எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட்.
பஸ்ஸுக்கு முன்புறமாக நின்று பீடி குடித்துக் கொண்டிருந்த டிரைவரை நோக்கிச் சென்ற கவிதா, “இந்த பஸ் ஆனைமலை போகுமா?” என்று கேட்க. பீடியை ஆழமாய் உறிஞ்சி நிதானமாய்ப் புகையை விட்ட பிறகு, “ம்…போகும்” என்றார்.
“சங்கரன் பாளையம் பிரிவுல பஸ் நிற்குமல்ல?” கேட்டாள்.
அந்த டிரைவர் பார்வையை எதிர் சுவர் சினிமா போஸ்டரைப் பார்த்துக் கொண்டே, ”ம்… நிற்கும்” என்றார்.
பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டாள் கவிதா. பஸ் கிளம்பியதும் டிக்கெட் கொடுக்க வந்த கண்டக்டரிடம், “சங்கரன்பாளையம் பிரிவு வந்ததும் கொஞ்சம் சொல்லுங்க!” என்று சொல்லி வைத்துக் கொண்டாள்.
அரை மணி நேரப் பிரயாணதிற்குப் பிறகு, “சங்கரன்பாளையம் பிரிவு இறங்கறவங்கெல்லாம் இறங்குங்க” என்ற கண்டக்டரின் கத்தலில் உசுப்பப்பட்டு வேகமாக இறங்கினாள் கவிதா.
இறங்கியவள். “சங்கரன் பாளையம்” என்ற போர்டு காட்டிய மண்பாதையில் சூட்கேஸைத் தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள். அமைதியான அந்தச் சூழ்நிலை அவள் மனதில் நீறு பூத்த நெருப்பாய் அடங்கிக் கிடந்த அந்தச் சோகத்தை ஊதி விட பழைய நினைவலைகள் மீண்டும் மனத்திரையில் ஓட ஆரம்பித்தன.
*******
ராஜசேகர் சொல்லி முடித்ததும் கேட்டுக் கொண்டிருந்த கவிதாவுக்கு பத்தாயிரம் இடிகள் ஒட்டு மொத்தமாய்ட் தலை மேல் விழுந்தது போலிருந்தது. தலை ‘கிர்’ரென்று சுழல, கண்கள் செருகி மயங்கி விழுந்தாள்.
பதறிப் போன ராஜசேகர் பக்கத்தில் இருந்த வாட்டர் பில்டரில் அவசர அவசரமாக நீர் பிடித்து வந்து அவள் முகத்தில் தெளித்து எழுப்பினான்.
அவள் கண்களை திறந்ததும்தான் அவனுக்கு உயிரே வந்தது. “என்னம்மா இப்படிக் களேபரம் பண்ணிட்டியே?” என்றான் தவிப்புடன்.
நீங்க பண்ணியதை விடவா நான் களேபரம் பண்ணிட்டேன்?” அழுகையை மென்றபடி பேசினாள்.
“கவிதா!… ப்ளீஸ் என் நிலமையைப் புரிஞ்சுக்கம்மா!… என்னை வளர்த்து ஆளாக்கி, படிக்க வெச்சு, இன்னிக்கு ஒரு காலேஜ் புரபஸர்ங்கற பொசிஷன்ல நான் இருக்கிறேன்னா… அதுக்குக் காரணமானவர் அந்த மாமா!.. ஆனா அவர் மனசுல இப்படியொரு எண்ணம் இருக்கும்னு எனக்கு நேத்திக்கு வரைக்கும் தெரியாதும்மா” கெஞ்சலாய்ச் சொன்னான்.
“தெரிஞ்சிருந்தா… என்னைக் காதலிச்சிருக்கவே மாட்டீங்க!… அப்படித்தானே?” எரிச்சலுடன் கேட்டாள் கவிதா.
“கவிதா… நான் உன்னை உயிருக்கு உயிராய் காதலிச்சது சத்தியமான உண்மை!. இன்னிக்கு திடீர்னு என் மாமா வந்து தன் பெண்ணைக் கட்டிக்கோ!ன்னு சொன்னப்ப… என்னால எதுவுமே செய்ய முடியலை!… மறுக்கவும் முடியலை… ஏத்துக்கவும் முடியலை!… மன உளைச்சல்ல… நேத்து ராத்திரி பூராவும் தூங்காமல் நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும் கவிதா!”
.
“அதனாலதான்… அதே மாதிரியான கஷ்டத்தை நான் வாழ்க்கை பூராவும் அனுபவிக்கணும்னு நெனச்சீங்களா ராஜசேகர்?”.
“கவிதா… நீ படிச்சவ!… என்னைய மாதிரி நீயும் ஒரு காலேஜ் புரபஸர்!… உன்னால சூழ்நிலைகளை புரிந்து கொள்ள முடியும்!…”
.
“ஆனாலும் நான் ஒரு பெண் ராஜசேகர்!… கிராமத்துப் பெண்ணாக இருந்தாலும் சரி… நகரத்துப் பெண்ணாக இருந்தாலும் சரி!… ஏமாற்றம்… ஏமாற்றம்தான்!.. வலி ஒண்ணுதான்” கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சொன்னாள்.
இருவருக்கும் இடையில் நடைபெற்ற நீண்ட நேர விவாதம் இறுதியில் ஒரு சுமூகமான… நாகரீகமான பிரிவில் முடிந்தது.
புரிந்து கொள்ளக்கூடிய இரண்டு உள்ளங்கள் தங்கள் காதலை பிறர் நலத்துக்காக தகனம் செய்து விட்டுத் தத்தம் வழியில் சென்றன.
ஆறாத காயத்தின் வலியை இடமாற்றத்தால் மறக்க நினைத்த கவிதா பதினைந்து நாள் லீவில் தன் கல்லூரித் தோழி கனகாவின் கிராமத்திற்கு செல்ல முடிவு செய்தாள்.
****
“ஹோ… ஹோ” என்ற மாட்டு வண்டிக்காரனின் குரலைத் தொடர்ந்து, வண்டி நிற்கும் சப்தமும் கேட்க, தன் பழைய நினைவுகளை அசை போட்டபடி மண்பாதையில் நடந்து கொண்டிருந்த கவிதா, திடுக்கிட்டு நின்று திரும்பினாள்.
“ஆரம்மணி அது? அசலூரா?” முண்டாசு கட்டிய வண்டிக்காரன் கேட்டான்.
“ஆமாங்க!.. வெளியூர்தான்!… இங்கே சங்கரன்பாளையத்துக்கு போறேன்” என்றாள் கவிதா. அவள் பார்வை அந்த மாட்டு வண்டிக்குள் அமர்ந்திருந்த பெண்ணை ஊடுருவிப் பார்த்தது.
“காத்த முத்தண்ணே!… அவங்களையும் வண்டியில ஏறிக்கச் சொல்லுங்க” வண்டிக்குள்ளிருந்த பெண் சொல்ல,
“அம்மணி… வண்டில ஏறிக்க அம்மணி!.. நாங்களும் சங்கரன்பாளையம் தான் போறோம்… உன்னைய அங்கே இறக்கி விடறோம்!” என்றான் வண்டிக்காரன்.
கவிதாவும் ஏறி அமர்ந்து கொண்டாள். வண்டிக்குள்ளிருந்த அந்தப் பெண் கவிதாவுடன் வலியப் பேசினாள். “எம்பேரு சங்கரி!.. உடுமலைப்பேட்டையில் இருந்து வர்றேன்!… அதுதான் எனக்கு சொந்த ஊர்!… இங்கே சங்கரன்பாளையத்தில் என்னோட சினேகிதி வீடு இருக்கு.. அவளைப் பார்க்கத்தான் போறேன்!.. நீங்க எந்த ஊரு?… இந்த சங்கரன் பாளையத்தில நீங்க யாரு வீட்டுக்குப் போறீங்க?” வெகுளியாய்க் கேட்டாள்.
“நானும் என் சினேகிதியைப் பார்க்கத்தான் போறேன்!… எனக்கு சொந்த ஊரு கோயமுத்தூர்!” என்றாள் கவிதா.
“கோயம்புத்தூரிலா வேலை பார்க்கறீங்க?” முகம் பிரகாசமானது அவளுக்கு.
”ஆமாம்மா!… அங்கே காலேஜ்ல புரபஸரா இருக்கேன்”
.
“ஹய்… என்னோட மாமனும் அங்கதான் காலேஜ் வாத்தியாராய் இருக்கார்” என்றாள் சங்கரி உற்சாகத்துடன்.
“அப்படியா?” என்று ஒப்புக்கு கேட்டு வைத்தாள் கவிதா.
சிறிது நேரம் இருவரும் எதுவும் பேசவில்லை. வண்டி பாதையிலிருந்த ஒரு சிறு மேட்டின் மீது ஏறத் திணற, வண்டிக்காரன் கீழே இறங்கி சக்கரத்தை கையாள் உருட்டினான். வண்டியில் இரண்டு பெண்களின் பாரம் இருந்ததால் வண்டி அசையவில்லை. அதைச் சொல்ல தயங்கிக் கொண்டு தலையைச் சொறிந்தபடி வண்டிக்காரன் நிற்பதைக் கண்டு நிலைமையைப் புரிந்து கொண்ட கவிதா தானாகவே கீழிறங்கினாள்
வண்டிக்காரன் சிரமப்பட்டு தள்ளிப் பார்த்தான். ம்ஹும்… நகரவில்லை.
கவிதாவிற்கு எரிச்சலாயிருந்தது. “என்ன பெண் இவள்?… ரெண்டு நிமிஷம் கீழே இறங்கி நிற்கக் கூடாதா?” வண்டிக்காரனிடம் சன்னக் குரலில் சொன்ன கவிதாவை ஒரு நேர்ப்பார்வை பார்த்து விட்டு, தன் மொத்த பலத்தையும் திரட்டி வண்டியை நகர்த்தியே விட்டான்.
மீண்டும் அமைதியான வண்டிப்பயணம். இப்போது கவிதா அந்த சங்கரியின் முகத்தைக் கூட பார்க்க விரும்பாமல் அமர்ந்திருந்தாள். அதற்கான காரணத்தை யூகித்து விட்ட சங்கரி விரக்தியாகச் சிரித்தபடி, கவிதாவின் தோள்பட்டையை தொட்டு, தன் சேலையை முழங்கால் வரை நகர்த்தி தன் இரு கால்களையும் காட்ட,
அவை இரண்டும் சூம்பிக் கிடந்தன.
அதிர்ச்சி வாங்கினாள் கவிதா.
அதைப் பற்றி ஏதாவது விசாரித்தால் அந்தப் பெண்ணின் மனதில் வேதனைதான் உருவாகும் என்பதை புரிந்து கொண்ட கவிதா பேச்சை மாற்றினாள்.
“ஆமாம் என்ன திடீர்னு சினேகிதியை பார்க்கக் கிளம்பிட்டீங்க?… ஏதாவது விசேஷமா?” சிரித்தபடி கேட்டாள் கவிதா.
“ஆமாம் விசேஷம்தான்!… கோயம்புத்தூரில் காலேஜ் வாத்தியாராய் இருக்கிற என் மாமன் ராஜசேகருக்கும் எனக்கும் அடுத்த மாசம் கல்யாணம்… அந்த சந்தோசமான சமாச்சாரத்தைச் சொல்லத்தான் சிநேகிதி வீட்டுக்கு போறேன்” என்றாள் சங்கரி.
கவிதாவின் மனசுக்குள் ஒரு ஃப்ளாஷ் அடித்தது. “என்னது ராஜசேகரா?… கோயம்புத்தூரில் காலேஜ் வாத்தியாரா?… அப்படின்னா இந்த பெண்தான் அவருடைய மாமா பெண்ணா?… இந்த ஊனமுற்ற பொண்ணுக்கு வாழ்க்கை தரத்தான் அவர் தன்னோட காதலைத் தியாகம் செய்தாரா?… அடப்பாவமே.. பணத்துக்கும்… சொத்துக்கும் ஆசைப்பட்டு என்னைக் கழட்டி விட்டுட்டு.. மாமா பொண்ணு பின்னாடி போயிட்டாரு!ன்னு அல்ல நான் நெனச்சேன்!… ராஜசேகர்… உண்மையிலேயே நீங்க உயர்ந்தவர்… உங்க மனசைப் புரிந்து கொள்ளாமல் நான்தான் உங்களைத் தப்பா எடை போட்டுட்டேன்” அமைதியாய் உள்ளுக்குள் குமுறினாள் கவிதா.
அவளின் திடீர் அமைதியைக் கண்ட சங்கரி தன் மேல்தான் பரிதாபப்படுகிறாள் போலிருக்கிறது, என்று நினைத்தவளாய் வெளியில் வேடிக்கை பார்க்கத் துவங்கினாள்.
எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings