2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
‘ஐயோ அம்மா ‘ என்ற அலறல் சத்தம் கேட்டு நிமிர்ந்து உட்கார்ந்தான் சங்கர். கொஞ்சம் நிதானிப்பதற்குள் தொடர்ந்து அழுகையும் கேட்டது.
பக்கத்து வீட்டில் சண்டை, அந்தப் பெண்தான் அழுகிறாள் என்று புரிந்துவிட்டது சங்கருக்கு. உமாவும் ஜாடையில் அதை ஆமோதிப்பது போல அவனைப் பார்த்தாள்.
பக்கத்து வீட்டில் ஒரு புதுஜோடி இருக்கிறார்கள். அந்தப் பையன் ஒரு மொபைல் கம்பெனியில் வேலை செய்கிறான். அந்தப் பெண் வீட்டோடு இருக்கிறாள்.
வேலை நிமித்தம் காரணமாக பெற்றோர்களை விட்டு இவ்வளவு தூரத்தில் வந்து குடியிருக்கிறார்கள். அவன் பெரும்பாலும் குடித்துவிட்டுத்தான் வருவான். சில நாட்கள் அவன் வருவதும் தெரியாது, போவதும் தெரியாது. சில நாட்கள் சண்டை நடக்கும்… அந்தப் பெண் அழுவாள்…
சங்கர், எழுந்து நின்று, சட்டையை எடுத்தான். உமா அதைக் கவனித்துவிட்டு, ‘ என்னங்க… சட்டையைப் பொத்துக்கிட்டு எங்கே கிளம்பிட்டீங்க… ‘ என்றாள்.
‘பாவம்டி அந்தப் பொண்ணு… அவன் அந்தப்பொண்ணை போட்டு அடிப்பான் போலருக்கு… எப்படி அழுவுது பாரு அது… பாவம், ஒரு தடவையாவது நாம போயி ‘ஏன்டா இப்படி போட்டு அடிக்கறே… ‘ ன்னு கேட்டாத்தான், கேட்கறதுக்கும் ஆள் இருக்காங்கன்னு அவனுக்கும் கொஞ்சம் பயம் வரும். அப்படியே கொஞ்சம் புத்திமதியும் சொல்லிட்டு வர்றேன்… ‘ என்றுவிட்டு வெளியே போனான்.
இவளோ தடுக்கும் எண்ணத்துடன் கொஞ்சம் சத்தமாய், ‘ பேசாம வந்து உட்காருங்க… நமக்கெதுக்கு ஊர் வம்பு… ‘ என்றாள்.
‘ அட… இத்தனை நாள் உட்கார்ந்துதானே இருந்தோம்… இன்னிக்காவது போயி கேட்டுட்டு வர்றேனே… பாவம் அந்தப் பொண்ணு… அப்பா அம்மாவை விட்டுட்டு அவனோட இங்கே வந்து கிடக்குது… கேட்க நாதியில்லைங்கற தைரியத்துலதான் அவன் இப்படியெல்லாம் பண்றான்னு நினைக்கிறேன்… இன்னிக்கு போயி நறுக்குனு நாலு வார்த்தை கேட்காம விடறதில்லை… ‘ மேற்கொண்டு அவள் எதுவும் சொல்வதற்கு முன், மடமடவென செருப்பை மாட்டிக்கொண்டு வெளியே போயே விட்டான்.
xxxxx
கதவு பாதி திறந்திருந்தது. கதவைத் தட்டினான். ‘ தம்பீ… ‘ என்று குரல் கொடுத்தான். அடுத்த சில நொடிகளில் அந்தப் பெண் வந்து மெல்ல கதவை விலக்கிக் கொண்டு எட்டிப் பார்த்தாள். சங்கர் நிற்பதைக் கண்டதும், அவசர அவசரமாக தலைமுடியை சரிசெய்து கொண்டாள். கண்களும் கலங்கியிருந்தன.
திடீரென்று அவனை அங்கே எதிர்பார்த்திராத அவள் தடுமாறி, ‘வாங்கண்ணா… ‘ என்றாள். தொண்டை கரகரத்திருந்தது.
‘ சத்தம் கேட்டுச்சும்மா… அதான்… வந்து… ‘ எப்படி சொல்லுவது என்று புரியாமல் சங்கர் தடுமாறினான், விவரம் கேட்கவும் தயங்கினான்..
வலுக்கட்டாயமாய் சிரிப்பை முகத்தில் கொண்டு வந்து, ‘வாங்கண்ணா… உள்ளே வாங்க… வெளியேயே ஏன் நிக்கறீங்க… ‘ என்றவாறு கதவை நன்றாகத் திறந்து விட்டாள் அவள்.
‘ பரவாயில்லைம்மா… ‘ என்றவன், உள்ளே எட்டிப்பார்த்துவிட்டு, ‘ தம்பி இல்லையா… ‘ என்றான்.
‘ ஸாரிண்ணா… இப்போ அவர் பேசற நிலைமையில இல்லை… ‘ என்றவள் கொஞ்சம் தடுமாறி உள்ளே திரும்பிப் பார்த்துவிட்டு, ‘ நிதானத்துல இல்லண்ணா… ‘ என்று கொஞ்சம் விளக்கமாய் சொன்னாள்.
சங்கருக்குப் புரிந்து போனது, கணவன் தண்ணியடித்துவிட்டு வந்திருக்கிறான் என்று சொல்ல கூச்சப் பட்டுக்கொண்டுதான் அவள், ‘நிதானத்தில் இல்லை… ‘ என்று நாசூக்காக சொல்கிறாள் என்று. இவனும் சமாளித்தபடி சொன்னான், ‘ ஸாரிமா… உன்னோட சத்தம் கேட்டுத்தான் ஒடிவந்தேன்… ஒன்னும் பிரச்சினை இல்லையே… ‘ உள்ளேயும் சற்றே எட்டிப் பார்த்தான்.
தலையை அசைத்து புன்னகைத்தாள். பிரச்சினை இல்லை என்கிறாளா, பிரச்சினைதான் என்கிறாளா, ஒன்றும் புரியவில்லை இவனுக்கு. மொத்தத்தில் சொல்லத் தயங்குகிறாள் என்று மட்டும் புரிந்தது இவனுக்கு.
‘ சரிம்மா… நான் காலையில வந்து பார்க்கறேன்… ‘ என்று மட்டும் சொல்லிக்கொண்டு திரும்பிவிட்டான் சங்கர். தயக்கத்துடன் மெல்ல கதவை சாத்தினாள் அவள்.
உடனே திரும்பி வந்துவிட்ட கணவனைப் பார்த்ததும், ரொம்பவும் ஆவலுடன், ‘ என்னங்க ஆச்சு… சீக்கிரம் திரும்பிட்டீங்க… பேசலையா… சத்தம் போட்டீங்களா… சமாதானம் செஞ்சீங்களா… ரெஸ்பான்ஸ் எப்படி இருந்துச்சு… ‘ என்றாள் உமா.
புன்னகைத்தபடி, ‘ அந்தப் பொண்ணுதான் வந்து எட்டிப் பார்த்து பேசிச்சு… அவன் போதையில மட்டையாகிட்டான் போல… இப்போ பேசற நிலைமைல இல்லன்னு தெரிஞ்சதும் திரும்பிட்டேன்… உள்ளேயே போகலை… ‘ என்றான்.
‘ சுந்தரி என்ன சொன்னா… அவகிட்டே பேசினீங்களா… ஏன் சண்டையாம்… ‘ என்றாள் தொடர்ந்து. ‘ பொறு… பொறு… ‘ என்றவன் கொஞ்சம் இறுக்கத்துடன், ‘ அந்தப் பொண்ணு அழுதிருக்கும்போல… கண்ணெல்லாம் கலங்கியிருந்திச்சு, அதுமட்டும் தான் தெரிஞ்சது… என்ன சண்டைங்கறதப்பத்தி அது எதுவும் ஒப்பனா சொல்லலை… நானும் கேட்டுக்கலை… சரி காலையில வந்து பேசிக்கிறேன்மான்னுட்டு வந்துட்டேன்… ‘ என்று அதை அத்தோடு முடித்துக் கொண்டான்.
XXXXXXX
விடிந்ததும் தினசரி பேப்பரை விரித்து வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்த சங்கருக்கு யோசனை ஓடியது.
‘ காலையில் வந்து பார்க்கிறேன் என்று ராத்திரி சொன்னோமே… இப்போதே போகலாமா… விடிந்ததும் வித்யாததுமாய் போனால் நன்றாக இருக்குமா… அவனும் நேற்றைய போதை தெளியாமல் கூட இருக்கலாம், டீ குடித்துவிட்டு கொஞ்சம் ஆற அமர போய்க்கொள்ளலாம்… ‘ என்று யோசித்தபடி உட்கார்ந்திருந்தான்.
அதே நேரம் வெளியே கோலம் போடப் போயிருந்த உமா திடுதிடுவென்று உள்ளே ஓடிவந்தாள். ‘ ஏங்க… ஏங்க… இங்கே ஓடிவாங்க… ‘
ஒன்றும் புரியாமல் விழித்தான் சங்கர். ‘ என்ன ஆச்சு… ‘ என்றான்.
‘ சுந்தரி புருஷன் டிப்டாப்பா டிரஸ் பண்ணிக்கிட்டு ஸ்கூட்டர்ல ஏறி உட்கார்ந்திருக்கார், வந்து பாருங்களேன், அந்த கண்கொள்ளாக் காட்சியை… ‘ என்றாள்.
அவள் முன்னே போக பின்தொடர்ந்த இவன் வாசற்படிக்குப் போய் பார்த்தான்.
‘ நான் பாதி கோலத்துல எதேச்சையா எழுந்திருச்சேன். அந்தப் பையன் ஸ்கூட்டர்லே உட்கார்ந்திருக்கறதைப் பார்த்தேன். மாப்பிள்ளை கணக்கா உட்கார்ந்திருந்தார். அதே நேரம், எதேச்சையாக சுந்தரியும் வெளியே வந்தா. பட்டுப்புடவையில ஜொலிச்சா… ஆவலை அடக்க முடியாம, ‘ என்ன விஷயம்… ‘ னு ஜாடையில கேட்டேன்… முகத்துல அவ்வளவு பரவசம் அவளுக்கு… ‘ ஏழு டூ எட்டரை ஒரு முகூர்த்தம்க்கா, அதான் கிளம்பிட்டிருக்கோம்… ‘ னு ரொம்ப மெதுவா சொன்னா… ’ என்றாள் உமா.
இவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையிலேயே அந்தப் பெண் கதவை சாத்திவிட்டு வெளிகேட்டையும் சாத்திவிட்டு, போய் ஸ்கூட்டரில் ஏறி உட்கார்ந்தபடி எதேச்சையாய் திரும்பிப் பார்த்தாள். இவர்கள் நிற்பதைப் பார்த்ததும் புன்னகையுடன், ‘ போயிட்டு வர்றேன்… ‘ என்பது போல சைகை செய்துவிட்டு, ‘ டாடா… ’ காட்டினாள்.
இவர்களும் ‘ டாட்டா… ‘ காட்டினார்கள். ஸ்கூட்டர் மறையும் வரை நின்றிருந்துவிட்டு, சங்கர் சொன்னான், ‘ நல்லவேளை… காலங்கார்த்தாலேயே போய் நான் விசாரிக்கலை… ‘ ஏன்டி… வக்காலத்து வாங்க ஆள் கூட்டிட்டு வந்தியான்னு… அவன் கேட்டு… அப்படியே சண்டை திரும்பவும் பத்திக்கிச்சுன்னா… அப்புறம் அவங்க எங்கே கிளம்பறது… நல்லவேளை நான் போகலை… பாரேன்… ராத்திரி எதுவுமே நடக்காத மாதிரி கிளம்பி போய்ட்டிருக்கான் அவன்… ‘ என்று அங்கலாய்த்தான் சங்கர்.
‘ சரி விடுங்க… சண்டை போட்டுக்க வேண்டியதுதான்… அப்புறம் கூடிக்க வேண்டியதுதான்… ‘ ஊடலுக்கப்பின் கூடல் இருந்தால்தானே வாழ்க்கை…‘
அவள் சொல்வதை ஆமோதிப்பதைப் போல பார்த்து புன்னகைத்தான் அவன்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings