2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
‘ஒரு வடையும் ஒரு டீயும் கொடுப்பா… ‘ என்றபடி அங்கே கிடந்த பெஞ்சில் வந்து உட்கார்ந்தார் ஒருவர்.
வடைப் போட்டுக்கொண்டிருந்த மாஸ்டர், ‘ அண்ணே… ஒரு ரெண்டு நிமிஷம் பொறுங்கண்ணே… இதோ வெந்துக்கிட்டே இருக்கு… ‘ என்று பதிலளித்தார்.
வந்தவரோ தனது துண்டை எடுத்து உதறிக்கொண்டே, ‘ உஸ்… அப்பாடா… என்ன வெயிலு… என்ன வெயிலு… இந்த தையிலேயே இப்படி வெய்யில் தாக்குனா… சித்திரை வந்தா தாங்கமாட்டம் போலிருக்கே… ‘ என்று சலித்துக் கொண்டார்.
இரண்டு பேர் டீ குடித்துக்கொண்டிருந்தனர். இருவர் பேப்பர் பார்த்துக்கொண்டிருந்தனர். இவர் மேலோட்டமாய் படம் மட்டும் பார்த்துக் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டார்.
அங்கே, ஒரு சிறுவன் பந்தல்காலைப் பிடித்துக்கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
வடை வெந்துவிட்டது என்பதை உணர்ந்த மாஸ்டர் வடைகளை ஜல்லடைக் கரண்டியால் அள்ளி எண்ணையை வடியவிட்டு அப்படியே தூக்கிக் கொண்டுவந்து மேஜை மேல் இருந்த ட்ரேயில் ஆவி பறக்கக் கொட்டினார். அதுவரை வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டு நின்றிருந்த அந்தச் சிறுவன் புயல் வேகத்தில் ஓடி வந்து இரண்டு வடைகளை இரண்டு கைகளிலும் எடுத்துகொண்டு ஓட ஆரம்பித்தான்.
அதைக் கவனித்துவிட்ட வடை கேட்டு வந்தவர் திடுக்கிட்டுப் போய் சத்தமும் போட்டார். ‘அந்தப் பையன் வடையை எடுத்துக்கிட்டு ஓடறான் பாருப்பா… ‘
உடனே திடுதிடுவென்று வெளியே வந்து அவனைத் துரத்தினார் மாஸ்டர். வடையை எடுத்துக்கொண்டு ஓடுகிறான் என்று சொன்னவரும் எழுந்து ‘ விடாதே பிடி… ‘ என்று கத்திக்கொண்டே பின்னாலேயே ஓடினார்.
வேகமாக ஓடி தெரு முனையில் அவனை மடக்கிப் பிடித்த மாஸ்டர், அவனை தரதரவென இழுத்துக்கொண்டு வந்தார். புகார் சொன்னவரும் கூடவே ஓடிவந்தார்.
டீ மாஸ்டர் பரபரப்புடன், ‘ இதுக்காகத்தான் இந்தப் பய ரொம்பநேரமா ஒத்தக்கால்லேயே நின்னுக்கிட்டிருந்தானோ…. புதுசா இருக்கானே… முன்னே பின்னே இந்தப் பக்கம் பார்த்ததில்லையே… என்னடா விஷயம்னு நினைச்சுக்கிட்டிருந்தேன், திருட்டு நாயே… ‘ என்றபடி வெளியே வந்து வந்துகொண்டிருந்த அவர்களைப் பார்த்தார்.
முதுகில் அடி கொடுத்தபடியே அவனை இழுத்துக்கொண்டு வந்தார் மாஸ்டர். கூடவே ஓடிவந்தவரும், ‘ இந்த சின்ன வயசுலேயே எவ்வளவு திருட்டுத்தனம் பார்… ‘ என்று அவர் பங்கிற்கும் ஒரு அரை விட்டார்.
‘ரொம்ப நேரமா வெறிக்க வெறிக்க அவன் பார்த்துக்கிட்டு நிக்கும்போதே எனக்கு லேசா ஒரு சந்தேகம்… திருட்டு நாயி… சுடச்சுட வடை கேட்குதோ துரைக்கு… ‘ என்றபடி இன்னொருவன் எழுந்து குறுக்கே ஓடிப்போய் அவனது காதைப் பிடித்துக் கிள்ளினான்.
அதற்குள் கடையை நெருங்கிவிட்டு மாஸ்டர், ஒருவரைப் பிடித்துக்கொள்ளச் சொல்லி சிறுவனின் சட்டையைக் கழற்றி, ஒரு பந்தல் காலில் அவனது கையை பின்புறமாக மடக்கி கட்டிப்போட்டார்.
‘ போலீஸுக்கு போன் போடலாமா… ‘ என்றான் ஒருவன்,
‘இதுக்கெல்லாம் ஏன் அவங்களைக் கூப்பிடனும்… நாமளே நல்லா நாலுகுத்து குத்தி ஊமைக்காயமா ஆக்கி அனுப்பிச்சூடலாம்… ‘ என்றார் இன்னொருவர்.
‘ மாஸ்டர்.. முதலாளிக்கு போன் போட்டு சொல்லிடறியா… ‘ என்றான் டீ மாஸ்டர்.
முதலில் வடை கேட்டவர், ‘ஏம்பா… உங்க சண்டைல எனக்கு இன்னும் வடை தரலியே… ‘ என்றுவிட்டு தானே எழுந்து போய் ஒரு துண்டு பேப்பரை எடுத்து வடையை அதில் வைத்து ஒத்தி எடுத்துக்கொண்டு வந்து உட்கார்ந்தார்.
அதேநேரம் ஒரு புல்லட் பெருஞ்சத்தத்துடன் அங்கே வந்தது.
‘ இதோ அய்யாவே வந்துட்டார்… ‘ என்றான் டீ மாஸ்டர்.
கட்டிப்போடப்பட்டிருந்த சிறுவனைப் பார்த்து திகைத்தபடி… ‘ஏன்பா என்னாச்சு… ஏன் இந்தப் பையனை கட்டிப்போட்டிருக்கீங்க… ‘ என்றார் முதலாளி.
‘வடைய திருடிட்டு ஓடுனான் முதலாளி… புடிச்சுக்கிட்டு வந்து கட்டிப்போட்டிருக்கோம்… ‘ என்றான் டீ மாஸ்டர்.
‘அட…அதுக்குப் போயா இப்படி கட்டிப்போடுவீங்க… ‘ என்றபடி அவனது கட்டை அவிழ்த்துவிட்டு, போய் இரண்டு வடைகளையும் எடுத்து வந்து அவனிடம் கொடுத்துவிட்டு, ‘சாப்பிடு… ‘ என்றார். அவன் மலங்க மலங்க விழித்தபடி வடையை இரண்டு கைகளிலும் வாங்கிக் கொண்டான்.
‘பசில வாடறதே பாவம். நாம வேற திருட்டுன்னு சொல்லி அந்த பாவத்தை ஏத்துக்கணுமா…இந்த சின்ன வயசுல படிக்க அனுப்பாம ஏன்தான் பெத்தவங்க இப்படி படுத்துரான்களோ… ‘ என்று பரிதாபப்பட்டு பேசினார்.
முதலிலேயே வடை கேட்டு வாங்கியவர், அந்தக் காட்சிகளை அதுவரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்துவிட்டு அப்போதுதான் சுயநினைவுக்குத் திரும்பி வடையை பிய்த்து வாயில் வைத்தார். உடனே சத்தம் போட்டார். ‘மாஸ்டர்… என்னப்பா வடை போட்டிருக்கே… வடையில உப்பைக் காணோமேப்பா… ‘
திகைத்துப் போன முதலாளியும் ஒரு வடையை எடுத்து வாயில் வைத்து மென்றுப் பார்த்துவிட்டு, ‘ மணி… என்னடா வேலை பண்றே… படையலுக்கா வடை போடறே… மாவை பிசஞ்சதும் வாயில வச்சு ருசி பார்க்க மாட்டியா… ச்ச்சே… மனுஷன் திம்பானா இதை… ‘ என்றபடி அந்த டிரேயை அப்படியேத் தூக்கிக்கொண்டு போய் குப்பைத் தொட்டியில் கொட்டினார். திரும்பிவந்து, ‘இதுக்கு உண்டான பணத்தை உன் சம்பளத்துல பிடிச்சாத்தான் சரிப்பட்டு வருவே… ‘ என்று உறுமினார் மாஸ்டரைப் பார்த்து.
யாரும் எதிர்பாராதவிதமாக, அந்தச் சிறுவன் ஓட்டமாய் ஓடிப்போய் குப்பைத் தொட்டியில் கிடந்த வடைகளில் நான்கைந்தை அள்ளி தனது மேல்சட்டையை மடித்து அதில் வைத்துக்கொண்டு ஓட்டமெடுத்தான்.
இப்போது யாரும் சத்தம் போடவுமில்லை… துரத்தவுமிவில்லை.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
வடையின் ருசி தின்றவனுக்கே தெரியும்