2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
தன் தந்தையிடமிருந்து அப்படியொரு எதிர்மறை வெளிப்பாட்டினை எதிர்பார்த்திராத திவாகர் ஒரு கணம் செயலற்றுப் போனான். “அப்பாவா இப்படிப் பேசறார்?… சாதி, மத பேதங்களையெல்லாம் கடந்தவர், ஏழை பணக்காரன் என்கிற ஏற்ற தாழ்வுகளை வெறுப்பவர், எதிலும் ஒரு முற்போக்கான சிந்தனையையே எதிரொலிப்பவர்!… அவரா இப்படி?”
“ஏங்க எதுவாயிருந்தாலும் உள்ளார வரச் சொல்லிப் பேசுங்க!… தெருவே வேடிக்கை பார்க்குது பாருங்க!” திவாகரின் தாய் புவனேஸ்வரி தவித்தாள்.
“ஏண்டி… இவன் இஷ்டத்துக்கு எவளுக்கோ தாலி கட்டிக் கூட்டிட்டு, மாலையும் கழுத்துமா வந்து நிப்பான்… நான் இவனை ஆரத்தி எடுத்து உள்ளார வரவேற்கணுமாக்கும்?.. அதுக்கெல்லாம் வேற ஆளைப் பாருங்க!” எங்கோ பார்த்துக் கொண்டு கத்தினார் திவாகரின் தந்தை சுப்ரமணியம்.
“அப்பா… ஒரு நிமிஷம் நான் சொல்றதைக் கேளுங்க!… நான் எப்படிப்பட்ட ஒரு சூழ்நிலைல… இதைச் செய்தேன்னு…” திவாகர் சொல்ல வர,
“ச்சூ…. இங்க யாரும் எந்த விளக்கமும் தர வேண்டாம்!… ஏதோ இவனோட அதிர்ஷ்டம் நான் இன்னும் கோபத்தின் உச்சிக்குப் போகலை!… அதை நான் தொடறதுக்கு முன்னாடி இவனை எடத்தைக் காலி பண்ணச் சொல்லு… இல்லே…”
தன் தந்தையின் உச்ச கோபம் எத்தகையது என்பதை உணர்ந்திருந்த திவாகர், தன் புது மனைவி பக்கம் திரும்பி, “ஜோதி… இதுக்கு மேல நாம் இங்க நிக்கறதுல அர்த்தமில்லை… .கிளம்பு!” என்றான்.
இருவரும் திரும்பி பத்தடி சென்றபின், சட்டென்று நின்ற திவாகர், “ஜோதி… ஒரு நிமிஷம்!” என்று சொல்லி அவளை அங்கேயே நிறுத்தி விட்டு தான் மட்டும் தந்தையிடம் வந்தான்.
“அப்பா… இப்ப சொல்றேன் கேட்டுக்கங்க!… என்னிக்கு நீங்களா வந்து எங்க ரெண்டு பேரையும் மனதாரக் கூப்பிடறீங்களோ, அப்பத்தான் நாங்க இந்த வீட்டுக்குள்ளார வருவோம்!… அது மட்டுமல்ல… இந்த வீட்டுக்குள்ளார நுழையற அந்த நிமிடத்திலிருந்துதான் நாங்க ரெண்டு பேரும் ஒரு கணவன், மனைவியா எங்க வாழ்க்கையைத் துவங்குவோம்!… அதுவரைக்கும்…. ப்ச்… இந்த ஊர் உலகத்துக்காக கணவன், மனைவி வேஷம் மட்டுமே!” ஆணியறைந்தாற் போல் உறுதியாகச் சொல்லி விட்டு, வேகவேகமாய் வந்து, தன் புது மனைவியை அழைத்துக் கொண்டு தெருவில் இறங்கி நடந்தான் திவாகர்.
****
ஆறு மாதங்கள் கடும் வைராக்கியத்துடன், வீராப்பாய் இருந்த சுப்ரமணியம், மகனின் பிரிவு தாளாமல் தன் மனைவி புவனேஸ்வரி உடல் நலம் பாதிக்கப்பட்ட போது, லேசாய் ஆடிப் போனார். ஆனாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாது, பாவ்லா வீராப்புடன் பவனி வந்தார்.
ஆனால், புவனேஸ்வரியோ, பத்து நாட்கள் படுக்கையில் கிடப்பதும், பத்து நாட்கள் எழுந்து நடமாடுவதுமாய் இருந்தாள். புத்திர சோகம் அவளைப் புரட்டியெடுக்க, கணவனிடம் வாய் விட்டே கேட்டாள், “அவன்தான் இளரத்தம் வீராப்பா இருக்கான்… நாம வயசானவங்க நாமும் அவனுக்குச் சரிக்குச் சரி நின்னா அப்படி?”
“ஏண்டி… அந்தப் பயல் என்னைய கிள்ளுக் கீரையா நெனச்சு மூஞ்சிக்கு நேரா வந்து சவால் விட்டுட்டுப் போறான்!… ராஸ்கல்… அவனுக்கே அத்தனை ரோஷமிருந்தா… அவனைப் பெத்தவன் நான்… எனக்கு எத்தனை ரோஷமிருக்கும்?” கத்தித் தீர்த்தார் மனுஷன்.
அந்தக் கத்தலில் புவனேஸ்வரி சகலமும் அடங்கினாள்.
ஒரு முறை பஞ்சாயத்து போர்டு ஆஸ்பத்திரிக்கு வந்திருந்த புவனேஸ்வரியின் தூரத்துச் சொந்தக்காரியொருத்தி போகிற போக்கில் அப்படியே புவனேஸ்வரியையும் பார்த்து விட்டு போக வந்திருந்தாள். வந்தவள் அவள் மகன் திவாகரை புகழோ புகழென்று புகழ்ந்து தள்ள, புரியாமல் விழித்தாள் புவனேஸ்வரி.
அப்போதுதான், அந்த உண்மையே அவளுக்குத் தெரிய வந்தது.
நண்பனின் தங்கை திருமணத்திற்குச் சென்றிருந்த திவாகர், அங்கு வரதட்சணைப் பிரச்சினை காரணமாக திருமணம் நின்று, மாப்பிள்ளை வீட்டார்கள் மொத்தமாய் வெளியேறி விட, கதறிக் கொண்டு நின்ற நண்பனின் குடும்பத்திற்காகவும், தடாலென்று ஓடிப் போய் மணக்கோலத்திலேயே பிணக்கோலத்திற்கு முயன்ற நண்பனின் தங்கையைக் காப்பாற்றும் விதமாகவும்தான் ஜோதியின் கழுத்தில் தாலி கட்டியிருக்கிறான்.
அதுவும், எங்கும்… எதிலும் முற்போக்கு எண்ணங்களையே பிரதிபலிக்கும் தன் தந்தை நிச்சயம் தன் செயலுக்காக தன்னைப் பாராட்டுவார் என்கிற நம்பிக்கையில்தான் அதைச் செய்திருக்கிறான்.
கணவனிடம் இந்த விபரத்தைத் தெரிவிக்க புவனேஸ்வரி வாயெடுத்த போது, “த பாரு!… அந்த ஓடு காலிப் பயலைப் பத்தி இன்னொரு தடவை என்கிட்டப் பேசினே?… அப்புறம் நான் இந்த வீட்டுப் பக்கமே வரமாட்டேன், அப்படியே எங்காவது கண் காணாமப் போயிடுவேன்!… சொல்லிட்டேன்”
****
ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு, வியாபார விஷயமாக வெளியூர் சென்றிருந்த சுப்ரமணியம் பேருந்தில் திரும்பி வந்து கொண்டிருந்த போது, அவருக்குப் பின்புற இருக்கையில் அமர்ந்திருந்த இருவரின் உரையாடலில் அவர் பெயரும் அடிபட, காதுகளைக் கூராக்கிக் கொண்டார்.
“ரங்கா… முன்னாடி உட்கார்ந்து இருக்கற பெரியவர் யாருன்னு தெரியுதா?”
“ம்ஹூம்… தெரியலையே!”
“அட… நம்ம தண்டபாணி அய்யா பொண்ணு ஜோதியோட கல்யாணம் நின்னு போனப்ப… ஒருத்தன் முன் வந்து அதே முகூர்த்ததுல அந்தப் பொண்ணு கழுத்துல தாலி கட்டி வாழ்க்கை குடுத்தான் பாரு அவனோட அப்பன்காரன்!”
சுப்ரமணியத்திற்கு சுரீரென்றது. “என்னது என் மகன் ஒரு பொண்ணுக்கு வாழ்க்கை குடுக்கும் விதமாத்தான் அப்படியொரு கல்யாணம் பண்ணினானா?… ச்சே!… அவசரப்பட்டுட்டேனே!”
பின் இருக்கையின் உரையாடல் தொடர்ந்தது.
“ஓ.. அந்த தியாகியப் பெத்தவரா?”
“அடப் போப்பா… தியாகமும் இல்லை… ஒரு மண்ணும் இல்லை!… தானா வலிய வந்து வாழ்க்கை குடுக்கறப்பவே நெனச்சேன்!… ஏதாவது குறைபாடு இருக்கும்னு… அது செரியாத்தான் போச்சு!”
“என்னப்பா சொல்றே?”
“பின்னே?… கல்யாணமாகி கிட்டத்தட்ட ஒண்ணே முக்கால் வருஷமாச்சு!… இன்னும் ஒரு விசேஷத்தையும் காணோம்!… இவங்க கூட கல்யாணம் ஆனவங்கெல்லாம் கொழந்தை குட்டியோட சந்தோஷமா இருக்காங்க! ம்ஹூம்….. எனக்கென்னவோ பயலுக்கு… அந்தக் குறைபாடு இருக்குமோன்னு சந்தேகமாயிருக்கு!”
“அந்தக் குறைபாடுன்னா?”
“அட… ஆண்மைக் குறைபாடுதாம்பா!”
குபீரென்று கொப்பளித்து வந்த கோபத்தை, சிரமப்பட்டு அடக்கிக் கொண்டார் சுப்ரமணியம்.
“என்னிக்கு நீங்களா வந்து எங்க ரெண்டு பேரையும் மனதாரக் கூப்பிடறீங்களோ, அப்பத்தான் நாங்க இந்த வீட்டுக்குள்ளார வருவோம்!… அது மட்டுமல்ல… இந்த வீட்டுக்குள்ளார நுழையற அந்த நிமிடத்திலிருந்துதான் நாங்க ரெண்டு பேரும் ஒரு கணவன், மனைவியா எங்க வாழ்க்கையைத் துவங்குவோம்!… அதுவரைக்கும்…. ப்ச்… இந்த ஊர் உலகத்துக்காக கணவன், மனைவி வேஷம் மட்டுமே!”
அன்று திவாகர் ஆணித்தரமாய்ச் சொல்லி விட்டுச் சென்ற வார்த்தைகள் சுப்ரமணியத்தின் செவிகளில் ஒலிக்க, “ஒரு வேளை… அதனால்தான்… அவர்கள் இன்னும்…”
வீடு திரும்பியதும், “புவனேஸ்வரி… கிளம்பு!” என்றார்.
“எங்கே?”
“ம்… பையன் வீட்டிற்கு!… ஏண்டி நாந்தான் முழு விவரம் தெரியாம அவனை ஒதுக்கி வெச்சிருந்தேன்னா… நீயாவது சொல்லியிருக்கக் கூடாதா? அவன் ஒரு நல்ல எண்ணத்தோடதான் அந்தப் பொண்ணுக்கு தாலி கட்டியிருக்கான்! என்று?”
“ம்…சொல்ல வந்தப்ப சொல்ல விட்டாத்தானே?” தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
தன் மகனின் ஆண்மையைப் பற்றி யாரோ ஒருவன் கேவலமாய்ப் பேசுவதைப் பொறுக்க முடியாத அந்த தந்தை உள்ளம், தனக்குள்ளிருந்த வெட்டி வீராப்புக்களையும், வீண் ரோஷங்களையும் உதறி விட்டுப் புறப்பட்டது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings