எழுத்தாளர் சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
இனிமேல் இட்லிக்கு நீங்க மாவு அரைக்க வேண்டாம், இட்லி நல்லாவே இருக்க மாட்டேங்குது. இனிமேல் சுமதி மாவரைச்சிடுவா என மகன் குமார் தன்னுடைய அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
சரிப்பா நீ சொல்லிட்ட இல்ல இனிமேல் அரைக்கலப்பா என மனதில் வருத்தத்தோடு சொன்னாள் அம்மா.
30 வருஷமா மாவாட்டி இட்லி சுட்டு போட்டுக் கொண்டிருக்கிறேன், மனைவி வந்த பிறகு நான் மாவாட்டுவது இட்லி நல்லா இல்லையாம்.
இனி நீங்க இந்த வேலையை செய்யாதிங்க, அவ பார்த்துக் கொள்வான்னு சொன்னாலும் பரவாயில்லை. அத விட்டுட்டு நான் மாவாட்டுவது இட்லி நல்லா இல்லையாம். சரி பேசுற வரைக்கும் பேசட்டும். நாம பொறுத்து தான் போகணும். வீட்டில் பிரச்சனை எதற்கு? நமக்கு நம்முடைய கணவர் இருந்தால் நாம தனியா இருக்கலாம் என் மனதிலும் வருத்தத்தோடு அமர்ந்திருந்தாள் குமாரின் அம்மா.
அடுத்த நாள் காலை வழக்கம் போல எழுந்து வாசலைக் கூட்டி கோலம் போடுவதற்காக முன்பக்க கதவை திறந்தாள் குமாரின் தாய்.
கதவைத் திறந்து பார்த்தபோது வாசலைப் பெருக்கி கோலம் போடப்பட்டிருந்தது. திருமணமாகி மூன்று வருட காலத்தில் ஒரு நாளும் வாசலைக் கூட்டி கோலம் போட்டது கிடையாது. இன்றைக்கு என்னமோ அதிசயமா மருமக கோலம் போட்டு இருக்காளே மழை தான் வரும் என எதார்த்தமாக நினைத்து வீட்டின் உள்ளே வந்தாள் தாய்.
மகன் குமார் எழுந்து வந்தான். தன்னுடைய அம்மாவை பார்த்ததும் ஏன்மா, கொஞ்ச நேரம் படுத்து இருக்க வேண்டியதுதானே எனக் கேட்டான் மகன்.
நன்றாக விடிஞ்சு போச்சு டா, இப்ப போயி என்னைய தூங்குன்னு சொல்ற. உனக்கு என்ன ஆச்சு என்று கேட்டாள் தாய்.
இனிமேல் நீங்க காலையில எழுந்து வெளியே வர வேண்டாம். உங்க பாத்ரூமில் குளிச்சிட்டு மெதுவா வாங்க என்றான் மகன் குமார்.
சரிடா, அவளே எல்லா வேலைகளையும் பார்த்துக் கொள்கிறாளா என தாய் கேட்டதற்கு
ஆமாம் இனிமேல் அவளே பார்த்துக் கொள்கிறாளாம். நீங்க பாத்திரத்தை எல்லாம் விளக்கிட்டு, வீடு, வாசலை மட்டும் கூட்டிடுங்க. நான் வெளியே போனதுக்கு அப்புறம் இந்த வேலை எல்லாம் நீங்க பார்க்கலாம் என்றான் மகன்.
அப்பொழுது குமாரின் மனைவி கூப்பிட அவன் தன்னுடைய அறைக்கு சென்றான்.
அப்போது வெளியே கதவு தட்டும் சத்தம் கேட்டது. யார் என்று பார்க்க குமாரின் தாய் எழுந்து கதவைத் திறந்து வெளியே நின்று பார்க்க குப்பைக்காரன் வந்து கொண்டிருந்தான்.
தாய் வெளியே சென்று விட்டு வீட்டுக்குள் வந்ததை மகனும் மருமகளும் கவனிக்கவில்லை.
அப்போது மருமகள் சுமதி தன் கணவனிடம் காலையில் உங்க அம்மாவை வெளியில் வர வேண்டாம் என்று சொல்லி விட்டீர்களா? காலையில் எழுந்து முன்னாடி வந்து நின்றால் அன்றைய பொழுது நன்றாக விளங்கிடும் என சொல்லிக் கொண்டிருந்தாள் சுமதி.
நான் சொல்லிட்டேன், இனிமேல் அவர்கள் நான் ஆபீஸ் போனதுக்கப்புறம் தான் வருவார்கள் என மகன் சொல்வதை கேட்டு மனம் உடைந்து மனவலியோடு கண்ணில் கண்ணீரோடு தன்னுடைய அறைக்கு சென்று கதவை தாளிட்டுக் கொண்டு கண்ணீர் வற்றும் வரை அழுது கொண்டிருந்தாள் தாய்.
எழுத்தாளர் சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம் எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings