in ,

எல்லாமே வயித்துக்குத் தாண்டா (சிறுகதை) – பானுமதி பார்த்தசாரதி

 2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

செண்பாவுடன் ஏதோ சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தாள் ராஜி. அப்போது அவள் அம்மாவிடமிருந்து போன். செண்பா அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண். ராஜி அவளுடன் பேசிக் கொண்டே வாழைப்பூவில் உள்ள கள்ளனை சுத்தம் செய்து கொண்டிருந்தாள்.

“ஒரு நிமிடம் செண்பா. அம்மாவிடமிருந்து தான் போன். நான் பேசிக் கொண்டு இருந்தாலும் நீ இதை சுத்தம் செய்” என்று உத்தரவு கொடுத்து விட்டு தன் செல்போனுடன் அவளுடைய அறைக்கு சென்றாள்.

“நான்தான் நாளை அங்கு வருகிறேனே! உன்னுடன் வந்தும் ஒரு வாரம் இருக்கப் போகிறேன். அதற்குள் என்னம்மா போன்?” என்று நொந்து கொண்டாள் மகள்.

இருவரும் சென்னைக்குள்ளேயே தான் இருக்கிறார்கள். அம்மா பெரம்பூரில் தன் கணவருடன் இருக்கிறாள். வயதான ஹனிமூன் தம்பதிகள் என்று மகளே கிண்டல் செய்வாள். மகள் பெசன்ட் நகரில் தன் கணவருடனும், மாமியார், மாமனார், மச்சினர் என்று ஒரு கூட்டுக் குடும்பத்தில் சந்தோஷமாக இருக்கிறாள்.

“ஏய் ராஜி, அம்மாவிடம் வருவதற்கு ஏன் நொந்து கொள்கிறாய்?”

“ஆமாம்! அங்கே வந்தால் ரொம்ப போர். என்னைப் பார்த்தவுடன் உன் வீட்டில் வேலை செய்யும் பெண் லீவ் போட்டு விடுவாள். அப்பா எப்போதும் நியூஸ் பேப்பர் படித்துக் கொண்டிருப்பார். இல்லை, நியூஸ் சேனல் பார்த்துக் கொண்டிருப்பார். நீயோ எனக்கு உதவி செய்வது போல் டிராமா செய்து கொண்டு டி.வி.ஷோ பார்த்துக் கொண்டிருப்பாய். நான் தான் பாத்திரம் தேய்ப்பது முதல் எல்லா மேல் வேலையும் செய்ய வேண்டும்” என்று புலம்பினாள் ராஜி.

அந்த நேரத்தில் விளக்குமாற்றைத் தூக்கிக் கொண்டு வந்தாள்  கடமை தவறாத செண்பா. ஒரு நாள் கூட மட்டம் போடமாட்டாள். அவளுக்கென்று ஒதுக்கப்பட்ட வேலைகளை செய்வதோடு யார் என்ன வேலை சொன்னாலும் செய்வாள்.

காலையில் இரண்டு மணி நேரம், மாலையில் இரண்டு மணி நேரம் தான் அவள் வேலை செய்ய வேண்டிய நேரம். ஆனால் அவள் வீட்டில் ஒரு மெம்பர் மாதிரி தான் இருந்தாள். அம்மாவுடன் சேர்ந்து எல்லா டிவி நிகழ்ச்சிகளையும் விடாமல் பார்த்து எல்லோர் நடிப்பைப் பற்றியும் கமென்ட்ஸ் வேறு அடிப்பாள். நடித்தும் காட்டுவாள்.

ஆனால் இவ்வளவு வேலைக்கும் என் மாமியார் குறைந்த சம்பளம் தான் தருகிறார்கள். இவர்களும் கொடுக்க மாட்டார்கள். செண்பாவும் கேட்க மாட்டாள்.

வீட்டில் மொத்த உறுப்பினர்கள், என் மாமியார் மாமனார், கணவர், குழந்தை, மச்சினர் குழந்தைகளையும் சேர்த்து மொத்தம் பத்து பேர், இதில் அவ்வப்போது வந்து போகும் விருந்தினர்கள் என் நாத்தனாரும், அவள் குடும்பமும். ஆனாலும் அவள் அவ்வளவு வேலைகளையும் முகம் சுளிக்காமல் செய்வாள்.

இப்போது கூட என் அத்தை “ஏ செண்பா” என்றவுடன் துள்ளி குதித்து ஓடினாள் இந்த செண்பகா.

‘இதன் ரகசியம் என்ன?’ என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று என் மூளையில் நமைச்சல் எடுத்தது . இதை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று அகஸ்மாத்தாய் போவது போல் நானும் அவள் பின்னால் போனேன்.

என் அத்தை, மதியம் நாங்கள் எல்லோரும் சாப்பிட்டது போக மிச்சம் இருக்கும் சாதத்தை அப்படியே அவளிடம் கொடுத்து விட்டார்கள். அதில் அவளுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் வேறு.

“இங்கே பாரு செண்பா, இந்த சாதத்தை இரவு சூடுபடுத்திக் கொடு. உனக்கும் குழந்தைகளுக்கும் இது போதும். வத்தக்குழம்பு கொஞ்சம் தருகிறேன். பொரியல் செய்த காய்களில் நிறைய தேங்காய் போட்டிருப்பதால் அதை இந்த வீட்டில் யாரும் இரவில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதனால் இந்த காய்ப் பொரியலையும்  எடுத்துக் கொண்டு போ” என்று அவளிடம் கூறினார் என் அத்தை. 

இப்படி அவளிடம் சாப்பாடு கொடுப்பதால் அவள் ஒட்டு மொத்த குடும்பத்தை அன்று இரவு பசி ஆற்றியதோடு அவளுக்கு ஓய்வு கொடுத்தது போலவும் ஆயிற்று என்று கூறினார்.

ராஜி, பெரம்பூருக்கு அம்மாவிடம் போகும் நாளும் வந்தது. தன் காரை அவளே ஓட்டிக் கொண்டு அம்மாவிடம் வந்து சேர்ந்தாள்.

அப்பாவுடன் சிறிது நேரம் பேசிவிட்டு அம்மாவிடம், சமையலறையில் நுழைந்தாள். அங்கு ஒரு புதிய வேலைக்காரி மிக்ஸியில் எதையோ அரைத்துக் கொண்டிருந்தாள். அந்தப் பெண் ராஜியைப் பார்த்து லேசாக சிரித்தாள். அம்மா அன்று வந்த  ‘அவள் விகடன்’ புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தாள்.

“வா ராஜி” என்று வரவேற்ற அவள் அம்மா, “உனக்கு மெதுவடை பிடிக்கும் அதற்குத்தான் அரைத்துக் கொண்டிருக்கிறேன்” என்றாள்.

“நீ எங்கே அம்மா வடைக்கு அரைக்கிறாய்? அந்தப் பெண் தானே அரைக்கிறாள்” என்றாள் ராஜி கிண்டலாக.

“நான் சொன்னதை அவள் செய்கிறாள். உனக்கு பிடிக்குமே என்று ரவாகேசரி செய்து விட்டு இப்போது தான் உட்கார்ந்தேன்” என்றாள் ராஜியின் அம்மா.

எல்லா வேலைகளயும் மேல் வேலைக்கு வந்த பெண்ணிடமே சாமர்த்தியமாகப் பேசி வாங்கி விடுவாள். பழைய வேலைக்காரி நின்று புதிய ஆள் வந்திருப்பதால் அவளிடம் என்ன வேலை செய்ய வேண்டுமென்று சொல்லியது, சொல்லாதது என்று எல்லா வேலைகளையும் வாங்கி விடுவாள். வாயைத் திறக்காமல் அம்மாவை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தாள் ராஜி.

காலை வேலை முடித்து விட்டு அந்தப் பெண் கிளம்பும் முன், கொஞ்சம் கேசரியும் ஒரேயொரு வடையும் கொடுத்தாள். மறுபடியும் மாலை வந்து வேலை முடித்து விட்டுப் போகும் போதும் சாப்பாடு எதையும் கொடுக்கவில்லை. இரவு எல்லோரும் சாப்பிட்ட பிறகு மீதமிருக்கும் சாதம், குழம்பு, காய் எல்லாவற்றையும் பிரிட்ஜில் வைத்து விட்டாள்.

அன்று இரவு டின்னர் முடிந்த பிறகு, வெளிவெராண்டாவில் இருக்கும் நீண்ட படிக்கட்டில் உட்கார்ந்து ஊர்வம்பு பேசுவது ராஜிக்கும், அவள் அம்மாவிற்கும் மிகவும் பிடிக்கும்.

என்ன ஊர்வம்பு என்று யோசிக்கிறீர்களா? எல்லாம் சினிமா நடிகர், நடிகைகள் பற்றித்தான். ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டிதானே! மற்றபடி அவள் வீட்டு விஷயத்தைப் பற்றி இவள் பேசமாட்டாள். இவள் வீட்டு விஷயத்தை அவள் பேச மாட்டாள்.

ஆனால் அன்று இரவு ராஜி “முன்பு வேலை செய்துக் கொண்டு இருந்த மல்லிகா நன்றாகத்தானே செய்து கொண்டிருந்தாள். அவளை ஏனம்மா நிறுத்தி விட்டாய்?”

“நான் எங்கே நிறுத்தினேன். அவளே தான் நின்று விட்டாள். அது மட்டுமில்லை. நம் பக்கத்து வீட்டில் அவள் தான் செய்கிறாள். ஆனால் அந்த வீட்டில் ஆட்களும் நிறைய; சம்பளமும் நம் வீட்டில் வாங்குவதை விட குறைவு தான். ஆனாலும் ஏன் இங்கு வேலைக்கு ஒழுங்காக வருவதில்லை என்று எனக்குப் புரியவில்லை” என்றாள் அம்மா அழமாட்டாத குறையாய்.

“எனக்குப் புரிந்து விட்டது” என்றாள் ராஜி. அவளையே கேள்விக் குறியோடு பார்த்தாள் அம்மா.

“அம்மா அவர்கள் மிகவும் ஏழைகள். அவர்களுக்கு வேண்டியது வயிறார உணவு தான். நீ மற்றவர்களை விட ஐந்தோ, பத்தோ ரூபாய் அதிகம் கொடுத்தால் என்ன பலன்? அதில் அவர்கள் என்ன வாங்க முடியும்? நம் வீட்டில் செய்வது போல் ருசியான சாப்பாடு சாப்பிட முடியுமா? நிறைய நெய் முந்தரிப்பருப்பு போட்டு கேசரி தான் குழந்தைகளுக்கு கொடுக்க முடியமா?

ஒரே ஒ்ரு ஸ்பூன் ஸ்வீட்டும், ஒரே ஒரு வடையும் தருகிறாயே ! இது நியாயமா அம்மா? குழந்தைகளை விட்டு சாப்பிட அவளுக்கு மனம் வருமா? அப்படியே கொடுத்தாலும் அதை எப்படி பங்கு போட்டு குழந்தைகளுக்கு கொடுப்பாள். வேலை முடிந்து வீட்டிற்கு போகும்போது மீதி சாப்பாட்டைக் கொடுத்தால் அவர்கள் பசி தீரும். அதை விட்டு சாதத்தைக் கூட பிரிட்ஜில் வைத்து விடுகிறாய்.

நீ கொஞ்சம் சோற்றைக் கொடுத்தால் அவளுக்கு வீட்டில் செய்யும் வேலையும் குறையும். நீ சோற்றைக் கூட எடுத்து வைத்துக் கொண்டால் யாரம்மா வந்து வேலை செய்வார்கள்? என் அப்பா உன்னை அவ்வளவு ஏழையாகவா வைத்துக் கொண்டு இருக்கிறார்? வயிற்றுக்கு சோறு போடாமல் பணம் என்னும் காகிதம் கொடுத்தால் யாரும் வேலை செய்ய மாட்டார்கள்” என்று ஒரு நீண்ட லெக்சர் அடித்தாள் ராஜி.

“நல்ல அரிசி என்ன விலை விற்கிறது தெரியுமா? அதில் தினமும் மீதமாகும் சாப்பாட்டைத் தர முடியுமா?“ என்று முணுமுணுத்தாள் அம்மா.

“அந்த விலைவாசி அவளுக்கும் தானே! அவள் தொடர்ச்சியாக இரண்டு நாள் வரவில்லை என்றால் நீ என்ன செய்கிறாய்? உடனே ஏதாவது ஒரு மெஸ்ஸில் சாப்பாடு ஆர்டர் செய்கிறாய்! அப்போது உனக்குத் தானே கஷ்டம். நம்மைப் போலவே மற்றவர்களையும் நினைக்க வேண்டும் அம்மா. நீங்களோ வயதான தம்பதிகள், ஒரு தேவையென்றால் இவர்கள் தான் உடனே உதவி செய்வார்கள். ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்று  நீ படித்ததில்லையா?”

தலையை மெதுவாக  ‘ஆமாம்‘ என்று ஆட்டினாள் அம்மா.

‘அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா’ என்ற பாட்டு எங்கிருந்தோ கேட்டது அம்மாவிற்கு.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கரை தொடாத அலைகள் 💗 (நாவல் – அலை 30) – தி.வள்ளி, திருநெல்வேலி 

    சேற்றில் முளைத்த செந்தாமரை (சிறுகதை) – மைதிலி ராமையா