in ,

ஊமை மனம் (சிறுகதை) – தி. வள்ளி, திருநெல்வேலி

எழுத்தாளர் வள்ளி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“அம்மா அம்மா …” என்று சற்று உசந்த குரலில் கூப்பிட்டபடியே உள்ளே வந்தான் கதிர்.

அவன் குரலில் இருந்த கோபம் மல்லிக்கு புரிந்தது …மகனை தாயறிய மாட்டாளா?

“என்னப்பா என்ன விஷயம்?”

“அம்மா நீ எதுவும் ரஞ்சிதாகிட்ட கேட்டியா..?”

புரியாமல் மகனை ஏறிட்டாள் மல்லி.

“அதாம்மா குழந்தை விஷயமா… அவ ஏன் மூட்அவுட்டா இருக்கா? நான் திரும்பத் திரும்ப இந்த விஷயத்தை பத்தி யாரும் கேக்காதீங்கன்னு சொல்றேன். குழந்தைங்கறது எங்க தனிப்பட்ட விஷயம். அதப் பத்தி யாரும் கேட்க வேண்டிய அவசியமில்லை. கொஞ்சம் கூட இங்கிதம் தெரியாதா?” கத்தினான்.

“இருப்பா கதிர் அவசரப்படாத.. ரஞ்சிகிட்ட யாருமே எதுவுமே கேட்கலையே. நாங்க யாருமே எதுவுமே சொல்லலப்பா. எனக்கு தெரியும் அதனுடைய வலியும் வேதனையும்.. நான் அனுபவிச்சிருக்கேன். அதனால ஒரு காலமும் அவளை ஒரு காயப்படுத்த மாட்டேன்” என்றாள் மல்லி. கதிர் அங்கிருந்து அகன்றாலும் மல்லியால் சகஜமாக முடியவில்லை.

அவள் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தது.

1970களின் பிற்பகுதி. கல்யாணமான ஒரு வருஷத்திலேயே, “ஏதும் விசேஷம் உண்டா?” என்று கேட்க ஆரம்பிக்கும் அந்த கால சமூகம். மூன்று வருடம் 5 வருடம் ஆகிவிட்டால்,  கேட்கவே வேண்டாம் நரக வேதனை தான்.

மல்லிக்கும், அரவிந்தனுக்கும் கல்யாணமாகி இரண்டு ஆண்டுகள் முடிந்து மூன்றாம் ஆண்டு தொடங்கியிருந்தது. அதற்குள் தான் எத்தனை கேள்வி?

மற்றவரை காயப்படுத்தும் என்ற இங்கிதம் தெரியாத இந்த சொந்தங்கள் முதலில் கேட்பது. “ஏதாவது விசேஷம் உண்டா?”. இந்தக் கேள்வியை சந்தித்து சந்தித்தே நொந்து போயிருந்தாள் மல்லி.

இத்தனைக்கும் அவள் புகுந்த வீட்டில் எந்த அழுத்தமும் கிடையாது. மாமியார், மாமனார் இதைப்பற்றி பேச மாட்டார்கள்.

இன்னும் சொல்லப்போனால் அவள் மாமியார், “நம்ம வீட்டிலேயே முதல் வருஷம் வரலைன்னா மூணு வருஷம் கழிச்சு தான் கிடைக்கும்” என்றே கூறுவார்.

ஆனால் மல்லியின் அம்மா, அப்பா ஏதேதோ ஜோசியர்களிடம் கேட்டு பரிகாரங்கள் செய்து கொண்டுதான் இருந்தார்கள். நாளைக்கு இந்த பிரச்சனையே விஸ்வரூபமெடுத்து விடக்கூடாது என்று.

பக்கத்தில் கிராமத்திற்கு வேலை விஷயமாக மாற்றலாக, பெரிய நிம்மதி மல்லிக்கு. சொந்தக்காரர் களிடமிருந்து தப்பித்து விட்டாள், ஆனால் எங்கே போனாலும் அந்த கேள்வி விடாமல் துரத்தியது.

மல்லியின் கணவர் அரவிந்தன் ஒரு மருத்துவர். ஒரு நாள் அரவிந்தன் வேலைக்கு போய்விட்டு வர, “மல்லி, மல்லி எங்க இருக்க “

புற வாசலில் சத்தமில்லாமல் சித்திரப்பாவையாய் அமர்ந்திருந்தாள் மல்லி. கண்கள் சிவந்து, உப்பியிருந்த முகத்தைப் பார்த்ததுமே கண்டுபிடித்து விட்டான் அரவிந்தன்.

“என்ன மல்லி அழுதியா? ஏன் முகமெல்லாம் இப்படி வீங்கி கிடக்குது? ஏன் இப்படி உட்கார்ந்திருக்க உள்ள வா”

“ஒன்னும் இல்ல போய் சாப்பிடுங்க. .நான் வீட்டுக்கு வெளியில, ஹால்ல படுத்துகிறேன். தலைக்கு குளிச்சிட்டு நாளைக்கு புழங்கிகிறேன்” என்றாள்.

“ஏன் மல்லி இப்படி நடந்துக்கிற? இப்ப நமக்கு என்ன வயசா ஆயிடுச்சு? ரெண்டு வருஷம் தானே ஆகுது கல்யாணமாகி”

“நீங்க ஒரு பொண்ணா இருந்தா தான் அதோட வலி தெரியும். இந்த மாசமாவது நிக்கும்னு நினைச்சேன், வந்துடுச்சு. கேட்கிறவங்களுக்கு பதில் சொல்ல முடியல. ஒவ்வொரு லெட்டர்லயும் இந்த மாசம் குளிச்சிட்டியானு கேட்டு எழுதுறாங்க” என்றவள் திரும்ப அழ ஆரம்பித்தாள். கடந்த ஒரு வருடமாக தினமும் ஒவ்வொரு மாதமும் நடக்கும் நிகழ்வு தான் இது.

அவன் வேலை பளுவுக்கிடையே சனி, ஞாயிறு அவளை வெளியே கூட்டிக்கொண்டு போவதில் தவறமாட்டான். அருகில் இருக்கும் ஊருக்கு சினிமா, கோயில் என்று போய் வருவார்கள்.

ஆனால் ஊரடங்கிய பொழுதில் அவர்கள் வீட்டிற்கு திரும்பும் போது அந்த கிராமத்துக்காரங்க, “டாக்டர் நல்ல மனுஷன் பாவம் புள்ள தான் இல்ல. பேரு சொல்ல ஒரு சிங்கக்குட்டி பொறந்தா எவ்வளவு நல்லா இருக்கும்” என்று ஆதங்கத்துடன் உண்மையான அன்புடன் தான் கூறுவார்கள்.

ஆனால் அது போதுமே மல்லிக்கு, பலூனில் ஊசி இறக்கியது போல பட்டென்று அவள் சந்தோஷமெல்லாம் காணாமல் போக சோகத்தில் ஆழ்ந்து விடுவாள்.

போதாக்குறைக்கு கிராமத்து பெரிய வீட்டு பெரியாச்சி இவர்களை விருந்துக்கு கூப்பிட்டு போகும்போது சும்மா இருக்காமல், “உங்க பேர் சொல்லவும் பிள்ளை வேணும்ல கூட ஒரு பொண்ண கட்டி போட வேண்டியதுதானே” என்று கேட்க, மல்லியை தேற்றுவதற்குள் அரவிந்தனுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.

“அவங்க படிப்பறிவில்லாதவங்க… அவங்க சொல்றத எல்லாம் ஏன் பெருசா நினைக்கிற மல்லி ..”

“அந்த இங்கிதம் தெரியாதவங்க வீட்டுக்கு இனிமே போக மாட்டேன்” என்றாள் மல்லி அழுகையின் நடுவே.

மேலும் சில மாதங்கள் கடக்க மல்லியின் கண்ணீரும் ஆற்றாமையும் கடவுளுக்கு கேட்டிருக்க வேண்டும். நாட்கள் முப்பதை கடந்து ஓட தினமும் தித்திக்கென்றது. நாள் நாற்பதாக… வந்த வாந்தியும் தலைசுற்றலும் நம்பிக்கையை கொடுத்தது.

மல்லி யோசித்தாள். மஞ்சள் காமாலை நோயை சிறுநீரில் சோறை போட்டு கண்டுபிடிக்கும் கிராம மக்கள் இதைக் கண்டுபிடித்து சொல்ல மாட்டார்களா? மெதுவாக மீனாட்சியிடம் கூற அவள் அந்த பாட்டியை அழைத்து வந்தாள்.

பாட்டி கையைப் பிடித்து விட்டு, “கர்ப்பநாடி ஓடுது மா” என்று கூற மகிழ்ச்சியில் திளைத்தனர் மல்லியும் அரவிந்தனும். லேடி டாக்டரிடம் அவளை கூட்டிப் போக துடித்தான். அதற்குள் அவர்களுக்கு சொந்த ஊருக்கு மாற்றலாக அந்த கிராமத்தை விட்டு கிளம்பினார்கள்.

“இந்த கிராமத்துக்கு வந்தவ வயிறு நிறைஞ்சி கிளம்புற” என்ற ஆசியோடு அவளை வார்த்தைகளால் வறுத்தெடுத்த சொந்தங்கள் வாயடைத்துப் போயினர்.

எந்த சொந்தங்கள் அவளை புண்படுத்தினார்களோ அவர்களே பின்னாளில், “தலை பிள்ளை ஆண் பிள்ளை பெத்திருக்க, நீதான் என் மகளுக்கு மணவடை சுற்றி விடனும்” என்று கல்யாணத்திற்கு அழைத்த போது அவள் கண்டிப்பாக மறுத்து விட்டாள்.

“ஏன் பெண்பிள்ளை பிறந்தவர்களோ.. குழந்தை இல்லாதவர்களோ.. சுற்றினால் குழந்தை பிறக்காமல் போய்விடுமா?” என்ற எண்ணம் மனதில் கோபமாக எழுந்ததன் விளைவில்

அவள் மாமியார், “நீ தலைப்புள்ள ஆம்பள புள்ள பெத்திருக்க.. ஏன் மாட்டேங்கற?’ என்று கேட்க

“எனக்கு நாள் சரியா இருக்காது” என்று மென்மையாக மறுத்து விட்டாள்.

அதுவும் அவள் பழகிய தோழி ஒருத்தி குழந்தை இல்லை என்ற சமூகத்தின் இங்கிதமற்ற கேள்விகளை சந்திக்க முடியாமல் தன்னையே தானே எரித்துக் கொண்ட போது அவள் மனது ரொம்பவே இறுகிப்போயிற்று.

இரண்டு ஆண் பிள்ளைகளுடன் வாழ்க்கை இன்று நன்றாக போய்க் கொண்டிருக்கிறது என்றாலும் அவளை உருக்குலைய வைத்த அந்த கேள்வியை அவள் மறக்க மாட்டாள். அன்று அவள் எடுத்த முடிவு இங்கிதமற்ற இந்த கேள்வியை இனி வாழ்நாளில் யாரிடமும் கேட்கக் கூடாது என்று, இன்று நாள் வரை அதை கடைபிடித்து வருகிறாள். அப்படிப்பட்டவள் மருமகளிடம் அந்த கேள்வியை கேட்பாளா/ கதிருக்கு இது புரிய வாய்ப்பில்லை…அவள் ஊமை மனம் அழுதது.

எழுத்தாளர் வள்ளி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பசுமரத்தாணிகள் (சிறுகதை) – முகில் தினகரன்

    சரண்யா எங்கே? (சிறுகதை) – கோபாலன் நாகநாதன்