2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“ஹலோ….ஹலோ……லைன்-ல இருக்கயா?” என்ற குரலில்
“ம்…..இருக்கேன். சொல்லு” என்றாள் ஜனனி.
“ஜனனி…. நீ என்னைத் தப்பா எடுத்துக்காத. நானும் சொல்லக் கூடாதுன்னு தான் இத்தனை நாளும் என் மனசுக்குள்ளே மறைச்சு வச்சுருந்தேன். ஆனா, எத்தனை நாளைக்கு தான் என்னையே நான் ஏமாத்திக்கறது. இதுக்கு ஒரு முடிவு கட்டணும்-னு தான் உறுதியா என் மனசுல இருந்தத உங்கிட்ட சொல்லிட்டேன்” என்றாள் புவி.
“புரிஞ்சுது புவி. என்னைப் பத்தி உனக்குத் தெரிஞ்சத விட யாருக்கும் முழுசா தெரியாதுன்னு உனக்கே தெரியும். ஆனா, நான் இந்த விஷயத்துக்கு ஒத்துக்க மாட்டேங்கறதும் உனக்கு நல்லாவே தெரியும். அதனால, இதப் பத்தி இதுக்கு மேல இப்ப பேச வேண்டாம்னு நெனக்கறேன் புவி. ஒரு வருஷமா ஒரே அறை-ல ஒண்ணா தான் தங்கியிருக்கோம். ஆனா, இப்படி ஒரு சம்பவம் நடந்ததுக்கப்பறம் நாம சேர்ந்து இருக்கிறது தப்புன்னு எனக்குத் தோணுது. மனசுக்கு கஷ்டமா தான் இருக்கு. தப்பா எடுத்துக்காத. அதனால தான் ஆஃபீஸுக்கு ரெண்டு நாள் லீவைப் போட்டுட்டு ஆஃபீஸ் முடிஞ்சதும் அப்படியே ஊருக்கு வந்துட்டேன்” என்றாள் ஜனனி.
“யாருடி ஃபோன்ல?”
“அம்மா….அது வந்து….புவி-ம்மா”
“ஏதாவது பிரச்சனையா?”
“அதெல்லாம் இல்லம்மா. நான் ஆபீஸ்-ல இருந்து நேரா வந்துட்டதால, என்னவோ ஏதோன்னு நெனச்சுகிட்டுஃபோன் பண்றாம்மா”.
“நல்ல பொண்ணுடி. உம் மேல எப்பவுமே அவளுக்கு அக்கரை அதிகம். அவங்க வீட்டுல அவ பெரிய பொண்ணுல்ல. அதான்” என்றாள் அம்மா.
ஜனனியின் சொந்த ஊர் கோயமுத்தூர். பள்ளிப் படிப்பை கோவையில் முடித்தவள், அகமதாபாத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸில் தன் இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு பெங்களூரில் ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர, அதே கம்பெனியில் ஒரு ப்ராஜக்ட்டின் டீம் லீடராக ஏற்கனவே பணிபுரிந்து கொண்டிருந்தாள் புவி.
ஏற்காட்டை சொந்த ஊராகக் கொண்ட புவி என்கிற புவி ஸ்ரீ, தன் பள்ளிப்படிப்பை ஏற்காட்டில் முடித்துவிட்டு சேலத்திலிருந்த பிரபலமான ஒரு பெண்கள் கல்லூரியில் தன் பொறியியல் படிப்பை முடித்தாள்.
தந்தை ஏற்காட்டில் சொந்தமாக வைத்திருத்த காஃபி எஸ்டேட்டைப் பார்த்துக் கொண்டிருக்க, தங்கை திவ்ய ஸ்ரீ பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாள்.
அம்மா சரஸ்வதியிடம் போராடி வெளியூரில் வேலை செய்ய அனுமதி வாங்கியவள், பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தாள்.
தனது வேலையில் எப்போதும் நேர்த்தியைக் கடைபிடிக்கும் புவி அத்தனை சீக்கிரத்தில் யாருடனும் பழக மாட்டாள்.
ஓரளவு பழகினாலே வேலை நேரத்தில் சலுகையை எதிர்பார்க்கும் மற்றவர்களின் குணத்திற்காகவே சற்று விலகியிருப்பாள் புவி.
தான் வேலை செய்யும் கம்பெனியிலிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறினாள் புவி. ஏற்கனவே தனக்குத் தெரிந்த ஊர்க்காரர் ஒருவர் அங்கு வசிப்பதாக புவியின் தந்தை கேள்விப்பட்டு அங்கேயே வீடு பார்க்கச் சொல்ல, அந்த அபார்ட்மெண்ட்டிலேயே குடியேற முடிவெடுத்தாள் புவி.
தினமும் காலையில் டாக்ஸி புக் செய்து கொண்டு வேலைக்குச் சென்று வருபவள் வாரம் ஒருமுறை வேண்டிய மளிகை சாமான்கள், காய்கறிகளை வெளியே வாங்கிக் கொண்டு வந்து வேண்டியதை வீட்டிலேயே சமைத்துக் கொள்வாள்.
இதற்கு நடுவே அதே கம்பெனியில் மார்க்கெட்டிங் மேனேஜராக வேலை செய்யும் ரிஷிக்கு வேலைக்கு சேர்ந்து பல மாதங்கள் ஆனபோதும் எல்லோரிடமும் அளவாய் கண்ணியமாகப் பழகும் புவியின் குணமும், எளிமையும் மிகவும் பிடித்துப் போனது.
ஒரு நாள் எப்பபோதும் போல மாதம் ஒருமுறை நடைபெறும் ரெவ்யூ மீட்டிங் முடிந்து அனைவரும் வீட்டிற்குக் கிளம்பிக் கொண்டிருக்க, புவிக்கு மட்டும் உடனே டாக்ஸி கிடைக்கவில்லை. “உங்களுக்கு ஆட்சேபணை இல்லண்ணா, நான் வேணா உங்களை வீட்டுல ட்ராப் பண்ணிடறேன் புவி” என்றான் ரிஷி.
ஏற்கனவே வீட்டுக்கு கிளம்ப தாமதமாகிவிட்டதால் ரிஷியுடன் காரில் செல்ல புவி சம்மதிக்க, உடனே பேஸ்மெண்ட் பார்க்கிங் சென்று, ஐந்து நிமிடத்தில் காருடன் வந்தவன் முன் சீட்டின் கார் கதவினை திறந்து விட்டான்.
“தேங்க்ஸ்” என்று ஒற்றை வார்த்தையைக் கூறியவள் வண்டியில் ஏற, ரிஷியின் மனதுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறந்தன.
வழியில் பொதுவான விஷயங்களை இருவரும் அளவாக பேசிக் கொள்ள, தந்தையை இழந்த அம்மாவிற்கு தான் மட்டுமே உலகம் என்றும் அம்மாவை பெங்களூரில் ஒரு சொந்த வீடு வாங்கி உட்கார வைக்க வேண்டும் என்பதே தன்னுடைய ஆசை என்றும் கூறினான் ரிஷி.
“சாரி ஃபார் யு அண்ட் அம்மா. ஒரு அப்பா எவ்வளவு முக்கியம் -னு எனக்குத் தெரியும். எங்க வீட்டுல எல்லா வேலையையும் எங்க அம்மா தான் இழுத்துப் போட்டு செய்வாங்க. ஆனா, அவங்க எடுக்கற எல்லா முடிவுலயும் அப்பாவோட ஆலோசனையும் கண்டிப்பா இருக்கும். அந்த துணையில்லாம தனியாளா வளர்த்தறது சாதாரண காரியமில்ல. கிரேட்” என்றாள்.
“சாரியெல்லாம் எதுக்கு? ஆனா, உண்மையாவே தனி மனுஷியா நின்னு வளர்த்தறது கஷ்டம் தான். அந்த கஷ்டத்தைப் கூட நான் ஃபீல் பண்ணக்கூடாதுன்னு என் முன்னாடி எங்கம்மா அழமாட்டாங்க” என்றவன் ட்ராபிக்குக்கு நடுவே பயணித்த இருபது நிமிடத்தில் அபார்ட்மெண்ட் வாசலில் காரை நிறுத்த
“ரொம்பவே தேங்க்ஸ் ரிஷி. வீட்டுக்கு கூப்பிடலன்னு நெனக்காதீங்க. நான் மட்டும் வீட்டுல தனியா இருக்கறதால இந்த நேரத்துல நாம ரெண்டு பேரும் சேர்ந்து வீட்டுக்கு போனா தப்பா படும். அதனால….” என்று புவி முடிப்பதற்குள்,
“நோ ப்ராப்ளம் புவி. என்னால புரிஞ்சுக்க முடியுது. ஆனா, ஒரு நிமிஷம் ” என்றவனை, “என்ன?” என்பது போல பார்த்தவளிடம்,
அவள் கண்களை நேருக்கு நேர் பார்த்தவன், “எனக்கு உன்னை ரொம்பவே பிடிச்சிருக்கு புவி. என்னடா, இவன் திடீர்னு இப்படி பேசறான்னு நெனக்காத. ரொம்ப நாளாவே மனசுல இருக்கற விஷயம் தான். சரியான தருணத்துக்காக காத்துகிட்டு இருந்தேன்னு தான் சொல்லணும். பொதுவா, நானும் எல்லார்கிட்டயும் எப்பவும் ஜாலியா பழகற ஆளில்லை. அதனால தான் ஆஃபீஸ் சமயத்துல எதுவும் பேச வேண்டாம்னு நெனச்சேன். ஐ திங்க் வி போத் ஆர் மோஸ்ட்லி த சேம் , அண்ட் வாண்ட் டு ட்ராவல் வித் யூ ஃபாரெவர் இன் மை லைஃப்” என்றான் .
அவன் பேசி முடியும் வரை காத்திருந்தவள், உணர்ச்சிவசப்படாமல் “சாரி ரிஷி. எனக்கு இதுவரையில் அப்படி ஒரு எண்ணம் வரல. தப்பா எடுத்துக்காதீங்க. தயவு செஞ்சு மனசுல எதையும் தேவையில்லாம இனி நெனக்காதீங்க” என்றவள், “தேங்க்ஸ் ஃபார் ட்ராப்பிங் மீ” என்று சொல்லி விட்டு திரும்பிப் பார்க்காமல் கிளம்பிச் சென்றாள்.
முதிர்ச்சியான காதலாக இருந்தாலும், ‘நான் உன்னை வீட்டுல ட்ராப் பண்ணினா, நீ லைஃப்-ல என்னை நடுவழியில ட்ராப் பண்ணிட்டு போறயே புவி. நிதானமா முடிவெடுக்கற உன்னோட பொறுமையும், புத்திசாலித்தனமும் தான் உன் மேல உள்ள காதலுக்கே காரணம். உங்க வீட்டுல ஒரு பொறுப்பான பொண்ணா இருக்கற நீ, என்னோட மனைவியா மிஸஸ். ரிஷியா வந்தா ரொம்ப சந்தோஷப் படுவேன். ம்……பார்க்கலாம். காலம் தான் பதில் சொல்லணும்’ என்று வருத்தப்பட்டு தனக்குத் தானே நினைத்துக் கொண்டவன் வீட்டுக்கு கிளம்பிச் சென்றான்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings