இரயில் பயணம்… ஒன்று..
அந்த பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், சென்னையிலுருந்து பெங்களூரை நோக்கி யாரையோ துரத்திப் பிடிப்பதைப் போல விரைந்து ஓடிக் கொண்டிருந்தது. தனது சீட்டில் உட்கார்ந்து, ஜன்னல் வழியாக அதிவிரைவாக அவரை எதிர்த்து ஓடிக் கொண்டிருக்கும் மரங்களையும், பறவைகளையும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் எல்லப்பா.
அவர் பிறந்த ஊரான திருமழிசையில் இறந்து போன அவரது பெரியப்பா பையனின் மறைவுக்கு துக்கம் விசாரிப்பதற்காக வந்தவர், தற்போது தன் வசிப்பிடமான பெங்களூர் திரும்பிக் கொண்டிருக்கிறார். அவரின் நினைவுகள் அவரை முப்பது வருடங்கள் பின் நோக்கி இழுத்துச் சென்றதே அவரது அந்த வெறித்த பார்வையின் காரணம்.
தாய் தந்தையை இழந்துவிட்டு, எந்த பந்தமும் இல்லாமல் ஒற்றையாய் நிற்கும்போது, ஒரு நண்பன் சொன்னான் என்பதற்காக, திருமழிசையை விட்டு பிழைப்பைத்தேடி, இதே போல் ஒரு இரயிலில் பெங்களூரை நோக்கிச் சென்ற அந்த பதினேழு வயது எல்லப்பன் இன்று பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்தின் முதலாளியாகப் போய்க் கொண்டிருக்கிறார்.
நினைவுகள் விடாமல் அடம் பிடித்து அவரை முப்பது வருடம் பின்னோக்கியே இழுத்தது. அந்த சோக நாட்கள், கரையை முட்டி முட்டிச் செல்லும் அலைகள் போல வந்து வந்து போயின. கடந்த காலம் ஒரு சினிமா காட்சி போல அவர் கண் முன் விரிந்தது.
காலரில் கிழிந்த சட்டையும், கணுக்காலுக்கு மேல் இருந்த பேண்ட்டும் அணிந்து கொண்டு, கையில் ஒரு மஞ்சள் பையுடன் பெங்களூர் இராமச்சந்திரபுரத்தில் உள்ள ‘அருணா இண்டஸ்ட்ரீஸ்’ முன் நின்று கொண்டிருந்தான் எல்லப்பன் என்ற இளைஞன்.
இரயிலில் வந்த கசகசப்பு இன்னும் அவனின் உடலில் ஒட்டிக் கொண்டிருந்தது. வாசலில் நின்று கொண்டிருந்த வாட்ச்மேன் வயதான, நல்ல மனிதர். பொறுமையாக அவனைப் பற்றி முழுதும் விசாரித்துவிட்டுச் சொன்னார்.
‘முதலாளி அருணாச்சலம் ஐயா ரொம்ப நல்ல மனிதர். உன்னைப் போலத்தான்.. சிறுவயதிலேயே தமிழ்நாட்டை விட்டு வந்து, கடுமையாக உழைத்து ஏழ்மையிலிருந்து உயர்ந்து இன்று இந்த பவர் லூம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு மட்டும் அல்லாது ஸ்டீல் பீரோ, கட்டில், டேபிள் போன்ற பொருட்கள் தயாரிக்கும் மற்றொரு கம்பெனிக்கும் சொந்தக்காரர். இப்போது அவர் கம்பெனிக்கு வரும் நேரம்தான். நீ நிற்பதைப் பார்த்தாலே காரை நிறுத்தி விசாரிப்பார். அத்தனை எளிமையானவர்’ என்றார்.
வாட்ச்மேனின் வார்த்தைகள் அவன் நெஞ்சில் பால் வார்த்தன. ஏதோ ஒரு தைரியத்தில் திருமழிசையில் இருந்து புறப்பட்டு வந்து விட்டாலும், இருக்க இடமோ, பழகிய ஆட்களோ இல்லாத இந்த ஊரில் வேலை கிடைக்கும் வரை என்ன செய்வது என்ற குழப்பம் அவனுக்குள் இருந்தது.
அவர் கூறியதைப் போலவே, சிறிது நேரத்தில் ஒரு கார் வந்தது. காரின் நிறத்தை தூரத்திலேயே பார்த்து விட்ட வாட்ச்மேன் பணிவாக சல்யூட் வைத்தார். ஆனால் அவர் கூறியதைப் போல கார் நிற்காமல் வேகமாக உள்ளே சென்றது எல்லப்பனுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. அடுத்து என்ன செய்வது என்று யோசித்து சோர்வுடன் நின்று கொண்டிருந்தான்.
ஆனால் சிறிது நேரத்தில் முதலாளியின் ஆபீஸில் வேலை செய்யும் பையன் கேட்டை நோக்கி வேக வேகமாக ஓடி வந்து வாட்ச்மேனிடம், ‘இங்க நின்றுகொண்டிருக்கும் இந்தப் பையனை முதலாளி கூட்டி வரச் சொன்னார் ‘ என்று கூறி, ஓடி வந்த களைப்புத் தீர மூச்சு வாங்கினான்.
முதலாளியின் ஆபீஸ் அறையில் அவரின் முன் பவ்யமாக நின்று கொண்டிருந்தான் எல்லப்பன். அவரின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள்தான் அவன் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பதை உணர்ந்திருந்ததால், கொஞ்சம் படபடப்பாக இருந்தது. அவனைப் பற்றி முழு விபரங்களையும் முதலாளி பொறுமையாக விசாரித்து விட்டுச் சொன்னார்,
‘இதோ பார் எல்லப்பன்…முதல்ல ஒரு ஆறு மாசம் நம்ம பவர் லூம் செக்சனில் வேலை செய். அதன் பிறகு ஒரு ஆறு மாசம் நம்ம ஸ்டீல் ஃபர்னிச்சர் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய். இங்க வேலை செய்யும் பசங்க தங்குவதற்காக ரூம்கள் இருக்கு. அங்கே ஏதாவது ஒரு ரூம்ல தங்கிக்க. மாசம் முன்னூறு ரூபாய் சம்பளம். சரியா?’ என்றார்.
அவன் சரியென்று புன்முறுவலுடன் தலை அசைத்தவுடன், மானேஜரை அழைத்து விபரங்கள் கூறி அவரோடு அனுப்பி வைத்தார். தன் வாழ்க்கையின் ஒரு பெரிய பிரச்சினை ஒன்று எளிதாகத் தீர்ந்த நிம்மதியுடன் மானேஜரோடு உற்சாகமாகச் சென்றான் எல்லப்பன்.
அவன் அங்கு கழித்த அடுத்த இரண்டு வருடங்கள் எல்லப்பனின் சுயதிறமையை வளர்த்துக் கொள்ளும் காலங்கலாயின. படிப்பு அதிகம் இல்லையென்றாலும், இயற்கையிலேயே அவனிடம் இருந்த கடின உழைப்பும், தொழில் நுட்ப அறிவும் அவனை முதலாளி அருணாச்சலத்தின் தனி கவனத்திற்குக் கொண்டு சென்றது.
தொழிற்சாலையில், பல நெருக்கடியான சமயங்களில், அவன் கற்றிருந்த தொழில் நுட்பம் அவனுக்கு உதவி செய்ய, அது அவனுக்கு முதலாளியிடம் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது.
ஒரு இளைஞனுக்கே உரித்தான கட்டான உடல் வாகுடனும், மெல்லிய மீசையுடனும் தன் முன் நிற்கும் எல்லப்பனைப் பார்த்தார் அருணாச்சலம். ஐந்து வருடங்களுக்கு முன் சிறுவனாக எப்படி கை கட்டி அவர் முன் பணிவாக நின்றானோ, அப்படியே இன்றும் நின்றிருந்தான் எல்லப்பன்.
‘தனியாக ஸ்டீல் ஃபர்னிச்சர் தயாரிக்கும் கம்பெனி ஆரம்பிக்க இருப்பதாக நீ சொல்வதைக் கேட்க மகிழ்ச்சி. ஏதோ ஒரு விதத்தில் என் கடந்தகால நகல் போலவே நீ இருக்கிறாய். நானும் உன் வயதில் இப்படித்தான் சுறுசுறுப்பாய் இருந்தேன். உனக்கு என்ன உதவி, எப்போது வேண்டுமானாலும் என்னிடம் தயங்காமல் கேட்கலாம். இங்கு அரசு அலுவலகங்களில் எனக்குத் தெரிந்த அதிகாரிகள் நிறையப் பேர் இருக்கிறார்கள். தொழில் தொடங்க பணம் தேவையென்றாலும் கேள்’ என்றார்.
ஒரு முதலாளி போல் இல்லாமல் பாசம் மிக்க தகப்பன் தன் மகனிடம் பேசுவது போலவே அவர் பேசினார்.
‘போதுமான பணம் இருக்குதுங்க ஐயா. உங்களின் வழிகாட்டுதலும் அன்பும் இருந்தால் போதும்’ என்றான் எல்லப்பன்.
‘சரி… முதலில் உன் பெயரை ‘எல்லப்பா’ என்று மாற்றிக்கொள். ‘ன்’ ல் முடியும் பெயர்கள் வைத்திருப்பவர்கள் ஒன்று தமிழனாகவோ அல்லது மலையாளியாகவோதான் இருப்பார்கள் என்று இங்குள்ள கன்னடர்களுக்குத் தெரியும். அதனால் பல நடைமுறை சிக்கல்கள் உண்டாகும். அடுத்து நீ தொடங்கும் தொழிலுக்கு கர்நாடக அரசிடம் இருந்து எஸ்.எஸ்.ஐ. சர்டிபிகேட் வாங்கி வைத்துக்கொள். பாங்கில் லோன் வாங்கவும், கர்நாடக அரசின் தொழில் அங்கீகாரம் வாங்கவும் அது உதவும். அப்படி அரசின் அங்கீகாரம் வாங்கி விட்டால், கர்நாடகா முழுதும் உள்ள அரசு அலுவலகங்களுக்கு ஸ்டீல் பீரோ, சேர், டேபிள் சப்ளை செய்ய ஆர்டர் கிடைக்கும். அரசு மருத்துவமனைகளுக்கு கட்டில், டேபிள் போன்ற ஸ்டீல் ஃபர்னிச்சர்கள் சப்ளையும் செய்ய முடியும்’ என்று தொழில் ரகசியங்கள் அனைத்தையும் அவனுக்குக் கற்றுக் கொடுத்தார்.
‘ஹரிச்சந்திரா காட்’ என்ற பெயரில், பெங்களூரில் இருந்த பிரபல சுடுகாட்டின் பின்புறம் கிடைத்த முப்பது செண்ட் நிலத்தை விலைக்கு வாங்கினார் எல்லப்பா. சுடுகாட்டுக்கு பின்புறம் என்பதாலும், வீட்டு மனைக்கு யாரும் வாங்க முன் வராததாலும் குறைந்த விலைக்கு அவரால் அந்த இடத்தை வாங்க முடிந்தது.
வாங்கியவுடன் முதல் வேலையாக மூன்று புறமும் உயர்ந்த மதில் சுவர் எழுப்பி ஆஸ்பெஸ்டாஸ் அட்டை போட்டார். வேலை முடிக்கப்பட்ட புதிய பீரோக்களை நிறுத்தி வைப்பதற்காக, மரத்தடுப்பினால் ஆன ஒரு நீண்ட அறையைத் தடுத்தார். அந்த அறையின் மேல், ஆபீஸ் அறையையும் கட்டினார். ஸ்டீல் ஃபர்னிச்சர்கள் செய்வதில் அனுபவம் உள்ள மேஸ்திரியையும், பெயிண்டரையும் தேடிப்பிடித்தார்.
எல்லாம் தயாரானபோது திருமழிசையிலிருந்து அபூர்வமாய் எல்லப்பாவின் தாய் மாமன் வந்தார். ஒற்றையாய் நின்றபோது கை கொடுக்க தயாராய் இல்லாத மாமன் இப்போது தன் மூத்த பெண் ரூபவாணியை திருமணம் செய்துகொள்ள எல்லப்பனுக்கு சம்மதமா என்று கேட்டார்.
முன்பு இருந்த எல்லப்பனாக இருந்திருந்தால், பழையதெல்லாம் ஞாபகப்படுத்தி மாமனை அவமானப்படுத்தி திருப்பி திருமழிசை அனுப்பியிருப்பான். ஆனால் இப்போது இருக்கும் எல்லப்பா முழுக்க முழுக்க ஒரு திறமையான வியாபாரியின் புத்தியைக் கொண்டிருந்தார். வாழ்க்கையில் எப்படியாவது காய்களை நகர்த்தி, தன் திறமையின் மூலம் முன்னேறுவதிலேயே முழு கவனத்தையும் செலுத்தினார்.
முதலாவது, அவருக்கு குடும்பம் என்ற அமைப்பு சமுதாய மரியாதைக்காகத் தேவைப் பட்டது. இரண்டாவது, அவர் பிறந்து வளர்ந்த திருமழிசையில் கடைசி வரை தனக்கு ஒரு பிணைப்பு இந்தத் திருமணத்தின் மூலம் ஏற்படவேண்டும் என விரும்பினார். இந்தக் கணக்கின் அடிப்படையில்தான் ரூபவாணியை மணக்க மாமாவிடம் சம்மதம் தெரிவித்தார்.
ஆனால் திருமணம் சிக்கனமாகவும், தொழிற்சாலை தொடங்குவதற்கு முன்பும் நடக்க வேண்டும் என்பதில் மட்டும் பிடிவாதமாக இருந்து அதில் வெற்றியும் பெற்றார். தொழிற்சாலைக்கு ‘ரூபவாணி இன்டஸ்ட்ரீஸ்’ என்று தன் புது மனைவியின் பெயரை வைத்துத் தொழில் தொடங்கினார்.
அருணாச்சல முதலாளி சொன்ன அத்தனை அறிவுரைகளையும் பின்பற்றி தொழிற்சாலைக்கு அரசு அங்கீகாரமும் பெற்றார். ரூபவாணி வந்த நேரமும், அவரின் திறமையும் சேர்ந்துகொள்ள தொழில் நல்ல முறையில் வளர்ந்தது. ஒரு நல்ல வீட்டை வாடகைக்குப் பிடித்தார். புதிய கார் வாங்கினார். சிறந்த உடைகளை அணிந்து தன் தோற்றத்தில் ஒரு முதலாளியின் கம்பீரத்தை வரவழைத்தார்.
ஆர்டர்கள் வரத் தொடங்கியதும் அவர் ஒருவரால் அத்தனையையும் கவனிப்பது கொஞ்சம் சிரமத்தைக் கொடுத்தது. ஆங்கிலத்தில் பேசவும், ஆங்கிலத்தில் வரும் கடிதங்களைப் படித்துச் சொல்லவும், டைப் அடிக்க, பேங்க் போய் வர என்று அவரின் ஆபீசுக்கு ஒரு நல்ல அசிஸ்டெண்ட் தேவைப்பட்டது.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings