2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“எனக்குன்னு தான் இப்படி ஒரு மனுஷன் வாச்சிருக்காரு…” செல்லம்மா ஆரம்பித்து விட்டால், இனி இப்போதைக்கு ஓய மாட்டாள் என்பது தெளிவாக தெரிந்தது ராகவனுக்கு.
“கதிரேசனும் உங்க பேட்ச் தானே.. மனுஷன் என்ன கெட்டிக்காரத்தனமா தாம்பரத்து பக்கத்துல ரெண்டு கிரவுண்ட் இடம் வாங்கி போட்டிருக்காரு.. பூமி பூஜை போடப் போறாங்களாம்.. எப்படி மனுஷன் சம்பாதிக்கிறாரு ” முணுமுணுப்பாக ஆரம்பித்த செல்லம்மாவின் குரல் மெல்ல உயர்ந்தது.
கதிரேசனும், ராகவனும் ஒரே ஊர்க்காரர்கள். ஒரே பள்ளியில் படித்து, ஒன்றாக போலீஸ் வேலைக்கு தேர்வானவர்கள். ஆரம்பத்தில் வெவ்வேறு இடங்களில் வேலை பார்த்தபின், இன்ஸ்பெக்டராக சென்னையில் வந்து செட்டில் ஆகிவிட்டார்கள். ஒரே ஏரியாவில் அடுத்தடுத்த தெருவில் வசித்து வந்தார்கள்.
கதிரேசன் மகன் மகேஷ், பெண் ஹம்ஸா, இருவரும் பள்ளி உயர் வகுப்பு படித்தார்கள். ராகவன் ரெண்டு பெண்களில், மூத்த பெண் சுபா முதல் வருடம் கல்லூரியிலும், சின்னவள் கவிதா ப்ளஸ் டூ வும் படித்துக் கொண்டிருந்தார்கள் ..இரண்டு குடும்பத்தினரும் ஒருவருக் கொருவர் பாசமாக இருப்பார்கள்.
நண்பர்கள் இருவரும் நட்போடு வாழ்ந்தாலும், வாழ்க்கையில் இருவரும் எதிர் எதிர் கொள்கைகள் கொண்டவராக இருந்தனர்.ராகவன் நேர்மையை உயிராக மதிப்பவர். அதை உத்யோகத்திலும் கடைப்பிடித்தார். ஒரு பைசா கூட யாரிடமும் கைநீட்டி வாங்குவதில்லை .
ஆனால் கதிரேசன் தானாக வசூல் பண்ணாவிட்டாலும், வருவதை வாங்கி போட்டுக்கொள்ள தயங்க மாட்டார். அதே போல பதவியின் மரியாதையால் வெளியே கிடைக்கும் சலுகைகளையும் பயன்படுத்திக் கொள்ளுவார். அதனால் அவரால் வசதியான வாழ்க்கை வாழ முடிந்தது.
கதிரேசன் விரைவில் வீடு கட்டி கிரகப்பிரவேசத்தை ஆடம்பரமாக நடத்தினார்..நிறைய பெரிய மனிதர்களை அழைத்ததால் விலை உயர்ந்த பரிசுகள் குவிந்தன ..வீட்டின் வேலைகள் எல்லாம் முடிந்த பின், புது வீட்டிற்கு கதிரேசன் குடும்பத்தினர் குடிபோய் விட்டார்கள்.
காலம் மெல்ல உருண்டோடியது. ராகவன் டி.எஸ்.பி ப்ரமோஷனில் மதுரையில் லஞ்ச ஒழிப்புத்துறையில் பொறுப்பெடுத்துக் கொண்டார். கதிரேசன் சென்னையில் ப்ரோமோஷனில் சட்டம் ஒழுங்கு துறைக்கு மாறிக் கொண்டார். கதிர் மகள் ஹம்ஸாவின் திருமணத்தை மிகவும் தடபுடலாக நடத்தினார். ராகவன் குடும்பத்தோடு போய் கலந்து கொண்டார்.
வீட்டுக்கு வந்ததுமே, செல்லம்மா மெல்ல ஆரம்பித்தாள்…
” ஏங்க… நம்ம சுபா.. ஹம்சாவை விட மூத்தவ… இந்த வருஷம் அவளை கல்யாணம் பண்ணி கொடுத்தால் தான் சின்னவளுக்கு ரெண்டு வருடத்தில் பண்ண சரியாக இருக்கும் “என்றாள்.
” கண்டிப்பா வரன் பாத்துடுவோம் செல்லம்மா. தரகர வரச் சொல்றேன். கதிர் ஹம்சாவிற்கு 100 பவுன் போட்டான். நமக்கு முடிந்தது ஒரு 40 -45 பவுன் தான் “என்றார்.
பூர்வீக வீட்டை விற்று கிரயம் செய்து பணமாக்கிக் கொண்டார். கூடிய விரைவில் நல்ல வரன் ஒன்று வந்தது. அதுவேணும்.. இது வேணும்.. என்று லிஸ்ட் போடாமல்,” உங்க பொண்ணுக்கு நீங்க விரும்பியத செய்யுங்க” என்று பிள்ளை விட்டார் பெருந்தன்மையாக கூறிவிட்டார்கள் .
கதிர் அளவுக்கு தடபுடலாக செய்ய முடிய விட்டாலும் தன்னால் முடிந்த அளவு நன்றாக செய்து, சிறப்பாக சீரும் செய்து மகளை மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பினார் ராகவன். கல்யாணத்திற்கு கதிரேசனும் அவன் குடும்பத்தினரும் வந்திருந்தனர்.
அடுத்த ஒரு வருடத்தில் சுபா பிரசவத்திற்கு தாய்வீடு வந்தாள். அந்த சமயம் கவிதாவிற்கும் நல்ல இடத்திலிருந்து பெண் கேட்டு வந்திருந்தார்கள். பெரியவர்கள் பேசி முடித்து சுபாவிற்கு குழந்தை பிறந்த பிறகு, கவிதா கல்யாணத்தை வைத்துக் கொள்வது என்று முடிவு செய்தார்கள்.
அதுபோலவே சுபாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. மூன்று மாதம் ஆன பிறகு, குழந்தைக்கு பேர் வைத்து, அவள் புகுந்த வீட்டிற்கு போன பிறகு ..கவிதாவின் கல்யாண வேலைகளை ஆரம்பித்தார்.
கதிர் ஒரு நாள் போனில் ராகவனை அழைத்தார்…
” என்னப்பா எப்படி இருக்க? பிள்ளைகள் எல்லாம் எப்படி இருக்காங்க ..வீடு கட்டிக்கிட்டிருக்கேன்னு இந்திரா சொன்னா ..”
“ஆமாம்பா.. ரிட்டயரான பிறகு வாடகை குடுத்து முடியாது. அதனால அப்பாவோட இடம் ஒன்னு இருந்துச்சு.. அதிலியே ஒரு சின்ன வீடா கட்டிக்கிட்டிருக்கேன்..”
” கவிதா கல்யாண வேலையெல்லாம் நடக்குதா ராகவா .. மாப்பிள வீடு எப்படி?”
” தெரிஞ்ச குடும்பம் தான் கதிரு.. ஒரே பிள்ள தான் பெம்பளபிள்ள கிடையாது. அதனால கவிதாகிட்ட ரொம்ப பிரியமா இருக்காங்க. அவ கடமையும் முடிஞ்சிட்டா எனக்கு நிம்மதியா இருக்கும்..கல்யாண காகிதம் அனுப்புறேன்..நீ, இந்திரா, பிள்ளைங்க எல்லாரும் வந்துருங்க” என்றார்.
” கண்டிப்பாப்பா… கவிதா என் பொண்ணு மாதிரி வராம இருப்பனா .” என்றவர், சொன்னது போலவே குடும்பத்துடன் கவிதா கல்யாணத்தில் கலந்து கொண்டார் .
அதன் பிறகு சில வருடங்கள் அடுத்தடுத்து இருவருக்கும் வேலைகள் இருந்ததால், ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள முடியவில்லை.
வேலை முடித்து வந்து உட்கார்ந்த செல்லம்மாவிடம்… ” ” “செல்லமா.. கதிர் ரிட்டயராயிட்டான். பாத்து ரொம்ப நாள் ஆச்சு ஒரு நடை சென்னைக்குப் போய் அவனை பார்த்துட்டு வருவோமா?”
செல்லம்மாள் அமோதிக்க.. அந்த வாரக் கடைசியிலேயே கதிர் வீட்டுக்கு கிளம்பினார். செல்வச் செழிப்போடு இருந்தது கதிர்வீடு. சாப்பாடும் தடபுடலாக இருந்தது. மதியம் சாப்பிட்டு விட்டு ஓய்வெடுத்தனர் . சாயங்காலம் நண்பர்கள் இருவரும் ” “காலார நடந்து விட்டு வருகிறோம்” என்று கிளம்பினர். பக்கத்தில் இருந்த முருகன் கோயிலுக்கு போய் சாமி கும்பிட்டு விட்டு பிரகாரத்தில் அமர்ந்தனர்.
” ஏம்பா கதிர்..மகேஷ காலையிலிருந்தே பாக்கலையே, உன் கூட இருப்பதாக தான சொன்ன.. எங்க காணும்? “
“அத ஏம்பா கேக்குற? அவன் ஒழுங்கா ஒரு வேலையில இருந்தான். இப்ப அதயும் விட்டுட்டான். சொந்தமாக தொழில் பண்ணப் போறேன்னு ஒத்தக் கால்ல நிக்கிறான். பத்து லட்ச ரூபாய் கேட்டான்.. கொடுத்ததெல்லாம் நஷ்டம். மேலும் மேலும் பணம் கேட்கிறான். இல்லைன்னு சொன்னதும் கோச்சுகிட்டு வெளியில போய் தங்கியிருக்கான். சகவாசமும் சரியில்ல.. ஒரு கல்யாணம் பண்ணி வச்சா திருந்திடுவான்னு இந்திரா சொல்றா. ஆனா இவனை நம்பி யார்கிட்ட பொண்ணு கேட்க முடியும்? இன்னொரு பொண்ணோட வாழ்க்கையையும் வீணாக்குற மாதிரி ஆயிடாதா ?” என்றார் வருத்தமாக
பேச்சை மாத்த ” ஹம்சா.. பேத்தி.. எப்படிப்பா இருக்காங்க? ” என்றார் ராகவன்.
“அத ஏன் கேட்கிற ராகவா…அவள கொடுத்த இடமும் சரியில்ல. பணப்பேய்ங்க எப்ப பார்த்தாலும்’ பணம் பணம்’ன்னு பிடுங்கி எடுக்கிறாங்க.. அவள நல்லா வச்சுக்கிட்டா கூட பரவாயில்ல.. அதுவும் இல்ல… மாப்பிள்ள குணம் மோசம்… அவர சமாளிக்கவே இவ எப்போதும் போராட வேண்டி இருக்கு. பிள்ளைய வீட்டுல விட்டுட்டு வேலைக்குப் போறா. ரெண்டு பிள்ளைகளாலும் எனக்கு நிம்மதி இல்லை” என்றவர் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார்.
நண்பனை சமாதானபடுத்த தோன்றாமல், அதிர்ந்து போயிருந்தார் ராகவன்.
” கதிரேசா நீ நல்லா இருக்கேன்னுல நினைச்சுகிட்டு இருந்தேன். நீ இவ்வளவு மனசு நொந்து போய் இருக்கியே. நீ என்கிட்ட போன்லையாவது பேசியிருக்கலாமே “
” சரி விடுப்பா ரொம்ப நாளைக்குப் பிறகு பார்க்கிறோம்.. என் கதை எதுக்கு? சுபாவும் கவியும் எப்படி இருக்காங்க? ”
சம்பந்திகள் இருவரும் நல்ல மாதிரி ..மாப்பிள்ளைகள் சொக்கத் தங்கம். இருவரும் ஒரு குறையும் இல்லாமல் ராணி மாதிரி வாழ்கிறாங்க என்று எப்படி நண்பனிடம் சொல்ல என்று தயக்கத்துடன்…
” ரெண்டு பேரும் நல்லா இருக்காங்கப்பா… ஒரு குறையும் இல்ல” என்று முடித்துக் கொண்டார்.
கதிரேசன் ” ராகவா நீ நேர்மையா உழைச்ச .உன் குடும்பத்தை காப்பாத்த.. அதுதான் உன் குடும்பத்தை காப்பாத்துது. நான் அப்படி இப்படி சம்பாதிச்சேன்.. என்ன புண்ணியம்? நான் செஞ்சது அந்த நேரத்தில் எனக்கு சரியாக பட்டுச்சு. இப்ப பாரு அந்த பணமும் நிலைக்கல..பிள்ளைகளும் கஷ்டப்படுதுக. அதுகளால நாங்களும் நிம்மதி இல்லாம தவிக்கிறோம். எத்தனை பேர் வயிற்றெரிசல்ல சம்பாதிச்சது. இன்னைக்கு நான் அனுபவிக்கிறேன்” என்றார் வருத்தத்துடன்.
அவரை தேற்றும் வழியறியாது, ராகவன் திகைத்துப் போய் அமர்ந்திருந்தார். வாழ்க்கையின் போக்கில் லேட்டாக இருந்தாலும், நேர்மையின் வலிமையை தன் நண்பன் புரிந்து கொண்டது ஆறுதலாக இருந்தாலும், அவரது இன்றைய நிலைமையை நினைக்க மனது கனத்தது. நிமிர்ந்தவர் கண்களில் சன்னதி பட்டது.. முருகன் அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்..
“அவரவர் விதைத்ததை அவரவர் தானே அறுவடை செய்ய வேண்டும்” என்று அவன் கையில் இருந்த வேல் அவர்களைப் பார்த்துக் கூறுவது போல தோன்றியது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings