எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
“என்ன அபிராமி… நாம சாப்பிடலாமா?” அண்ணி சகுந்தலா கேட்க,
“இருங்க அண்ணி… அண்ணனும் வந்துடட்டும்”
“அது செரி…உங்கண்ணன்… ஊர்ப் பெரியவங்களோட உட்கார்ந்து பேச ஆரம்பிச்சிட்டார்ன்னா அவ்வளவுதான்… நேரம் போறதே தெரியாம பேசிட்டேயிருப்பாரு… பாவம்… கொழந்தைக பசில வாடிப் போயிடுச்சுக”
மெல்ல எழுந்து போய் வாசல் நடையருகே நின்று வெளித் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்தாள் அபிராமி.
“அடடே… தங்கச்சி நீ எப்ப வந்தாப்புல?” பெரியவர் ஒருவர் அவளைப் பார்த்ததும் கேட்க,
“என்ன ஓய் இப்படிக் கேட்டுட்டீர்?… உமக்கு விஷயமே தெரியாதா என்ன..?… அவுக ஊரே பஞ்சத்துல அல்ல கெடக்கு…!… கொடும் பட்டினில வாடி வதங்கிப் போன ஜனங்கெல்லாம் வயத்துப் பாட்டுக்காக ஆளுக்கொரு திக்குல பறந்திட்டாங்கல்ல?.. தங்கச்சியும்…. மாப்பிள்ளையும்தான்… “செத்தாலும் இங்கதான்… இந்த ஊரை விட்டுப் போறதில்லை”ன்னு வீம்பா அங்கியே கெடந்தாங்க… நாந்தான் விஷயம் கேள்விப்பட்டு… மனசு கேக்காம நேர்ல போய் அவுங்களையும் கொழந்தைகளையும் நம்ம ஊட்டுக்கு வலுக்கட்டாயமாக்… கூட்டியாந்துட்டேன்…” திட்டக்குடி தேவராஜ் சொன்னார்.
“நல்ல காரியம் பண்ணுனீங்க தேவராஜ்”
“பின்னே?…. கூடப் பொறந்த பொறப்பு… சோத்துக்கு இல்லாமச் சாவறதைப் பார்த்துட்டு நானென்ன சும்மாவா இருப்பேன்?… அதான்… “பஞ்சகாலம் தீர எத்தனை மாசமானாலும் சரி… எத்தனை வருஷமானாலும் சரி… நீங்க எல்லாரும் இங்கியே இருங்க….நானாச்சு உங்களுக்கெல்லாம் சோறு போட”ன்னுட்டேன்”
“ஆஹா….ஆஹா…பாசம்ன்னா இதுவல்லவா பாசம்”
தொடர்ந்து அவர்கள் பேச்சு வேறொரு பொதுப் பிரச்சனையை நோக்கிச் சென்றது. அப்பேச்சு வார்த்தையின் போது தன் அண்ணன் தேவராஜ் சொல்லிய சில அற்புதமான விஷயங்களும்… ஆழமான கருத்துக்களும்…. யதார்த்தமான நடைமுறைச் செய்திகளும்… தங்கை அபிராமியைப் புருவம் உயர்த்த வைத்தன. அவள் மனம் காலஞ்சென்ற அவர்களின் தந்தை செங்கோடன் ஊர் மத்தியில்…. பெரிய ஆலமரத்தின் அடியில் அமர்ந்து பஞ்சாயத்துப் பேசிய காட்சியை நினைத்துப் பார்த்தது.
“அண்ணன் அப்படியே அய்யா மாதிரியே” தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.
“த பாருங்கய்யா… எந்தவொரு விஷயத்தையும் மேலோட்டமாப் பார்த்துத் தீர்மானிக்கக் கூடாது!… உலகத்துல நடக்கற ஒவ்வொரு நிகழ்வுக்குப் பின்னாலேயும் நிச்சயம் ஒரு நல்ல விஷயம் இருக்கும்!… அது ஒரு கெட்ட நிகழ்வாகவே இருந்தாலும் சரி!… ஏன்னா… அவனன்றி ஓரணுவும் அசையாதும்பாங்க!… அது நெஜம்!… இங்க நடக்குற எல்லாமுமே… அவனோட ஆசீர்வாதத்துலதான் நடக்குது…. அதனால அவன் படைச்ச உலகத்துக்கு… அவன் படைச்ச மனிதர்களுக்கு… ஜீவராசிகளுக்கு… அவனே தீங்கு செய்வானா?… மாட்டான்யா…!… உங்களை மாதிரி மேலோட்டமாப் பார்த்தா தீங்காத் தெரியும் சில விஷயங்களை நல்லா…. ஆழமா… நுட்பமா… ஞானத்தோட ஊன்றிப் பார்த்தா… நிச்சயமா அதுக்குள்ளார…. அதுக்குப் பின்னாடி ஏதாச்சும் நன்மையை மறைச்சு வெச்சிருப்பான் ஆண்டவன்!… இது சத்தியமான உண்மை”
தன் அண்ணன் ஆணித்தரமாய்ச் சொன்ன அந்தக் கருத்தை அங்கிருந்த பெரியவர்கள் யாரும் மறுத்துப் பேசாதது கண்டு ஆச்சரியமுற்றாள் அபிராமி.
“ம்ஹும்…இதை என்னால ஏத்துக்க முடியலைண்ணா”
“வெடுக்”கென்று அவள் அப்படிச் சொன்னது அங்கிருந்த பெரியவர்கள் பலரை முகம் சுளிக்க வைத்தது.
ஆனால், தேவராஜோ அதற்காகச் சிறிதும் கோபமுறாதவராய். “அடடே… பரவாயில்லையே… தங்கச்சி கூடத் தர்க்கத்துக்குத் தயாராயிடுச்சு” என்றார் புன்னகையோடு.
தான் பேசிவிட்ட பேச்சின் வீரியம் மெல்ல மெல்ல உரைக்க ஆரம்பிக்க, “அண்ணா… அது வந்து… தெரியாம… நான்… நீ… சொன்னதை… மறுத்துப் பேசி” கண் கலங்கி விட்டாள்.
அதுவரையில் அமைதியாய் கூடத்தில் அமர்ந்திருந்த அபிராமியின் கணவன் பரமசிவம், “ஏய்… புள்ள… உனக்கு ஏதாச்சும் கிறுக்குப் புடிச்சிருச்சா?… ம்… அண்ணன் பேச்சையே எதிர்த்து வாதம் பண்ணுறியா?… சும்மா உட்கார்ந்து கொட்டிக்கற திமிரா?” எழுந்து கத்தினான்.
“மாப்ள… மாப்ள… பொறுங்க…! இப்ப அவ என்ன சொல்லிட்டாள்ன்னு இப்படிக் குதிக்கறீங்க?… விவரம் புரியாததினால… கேட்கறா….. தப்பில்லையே…. அவளுக்குப் புரியற மாதிரி தெளிவாச் சொல்லிட்டாப் புரிஞ்சுட்டுப் போறா” என்ற தேவராஜ் தங்கை பக்கம் திரும்பி,
“சொல்லுடா ராசாத்தி… என்ன உன் சந்தேகம்?” பெருந்தன்மை பொங்கியது அவர் குரலில்.
“இல்லேண்ணா… இப்ப எங்க ஊருல பஞ்சமா பஞ்சம் தலை விரிச்சாடுது… ஜனங்க பட்டினில தவிச்சுப் போயி… நாலாப்பக்கமும் செதறி ஓடுறாங்க பொழப்பு தேடி”
“ஆமாம்….அது தெரியும்தானே”
“நீங்க இப்பத்தான் சொன்னீங்க… உலகத்துல நடக்கற எல்லா நிகழ்வுக்குப் பின்னாடியும் .. அது கெட்டதாகவே இருந்தாலும் சரி… அதுக்குப் பின்னாடியும் ஒரு நன்மை இருக்கும்னு… இந்தப் பஞ்சம்…பட்டினில… என்ன நன்மைண்ணா இருக்கும்?… இதுவும் ஆண்டவனோட இயக்கம்தானே?”
“சபாஷ்…சரியா கேட்டுப்புட்டா” சில பெரியவர்கள் உள்ளுர நினைத்துக் கொண்டனர்.
தங்கை கேட்ட அந்தக் கேள்வியில் அகமகிழ்ந்து போன தேவராஜ் மெலிதாய்ச் சிரித்தபடி கூட்டத்தினரைப் பார்த்து, “இதா வந்துடறேன்” என்று சொல்லி விட்டு வீட்டிற்குள் நடந்தார்.
சில நிமிடங்களில் பழைய செய்தித்தாள் கட்டை தூக்க முடியாமல் தூக்கி வந்து ‘தொப்” பென்று போட்டார். போட்ட வேகத்தில் தூசி பறந்தது. ஊர்ப் பெரியவர்கள் நெற்றி சுருக்கி யோசித்தனர்.
“இது கடந்த ஒரு வருஷத்துக்கான நியூஸ் பேப்பர்க…”
“சரி ஓய்… அதை எதுக்கு இங்க கொண்டாந்து போட்டு தூசி கிளப்புறீரு?”
“விஷயம் இருக்கு!”
“என் தங்கச்சி வாழப் போன முத்தேரி… ஊரைப் பற்றி உங்களுக்கெல்லாம் நல்லாத் தெரியும்… எப்பப் பார்த்தாலும் சாதி சண்டை…. அடிதடி…. குத்து வெட்டுன்னு…. எப்படியும் மாசத்துல ரெண்டு மூணு கொலையாவது விழுந்துடும்… ஆரம்பத்தில் நானே இவளை அந்த ஊருக்குக் கட்டிக் குடுக்கலாமா…. வேண்டாமா?…ன்னு கூட யோசிச்சேன்னா பார்த்துக்கங்க”
அவரது பீடிகை அங்கிருந்தோரின் பொறுமையை ஏகமாய்ச் சோதிக்க, ஆளாளுக்கு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“அதாவது… இவங்க ஊரு… நல்லா… செழிப்பா… பணக் கொழிப்பா இருந்த காலத்துல ஜனங்க நெறையச் சம்பாதிச்சாங்க… நெறையச் சாப்பிட்டாங்க… கொழுத்துப் போய் அந்தத் திமிர்ல ஆட்டம் போட்டாங்க…. சண்டைகள் வந்திட்டே இருந்திச்சு… அதனால கொலைகள் விழுந்திட்டே இருந்திச்சு…!… இப்ப?…. கடந்த ஆறு மாசமா ஒரு சின்னச் சண்டையும் இல்லே… கொலையும் விழலே… ஏன்?… பஞ்சம்… பட்டினி… அவனவன் சாப்பாட்டுக்கே சிங்கியடிக்கும் போது… எப்படி சண்ட சச்சரவுக்குப் போவானுக?… இன்னுஞ் சொல்லப் போனா இந்தப் பஞ்ச காலத்துல… எல்லா ஜனங்களும் முந்தி மாதிரி இல்லாம… ஒற்றுமையா…. ஒருத்தருக்கொருத்தர் அனுசரணையாக் கூட இருந்திருக்காங்க!.. நான் சொல்ற இந்தத் தகவலுக்கு இதோ இந்தப் பேப்பர்கள்தான் ஆதாரம்…. எடுத்துப் பாருங்க….ஆறு மாசத்துக்கு முந்தின பேப்பர்கள்ல எல்லாம் ஒரே வெட்டுக்குத்து… செய்திகள்!… அதே… ஆறு மாசத்துக்கு அப்புறம் வந்திருக்கற பேப்பர்கள்ல பாருங்க…. ஒரு எடத்துல கூட… மருந்துக்குக் கூட அந்த மாதிரிச் செய்திகள் இல்ல…!… இப்பப் புரிஞ்சுதா… இந்தப் பஞ்சத்திலும் உள்ள நல்ல விஷயம்….?”
பெரியவர்கள் எல்லோரும் “ஆஹா…ஆஹா…” என்று வாய் விட்டுப் பாராட்டிட, அபிராமி தன் அண்ணனின் காலடியில் கிடந்தாள்.
எழுத்தாளர் முகில் தினகரன் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings