2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“பானு , அம்மா பானு இங்கே சித்தே வா”, ஶ்ரீதரன் ஈசிசேரில் சாய்ந்த வண்ணம் தன் பெண்ணை அழைத்தார்.
“அம்மா, இரும்மா வரேன், அப்பா கூப்படறார் என்னனு கேட்டுட்டு வரேன்.”
ஶ்ரீதரனின் தர்ம பத்தினி, பர்வதம் “அவருக்கு என்ன வேலை, ஈசிசேர்ல சாஞ்சிண்டு எல்லாரையும் விரட்டுவார், இன்னும் கச்சிப் பாளயம் ஜமீந்தார்னு நினைப்பு.” படபடன்னு பொறிந்தாள், பாவம் அவளோட ஆற்றாமை அவளுக்கு.
என்னப்பானு, ஶ்ரீதரனுக்கு முன்னால வந்து நின்னா பானுன்ற பானுமதி.
ஏம்மா, தீபாவளி வரதே இன்னும் 20 நாள் கூட இல்லையே, உன் ஆம்படையான் வந்து கூட்டிண்டு போப்போறாராமா?இல்லை இங்கே வராரா, கடிதாசு ஏதாவது போட்டாரா?
“இல்லைப்பா இதுவரை”, சுண்டு விரலால் கண்ணீரை சுண்டி விட்ட வண்ணம் பதிலளித்தாள்.
“உன் மாமியார் அந்த ஜிலேபி, இல்லை ஜாங்கிரி அம்மாள், இல்லை கிரிஜா அம்மாள் என்னதான் நினைச்சிண்டிருக்கா?குழந்தை பாக்யம் நம்ம கையிலயா இருக்கு? என்ன வயசாயிடுத்து உனக்கு 27 தானே, நேரம் வந்தா ஜனிச்சிட்டு போறது.இதென்ன மந்திரத்துல மாங்காய் வரவழைக்கற காரியமா?”
“அவளுக்குதான் மூளை இல்லை உன் மாமனார் பத்மநாப சாஸ்திரிகள் எல்லாம் தெரிஞ்சவர் ஆச்சே, அவருக்காவது புத்தி வேண்டாம்? உன் ஆம்படையான் சுந்தரேசன் இன்னும் அம்மா முந்தானைக்கு பின்னால ஒளிஞ்சிண்டு அம்மாதான் சொன்னானு விட்டுட்டு போய் இன்னியோட 3 மாசம் ஆச்சு.ஒரு லெட்டர் கிடையாது”.
பானுமதி, சுந்தரேசன் கல்யாணம் அந்த சேலம் ஜில்லா கச்சிபாளையமே மூக்கில விரல் வைக்கற மாதிரி 3 நாள் வைபவமா நடந்தது..சேலத்துல இருந்து ரெட்டை குதிரை சாரட் என்ன, பாண்டு வாத்யம் என்ன,திருவாரூர் மணியம் பிள்ளை நாதஸ்வரம். சேலம் சேஷய்யர் சமையல்.ஊரே அமக்களப் பட்டது.
ஒரு காலத்தில் கச்சிப்பாளையம் ஜமீன்தார் ஶ்ரீதரனோட தாத்தா, ஊர்ல பாதி அவரோடதுதான்னு பேச்சு.அவரோ ஜமீந்தாராவே வாழ்ந்து அடிக்கடி தஞ்சாவூர், மதராச பட்டிணம் போய் பாதி சொத்தை அழித்தார்.மீதியை மூணு பசங்களுக்கும் பங்கு போட்டு கொடுத்தார்.ஶ்ரீதரனோட அப்பா தவிர மற்றவர்கள் சொத்தை ஊர் கவுண்டர்களுக்கு வித்துட்டு பட்டணம் போய் சேர்ந்தனர். இப்ப ஶ்ரீதரனும் மீதி இருந்த சொற்ப சொத்தை வச்சிட்டு, பழைய கெத்து குறைச்சுக்காம ஜமீந்தாராவே நினைச்சிட்டிருக்கார், மத்தவங்க என்ன நினைக்கறாங்கன்றதை பத்தி கவலைப் படாம.
ஶ்ரீதரனுக்கு பானுமதி ஒரு பொண்ணுதான்.அதனால தைரியமா இருந்ததெல்லாம் வச்சு கல்யாணம் பண்ணி கொடுத்துட்டார்.இப்ப ஶ்ரீதரன் வெறும் பெருங்காய டப்பா. இருக்கற வீடு மட்டும் பாக்கி , அது மேலயும் சுசீல்குமார் ஜெயின் கிட்ட கடன் வாங்கியாச்சு( அதான் நகோடா பான் புரோக்கர்) மிச்ச காலம் எப்படி ஓடும் தெரியலை.
இதுல தேடி எடுத்த மாப்பிள்ளை பிரகஸ்பதி, பொண்ணை திரும்ப கொண்டு வந்து தள்ளிட்டு போயிட்டான்.என்ன குறை இந்த தங்கமான பொண்ணுக்கு?
எதிர்ல உக்காந்து ஆர்வமா ஆனந்தவிகடன் புரட்டிண்டிருந்த மகளைப் பாத்தார்.இந்த கள்ளங் கபடில்லாத பொண்ணை வச்சிண்டு சொச்ச காலம் எப்படி போப்போறது.
65 வயசுக்கு மேலே முதல் முறையா கவலைன்னா என்ன, பயம்னா என்னங்கறதை உணர்ந்தார் ஶ்ரீதரன்.பணம் எவ்வளவு முக்கியம், அதை சம்பாதிக்க என்ன பண்ணலாம்னு இது வரை கனவுல கூட யோசித்ததில்லை.
திடீர்னு பானுவோட குரல் அவரை நடப்பு லோகத்துக்கு கொண்டு வந்தது.
“ஏன்பா நாளைக்கு சரஸ்வதி பூஜைக்கு ஒண்ணுமே வாங்கிண்டு வரலையே, பழம், பூ, கொஞ்சம் வெல்லம், அவல், முடிஞ்சா அம்மன் மேல போட புதுத் துணி வாங்கிண்டு வாப்பா.”
சரிம்மானு துண்டை உதறிப் போட்டுண்டு சிவன் கோவிலை பாத்து நடந்தார்.பாவம் அவருக்கு அழக் கூட தெரியாது, ராஜா வீட்டு கன்னுக் குட்டியாய் வளர்ந்தவர்.
கச்சிப் பாளையம் வரபுரீஸ்வரர் முன்னால நின்ன போது அவரையறியாமல் கண்ணீர் கன்னத்தில் வழிந்தது.அர்ச்சகர் தீபாரதனை காட்டி அவருக்கு மரியாதையாய் நீட்டினார்.
பிரகாரம் சுத்தி வந்து, நவக்கிரகங்களையும் 9 சுற்று வந்தார். சவுந்தரவல்லி அம்மனை தரிசித்து வெளிப் பிரகாரம் சுற்றி வரும் போது, ஜமீந்தார்வாள்னு யாரோ கூப்பிட்டது கேட்டு திரும்பினார,ஶ்ரீதரன்.
கோவில் காரியகர்த்தா சிவன் பிள்ளை.ஶ்ரீதரன் திரும்ப புன்னகையை பதிலா வீசினார். கூடவே நடந்த சிவன் பிள்ளை, “ஜமீந்தார்வாளிடம் ஒரு வேண்டுகோள். கோவிலை அறநிலையத்துறை எடுத்துக்கப் போறது. அதுக்கு முன்னால ஊர்க்காரா கோவிலுக்கு ஒரு தர்மகர்த்தா வேணும்னு பிரியப் படறா. அதுவும் ஜமீந்தார்வாள்தான் பாத்துக்கணும்னு பிரியப்படறா. உமக்கு பணம் பெரிசில்லை, இருந்தாலும் மாதம் 15,000 கொடுக்கறது பழக்கம். அரசாங்க அறநிலையத்துறை எடுத்துண்டா இன்னும் தாராளமா வரும்.நீங்க மறுக்காம ஏத்துக்கணும். “
மாதம் 15,000 ரூபாய் இப்போதைக்கு ஶ்ரீதரனுக்கு பெரிய தொகைதான், வரபுரீஸ்வரர் சக்தி வாய்ந்தவர்தான்.கோவில் கோபுரத்தை அண்ணாந்து பாத்து கன்னத்தில் போட்டுண்டார்.சிவன் பிள்ளையை பாத்து, “ எனக்கு இந்த வேலை ஒண்ணுமே தெரியாதேய்யா”
“உதவிக்கு கணக்கப்பிள்ளை இருக்கார், நானும் எங்கே போப்போறேன், எல்லாம் ஒரு மாச காலத்துல தலைகீழா கத்துண்டுடுவேள்”
“சரி தெய்வசித்தம் அதுன்னா அதையும் பாப்போம்”
“சரி இன்னிக்கே ஆபீஸ் ஒரு நடை வந்துட்டுப் போங்க. நம்ம சேலம் மருதப்பிள்ளை தன்னோட சஷ்டியப்த பூர்த்திக்கு இங்கே பூஜை பண்ணி விமரிசையா விருந்து போட்டாரே போன மாசம். நீங்க ஊர்ல இல்லை அவர் கிஃப்ட்டா கொடுத்த படம் உமக்குனு தனியா இருக்கு அதையும் எடுத்துட்டு போயிடுங்க.”
முதல் முறையா அந்த கோவில் காரியாலயத்துக்குள் நுழைந்தார்,ஶ்ரீதரன். நாற்காலியில் அமர்ந்திருந்த கணக்குப் பிள்ளை சட்னு எழுந்து வணக்கம் சொன்னார்.
முன்னால் சுவர் கடிகாரத்துக்கு பக்கத்துல ஒரு காலண்டர், அதுக்கு பக்கத்துல கண்ணை கவரும் வரபுரீஸ்வரர் சவுந்தரவல்லி வண்ணச் சித்திரம் கவனத்தை ஈர்த்தது.
“ஏன்யா சிவன் பிள்ளை இந்த படம் ரொம்ப சிறப்பா இருக்கே யாரு கைங்கர்யம்?”
“ஏன்யா சிவன் பிள்ளை இந்த படம் ரொம்ப சிறப்பா இருக்கே யாரு கைங்கர்யம்?”
“இதுதான் தன் சஷ்டியப்த பூர்த்திக்கு சேலம் மருதுப் பிள்ளை முக்கிய புள்ளிகளுக்கு ஃப்ரேம் போட்டு கொடுத்தது, உங்க பாக்கெட் கூட இங்கேதான் இருக்கு.”
தன் குரலை தணித்துக் கொண்ட சிவன் பிள்ளை, “ ஜமீன்தார்வாள் தப்பா நினைக்க கூடாது,இந்த கிராமம் பூராவும் உம்ம குடும்ப நிலை தெரியும், வரபுரீஸ்வர்ரை பூஜை ரூம்ல மாட்டுங்க, கஷ்டமெல்லாம் சூரியனை கண்ட பனி போல ஓடியே போயிடும்”
ஶ்ரீதரன் ஒண்ணும் சொல்லலை, சிவன் பிள்ளை எடுத்து கொடுத்த தினத்தந்தி பேப்பரில் சுற்றி பேக் செய்த பார்சலை கக்கத்தில் இடுக்கிக் கொண்டு புறப்பட்டார்.
கூடவே ஆபீஸ் வாசல் வரை வந்த சிவன் பிள்ளை, “ஜமீந்தார்வாள், இந்த ஞாயித்துக் கிழமை காலைல வரணும். ஊர்ப் பெரியவர்கள, கோவில் நிர்வாக பொறுப்பாளர்கள் முன்னாலே தர்மகர்த்தா பொறுப்பை ஏத்துக்கணும்.”
மெளனமாய் தலையசைத்துவிட்டு வீட்டை நோக்கி நடந்தார்.வாசல் திண்ணையிலேயே கவலை தோய்ந்த முகத்துடன் பானுமதி காத்திருந்தாள். அப்பா கையிலிருந்த பார்சலை சட்னு வாங்கிண்டா. “என்னப்பா இதுன்னா”
“பிரிச்சு பாரும்மா, நான் கொஞ்சம் முகம் அலம்பிண்டு வரேன்”
கோவிலுக்கு போயிட்டு வந்தா கால் அலம்பக்கூடாதுனு அம்மா சொன்ன ஞாபகம் வந்தது, முகம் கைகளை கழுவி, ஈரத் துண்டால் கால்களை துடைத்துக் கொண்டார்.
தாயும் ,மகளும் அந்த படத்தை திறந்து பார்த்துக் கொண்டிருந்தனர், இருவர் முகத்திலும் பிரகாசம். பர்வதம், “யாருன்னா கொடுத்தா இது, அம்மனை பாருங்கோ என்ன அழகு, வரபுரீஸ்வரரோ ஜொலிக்கறார்.”
ஶ்ரீதரன், “யார் கொடுத்தா என்ன, ஸ்டூலை கொண்டு வா பானு பூஜை ரூம் சுவத்துல ஆணி அடிச்சு இன்னிக்கே மாட்டிடறேன்.”
பானு விதரணையா அப்பாக்கு சின்ன ஸ்டூல், சுத்தியல், ஆணி எல்லாம் கொண்டு வந்தா.கிழக்கு பாத்த சுவர்ல உயரம் பாத்து ஒரு பென்சில் புள்ளி வச்சு ஆணி அடித்தார் ஶ்ரீதரன். பழக்கமில்லாத வேலை குறிதவறியது ஆணி அடிச்சாச்சு ஆனா சுத்தியல் கையையும் பதம் பார்த்ததில் முதலில் ஒரு பொட்டாய் எட்டிப் பாத்த ரத்த துளி, அவசரமாய் வெளியே பிரவாகித்தது.
கையை பிடித்துக் கொண்டு அந்த ஸ்டூலில் உக்காந்த ஶ்ரீதரனை பானுதான் முதலில் பாத்து பதறினாள்.பர்வதம் சத்தம் கேட்டு ஓடி வந்தவள் யோசிக்காமல், புடவையை கிழித்து தண்ணியில் நனைத்து ரத்தம் ஒழுகிய சுட்டு விரலில் அழுந்த கட்டுப் போட்டாள்.” ஏன்னா பாத்து பண்ணக் கூடாதா, எதுத்தாத்து அம்பியை கூப்டா அழகா அடிச்சு கொடுத்திருப்பான் மெஷின் வச்சு”
ஆணியில் தொங்கிய வரபுரீஸ்வரர் விஷம்மாய் சிரிப்பது போல தோன்றியது ஶ்ரீதரனுக்கு. “ பக்கத்துலயே இருக்கற என்னையை இதுவரை கவனிக்காம விட்டதுக்கு சின்ன தண்டனைன்னு சிரிக்கறானோ”
அரை மணி நேரம் ஆச்சு இந்த அமக்களம் நடந்து. திண்ணைல உக்காந்த அப்பாவுக்கும், பொண்ணுக்கும் இள நுங்கை உரித்து கொடுத்து கொண்டிருந்தாள் பர்வதம்.
ஶ்ரீதரன் சிரித்து பேசி பல நாளாச்சு, இப்ப சிரித்த படி பானுவை கேட்டார், ” பாத்தயாம்மா, தர்மகர்த்தா, 15,000 சம்பளம்னு சொன்னவுடனே, இள நுங்கு தோலுரிஞ்சு வருது.”
பார்வதம் பதில் சொல்லும் முன் அந்த இளநீல கார் வாசலில் வந்து நின்றது. முதலில் ஜாங்கிரி அம்மாள் கீழே இறங்கினார்,தொடர்ந்து அவர் பையன் சுந்தரேசன், கடைசியா பட்டை விபூதியோட பத்மநாப சாஸ்திரிகள்.
“என் பானு செல்லம் பாத்து எத்தனை நாளாச்சுடி அம்மா”, பானுவை அணைத்துக் கொண்டார் கிரிஜா அம்மா( இனிமே பேர் சரியா வரும்). இந்த பைத்தியக்காரன்தான் ஏதோ கொண்டு வந்து விட்டான்னா, இங்கேயே இருந்துடுவயா? அப்பறம் குழந்தையில்லை, குட்டியில்லைனா எப்படி வரும்,மாயாஜாலமா இது? புறப்படணும் ரெண்டு மணி நேரத்துல சட்புட்னு தயாராகு.”
வரபுரீஸ்வரர் பூஜை அறையிலிருந்து சிரித்தார். கிரிஜா அம்மா பர்வதத்திடம் பேசியது கேட்டது. பொண்ணை பெத்தாலே கஷ்டம்தாண்டி அம்மா, பாரேன் பானுவோட நாத்தனார் அதான் என் பொண்ணு சிவரஞ்சனி, அவ புக்காத்துக்காரா கொண்டு வந்து விட்டுட்டு போனவா திரும்பி பாக்கலை. ஐய்யோ நாமளும்னா அந்த தப்பை பண்றோம்னு பதறி ஓடி வந்தேன் என் தங்க மருமாளை கூட்டிண்டு போக.
சம்பந்தி பிராமணர்கள் ரெண்டு பேரும், பர்வதத்தின் டிகிரி காபியை திண்ணையில் அமர்ந்து ருசித்த வண்ணம் மாநில தேர்தலை அலசினர்.
சுந்தரேசன், ஹால் ஊஞ்சலில், ஒண்ணுமே பேசாமல் காபி ஆத்திக் கொண்டிருந்தாள் பானுமதி. கண்ணில் மின்னிய ஈர வைரம்.இருவர் கண்களும் சந்தித்தன,
வாய் பேசாத வார்த்தைகளை அந்த இரு ஜோடி கண்கள் பேசிக் கொண்டன.
“குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா, குறை ஒன்றும் இல்லை கண்ணா”
எங்கிருந்தோ M.S குரல் சன்னமாய் வியாபித்தது
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings