2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
‘ பெஞ்ச் டிக்கட்டுதாம்ப்பா… ‘
அடுப்படியில் வேலையாய் இருந்த மாரியம்மாளுக்கு வெளியே இருந்து அந்த சத்தம் கேட்டதும், உடனே ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள். ராமசாமி அங்கே நின்றிருந்தார். அவரது நண்பன் மாடசாமி அவரைப் பார்த்து சிரித்தபடி கேட்டைத் திறந்து வெளியே போய்க்கொண்டிருந்தான்.
‘ பெஞ்ச் டிக்கட் என்றால்… தியேட்டர் சம்பந்தமாக பேசியிருப்பாரோ…. அப்படியென்றால் இவர் சினிமாவுக்கு ஏதும் போகப் போகிறாரோ… பெஞ்ச் டிக்கட் வாங்கச் சொல்லி தனது நண்பரிடம் சொல்லியிருப்பாரோ… ’ யோசனை பலவாறு ஓடியது மாரியம்மாளுக்கு.
சினிமா என்றதும் திடீரென்று அந்த சம்பவம் நினைவில் வந்து நின்றது. இரண்டு வீடுகள் தள்ளி குடியிருக்கும் செல்லாத்தாள், எட்டாவது படிக்கும் தனது பிள்ளையை நேற்று போட்டு அடி அடியென்று அடித்துக் கொண்டிருந்தாள். விசாரித்ததில்தான் தெரிந்தது, உள்ளூர் சினிமா கொட்டகையில் ஒரு பலான படம் போட்டிருக்கிறார்களாம், அவன் தனது கூட்டாளிகளுடன் அந்தப் படத்திற்கு போயிருந்தானாம்.
விஷயம் தெரிந்துபோய், ‘ படிக்கிற வயதில் இந்தமாதிரி படத்தையெல்லாம் பார்த்தால் எப்படிடா உருப்படுவாய் ‘ என்று சொல்லி குச்சியால் விளாசி இருக்கிறாள் செல்லாத்தாள். அவன் எதுவுமே பேசாமல் நெளிந்து நெளிந்து மட்டும் கொடுத்துக்கொண்டிருந்தான்.
இப்போது அந்த நினைவுகள் வர, இவரும் அந்தப் படத்திற்குதான் போகப் போகிறாரோ என்று நினைத்ததும், திகீரென்றது.
‘ இவருக்கு ஏன் ‘ இந்த புத்தி ‘‘ என்று தனக்குள் கேட்டுக் கொண்டதுடன் நிற்காமல், ‘ இதை இப்படியே விடக் கூடாது ‘ என்று நினைத்தவளாய், மெல்ல வெளியே வந்தாள். தேங்காய் கொப்பரை மூட்டைகள் நேற்று பெய்த மழையின் சாரல் பட்டு லேசாக நமத்துப் போயிருந்ததால் வெயிலில் காய வைப்பதற்காக வாசலுக்கு மாற்றிக்கொண்டிருந்தார்.
‘ ஏங்க… என்னவோ பெஞ்ச் டிக்கட்னு சொல்லிக்கிட்டிருந்தீங்களே… என்னங்க அது…’ என்று எதேச்சையாய் கேட்பது போல இழுத்தாள். போட்டுத்தானே வாங்கவேண்டும்.
கொஞ்சம் தடுமாறிய ராமசாமி, ‘ ஓ அதுவா… மாடசாமி படம் பார்க்கப் போறது பத்தி பேசிட்டிருந்தான். தரை டிக்கட்டுல போயி உட்காரதடா, பெஞ்ச் டிக்கெட் எடுத்துக்கடானு சொன்னேன்… அதான் உன் காதுல விழுந்திருச்சு போல… ‘ என்று சொல்லி சிரித்தார்.
‘அதானே பார்த்தேன்… நான்கூட நீங்கதான் படத்துக்குப் போறீங்களோனு நினைச்சுட்டேன்…‘ என்றவள், ‘நான்கூட கேள்விப்பட்டேன். படத்துல அசிங்க அசிங்கமால்லாம் சீன் வருதாம். அந்த மாதிரி படத்தையெல்லாம் ஏன் கொட்டகையில ஓடவிடறீங்க. ஊருக்குள்ளே இருக்கறதே ஒரு கொட்டகை. இந்தமாதிரி படத்தையெல்லாம் நம்ம பசங்க பார்த்தா கெட்டுப் போகமாட்டான்களா… நீங்கள்லாம் பெரிய மனுஷன்னு எதுக்கு இருக்கீங்க… நாலு பேரு சேர்ந்து போயி அதை தியேட்டர்லேர்ந்து தூக்கச் சொல்லக்கூடாதா….’ என்று கோபத்துடன் சொல்லிவிட்டு அவரைப் பார்த்தாள்.
‘சரி… சரி… போறோம்…‘ என்றுவிட்டு மூட்டைகளைத் தூக்கித் தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தார் அவர். அந்த நேரம் பார்த்து ரெங்கன் ஓடிவந்தான்.
‘ அண்ணே… பெரியவரு உங்களை கூட்டிட்டு வரச் சொன்னாருங்க…’
‘ என்னடா விஷயம்…’
‘ ஏதோ பஞ்சாயத்தாம். உங்களை கூட்டிட்டு வரச் சொன்னாருங்க, வாங்க அண்ணே…’
‘ எத்தனை மணிக்குடா…’
‘உடனே வரச்சொன்னாங்கண்ணே… நான் கிளம்பறேன், மாடசாமி அண்ணன் வீட்டுக்கும் போய் சொல்லணுமே… ’
‘சரி சரி…கிளம்பு இதோ குளிச்சிட்டு வந்துடறேன்… ‘ என்று அவனை அனுப்பிவிட்டு, மனைவியைப் பார்த்து, ‘மாரியம்மா, கொப்பரையில தண்ணி பிடிச்சு வை, குளிச்சுட்டு பஞ்சாயத்துக்கு கிளம்பனும்… ’ என்றபடி தனது ஜிப்பாவை கழற்றி கொக்கியில் தொங்க விட்டுவிட்டு நகர்ந்தார். அவளும் உடனே கொப்பரையில் தண்ணீர் நிரப்ப ஓடினாள்.
ராமசாமி குளித்துவிட்டு பஞ்சாயத்துக்கு கிளம்பியவுடன் துணிமணிகளை துவைத்து விட்டு தானும் குளிக்கலாம் என்றெண்ணியபடி துணிமணிகளைப் பொறுக்கப்போனாள். கொக்கியில் தொங்கிய அவரது ஜிப்பாவையும் எடுத்தாள். அப்போது அதிலிருந்து இரண்டு துண்டு சீட்டுகள் கீழே விழுந்தன. குனிந்து எடுத்துப் பார்த்தாள்.
அவை நேற்றைய தேதியிட்ட சினிமாவுக்கான இரண்டு பெஞ்ச் டிக்கட்கள்.
பின்குறிப்பு: இளையதலைமுறைக்கு இது புதிதாக தோன்றலாம். அந்தக் காலத்தில் சினிமா கொட்டகைதான் இருக்கும். முன்பக்கம் தரை டிக்கெட், நடுவே பென்ச் டிக்கெட். பின்பக்கம் நாற்காலி.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
ஐம்பதிலும் ஆசை வரும்.
ஹஹஹா….