைரக்டர் ஓடிப் போய் வரவேற்று ஒரு சவுகரியமான இடத்தில், ஹீரோயினையும் அவருடைய அம்மாவையும் அமர வைத்தார்.
தேவிஶ்ரீ யாரையும் லட்சியம் பண்ணாமல் ஒரு ஆங்கில புஸ்தகத்தை புரட்டிக் கொண்டு உக்காந்தார் (சின்ன வயதிலிருந்து பேபி ஆக்ட்ரஸாக தொடங்கி நடிப்பவர் எப்ப பள்ளியில் படித்தார், ஆங்கிலப் புஸ்தகம் படிக்கும் அளவு எப்படி முடிந்தது என்பது கேள்விக்குறி)
11 மணிக்கு மேல் ஹீரோ ரூபன் வந்தார். வரும் போதே, ”என்ன எல்லாரும் ரெடியா, சீக்கிரம், சீக்கிரம் எனக்கு அடுத்த க்ஷூட்டிங் போகணும்,”
தேவிஶ்ரீ, ரூபனை பாக்காத மாதிரி அந்த ஆங்கில புஸ்தகத்தில் மூழ்கி இருந்தார்.
அவள் அருகில் போன ரூபன் “ஹை பேப், இன்ட்ரஸடிங்கான புக்கா? ரொமாண்டிக்?”னு தோளைத் தொட்டு அணைத்து கன்னத்தில் முத்தமிட்டான்.
அவருக்கு வெட்கம் வந்ததோ இல்லையோ, தேவிஶ்ரீன் அம்மா வளைந்து நெளிந்து வெட்கப் பட்டார்.
ரூபன் அவரைப் பாத்து, “ஹை மாம், நம்ம இ.சி.ஆர் காட்டேஜுக்கு இந்த சண்டே பேபியோட வரணும், புது புது ஐட்டம் சேத்திருக்கேன்.”
அந்த அம்மா தேவைக்கதிகமா நெளிந்து வளைந்தார். “இந்த சண்டே வேலூர்ல ஏதோ ஜவுளிக் கடை திறக்கப் போகுதே பாப்பா”
“ஓ சரி முடிஞ்சவுடனே நேரே வந்துடுங்க அங்கே” பாவம் டைரக்டர் பொறுமையா ரூபன் முகத்தை பாத்துட்டே நின்னிட்டிருந்தார்.
அவரை கடைசியா பாத்த ரூபன் “ என்ன சார் பாத்துட்டே நிக்கறீங்க ஷூட்டிங் இருக்குதானே இன்னிக்கு?”
“ஆமாம், ஆமாம் உங்களை பாத்ததும் மெஸ்மரைஸ் ஆகி வேலை நிக்குது, டேய் லைட்டிங், பிராம்டர், கேமரா ரெடி? னு” கொஞ்சம் ஐஸ் வைத்தார் ரூபனுக்கு.
அடுத்த அரைமணி நேரம் ஒரே காட்சியை 4 டேக் எடுத்தார்கள், உடனே களைத்துப் போன நடிகைக்கு ஆப்பிள் ஜூஸ், நடிகருக்கு 555 சிகரெட். (ஏய்யா இந்த 555 டூப்ளிகேட் வர ஆரம்பிச்சிடுச்சா, இனிமே மார்ல்பரோ கொண்டாப்பா)
இத்தனை அமக்களங்களையும் பாத்த கமலா ஆச்சி கணவனை பாத்து, “என்னாங்க இப்படி ஷூட்டிங் பண்ணா ஒரு படம் எடுக்க ஒரு வருஷம் ஆகும் போலயே, அந்த நடிகர், நடிகை கூட பேசலாமா?”
கோலப்பன் ஒரு அசிஸ்டண்ட் டைரக்டரை கேட்டார், ரூபன், தேவிஶ்ரீயோட ஆச்சி பேசணும்றாகனு. அந்த ஆள் “போங்க சார் நீங்க வேற ஆச்சி, பூச்சினு. ரெண்டும் சரியான திமிர் பிடிச்சதுக அடிக்கடி சேவை செய்யற எங்க முகத்தை கூட பாக்க மாட்டாக.”
இது செட்டியார் ஆச்சி ரெண்டு பேர் காதிலும் விழுந்தது. அருணாசலம் செட்டியார் சட்னு எழுந்தார், வாங்க போலாம்னு ஆச்சியையும் கூட்டிக் கொண்டு வெளியேறினார்.
அப்போது தீர்மானித்தார் சொந்தமா படம் எடுக்கணும்னு.அருணாசலம் செட்டியார் ஒரு காரியத்தை தீர்மானித்தால் முழு வீச்சில் அதில் இறங்கி விடுவார்.
கிட்டத் தட்ட 3 மாதம் விவரங்களை திரட்டி, ஆட்களை பிடித்து, டைரக்டரை பிடித்து, புது முக நடிகர்களை பிடித்து அடுத்த ஆறு மாதத்தில் படத்தையும் முடித்து வெற்றிக் கனியை பறித்து விட்டார்.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
தொடரும்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings