2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“இன்னிக்கு நம்ம ஆஃபீஸூக்கு ஒரு புதுக் கிளி வருது சார்!” என்றான் காமராஜ்.
“ஆமாமா! நானும் ஆர்டர பார்த்தேன். நியூ அப்பாய்ன்மெண்ட்டாமே! ரொம்பப் புதுசு தான் போல!” என்றான் நாகலிங்கம்.
“என்ன வேணா பாருங்க. ஃபர்ஸ்ட் தள்ளிட்டுப் போப்போறது ஐயாதான்!” என்றான் மாலிக்.
“பார்க்கலாம் பாக்கலாம்” என்றான் நாகலிங்கம்.
இதனால இவங்கல்லாம் இளைஞர்கள்னு நினைச்சிடாதீங்க. காமராஜூக்கு கல்லூரியில் பயிலும் பெண் இருக்கிறாள். நாகலிங்கம் அடுத்த வருஷம் பணியிலிருந்து ஓய்வு பெறப் போகிறார். மாலிக்கிற்கு ஏற்கெனவே இரண்டு மனைவிகள்.
அலுவலகத்தினுள் நுழைந்தாள் சித்ரா. “வாங்க! வாங்க! நீங்கதானே சித்ரா” என்றான் மாலிக்.
“எஸ் ஸர். குட் மார்னிங் ஸர்!” என்றாள் சித்ரா.
“குட் மார்னிங்!” என்றார்கள் மூவரும்.
“இங்க வந்து உக்காருங்க!” என்றார் நாகலிங்கம். அவருக்கு எதிரிலிருந்த இருக்கையை காட்டி.
“தேங்க் யூ ஸர்!” என்றவாறே அமர்ந்தாள். அவளுடைய படிப்பு, இதற்குமுன் பார்த்த வேலை, குடும்பம் என அவளுடைய வரலாறு மொத்தத்தையும் விசாரித்தார்கள்.
“ஜாய்னிங் ரிப்போர்ட் கொடுத்துட்டு வந்துட்றேனே” என்று எழுந்தாள்.
“10.16க்குத்தான் அமிர்த யோகம் ஆரம்பிக்றது. அப்போ கொடுத்துக்கலாம். நீங்க உட்காருங்கோ. டைப்பிஸ்ட ரெடி பண்ண சொல்றேன்” என்றவாறே “சங்கரி! மேடம்க்கு ஜாய்னிங் ரிப்போர்ட் ரெடி பண்ணு” என்றார் நாகலிங்கம்.
கடிதத்தை தயார் செய்து கையெழுத்திட்டு உயரதிகாரியிடம் கொடுத்துவிட்டு இவள் இருக்கையில் வந்து அமர்ந்தவுடன், காமராஜ் எதிரில் வந்து அமர்ந்தான். அவ்வலுவலகம் குறித்த எல்லா விவரங்களையும் சிரித்தவாறே சொல்லிக் கொடுத்தான்.
மதியம், “சாப்பிடப் போறோம் வர்றீங்களா?” என்று கேட்டான் மாலிக். “இல்ல ஸர். சாப்பாடு எடுத்துட்டு வந்துட்டேன். இங்கியே சாப்டுக்றேன்” என்றாள்.
சாப்பிடும் போது, “ஆள் கருப்புதான். ஆனா ஸ்ட்ரக்சர் செமயா இருக்குல்ல?” என்றான் காமராஜ். “கல்யாணமாகி குழந்தை பெத்தவ மாதிரியே இல்லையே” என்றான் மாலிக். அதற்குமேல் அவர்கள் பேசின விஷயங்கள் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டியவை.
மாலை மீண்டும் காமராஜ் அவளெதிரில் வந்து அமர்ந்து கொண்டு, “வீட்டுக்கு எப்படி போவீங்க?” என்றான்.
“பஸ்லதான் ஸர் போணும். ட்ரெயின் வசதி இல்லையே!” என்றாள்.
“ரொம்ப தூரமாச்சே. ரெண்டு, மூணு பஸ் மாறணுமே!” என்றான்.
“ஆமா ஸர். என்ன பண்றது?” என்றாள்.
“எங்கூட வேணா பைக்ல வாங்களேன். சென்ட்ரல்ல ட்ரெயின் ஏத்தி விட்றேன். ஈஸியா இருக்குமே” என்றான்.
“உங்களுக்கு ஏன் ஸ்ரமம்? நான் போய்க்கிறேன்” என்றாள்.
“ஒரு சிரமமும் இல்ல. எனக்கு போற வழிதான்” என்றான்.
சீக்கிரம் வீட்டுக்குப் போகலாமே, வழியில் இறங்குவதில் என்ன தவறென்று எண்ணி, “ஓ.கே. ஸர். தேங்க் யூ!” என்றாள்.
நெருங்கிய நண்பர்களுக்குள் தேங்க்ஸ்லாம் சொல்லக்கூடாது என்றான்.
‘எப்போ நெருங்கினோம்?’ என்று ஆச்சரியப்பட்டு, “என் பையனா இருந்தாக்கூட சொல்லுவேன் ஸர், பழக்கதோஷம்” என்றாள்.
இவள் நடக்கவும், இவளுக்கு பின்னாலிருந்து மற்ற இருவரையும் பார்த்து பெருவிரல் உயர்த்திக் காண்பித்தான். அவர்கள் இருவர் முகத்திலும் எள்ளும், கொள்ளும் வெடித்தது.
போகும் வழியெங்கும் அவன் வாயில் வந்ததெல்லாம், அவளுக்கு இவனோடு தொடர்பு, இவனுக்கு அவளோடு தொடர்பு போன்ற காமக் கதைகள்தான்.
“அப்படியெல்லாம் இருக்காது ஸர். சும்மா மத்தவங்கள பத்தி எதையாவது பேசக்கூடாது“ என்றாள்.
அதன் பின்பு நாகலிங்கம் இவளிடம், “சீனியர்னா விஷ் பண்றது கிடையாதா“,“மரியாதை தெரியாதா?“ என எரிந்து விழுவதும், மேலதிகாரியிடம் ஏதேனும் பழி போட்டு இவளை அழ வைப்பதும் வாடிக்கையானது.
ஒரு நாள் மாலிக் இவள் பின்னிருந்து, “என்ன அழகு, எத்தனை அழகு…“ எனப் பாடினான்.
“ஏன் ஸர், எத்தனையோ கலரான பொண்ணுங்கல்லாம் இருக்காங்க. என்கிட்ட வந்து பாடறீங்களே?“ எனக் கேட்டாள்.
“கலர் யாருக்கு வேணும்? பின்னாடி இருந்து பாக்க, ஸ்ட்ரக்சர் சும்மா எப்டி இருக்கு தெரியும்ல? “ என்றான்.
“எனக்கு கல்யாணமாகி குழந்தை இருக்கு தெரியும்ல?“ என்றாள்.
“அதுலதான் ரிஸ்க் கம்மி“ என்றான் மாலிக்.
“சிரிக்கிறா… க்ளிக் ஆய்டும்னு சொல்றான்“ என்றான் காமராஜ்.
“நான் சிரிக்கல. அப்டியேயிருந்தாலும், சிரிக்கறது என்னோட இன்டிவிஜூவல் ரைட். சிரிச்சாலே விழுந்துடுவான்னு தேவையில்லாம ட்ரை பண்ணாதீங்க“ என்றாள்.
“நாங்க வேடர்கள். நீங்க புறாக்கள். விழற வரை ட்ரை பண்ணுவோம்“ என்றான் மாலிக். மிகப்பெரிய நகைச்சுவைபோல் இருவரும் சிரித்துக் கொண்டனர்.
“வேடர்களைக் கேவலப்படுத்தாதீங்க. அவங்க மனுஷங்கள வேட்டையாட்றதில்ல“ என்றாள்.
“தட்டுங்கள் திறக்கப்படும்னு சொல்லிருக்காங்கல்ல. திறக்கும்வரை தட்டுவோம்“ என்றான் காமராஜ். மீண்டும் சிரிப்பு.
“அடப்பாவிகளா. கடவுள் வேண்டுதலுக்கு சொன்னத காமவேட்டைக்கு யூஸ் பண்றீங்களே!“ என்றாள். அதற்கும் சிரித்தார்கள்.
“நீங்க கெக்கேபிக்கேனு சிரிக்கறதுக்கு நாங்க ஏதாவது சொல்றமா? நீங்க மட்டும் பொம்பள சிரிச்சா போச்சுங்றீங்களே?” என்றாள்.
“ஆம்பளைங்க டிசைனே அப்டிதாம்மா!” என்றார்கள். மீண்டும் சிரிப்பு.
“உங்க வீட்லயும் அக்கா, தங்கச்சி, பொண்ணுங்கள்லாம் இருக்காங்கள்ல” என்றாள்.
“எல்லாரையும் அக்கா, தங்கச்சியா, பொண்ணா நினைச்சா மத்ததுக்கெல்லாம் என்ன பண்றது?“ என்றான் காமராஜ்.
“பொண்டாட்டி இருக்காங்கள்ல. அதுவும் இல்லண்ணா அதுக்குண்ணே தொழில் பண்றவங்க இருக்காங்கள்ல. அதக்கூட ஓரளவு ஏத்துக்கலாம். அடுத்தவங்கள ஏன் தொல்ல பண்றீங்க? “ என்றாள்.
“எங்களுக்குப் பிடிக்கணும்ல“ என்றான் மாலிக்.
“உங்களல்லாம் திருத்த முடியாது. காலம்தான் பதில் சொல்லணும்” என்று கூறிவிட்டு, நீங்க என்ன வேணா ட்ரை பண்ணுங்க, விடியவிடிய தட்டிட்டேயிருங்க. ‘நான் கழுவற மீன்ல நழுவற மீனுன்னு பேரெடுத்தவ. உங்க வலையெல்லாம் கிழிச்சிட்டு போயிட்டேயிருப்பேன்’ என்றெண்ணியவாறு நகர்ந்தாள்.
மாலிக்கின் வீட்டில்: பத்தாவது படிக்கும் அவன் மகள் உடல் நடுநடுங்க கண்ணீர் அருவியாய்ச் சொரிய வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். முகம் பேயறைந்ததுபோல் இருந்தது. என்னவென்று விசாரித்தால், கூட்டம் நிறைந்த பேருந்தில் எந்த மிருகமோ திடீரென, அவன் தாயிடம் பால் குடித்ததை மறந்து, பிடித்தமுக்க அதிர்ச்சியடைந்து கத்தவும் முடியாமல், எதிர்க்கவும் தெரியாமல் பேருந்து நிறுத்தத்திலேயே அழுதுகொண்டிருந்திருக்கிறாள்.
பக்கத்து வீட்டுக்காரம்மா பார்த்து வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார். மாலிக்கின் இரத்தம் கொதிக்க, “யாரந்த மிருகம்? அவன் வீட்ல பொம்பளைங்களே இல்லையா?” எனத் துள்ளுகிறான்.
நாகலிங்கத்தின் வீட்டில்: புகுந்த வீட்டிலிருந்து அவர் மகள் அழுது கொண்டுவர விசாரித்தால், மாமனார் இவள் குளிக்கும் போதும், உடை மாற்றும் போதும் எட்டிப் பார்ப்பதும், ‘சாப்பாடு கேட்கிறேன்’ என்று சமையலறைக்கு வந்து இவள் பின்னால் உரசிக் கொண்டு, காதோரம் மூச்சு விடுவதும், குடிந்தையை வாங்கும் சாக்கில், கைகளால் உரசுவதுமாக சில்மிஷம் செய்வது தொடர, கணவனிடம் சொன்னால், “வயதானவர் மேல் வீண் பழி போடாதே” என்கிறானாம்.
நாகலிங்கத்தின் இரத்தம் கொதிக்க, “கெழட்டுப் பயலுக்கு சின்னப் பொண்ணு கேட்குதா? அவன வெட்டிப் போட்டுட்றேன்” என்கிறான்.
காமராஜ் வீட்டில்: தாய்க்கும் மகளுக்கும் ஏதோ அடிதடியும், அழுகையுமாக பிரச்சினை ஓடிக் கொண்டிருந்தது. என்னவென்று விசாரித்தபோது மகள் கர்ப்பமெனத் தெரிந்தது. காரணம் யாரென்று விசாரித்தால் கல்லூரி வாத்தியாராம். சரி பேசி முடிக்கலாமென்று போனால் இவனை விட வயதான வழுக்கைத்தலையன்.
“என்ன திமிரு இருந்தா, இப்டி பண்ணுவ?” என்றான் காமராஜ்.
“உன் பொண்ணு வலிய வந்தா. நான் என்ன பண்ணுவேன்?“ என்கிறான் வாத்தி.
காமராஜின் இரத்தம் கொதிக்க, “அடப்பாவி, உனக்கும் ஒரு பொண்ணு இருக்குள்ல?“ எனக் கேட்டபடி அடிக்கப் பாய்கிறான்.
அவன் கையைப் பிடித்து நிறுத்தி, “எல்லாரையும் பொண்ணா நினைக்க முடியுமா? உன்னப் பத்தியும் உன் பொண்ணு எல்லாம் சொல்லிருக்கா. நீயும் தப்பு பண்ணிட்டு அப்பப்போ பொண்டாட்டிட்ட மாட்டிப்பியாமே?. ஆம்பளைங்க டிசைனே அப்டித்தானே!” என்கிறான் வாத்தி.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings