எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
ஹால் சோபாவில் ஒருவித பரபரப்புடன் அமர்ந்து, மாடிப்படிகளையே அடிக்கடி திரும்பி பார்த்துக் கொண்டிருந்த கணவனைப் பார்க்க சிரிப்பாய் வந்தது அமிர்தத்திற்கு.
“உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? உங்க மகள்தான் காலேஜுக்கு ‘பஸ்ஸிலேயே போய்க்கறேன்’னு சொல்றாள் அல்ல?… விட்டுட்டு நீங்க பாட்டுக்குக் கிளம்பப் வேண்டியது தானே?… அதை விட்டுட்டு… அனாவசியமா உங்களுக்கு நீங்களே டென்ஷன் ஏத்திக்கறீங்க!” என்றாள்
ஒரு சிறிய யோசனைக்குப் பின், “ம்ம்ம்… நீ சொல்றதும் சரிதான் அமிர்தம்!… அவ பஸ்ஸிலேயே போகட்டும்… நான் புறப்படறேன்!” என்று சொல்லியபடி எழுந்தார் சிவராமன்.
சிவராமன்… தமிழகத்தில் சர்குலேசனில் இரண்டாவதாக இருக்கும் “சிதறல்” வெகுஜனப் பத்திரிகையின் எடிட்டர். சபாரிசூட், செல்போன், இன்னோவா கார், ஸ்டார் ஹோட்டல், வி.ஐ.பி. மீட்டிங், என மேல் தட்டு வாழ்க்கையில், நிற்க நேரமின்றிப் பறந்து கொண்டிருக்கும் காஸ்ட்லி மனிதர்.
“ஓ.கே. டாடி… நீங்க போங்க!… நான் பஸ்ஸிலேயே போய்க்கறேன்” கத்தலாய்ச் சொல்லியபடியே படியிறங்கி வந்த மகள் சங்கீதாவைப் பார்த்த சிவராமன் ஒரு கணம் ஆடிப் போனார்.
காரணம்?
அவள் அணிந்திருந்த உடை. மிக மிக மெல்லிசான துணியில், படு டைட்டாக அவன் அணிந்திருந்த மேலாடை, உள்ளிருப்புகளை பகிரங்கப்படுத்திக் கொண்டிருந்தது.
அருகில் வந்து நின்றவளை தர்மசங்கடமாக நிமிர்ந்துப் பார்த்தார் சிவராமன்.
மேலாடையைத் தோற்கடிக்கும் விதமாய், தோல் நிற லெக்கின்ஸ் இடுப்பிற்குக் கீழே உடம்போடு ஒட்டி இருந்தது. சட்டென்று பார்த்தால் எதுவும் அணியாதது போலொரு தோற்றத்தைக் கொடுத்தது அது. அத்தோடு லோஹிப் ஸ்டைல் தொப்புள் என்னும் புனித அரங்கத்தை திறந்தவெளிக் கலையரங்கம் ஆக்கியிருந்தது.
முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு பற்களை ‘நறநற’வென்று கடித்த சிவராமன், மெல்லத் தலையைத் திருப்பி, “அம்மாடி சங்கீதா, நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதே. இது என்னம்மா டிரஸ்?”. கண்களை இறுக மூடித் திறந்து சொன்னார்.
“ஏன் டாடி?… இந்த டிரஸ்ஸுக்கு என்ன?… நல்லாத்தானே இருக்கு?… ஆக்சுவலா… இதுதான் இன்னிக்கு ஃபேஷன்” என்றாள் சங்கீதா குனிந்து தன் ஆடையைப் பார்த்த வாறெ.
“என்ன ஃபேஷன்?…. வெங்காய ஃபேஷன்!… இப்படியா பார்க்கிறவங்க கண்ணை உறுத்துற மாதிரி டிரஸ் போடுவாங்க?… ஹும்… நல்லவங்க மனசைக் கூடக் கெடுத்துடும் போல இருக்கும்மா நீ போட்டிருக்கற டிரஸ்ஸோட லட்சணம்!… நீ கல்யாணம் ஆக வேண்டிய பொண்ணு… அதை மனசுல வெச்சுக்க!”. கோபம் தெறித்தது சிவராமன் குரலில்.
“ஐ டோன்ட் கேர்!… டாடி… இது என்னுடைய சுதந்திரம்!.. மத்தவங்க கண்ணை உறுத்தும்…. மனசைக் கெடுக்கும்…. என்பதற்காக நான் பாவாடை தாவணி கட்டிக்கவோ… இல்லை… பட்டுப் புடவையைச் சுத்திக்கவோ முடியாது!” ஆணித்தரமாகச் சொன்னாள் சங்கீதா.
“வேண்டாம்மா!… இந்த கோலத்தில் உன்னைப் பார்த்தா வயசானவங்க மனசுல கூட தப்பான எண்ணங்கள்தான் தோணும்!… அப்படியிருக்கும் போது இளைஞர்களை நினைச்சு பாரும்மா!… நாமே அவர்களை தூண்டி விட்டுட்டு… அப்புறம் ஈவ் டீசிங் பண்றாங்க… அதுஇதுன்னு சொல்றதுல என்னம்மா அர்த்தம் இருக்கு?”. விடாமல் பேசினார் சிவராமன்.
“அடேங்கப்பா!… இளைஞர்கள் மேலே உங்களுக்கு இத்தனை அக்கறையா டாடி?”. புருவங்களை உயர்த்திக் கொண்டு கேட்டாள் சங்கீதா.
“அஃப் கோர்ஸ்… அவங்கதாம்மா… இந்த நாட்டோட எதிர்காலமே!… அவங்க மனசுல இப்ப விழுற விதைகள்தான் எதிர்காலத்தில் பெரிய விருட்சமா வளர்ந்து… விரிந்து நிற்கப் போகுது!… தவறு செய்யறவங்களை விட… தவறு செய்யத் தூண்டறவங்கதான் முதல் குற்றவாளிகள்!” தந்தை பேசிக் கொண்டே போக, அவரை கையமர்த்திய சங்கீதா, “அப்படிப் பார்த்தா நீங்கதான் டாடி… முதல் குற்ற்வாளி”
மகளிடமிருந்து அப்படியொரு தாக்குதலை எதிர்பார்க்காத சிவராமன், “வாட் யூ மீன்?… மைண்ட் யுவர் வேர்ட்ஸ்” கத்தினார்.
“நான் சும்மா சொல்லலை டாடி…. ஆதாரத்தோடதான் சொல்றேன்!” என்ற சங்கீதா தன் பேக்கிலிருந்து சென்ற வார “சிதறல்” இதழை எடுத்து அதன் நடுப்பக்கத்தைப் பிரித்தாள்.
“இதோ… இந்த நடுப்பக்கத்தில் நீங்க போட்டிருக்கிற ப்ளோ-அப் நடிகை உடுத்தியிருக்கிற இதே டிரஸ்ஸைத்தான் நான் இப்ப போட்டிருக்கேன்!… இந்தாங்க பாருங்க” என்றபடி புத்தகத்தை தந்தையிடம் தந்தாள்.
அதை வாங்கி அதிலிருந்த ப்ளோ-அப் படத்தையும் சங்கீதாவை மாறி மாறிப் பார்த்து விட்டு, புத்தகத்தை மூடி திரும்ப அவளிடமே கொடுத்தார்.
“ஏன் டாடி!… நான் போட்டா இளைஞர் சமுதாயம் தடுமாறும்… கெட்டுப் போயிடும்!… நீங்க… அதுவும் லட்சக்கணக்கில் சர்க்குலேஷன் ஆகிற உங்க பத்திரிகையில் போட்டா… இதை எந்த இளைஞனும் பார்க்க மாட்டான்… கெட்டுப் போக மாட்டான்…. அப்படித்தானே?”.
சாட்டையடி பட்டது போல் “விருட்”டென்று தலை நிமிர்ந்த சிவராமன், சூழ்நிலையைச் சமாளிக்கும் விதமாய், “அது….வந்து…. பிரிண்டிங் மீடியா ஃபீல்ட் ரொம்ப போட்டிகள் நிறைந்த ஃபீல்ட்!… அதனால… சர்குலேஷனுக்காக…. நாங்க” இழுத்தார்.
“ச்சூ!… சும்மா இருங்க டாடி!… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இளைஞர்களுக்கு வக்காலத்து வாங்கற மாதிரிப் பேசினீங்களே?… அது உண்மையிலேயே இளைய சமுதாயத்தினர் மீதுள்ள அக்கறையினாலா?… இல்லவே இல்லை!… எவளோ நடிகை இந்த டிரஸ்ஸைப் போட்டா அதை உங்க பத்திரிக்கையில் போட்டு காசு பண்ணுவீங்க!… அதே டிரஸ்ஸை உங்க மகள் போட்டா… “இளைய சமுதாயம்… இந்த நாட்டின் எதிர்காலம்…. கெட்டுப் போயிடும்”னு டயலாக் பேசுவீங்க!… என்ன டாடி உங்க லாஜிக்?” சிவராமனின் முகத்திற்கு எதிரில் கையை நீட்டி கேட்டாள்.
சிவராமன் பதில் பேச இயலாமல் தலைகுனிந்தார்.
“டாடி!… நடுப்பக்கத்துல மட்டும் இல்லை டாடி!… எல்லாப் பக்கத்திலும் உங்க பத்திரிகை இளைஞர்களுக்கு ஆபாசத்தை மட்டும்தான் சொல்லிக் கொடுக்குது!… பத்திரிக்கை தர்மம்னு ஒண்ணு இருப்பதையே மறந்திட்டீங்க நீங்க!.. வேண்டாம் டாடி…. காசே குறிக்கோள்… சர்க்குலேஷனே குறிக்கோள்…ன்னு எதிர்கால சமுதாயத்தை நாசம் பண்ணாதீங்க டாடி!…”
சிவராமன் சங்கீதாவின் முகத்தைக் கூர்ந்து நோக்க, “ரொம்ப நாளாகவே இதை உங்ககிட்ட சொல்லணும்னு காத்திருந்தேன்!…. ஆனா எப்படி ஆரம்பிக்கிறது?… எப்படி உங்களுக்குப் புரிய வைக்கறதுன்னே தெரியாமல் தவிச்சுக்கிட்டிருந்தேன்!… அம்மாதான் இப்படி ஒரு ஐடியாவைச் சொல்லித் தந்தாங்க!… உண்மையில் உங்களுக்கு புரிய வைக்கிறதுக்காகத்தான் நான் இந்த டிரஸையே போட்டேன்!… சத்தியமா இந்த மாதிரி ஒரு டிரஸ்ஸை என் மனசால கூட நான் நினைக்க மாட்டேன்…. தொட மாட்டேன்!”.
வெளிறிப் போன முகத்துடன் மனைவியைப் பார்த்தார் சிவராமன்.
அவளும் கெஞ்சலாய், “வேண்டாங்க” என்றாள் சன்னக் குரலில்.
கீழுதட்டைக் கடித்தபடி, தலையை மேலும் கீழும் ஆட்டிய சிவராம, அவசரமாய் செல்போனை எடுத்து எண்களை நசுக்கினார் சிவராமன்.
“ஹலோ யாரு நாகராஜனா?… சப்-எடிட்டருக்கு லைன் குடுப்பா!”
சில விநாடிகளில் சப்-எடிட்டர் இணைப்பில் வர, “சண்முகம்!… நான் எடிட்டர் பேசுறேன்!… “இந்த வார இஷ்யூ ரெடி ஆயிடுச்சு”ன்னு சொன்னீங்கல்ல?… அதை வெளியிட வேண்டாம்!… கொஞ்சம் நிறுத்தி வையுங்க!… நான் நேர்ல வர்றேன்!… சில மாற்றங்கள் செய்யணும்!”.
வேகவேகமாய் வெளியேறியவரை வெற்றிப் புன்னகையுடன் பார்த்தனர் தாயும் மகளும்.
எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings