2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பத்து வருடங்கள் கழித்து ஒரு கோவில் உட்பிரகாரத்தில் வைத்து மல்லிகாவை சந்தித்தேன். ஆமாம், பத்து வருடங்களுக்கு முன்பு நாங்கள் இருவரும் காதலித்தோம். கல்யாணம் வரை வந்தது. என் வீட்டில் ஒத்துக் கொண்டார்கள். ஆனால் அவளது வீட்டில் ஒத்துக் கொள்ளவில்லை. திடீரென்று அவளது மாமன் பையனுக்கு கட்டி வைத்து விட்டார்கள். நான் துவண்டு போனேன். மாற்றல் வாங்கிக்கொண்டு அந்த ஊரைவிட்டும் போனேன்.
பிறகு இப்போதுதான் பார்த்தேன். அப்படியேதான் இருந்தாள். ஓரிரண்டு முடிகள் மட்டும் லேசாய் நரைத்து தனியே தெரிந்தன. மற்றபடி அன்றைக்கு பார்த்த அதே மல்லிகா… அப்படியே… என் உள்ளுக்குள் ஒரு சிலிர்ப்பு. அது அவளுக்கு இருந்திருக்க வாய்ப்பில்லை. அவள்தான் அவளது அப்பா பார்த்த மாப்பிள்ளையை கட்டிக்கொண்டிருப்பாளே.
‘எப்படி இருக்கிறீர்கள்… ‘ என்றாள். தொனியில் லேசாய் கவலை தோய்ந்திருப்பதாக உணர்ந்தேன். ஆனால் எனக்குத்தான் பதில் சொல்ல வாய்வரவில்லை.
‘இருக்கிறேன்… ‘ என்றுமட்டும் சொன்னேன். நிமிடங்கள் கடினமாய் கழிந்தன. பிறகு மெல்ல என் கதையை சொன்னேன்.
அவளுக்கு கல்யாணம் ஆகபோகிறது என்று தெரிந்த பிறகு என் அப்பா தனது தங்கை மகளை கல்யாணம் பண்ணிக்கொள்ளச் சொல்லி என்ன வற்புறுத்தினார். ராதிகா அவளது பெயர். பி.இ. முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்தாள். அவளுக்கும் என்னை பிடித்திருந்தது.
இரண்டு வருடங்கள் அப்படியும் இப்படியுமாக சாக்கு போக்கு சொல்லிக் கொண்டிருந்துவிட்டு கடைசியில் அவளையே கல்யாணம் செய்தும் கொண்டேன். அந்த சமயத்தில் ராதிகாவுக்கும் ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலை கிடைத்து வேலைக்கும் சேர்ந்து விட்டாள்…
நான் அதை சொல்லிக் கொண்டிருக்கும்போது திடீரென்று குறுக்கிட்டாள். ‘நான், உங்களது கல்யாணத்திற்கு வந்திருந்தேன்… ‘
எனக்கு தூக்கி வாரிப் போட்டது. எப்படி தாய்மாமனை கட்டிக்கொண்டு பெங்களூர் போனவள் நான் பத்திரிக்கை வைக்காமலேயே என்னுடைய கல்யாணத்தை தெரிந்து கொண்டு கல்யாண மண்டபத்திற்கு வந்தாள். ஏன் என்னை சந்திக்கவே இல்லை… எனக்கு அதை கேட்கவும் தோன்றவில்லை.
‘மேலே சொல்லுங்கள்… ‘ என்றாள்.
இரண்டு வருடங்கள் ஹைதிராபாத்திலும் சென்னையிலுமாக ராதிகா வந்து போய்க் கொண்டிருந்தாள். இரண்டாவது வருடம். ஒருமுறை சென்னைக்கு வர ரெயில் கிடைக்கவில்லை என்று ஒரு ஏ.ஸி. பஸ்ஸில் டிக்கட் பதிவுசெய்து கிளம்பி வந்திருக்கிறாள்…
கொஞ்சம் இடைவெளி விட்டேன்.
அவளது பஸ் ஒங்கோல் பைபாஸில் வந்துகொண்டிருக்கும்போது திடீரென்று பஸ் தீ பிடித்து நிறைய பேர் இறந்து போனார்கள். அதில் ராதிகாவும் ஒருவள்.
‘வரும் வழியில் பஸ் தீவிபத்தில் இன்னும் பலருடன் சேர்ந்து ராதிகாவும் இறந்து போனாள்… ‘ என்றுமட்டும் சொல்லி நிறுத்தினேன்.
கூடவே, ‘என்னால் அந்த துக்க நிகழ்வை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. நாங்கள் வாழ்ந்த அந்த வீட்டை உடனே மாற்றிவிட்டேன். பிறகு மெல்ல மெல்ல அதை மறக்க முயற்சித்து முயற்சித்து தோல்வியடைந்து கொண்டிருக்கிறேன்… ‘ என்று சொல்லி முடித்தேன்.
அவளது கண்களில் கண்ணீர் துளிர்விட்டு நின்றது. எனக்குத் தெரியாதபடி துடைத்துக் கொண்டாள். ‘ரொம்பவும் ஸாரி, இந்த நிலைமை யாருக்குமே வரக் கூடாது ‘ என்றாள். பிறகு பக்கத்து ஹோடேலுக்குப் போய் ஆளுக்கு ஒரு காபி குடித்தோம்.
“உன்னுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது, பெங்களூரில்தான் இருக்கிறாயா இல்லை வேறு எங்கேயாவது டிரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு போய்விட்டாயா?” என்று கேட்டேன்.
‘ஏதோ ஓடுகிறது…‘ என்று மட்டும் சொல்லிவிட்டு சென்னையிலேயே வேறு ஒரு ஐ.டி.கம்பெனியில் வேலை தேடிக் கொண்டு வந்துவிட்டதாகச் சொன்னாள்.
அவள் சந்தோசமாய் இல்லை என்பதை அவளது வார்த்தைகள் கோடிட்டுக் காட்டின. ஆனாலும் ரொம்பவும் ஆழமாய் விசாரிக்கத் தோன்றவில்லை. அவளது புது கம்பெனியின் பெயரையும் விலாசத்தையும் மட்டும் வாங்கிக் கொண்டேன். ஆனாலும் அவளது மொபைல் நம்பரை ஏனோ வாங்கிக் கொள்ளத் தோணவில்லை.
வீட்டிற்கு வந்தபிறகு எதுவுமே ஓடவில்லை. யோசனை மட்டும் ஓட்டமாய் ஓடியது. அவள் மட்டும்தான் இங்கே வேலை செய்கிறாளா, அவளது கணவன் பெங்களூரிலேயே வேலை செய்கிறானா, இல்லை அவனும் இங்கே வந்துவிட்டானா, குழந்தைகள் எத்தனை என்று எதைப் பற்றியுமே அவளும் சொல்லவில்லை.
நானும் கேட்கவில்லை. ஏதோ ஓடுகிறது என்று மட்டும் சொல்லி நிறுத்திக் கொண்டாளே. அப்படியென்றால் அவள் சந்தோசமாய் இல்லை என்றுதானே அர்த்தம். ஒருவேளை இரண்டு பேரும் பிரிந்துவிட்டார்களா, டைவர்ஸ் வாங்கிக் கொண்டார்களா.
நான்கு நாட்கள் ஓடிவிட்டன. மறுபடியும் அவளை பார்க்க வேண்டும். எப்போது பார்ப்போம், எப்படிப் பார்ப்போம்… பார்க்க வேண்டும்… என்று மட்டும் தோன்றிக்கொண்டே இருந்தது.
xxxxxxxxxx
ஒருநாள் அவளை பார்க்கவேண்டும் என்று தோன்றி அவளது ஆபீஸ் முகவரியைத் தேடி போனேன். ஓல்டு மகாபலிபுரம் ரோடு போய் அந்த கம்பெனியைக் கண்டு பிடித்துப் போனேன். ரிஸப்சனில் சொன்னேன். போனில் தொடர்பு கொண்டார்கள்.
அதே சமயம், அங்கே என்னை பார்த்துவிட்டு ஓடிவந்தாள் ராஜி. என்னுடன் வேலை செய்து கொண்டிருந்துவிட்டு பிறகு கம்பெனி மாறிப் போனவள் அவளைப் பார்த்து நான் ஆச்சரியப் பட, என்னைப் பார்த்து அவள் ஆச்சரியப் பட… ரிசப்சனில் போனில் கேட்டுவிட்டு இன்று அவர்கள் வேலைக்கு வரவில்லை என்று மட்டும் சொல்லிவிட்டார்கள்.
அதைக் கேட்டுவிட்டு ராஜியும் சொன்னாள், ‘ஆமா அவ வேலைக்கு வரலை… அவளுக்கு உடம்பு சரியில்லை… ‘ என்றாள்.
‘உனக்கு அவங்களைத் தெரியுமா… ‘ என்றேன் ஆவலுடன். ‘நான் தங்கியிருக்கற அதே ஹாஸ்டல்ல… அதுவும் பக்கத்து பக்கத்து ரூம்ல தங்கியிருக்கோம்… ‘ என்றாள்.
எனக்கு அதிர்ச்சி. ‘ஏன்… அவங்க வீட்டுக்காரர் இங்கே இல்லையா… அவர் பெங்களூர்ல இருக்காறா… டிரான்ஸ்பர் கேட்டு ரெண்டு பெரும் இங்கேயே வேலை பார்க்கலாமே… ‘ நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே குறுக்கிட்டவள்
‘இருங்க… இருங்க… உங்களுக்கு அவங்க கதை தெரியாதுன்னு நினைக்கிறேன்…’ என்றவள் அங்கே சோபாவில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தாள்.
அவளுக்கு அவரது அப்பா பார்த்த மாப்பிள்ளை கடைஸியில் ஜகா வாங்கிவிட அவள் என்னைத் தேடி வந்திருக்கிறாள், வந்த இடத்தில் எனக்கு கல்யாணம் நடந்து கொண்டிருக்கிறது. அதைப் பார்த்துவிட்டு அழுகையுடன் திரும்பிப் போயிருக்கிறாள்.
பிறகு எப்படியோ வேறொருவரை கல்யாணம் செய்து கொண்டிருக்கிறாள். அவளது புருஷன் ஆறுமாதம் பயிற்சின்னு ஹைதிராபாத்துக்கு போயிருக்க, இடையில ஒரு நாள் ஊருக்குத் திரும்பி வரும்போது ஒரு பஸ் தீவிபத்துல இறந்துவிட்டார்…
திடுக்கிட்டு, ‘எங்கே நடந்ததாம்… ‘ என்று கேட்க
‘ஒங்கோல் பைபாஸ்… ‘ என்று சொல்லி அவள் நிறுத்தினாள்.
மறுபடியும் அதிர்ச்சி. என்னுடைய மனைவி இறந்த அதே பஸ்ஸில்தான் அவரும் வந்திருக்கிறார். இருவரும் இறந்து போயிருக்கிறார்கள்.
‘ஐயோ… ‘
அப்போது பார்த்து அவளுக்கு ஒரு போன் வர என்னிடம் எனது நம்பரை வாங்கிக்கொண்டு, மறுபடியும் சந்திப்போம் என்று சொல்லிவிட்டு உள்ளே போய்விட்டாள். நானும் கிளம்பி விட்டேன்.
மொபெட்டில் போய்க்கொண்டிருக்கும்போது ஒரு போன். நம்பர் புதிதாக இருந்தது.
‘ஹல்லோ… ‘
‘ஹல்லோ… நான் மல்லிகா பேசறேன்… இப்போதான் ராஜி உங்க நம்பரைக் கொடுத்தா… ‘
எனக்குள் பரவசம் வந்து படர்ந்தது.
மறுபடியும் அவளை சந்திக்க அந்த போன்கால் வழி வகுத்தது.
மீதம் உங்களது கற்பனைக்கு.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings