எழுத்தாளர் வள்ளி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
வீட்டில் எல்லோரும் கிளம்பிகிட்டிருந்தோம். இன்னைக்கு அண்ணனுக்கு சைக்கிள் வாங்க போறோம்.மாதவன் புது சைக்கிள் வாங்க போற சந்தோசத்துல குதிச்சுகிட்டிருந்தான்.அதை பார்த்து என் மனம் புழுங்கத்தான் செய்தது.
“அப்பா! எனக்கும் சைக்கிள்…” என்று ஆரம்பிக்க…
“அண்ணன் ப்ளஸ்டூ போனதும் இந்த சைக்கிள் உனக்குத்தானே” என்று ஒரேடியாக முடித்துவிட்டார்.
என் முக வாட்டத்தைப் பார்த்த அம்மா,” ஏங்க! சத்யா ரொம்ப நாளா வீடியோ கேம்ஸ் கேட்டுகிட்டிருக்கான். அவனுக்கு ஒன்னு வாங்கி கொடுங்க “என்று சிபாரிசு பண்ண…
“உன் அண்ணன் பையன் ஆதர்ஷ் தான் காலேஜ் போயிட்டானே! அவனோடத கேட்டு வாங்கி கொடு” என்றார் அப்பா.
எப்போதுமே வீட்டில் அண்ணன் உபயோகித்த பொருட்களே எனக்கு செகண்ட் ஹேண்டாக வந்து சேரும். போகப் போக அதுவே எனக்கு பழகிப் போச்சு அண்ணன் போட்ட டிரஸ், அவன் சாமான், அவன் படித்த புத்தகம், இவ்வளவு ஏன் ஷு கூட அவனதுதான்.இதோ காலேஜ் கடைசி வருஷம் வந்துவிட்டேன்.
அண்ணனுக்கு கல்யாணம் முடிந்து, அண்ணி நந்தினி வீட்டிற்கு வந்தாள். அவளும் நானும் ஒரே வயது என்றாலும், பேர் சொல்லி கூப்பிடக்கூடாது என்ற அப்பா உத்தரவால் “அண்ணி” என்றே அவளை அழைத்தேன்.
அவள் வந்த பிறகுதான் என் வாழ்க்கையில் ஒரு திருப்பம் வந்தது. அண்ணன் பழைய வாட்ச்சைக் கட்டிக்கொண்டு நான் காலேஜ் போவதைப் பார்த்தவள், என் பிறந்தநாளுக்கு அழகிய வாட்ச் பரிசளித்தாள். முதல் முதலில் அந்த வீட்டில் என் மனதை புரிந்து கொண்ட ஒரு ஜீவனாக அவள் எனக்கு தென்பட்டாள்.
ஒருமுறை அண்ணன் சில சட்டைகளை கொடுத்து “சத்யா! இந்த சட்டைகள் எனக்கு டைட்டாயிருக்கு… நீ யூஸ் பண்ணிக்கோ” என்றபோது….
நந்தினி,” இது என்னங்க நியாயம்? உங்களுக்கு வேணாம்ங்கருத உங்க தம்பிக்கு கொடுக்குறீங்க? உங்களுக்கு மனசு இருந்தா புதுசா 2. சட்டை வாங்கிக் கொடுங்க… இல்லேன்னா பேசாம இருங்க. நீங்க உபயோகப்படுத்துனதை அவரு உபயோகப்படுத்தனும்னு நினைக்கிறது தப்பு” என்றாள்.
“விடுங்க அண்ணி! புதுசா நான் எதையுமே இந்த வீட்ல உபயோகப்படுத்துனது இல்லை. எனக்கு பழகிப்போன ஒன்னுதான்”,
“தப்பு உங்க பேர்ல தான் தம்பி. உங்க விருப்பத்தை முதலிலேயே வெளியே சொல்லி உங்களுக்கு பிடிச்சதை அனுபவிச்சிருக்கனும். என் தங்கை கீதா இருக்காளே… அவ சரியான உஷார் பார்ட்டி. ஒருமுறை அப்பா எனக்கு புது வாட்ச் வாங்கிட்டு ,பழைய வாட்சை அவளை பயன்படுத்தச் சொன்னதற்கு பெரிய சண்டையே போட்டாள் .புதுசா வாங்கிக் கொடுத்தா கட்டுவேன் இல்லைன்னா வாட்ச் வேண்டாம்னு சொல்லிட்டா. அதிலிருந்து அப்பா எது வாங்கினாலும், ரெண்டு வாங்கிட்டு வருவாரு. அவளா நெனச்சா என் சாமான்களை உபயோகப்படுத்துவா. வேறு யாரும் சொன்னா தொடக்கூட மாட்டா.”
மாதவனுக்கு மட்டுமல்ல, அவன் அப்பாவுக்கும் தங்கள் தவறு புரிந்தது.
கல்லூரி முடித்து வேலைக்குப் போக ஆரம்பித்தேன். நந்தினி அண்ணி என்பதை விட, நல்ல தோழியாகவே மாறிப் போனாள்.என்னைப் போலவே அவளுக்கும் புத்தகமும், பாடும்,சினிமாவும் பொழுது போக்காக இருக்க, இருவரும் மணிக்கணக்காக பேசுவோம். முக்கியமாக நான் உபயோகிக்கும் பொருட்கள் அனைத்துமே புதிதாக மாறிப்போனது .மொத்தத்தில் பாலைவனமாக இருந்த மனதை சோலைவனமாக்கிவிட்டாள்.
அண்ணியின் தங்கை கீதாவுக்கு கல்யாணம். நாலு நாட்கள் முன்னதாகவே அண்ணியும் அண்ணனும் சென்று விட்டார்கள். நாங்கள் மூவரும் முதல் நாள் மாப்பிள்ளை அழைப்புக்குப் போனோம். மாப்பிள்ளை கார்த்திக் சிவப்பாக, அழகாக, வட இந்திய சினிமா ஸ்டார் போல இருந்தான். ‘கீதா கொடுத்து வைத்தவள்தான் நல்ல பொருத்தமான மாப்பிள்ளை’ என்று நினைத்துக்கொண்டேன்.
மறுநாள் அதிகாலை கதவு தட்டப்பட, வெளியே நந்தினி, பதட்டமாய்… “தம்பி! ஒரு முக்கியமான விஷயம். மாப்பிள்ளை வீட்டுக்காரங்க தங்கியிருக்கின்ற ரூம்ல ஏதோ சத்தமா சண்டை மாதிரி இருக்குது.”
“அண்ணி! அவங்களுக்குள்ள ஏதாவது பிரச்சனையா இருக்கும். நாம போயி ஏன் தலையிடணும்?”
“தம்பி! தெரியாம பேசுறீங்க! மாப்பிள்ளையை காணும் போல… தேடிட்டு இருக்காங்க. விசாரிச்சுட்டு வந்து சொல்லமுடியுமா? ஐயோ! அப்பா, அம்மாக்கு தெரிஞ்சா உயிரை விட்டுருவாங்க”
“பதறாதீங்க அண்ணி! நான் போய் கேட்டுட்டு வரேன்.” நான் போய் மாப்பிள்ளையின் அண்ணனை தனியாக கூப்பிட்டு விசாரிக்க…
” ரிசப்ஷன் போதே அவன் ஏதோ பதட்டமாய் இருந்த மாதிரி தோணுச்சு..என்ன ஆச்சுன்னு… எங்க போனான்னு ஒன்னுமே புரியலை” என்றார் பதட்டத்தோடு.
நான் மாப்பிள்ளையின் ரூமை பரபரவென்று அலச…நான் நினைத்தது போலவே ஒரு கடிதம் கண்ணில்பட்டது. “மன்னியுங்கள்! திருநீர்மலையில் இன்று காலை எனக்கு திருமணம், நான் காதலித்த பெண்ணோடு” கடிதம் இடியாய் இறங்கியது இரு வீட்டாரிடமும்.
கீதாவும், நந்தினியும் சிலையாய் உறைந்து போக, அவள் அப்பாவும் அம்மாவும் கதறினர் “என் பொண்ணு மணமேடை வரைக்கும் வந்துட்டு கல்யாணம் நின்னு போனா, ராசியில்லாத பொண்ணுன்னு ஊர் பேசுமே” என்று அழுதனர்.
சட்டென்று அவர்கள் அழுகை மனதைப் பிசைய…” அண்ணி ப்ளீஸ் யாரும் அழாதீங்க! கண்டிப்பா அந்த கல்யாணம் நடக்கும். நான் கீதாவை கல்யாணம் பண்ணிக்கிறேன்… அவளுக்கு ஆட்சேபனை இல்லைனா…” என்றேன்.
“தம்பி! உண்மையாகத்தான் சொல்றீங்களா? கீதாவை கல்யாணம் பண்ணி இருக்கீங்களா? “
“ஆமாம் அண்ணி! நல்லா யோசிச்சு தான் சொல்றேன். ஆனா முடிவை கீதா எடுக்கட்டும்.”
கீதா கண்ணீரைத் துடைத்து விட்டு முன்னே வந்தவள் ..
“அக்கா நீ கேட்கிறது உனக்கே நியாயமா இருக்கா? அவரோட மனச நல்லா புரிஞ்சுகிட்டவ நீ! இன்விடேஷன்ல இருந்து வாசல்ல இருக்கிற பிளக்ஸ் போர்டு வரைக்கும்’ கார்த்திக்’ வெட்ஸ் ‘கீதப்பிரியா’ ன்னு போட்டுட்டு, இன்னைக்கு அந்த கோழை ஓடிப்போனதும், இவர மாப்பிள்ளையாக்க நினைக்கிறீங்க…அவர் என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றது அவருடைய பெருந்தன்மை. அதை பயன்படுத்த நினைப்பது என்ன நியாயம்?.அவருக்கென ஒரு கனவு இருக்கும். அவர் பெண் பார்த்து… சம்மதம் சொல்லி… இன்விடேஷன் அடிச்சு… அவளோடு தன் கனவுகளை பகிர்ந்து… சந்தோஷமா மணமேடையில் உட்கார்ரது எப்படி… அவசர தாலி கட்டுவது எப்படி… அவருக்கு மனைவியும் செகண்ட் ஹேண்ட்டாக வேண்டாம்” என்றாள் கண்ணீரோடு.
“கீதா! நீ சொல்றது உண்மை தாண்டி. நான் ஏதோ உணர்ச்சிவசப்பட்டு கேட்டுட்டேன். நம்முடைய கஷ்டம் நம்மோட. அத அவர் தலையில சுமத்துறது தப்பு” என்றாள் நந்தினி ..
“அண்ணி.. கீதா… நீங்க ரெண்டு பேரும் நல்லவங்க. அதனாலதான் இப்படி பேசுறீங்க ..கீதா நீ உன்ன செகண்ட் ஹேண்ட்ன்னு சொல்றது தவறு… நான் மிஸ் பண்ண பொருள்கள் மாதிரி இல்ல நீ… உயிரும் உணர்வும் உள்ள ஒரு பெண்… இன்று நடந்த நிகழ்வில் உன்னுடைய தவறு எதுவுமே இல்லை.நான் இப்போது விவரமறிந்தவன். மெச்சுருட்டி உள்ளவன்.நான் மிஸ் பண்ணுனது சின்ன சின்ன சந்தோசங்கள். இப்ப இருக்கிற சூழ்நிலையில் நான் உன்ன கல்யாணம் செஞ்சுகிட்டா, அது எனக்கு மிகப்பெரிய மன திருப்தியையும், நிம்மதியையும், கொடுக்கும். அதை எனக்கு நீ கொடுப்பியா கீதா” என்றான்.
பதில் பேசத் தோன்றாமல் கண்ணீரோடு அவன் பாதங்களில் விழுந்தவளை, அன்புடன் தூக்கி அணைத்துக் கொண்டான் சத்யா.
‘கார்த்திக் போல ஒரு பெண்ணின் உணர்வுகளைப் பற்றி கவலைப்படாமல், சுயநலமாக முடிவு எடுக்கும் உலகில்தான், தியாக உள்ளம் கொண்ட சத்யாக்களும் இருக்கிறார்கள்..’ என்று நந்தினி நினைத்துக்கொண்டாள்.
எழுத்தாளர் வள்ளி எழுதிய மற்ற சிறுகதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings