2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“த பாரு தியாகு!… ஏதோ பழகின தோஷத்திற்காக நான் வந்து இலவசமாக வைத்தியம் பார்த்துட்டுப் போறேன்!… அதுக்காக மருந்து மாத்திரையெல்லாம் நானே இலவசமாய்க் கொடுக்கணும்னு நீ எதிர்பார்க்கிறது தப்புப்பா!… ஸாரி… என்னால முடியாது” சொல்லியபடியே தன் மெடிக்கல் கிட்டைத் தூக்கிக் கொண்டு வெளியே நடந்த டாக்டரின் பின்னால் நாய்க்குட்டி போல் ஓடினான் தியாகு.
“டாக்டர்… டாக்டர்!… கையில ஒத்தைப் பைசா கூட இல்லாம வெத்து ஆளா நிக்கறேன் டாக்டர்!… இவ்வளவு மருந்துகளை நான் எப்படி வாங்குவேன்?… யார் கிட்டப் போய் கடன் கேட்டு நிற்பேன்?” அழுதே விடுவான் போல் கெஞ்சினான் தியாகு.
அவன் கெஞ்சலை சிறிதும் சட்டை செய்யாமல் தன் ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து பறந்த டாக்டரை வெறித்துப் பார்த்தபடி சிலையாய் நின்றான் தியாகு.
சில நிமிடங்களுக்கு பிறகு திரும்பவும் வீட்டிற்குள் வந்தவன் கட்டிலில் கிழித்துப் போட்ட நாராய் துவண்டு கிடக்கும் தாயைப் பார்த்தான். ஏறி இறங்கும் அந்த எலும்புக்கூட்டு நெஞ்சைப் பார்க்கையில் அவனையுமறியாமல் வேதனை பீறிட்டது. “ஐயோ அம்மா!… உனக்கு வைத்தியம் பார்க்கக் கூட வக்கில்லாத இந்தக் கேவலமான ஜந்துவை எதுக்கம்மா பெற்றெடுத்தே?… நீ உன்னோட ரத்தத்தை தாய்ப்பாலாய்க் கொடுத்து என்னை வளர்த்தே!… ஆனால் நான்…?”
சட்டென்று அவன் மூளைக்குள் ஃப்ளாஷ் அடித்தது.
“மிஸ்டர் தியாகு!… உங்களோட பிளட் குரூப் ரொம்ப ரொம்ப அரிதான குரூப்!… ஸோ.. நீங்க தேவையில்லாம உங்க பிளட்டை டொனேட் பண்ணாதீங்க!… அந்த குரூப் அவசரமாகத் தேவைப்படும் போது மட்டும் டொனேட் பண்ணுங்க!… உங்க பிளட்டுக்கு டைமண்ட் வேல்யூ இருக்கு!” எப்போதே ஒரு முறை ரத்ததான முகாமிற்கு பிளட் டொனேட் பண்ணச் சென்றிருந்த போது அங்கிருந்த ஒரு டாக்டர் சொன்னது இப்போது அவன் காதில் எதிரொலித்தது.
“என்னோட ரத்தத்துக்கு வைரத்தின் மதிப்பு இருக்கு”ன்னு சொன்னாரே?… அப்ப அதை வித்தா காசு கிடைக்குமா?” ஓடினான் அந்த தனியார் மருத்துவமனையை நோக்கி.
“என்னது உங்க பிளட் குரூப் ஏஒன்பி நெகடிவா?”
“ஆம்” என்று தலையாட்டினான் தியாகு.
“ஓ… காட் ஈஸ் கிரேட்!” என்றபடி அவசரமாய் எழுந்த அந்த லேடி டாக்டர் தியாகுவை நெருங்கி வந்து, “சார் ஒரு அவசர ஆபரேஷனுக்காக இந்த குரூப் ரத்தம் கிடைக்காம காலையிலிருந்து ஒரு கும்பல் அலைஞ்சிட்டிருக்கு!… கமான்… என் கூட வாங்க!” என்று சொல்ல,
“டாக்டர்!… இப்ப என்னோட அம்மா ரொம்ப உடம்பு முடியாம கிடக்கிறாங்க… அவங்களோட மருத்துவச் செலவுக்காக அவசரமா பணம் தேவைப்படுது!…” ரத்ததானம் என்னும் உயிர் சேவைக்குப் போய் பணம் கேட்கிறோமே? என்கிற அவமானம் அவன் வார்த்தைகளில் தெரிந்தது.
சில வினாடிகள் அவனை ஊடுருவிப் பார்த்த லேடி டாக்டர், “சரி அதைப் பற்றியெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்… முதல்ல ரத்தத்தைக் கொடுத்து அந்த உயிரைக் காப்பாற்றலாம்!… என்ன?”
“சரி டாக்டர்!”
டாக்டர் முன்னே நடக்க, அவரைப் பின் தொடர்ந்தான் தியாகு.
அடுத்த முக்கால் மணி நேரத்தில், தேவையான சோதனைகளுக்கு பிறகு, அவன் உடம்பில் இருந்த அந்த டைமண்ட் வேல்யூ பிளட் கணிசமான அளவு உறிஞ்சப்பட்டது.
அரை மயக்கத்தில் வராண்டா பெஞ்சில் அமர்ந்திருந்தவனை அந்த லேடி டாக்டர் தொட்டு உசுப்பினார். தியாகு மெல்லத் தலையைத் தூக்கி, சிரமப்பட்டு இமைகளைத் திறந்து பார்த்தான். எதிரே இருவர் நிற்பது மச…மச…வென்று தெரிந்தது. அதில் ஒருவர் அந்த லேடி டாக்டர் என்பது அந்த வெள்ளை உடுப்பில் தெரிந்தது. “சொல்லுங்க டாக்டர்” என்றான்.
“மிஸ்டர் தியாகு… ஆர் யூ ஓ.கே?”
“ஓகே டாக்டர்!… நான் நார்மலாகத்தான் இருக்கிறேன்” என்றவன் சட்டென்று ஞாபகம் வந்தவனாய், “டாக்டர்… வந்து அம்மாவுக்கு மருந்து வாங்கணும்… பணம் உடனே கிடைச்சா பரவாயில்லை” கெஞ்சலாய்க் கேட்டான்.
மெல்ல முறுவழித்த லேடி டாக்டர், “இதோ இவர் அதுக்காகத்தான் காத்திட்டிருக்கார்” என்று பக்கத்தில் நின்று கொண்டிருந்தவரைக் காட்ட அவரை உற்று நோக்கினான் தியாகு.
சஃபாரி உடையில் இருந்த மனிதருக்கு சுமார் முப்பத்திஐந்து வயதிருக்கும். முகத்தில் பணக்காரக்களை மின்னியது.
“சார்… எங்க அப்பாவுக்கு ரத்தம் கொடுத்து… அவருடைய ஹார்ட் ஆபரேஷன் சக்சஸ்ஃபுல்லா முடிய ஹெல்ப் பண்ணியிருக்கீங்க!… உங்களுக்கு எவ்வளவு கொடுத்தாலும் தகும் சார்!… கேளுங்க சார்… எத்தனை ஆயிரம் வேணும்?… எத்தனை லட்சம் வேணும்?… கேளுங்க சார்” சஃபாரிக்காரன் உணர்ச்சி பொங்கப் பேச. தியாகுவிற்கு வாய் விட்டு கேட்க வெட்கமாக இருந்தது.
“என்ன இருந்தாலும் விலை பேசப்படுவது அவன் குருதியை அல்லவா? அவன் தாய் புகட்டிய தாய்ப்பாலின் பரிணாமம் அல்லவா?
“வந்து… சார்… எங்க அம்மாவுக்கு ரொம்ப உடம்பு சரியில்லை!… அதான் எனக்கு வேற வழி தெரியலை!” தன் நிலைமையை பரிதாபமாக வெளிப்படுத்தினான்.
“டாக்டர் எல்லாம் சொன்னாங்க!… சொல்லுங்க என்ன பண்ணனும் நான்?… உங்க மதரை இதே ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணி என்னோட செலவில் ட்ரீட்மென்ட் பார்க்கவா?”
“வேண்டாங்க… அதெல்லாம் வேண்டாங்க!… அவங்க இப்ப அந்த ஸ்டேஜைத் தாண்டிட்டாங்க!… ஏதோ இப்போதைக்கு மருந்து வாங்க… ஒரு ஐநூறு ரூபாய் இருந்தால் போதும்” என்றான் தியாகு.
“என்னது ஐநூறு ரூபாயா?… வெறும் ஐநூறு ரூபாயா?” சஃபாரிக்காரன் ஆச்சரியமாய்க் கேட்க,
“ஆமாம் சார்… அதுவே போதும் சார்”
மறு வார்த்தை பேசாமல் அந்த மனிதர் தன் சஃபாரி பாக்கெட்டிலிருந்து இரண்டு ஐநூறு ரூபாய்த் தாள்களை எடுத்து நீட்ட, அவசரமாய் வாங்கிக் கொண்டு அங்கிருந்து பறந்தான் தியாகு.
தன் வீட்டின் முன் நாலைந்து பேர் கும்பலாய் நிற்பதை தூரத்தில் இருந்தே கவனித்து விட்ட தியாகு “திடும்…திடும்” என அதிரும் நெஞ்சுடன் ஓடி வந்தான்.
“அடப் பாவி பயலே!… எங்கடா போய்த் தொலைஞ்ச?” பக்கத்து வீட்டுக் கிழவி இவனை பார்த்து ஒப்பாரி வைக்க, “என்ன பாட்டி… என்ன ஆச்சு அம்மாவுக்கு?” நடுங்கியது அவன் குரல்.
“நீ வருவே… கடைசியா உன் முகத்தை ஒரு தரம் பார்த்திட்டுப் போகலாம்னு… போகத் துடிக்கிற உசுர இழுத்துப் பிடிச்சு வெச்சிட்டிருக்கா… உன்னைப் பெத்தவ!… போட… சீக்கிரமாப் போய் பாருடா” பாய்ந்தான் வீட்டிற்குள்.
பெரிது பெரிதாய் மூச்சு விட்டுக் கொண்டு, அலை பாயும் கண்களுடன் கிடந்த அம்மாவின் முகத்தருகே குனிந்து, “அம்மா” என்றவாறு அந்தக் குச்சி கைகளைப் பற்றிக் கொண்டு. அது வரையில் தாறுமாறாக அலை பாய்ந்து கொண்டிருந்த விழிகள் சட்டென்று இவன் குரல் வந்த திசையில் நிலைக்குத்தி நின்றன. வாய் மட்டும் மழைக்காலத் தவளை போல் திறந்து திறந்து மூடிக் கொண்டிருந்தது.
“அடேய்… பெத்தவளுக்குக் கடைசிப் பால் ஊத்து ராசா” யாரோ சொல்ல,
சட்டை பாக்கெட்டில் கையை விட்டு ஒரு ஐநூறு ரூபாய்த் தாளை எடுத்து யாரிடமோ கொடுத்து, “சீக்கிரமாய்ப் போய் பால் வாங்கியாங்க” என்றான் தியாகு.
ஐந்தே நிமிடத்தில் பால் வந்ததும் தன் குருதியைப் பாழாக்கி தனக்கு வார்த்த அந்தத் தாய்க்கு தன் குருதியை, விற்ற பணத்தில் இறுதிப் பால் புகட்டித் தன் பால் கடன் தீர்த்தான் தியாகு.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings