2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“ஏட்டி, கனி! ஆம்பளைங்க இருக்க எடத்துல பொட்டச்சிக்கு என்ன வேல? உள்ள வா!” என்றாள் தெய்வானைக்கிழவி, அருகிலிருந்த வெண்கலத் துப்பாணியில் வெற்றிலையைத் துப்பிவிட்டு.
குங்கும வண்ணத்தில் ஆழ்ந்த அரக்கு நிற ஜரிகைக் கரை போட்ட காஞ்சிப்பட்டுப் பாவாடை சரசரக்க, இளஞ் சாக்கலேட் வண்ண தாவணி காற்றில் பறக்க, வைரக் கம்மலின் கீழே குடை ஜிமிக்கி, இராட்டினம் போல் சுற்ற உள்ளே வந்த கனி என்றழைக்கப்பட்ட அந்த தேன்கனிப் பாவை, “ஏன் ஆச்சி இப்படி கத்துத? அப்பா தான் கணக்கு பாக்க கூப்டாவ” என்றாள்.
“ஆமா நாங்க சின்னப்புள்ளையா இருக்கைலயாவது, யாவாரிக பெரிய தராச தூக்கிக்கிட்டு வந்து தார்ஸாவுல உத்தரத்துல தொங்கப் போட்டு, வூடு நெறய அடஞ்சு வச்ச பருத்திய, திணிச்சி திணிச்சி வச்சி ஒண்ணு… ஒண்ணு… ஒண்ணு… ரெண்டு… ரெண்டு… ரெண்டு… னு ஓராயிரம் தடவ நிறுத்துக் கொட்டுவாவ. லட்ச ரூவான்னாலும் ஒங்கப்பா அசால்டா மனக்கணக்கு போட்டு எண்ணி வாங்குவாவ. சின்னப்புள்ளையா வேடிக்க பாத்துக்கிட்டு இருந்த நான் மாமனுக்கே வாக்கப்பட்டு, இந்த வூட்டுக்கு வந்த இம்புட்டு நாளும், கோடிக்கணக்குல பணம் வந்தாலும் ஒங்கப்பா தன்னந்தனியா எண்ணி இரும்பு பொட்டில அடுக்கிருவாவளே, இப்பொ இந்த புது எட மிஷின வச்சிகிட்டு, மூட்ட மூட்டயா நிறுத்து போடதுக்கா ஒன்ன கூப்பிடப் போறாவ? போட்டி… வேலயப் பாத்துக்கிட்டு” என்றாள் அம்மா.
“ஏம்மா, அந்தக் கெழவி தான் சொல்லுதான்னா, ஒனக்கு என்னப் பத்தி தெரியாதா? நான் என்ன வேணுமின்னா அங்கன போயி நிக்கப் போறேன்? எவன் மொவத்தையாவது யேறெடுத்து பாத்துருப்பனா? என்னம்மா இப்படி பேசிப்புட்ட” என்றாள் ஆத்திரம் கொப்புளிக்க, கண்களில் நீர் வழிய.
“சரி!சரி! அழாத! ஏதோ தெரியாம சொல்லிப்புட்டேன்” என்றாள் அம்மா.
ஆனாலும் சமாதானமடையாமல் கட்டிலில் போய்க் குப்புறப் படுத்துக் கொண்டாள், கனி.
“போங்கடி! பொசக்கெட்டவளுகளா!” என்ற தெய்வானைக்கிழவி தாடையைப் புஜத்தில் இடித்துக் கொண்டு, மறுபடியும் வெற்றிலைப் பெட்டியிலிருந்து கொழுந்து வெற்றிலையையும், கொட்டப் பாக்கையும் தேர்ந்தெடுத்து, காம்பு கிள்ளி உழக்கில் போட்டு இடிக்க ஆரம்பித்தாள்.
கனியின் தந்தை அந்தப் பகுதியின் மிகப் பெரிய நிலச்சுவான்தார்; மிகப் பெரிய அரசாங்க ஒப்பந்தக்காரர். அந்த ஊரில், “கல்யாணமோ, காடாத்தோ கொழந்தையப்பன் துட்டுல்லாம ஒண்ணும் நடக்காது ஓய்!” என்பார்கள். காவல்துறை அந்த ஊருக்குள் வந்ததில்லை. குழந்தையப்பன் பஞ்சாயத்துத்து தீர்ப்புக்கு மறுபேச்சு பேசுவாரில்லை.
அந்த ஊரில் ஐந்தாம் வகுப்பு வரைதான் இருக்கிறது. கனியை பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஸ்ரீவைகுண்டம் அனுப்பி படிக்க வைத்தார்கள். படிப்பில் எப்போதும் முதல் மதிப்பெண்தான் வாங்குவாள். கணக்கில் புலி. படிக்காமலே அவளது தந்தை மனக்கணக்கிலேயே மகுடம் சூட்டிய திறன், அவள் மரபணுவிலேயே வந்திருந்தது போலும்.
“கனியா? மெஷின் மாதிரி கணக்கு போடுவாளே. அவ்ளோ ஸ்பீடா போட்டாலும், ஒரு தப்பும் கண்டுபிடிக்க முடியாது” என்று பெருமிதப்படும் அவள் ஆசிரியை சரஸ்வதி, அவள் பத்தாம் வகுப்பு முடித்தவுடன் அவளிடம்,”நீ இங்க இருக்க வேண்டிய ஆளில்ல கனி. லெவன்த்க்கு சென்னைக்குப் போ, ஜே,ஈ.ஈ. கோச்சிங் எடு. கண்டிப்பா ஐஐடிக்குப் போவ” என்றார்.
அவள் அம்மாவிடம் கேட்டதற்கு,”வாயப் பொத்துட்டி. அப்பா காதுல கேட்டா உரிச்சி தொங்க வுட்ருவாவ. பொம்பளப் புள்ளய தனியா யாராட்டும் மெட்ராஸுக்கு அனுப்புவாவளா?” என்றாள்.
அப்போது கனிக்கும் அவ்வளவாக விவரம் புரியாததால்,”அப்பா மெட்ராஸுக்கெல்லாம் அனுப்பமாட்டாவ, டீச்சர்” என்று கூறிவிட்டாள்.
“நான் வேணா உங்க வீட்ல வந்து பேசவா? ” என்று கேட்டதற்கும், “வேண்டாம் டீச்சர். அப்பா ஒத்துக்க மாட்டாவ, நான் இங்கியே படிக்கேன்” என்ற கூறிவிட்டாள்.
ஆனாலும் சமாதானமடையாத அவள் ஆசிரியை சரஸ்வதி, ஜே.ஈ.ஈ. பயிற்சிக்கென்றே ஆந்திரா சென்று படித்த தன் அண்ணன் மகனின் புத்தகங்கள், பயிற்சி தாள்கள் எல்லாவற்றையும் எடுத்து வந்து தனக்கு தெரிந்த அளவில் கனிக்கு சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தார். ஆச்சரியப்படத் தக்க விதமாக அதன் அடிப்படைகளை புரிந்து கொண்ட கனி ஆசிரியையால் தீர்க்க முடியாத கணக்குகளையும், “இது இப்டித்தானே வரும் டீச்சர்?” என்று சுலபமாகத் தீர்த்தாள்.
இன்ப அதிர்ச்சியடைந்த அவள் ஆசிரியை,”இப்பப் புரியுதா கனி? ‘நீ இங்க இருக்க வேண்டியவ இல்லண்ணு’ நான் ஏன் சொன்னேன்னு?. ஐஐடில படிக்கறது இந்தியாவிலயே பெருமையான ஒண்ணு. எத்தன பேரோட கனவா இருக்கு தெரியுமா, அது? பல பேருக்கு அது வெறுங் கனவாவே போய்டுது. ஆனா உன்னால ரொம்ப ஈஸியா அச்சீவ் பண்ணமுடியும்” என்று சொன்னதோடு, அது குறித்த காணொலிகளையும் போட்டுக் காண்பித்தார்.
கனிக்கும் தானொரு சுந்தர் பிச்சை மாதிரியோ, ரகுராம் ராஜன் மாதிரியோ ஆகவேண்டும் என்ற ஆசை பிறந்தது. சரஸ்வதி டீச்சர் கொடுத்த பயிற்சித் தாள்களை ஒன்று விடாமல் போட்டுப் பார்த்தாள். புரியாதவற்றை வலைத்தளங்களில் தேடிப் பயின்றாள். அப்போதும் தீராத சில ஐயங்களை சரஸ்வதி டீச்சர் தன் அண்ணன் மகனிடம் கேட்டுத் தெளிவித்தார்.
ஆனால், முதன்மைத் தேர்வு எழுத சென்னை செல்ல வேண்டியிருந்தபோது, மறுபடியும் பிரச்சினை எழுந்தது. சரஸ்வதி டீச்சர் தானே சென்னைக்கு உடன் அழைத்துச் செல்வதாகக் கூறியதாலும், அவள் தந்தை ஒரு ஒப்பந்தம் தொடர்பாக, அதே நாளில் அமைச்சரை சந்திக்க வேண்டியிருந்ததாலும், பிரச்சினை தீர்ந்தது.
அதில் மிக நல்ல மதிப்பெண்கள் பெற்றதால், அதையே காரணம் காட்டி அடுத்தநிலைத் தேர்வுக்கும் அழைத்துச் சென்றார்.
சென்னை ஐ.ஐ.டி.யிலேயே இடம் கிடைத்ததும் மீண்டும் பிரச்சினை தலைதூக்கியது.
“என்ன, ஐ.டி. படிக்கப் போறயா? காலம் கெட்டுக்கெடக்கு. ஐ.டி. ல வேல பார்க்கிறவங்க எல்லாம் பெத்தவங்கள மதிக்கமாட்டாம, லவ் பண்ணுறாவளாம். கல்யாணம் கட்டாம சேர்ந்து இருக்காவளாம். கல்யாணம் கட்னாலும் ஒடனே டைவர்ஸ் பண்ணிக்கிறாவளாமே!. இது வெவுளிப் பொண்ணு. கெட்டுப் போயிரும். நம்ம பாளையங்கோட்டைல இல்லாத காலேஜா? ஏதோ ‘ஆக்ஸ்ஃபோர்டு ஆஃப் சௌத் இந்தியா’ னெல்லாம் சொல்லுதாவளே! வேணுமின்னா ஏதாவது டிகிரி படிச்சிட்டு அரசாங்க உத்தியோகத்துக்கு போவச் சொல்லு!” என்றார் எல்லாந் தெரிஞ்ச ஏகாம்பரம்… சே… குழந்தைசாமி.
“சார், நீங்க பெரியவங்க. தயவுசெய்து நான் எதிர்த்து பேசறேன்னு நினைச்சிறாதீங்க. இது ஐ.டி. இல்ல, ஐ.ஐ.டி. இந்தியாலயே ரொம்பப் பெரிய பெருமைமிக்க இன்ஸ்டிடியூட். டிரை பண்ற பத்து லட்சம் பேர்ல ஒருத்தருக்குதான் கிடைக்கும். அதில படிச்சிட்டு மிகப் பெரிய நிறுவனங்கள உருவாக்கினவங்களும் இருக்காங்க. ஐ.ஏ.எஸ். ஆனவங்களும் இருக்காங்க. அப்படியே கெட்டுப் போறப்பொண்ணுங்களா இருந்தா, எங்க இருந்தாலும் கெட்டுப் போவாங்க. நீங்க வீட்டுக்குள்ளயே பூட்டிப் போட்டாலும் கெட்டுத் தான் போவாங்க. வேலைக்காரன கூட்டிட்டு ஓடிப் போனவங்கள பத்தி கேள்விப்படலையா? சோஷியல் மீடியால லவ் பண்ணிட்டு தேசத்த விட்டு ஓடிப் போனவங்க கூட இருக்காங்க. அதே சமயத்துல பொன்னுங்க அரசியல்லயும் சாதிக்கிறாங்க. அரசாங்கத்துலயும் கலக்கறாங்க, ‘சந்திராயன்’,’ஆதித்யா’னு விண்ணைத் தாண்டியும் சாதிச்சிட்டிருக்காங்க. கனி வெகுளியா இருந்தாலும் புத்திசாலிப் பொண்ணு. உங்க பொண்ணாச்சே(ஐஸ்! ஐஸ்!). இன்னமும் தேவைனா யாருகிட்ட எப்படி நடந்துக்கணும்னு தெளிவா சொல்லிக் கொடுத்து, முடிஞ்சா தற்காப்புக் கலையும் கத்துக் கொடுத்து வெளி உலகத்துக்கு தைரியமா அனுப்புங்க, சார். நிச்சயமா உங்களுக்கு மிகப் பெரிய பெருமைய தேடித் தருவா!” என்றார் சரஸ்வதி டீச்சர்.
வெற்றிலையை வேகமாக துப்பாணியில் துப்பிவிட்டு, “பெரும வேணுமின்னா… இருக்க சொத்துக்கும் பவுசுக்கும், பெரிய கலெக்டரா பாத்து கட்டி வச்சா போவுது” என்றாள் தெய்வானைக் கிழவி.
“ஆச்சி! தயவுசெஞ்சு சும்மா இரு. அம்மா, டீச்சர் சொன்னத கேட்டல்ல, நாட்டாமைய தீர்ப்ப மாத்தி எழுத சொல்லும்மா!” என்றாள் கனி.
அம்மா பயத்தோடு தந்தையை நோக்க, அவரோ வாய் விட்டு சிரித்துக் கொண்டிருந்தார்.
“நீ எம்மவளாச்சே! சாதிப்பல! தைரியமா கௌம்புல!” என்றார் கனியைப் பார்த்து.
தெய்வானைக்கிழவி தாடையைப் புஜத்தில் இடித்துக் கொண்டு, மறுபடியும் வெற்றிலைப் பெட்டியிலிருந்து கொழுந்து வெற்றிலையையும், கொட்டப் பாக்கையும் தேர்ந்தெடுத்து, காம்பு கிள்ளி உழக்கில் போட்டு இடிக்க ஆரம்பித்தாள்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings