இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
இந்த ஷோலே படத்தை தனியா போய் ஒரு தடவை பாக்கணும், நிறைய கரகோஷம் நடுநடுவுல கேட்டது, அனேகமா நல்ல படமாதான் இருக்கணும்.
அச்சோ நீங்க கற்பனை பண்ணற அளவு ஒண்ணும் பெரிசா நடந்துடலை. சீட்ல என் இடது பக்கத்துல உக்காந்த சுசீலா கொஞ்சம் கூட கண்டுக்காம சினிமா பாத்தா (இத்தனைக்கும் எங்க யாருக்கும் ஹிந்தி ஒரு வார்த்தை தெரியாது அப்ப) எனக்கு சினிமா ஸ்கிரீன் பக்கம் கூட பாத்த ஞாபகம் இல்லை. நான் அனேகமா இடது பக்கமே திரும்பி உக்காராத குறைதான். என் சுசீலான்ற பெருமையோட அவள் முகத்தையே பார்த்திருந்தேன்.
அப்பப்ப அவ முகத்தில், ஷோலே படத்தின் சீனுக்கு ஏத்தமாதிரி விதவிதமான கலர் வெளிச்சம் விழும், அதை வேடிக்கை பாக்கறதுல ஒரு கிளர்ச்சி. அவளுக்கு அனேகமா நான் அவளையே பாக்கறது தெரியும்கறது அவ முகத்தில் தவழ்ந்த புன்னகை சொல்லியது. ஒரு அரைமணி நேரத்துக்கு அப்பறம் தாள முடியாம என் பக்கம் திரும்பினாள், படத்தைப் பாருனு கிசுகிசுப்பா சொல்லிட்டு, என் இடது புறங்கையில் நறுக்னு ஒரு கிள்ளு.
வலது கையால் அந்த இடத்தை தேய்த்த பின் கொஞ்சம் தைரியம் வந்தது, என் இடது கை மிருதுவாக அவள் வலது கையை பற்றியது. எதிர்ப்பு ஏதும் வரலை லேசாக என் பக்கம் திரும்பி லேசான கிசுகிசுப்பு, “யாராவது பாப்பாங்க கையை விடுப்பா”
அவள் கிசுகிசுப்பான குரல் அந்த அரைகுறை வெளிச்ச இருட்டில் மேலும் மயக்கியது. இன்னும் கொஞ்சம் என் பிடி இறுகியது, அவளே விரல்களை இளக்கி என் விரல்களோடு கோர்த்துக் கொண்டாள். அது போதுமே காதல் மின்சாரம் உடலெல்லாம் ஊடுறுவி பாய்ந்தது.
அந்த சேர்ந்து கோர்த்த விரல்கள் படம் முடிந்து வெளியே வரும் வரை அனேகமாக சேர்ந்தே இருந்தது. மனதில் மட்டும் வேறு வேறு இனிய கற்பனைகள். அம்ஜத்கானின் கர்ஜனைக் குரலோ, அமிதாப், தர்மேந்தரின் கேலி நக்கல்களோ, ஹேமமாலினியின் தேன் குரலோ எதுவும் அப்ப காதிலோ மனதிலோ ஏறவில்லை.
படம் முடிந்து வெளியே வந்தோம், தனிதனியே நல்ல குழந்தைகளா வீடு திரும்பினோம் இதெல்லாம் என்னத்தை சொல்றது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக எங்கள் காதல் வளர்ந்தது, முதிர்ந்தது. எங்கள் காதல் களம் பல தடவை எங்க மொட்டை மாடி, கிணத்தடி, மற்றும் ஹனுமார் கோவில்.
சில தடவை மீனாட்சி கோவில்,பழைய சொக்கநாதர் கோவில்னு கடவுள் சந்நிதானத்தில் பக்திமயமா போச்சு.
எங்க நினைப்பு இது ,எங்க ரகசியம் யாருக்கும் தெரியாதுன்னு.யார் பாத்தாங்களோ யார் வத்தி வைத்தார்களோ சுசீலாவோட அப்பா அந்த ஞாயித்துக்கிழமை என்னை கிணத்தடியில் பாத்துட்டு அம்பி கொஞ்சம் என் கூட வானு அவங்க வீட்டுக்கு மெளனமா கூட்டிண்டு போனார்.
என் உடம்பெல்லாம் பயம். அவங்க வீட்டு கூடத்தில் ஒரு ஸ்டீல் சேரில் உக்கார வச்சு,தானும் உக்காந்தார்.அடுக்களை பக்கம் பாத்து, அம்மா சுசிலா கொஞ்சம் ரெண்டு டம்ளர் ஜலம் கொண்டு வா.
ஒரு நெளிந்த எவர்சில்வர் பிளேட்டில் ரெண்டு டம்ளரில் வழிய வழிய தண்ணியோட சுசிலா குனிந்த தலையுடன் வந்தாள்.
அவ அப்பா, “அந்த தட்டை ஸ்டூல்ல வை, நீயும் இங்கே இரு.”, சுசிலாவோட அம்மாவும் அந்த சமையலறை கதவை ஒட்டி நிற்பது தெரிந்தது.
சங்கரையர் எங்க ஃபிசிக்ஸ் லெக்சரர் மாதிரி தொண்டையை கனைத்துக் கொண்டார் எனக்கு பயத்தோட சிரிப்பும் வந்தது. “தம்பி, நீ என்ன படிக்கறே?”
“அமெரிகன் காலேஜ்ல பி.எஸ்சி,சார்”
“ இன்னும் படிக்கணும், நல்ல வேலைக்கு போகணும் இல்லையா”
“ஆமாம் சார்”
“அப்பா இல்லை, அம்மா கலெக்டர் ஆபீஸ்ல அசிஸ்டன்டா இருக்கா சரியா?”
“ம்” இப்ப ஈனஸ்வரமா வந்தது என் குரல்.
“இந்த வயசு காதல் கீதல் வர வயசுதான் தப்பு இல்லை,என்ன வாழ்க்கையை வீணாக்காம இதுல இருந்து தப்பி வரணும், நல்லா மனசு வச்சு படி, கஷ்டப்படற அம்மாவை மேலும் மனக் கஷ்டப்படுத்தாம முன்னுக்கு வா.அதுவரை எங்க சுசீலா உனக்காக காத்திருந்தா, எனக்கோ,வேதாவுக்கோ ஒரு ஆட்சேபனையும் இல்லை சரியா?”
சரின்ற மெதுவான முனகல்தான் என்னிடமிருந்து.
“சுசிலா, இது உனக்கும்தான், நிஜமா நீங்க ஒருத்தரை ஒருத்தர் விரும்பினா இன்னும் நாலு வருஷமோ, அஞ்சு வருஷமோ கழிஞ்சு நானே கல்யாணம் பண்ணி வைப்பேன் சரியா”
நான் ஒண்ணுமே மேற்கொண்டு பேசலை, பேச வரலை, ஒரு தடவை சுசீலாவை பாத்தேன், அவள் கண்களில் கோத்து தழும்பும் கண்ணீரை பாத்தேன். ஒன்றும் தோன்றவில்லை தொண்டை அடைத்த துக்கத்தை விழுங்கக் கூட தெரியலை. பேசாமல் எங்க போர்ஷனை நோக்கி தலையை குனிந்து கொண்டு நடந்தேன்.
எல்லோரும் என்னை பார்த்து எனக்கு பின்னால் கேலி பண்ணி சிரிப்பது போல இருந்தது. அம்மா ஒண்ணுமே கேக்கலை, அவளுக்கும் தெரிஞ்சு போச்சுன்னுதான் நினைக்கறேன்.
ஒரே வாரம் சங்கரையர் ஃபேமிலி சரஸ்வதி ஸ்டோரை காலி பண்ணிட்டு போயிட்டாங்க, உள்ளூரா, வெளியூரா அது கூட தெரியாது.
இனி சுசீலா பார்வையில் இருந்து…
இந்த சரஸ்வதி ஸ்டோர் ரொம்ப போர், எனக்கு இங்கே என் வயசை ஒத்த தோழிகளே இல்லை ஒண்ணா ரொம்ப சின்ன பொண்ணுங்க இல்லைன்னா பெரிய அக்காங்க.. ஸ்கூல், ஹோம் ஒர்க், அம்மாக்கு வீட்டு வேலைல ஹெல்ப் இதுதான் ரொடீன்.
ஒரே ஒரு பிளஸ் பாயின்ட இங்கே மொட்டை மாடிதான்.அங்கே நின்னா பக்கத்துல இருக்கற சினிமா தியேட்டர்ல இருந்து வசனம் பூரா கேக்கும்.தியேட்டர் பேரு கல்பனானு நினைக்கறேன்.அப்ப ஶ்ரீதர் படம் கல்யாணப் பரிசு படம் ஓடிட்டிருந்தது. அதுல சரோஜாதேவி வாயஸ் ரொம்ப பிடிக்கும். “அம்மா போயிட்டு வரேன்” னு அவங்க காலேஜ் போறப்ப திரும்ப திரும்ப சொல்வாங்க கீச்சுக் குரல்ல.
நானும் அதை காபி பண்ணி ஸ்கூலுக்கு போறப்ப சொல்வேன், பக்கத்து வீட்டு சுலோசனா அக்கா ஒரு நா சாயந்திரம் கேட்டாங்க, “ ஏண்டி சுசீ நீ யாரைடி லவ் பண்றேனு”
அவங்களுக்கு ஒரு 22 வயசு இருக்கும், பி.யூ.சி படிச்சிட்டு வீட்ல இருக்காங்க.அவங்க வீட்ல மாப்பிள்ளை தேடறதா கேள்வி.
“ போங்கக்கா, நீங்க தப்பு தப்பா கேக்கறீங்க”
“இல்லைடி, காத்தாலை ஸ்கூல் போறப்ப,”அம்மா போய்ட்டு வரேன்னு” கல்யாணப்பரிசு சரோஜாதேவியாட்டம் கத்தி சொல்றயோன்னோ, அதான் கேட்டேன்.படம் பாத்திருக்கயோ சூப்பரா இருக்கும் லவ்சீன்ஸ்.சரோஜா தேவியோட லவ் சிக்னல் ஜெமினிக்கு அந்த அம்மா போய்ட்ட வரேன். அதான் கேட்டேன் அந்த ஶ்ரீதர் பயலை லவ் பண்றயோனு டவுட்.
“போங்கக்கா ஏதாவது சொல்லிக்கிட்டுனு” வந்துட்டேன்.
ஆனா அது மனசுக்குள்ளே ஒரு இனமறியாத ஆர்வத்தை தூண்டினது உண்மை.அடுத்த ரெண்டு நாள் எதிர் பக்கம் நோட்டம் விட்டேன். அந்த ஶ்ரீதர் பையனும் என்னை பாக்கறதை பாத்தேன். நல்லாதான் இருக்கான், ஏதோ காலேஜ்ல படிக்கறான் போல உயரமா சிவப்பா இருந்தான். ரெண்டு மூணு நாளைக்கப்பறம் மாடில துணி காயப் போட போனேனா, இது மேல உக்காந்து ஏதோ படிச்சிண்டிருக்கு.
எனக்குள்ளே ஏதோ ஒரு பரபரப்பு பக்கத்துல அவனை பாத்ததுல.இந்த உள்ளாடையெல்லாம் அவன் முன்னால காயப் போட வெக்கமா இருந்தது.
தேவி தியேட்டர்ல இருந்து வசனம் சத்தமா கேக்கறது இங்கே எப்படி படிக்கறான், கேட்டே விட்டேன் தைரியமா, “வசனம் கேக்கறயா, படிக்கறையானு”
ஏதோ பதில் சொன்னான் பேச்சை வளக்க விடாம நான் ஹனுமார் கோவிலுக்கு போகணும்னு கீழே வந்துட்டேன். அவனும் கோவிலுக்கு வரணும்னு மனசுக்குள்ளே எதிர் பாத்தேனா தெரியலை.
அர்ச்சனை தட்டை தூக்கிண்டு கோவிலுக்கு போனேனா, கண்ணு அனிச்சையா அவனை தேடறது. சீ நம்ம ரொம்ப கெட்ட பொண்ணாட்டம் நடந்துக்கறோம்னு என்னை நானே கடிந்து கொண்டேன். ஆனாலும் சட்னு அவனை கோவில்ல பக்கத்துல பாத்ததுல ஒரு சந்தோஷப் பந்து நெஞ்சுக்குள்ளே.
கோவில் பிரகாரம் சுத்தி வரப்ப கூடவே வந்தான் ஏதேதோ பேசினோம், சட்னு கையை பிடிச்சிண்டு ஐ லவ் யூ சொல்லிட்டான், எனக்குள்ளே வந்த அந்த உணர்ச்சிகளை எப்படி சொல்றது, சந்தோஷமா, துக்கமா இல்லை துக்கம் இல்லை போங்கப்பா சொல்லத் தெரியலை, அன்னைக்கு பூராவும் அதையே நினைச்சிண்டிருந்தேன்.
அப்பறம் சில சின்ன சின்ன திருட்டுத் தனம்.இந்த ஶ்ரீதர் பையனுக்கு கொஞ்சம்கூட வெக்கமே இல்லை என் பாடீஸ் காயப் போட்டதை எடுத்து ஒளிச்சு இந்த மாலாப் பொண்ணையும் கூட வச்சிண்டு ஒரு இந்தி படம். ஃபேமஸ் படம்ப்பா பேர் சட்னு ஞாபகம் வரலை.பக்கத்துல உக்காந்து கையை கோத்துண்டே படம் பாத்தோம் (படத்துல மனசு ஒட்டலை).கூட இந்த மாலா வராம இருந்தா நன்னா இருந்திருக்கும்.
இப்படியே நாட்கள் இனிமையா போயிருக்கலாம் ஆனா, ஒரு நாள் அப்பாவுக்கு மூக்கு வேர்த்துடுத்து, திட்டலை, சத்தம் போடலை, அம்மாதான் அழுது மூக்கை சிந்திண்டு இருந்தாள்.
அப்பா, “பாரும்மா இதுக்கான வயசு இல்லை இது, நீ நல்லா படிக்கணும், பெரிய நிலைக்கு வரணும்,ஃபாரின்லாம் போகணும்னு கனவுல இருக்கேன். நீ பண்றது சரியில்லை, எனக்கு பிடிக்கலை”
எனக்கு அழுகைதான் முட்டிண்டு வந்தது.
அப்பா ஶ்ரீதரையும் கூப்பிட்டு புத்தி சொல்லி அனுப்பினார், ஒரே வாரம் அப்பாக்கு உத்யோகம் விழுப்புரம் டிரான்ஸ்பர். 10 நாளுக்குள்ளே என் லைஃப் மாறிப் போச்சு. மனசைப் பூராவும் யாரோ கட்டாயமா டர்க்கி டவல் வச்சு துடைச்சு காய வச்சுட்ட மாதிரி. இப்பல்லாம் சந்தோஷம், துக்கம் எல்லாம் வரண்டு போச்சு. என் எதிர்காலத்தை யோசிக்க கூட மனசில்லாம எந்திரமானேன்.
இந்த தொடரின் அனைத்து அத்தியாயங்களும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
தொடரும்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings