2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
கண்களைக் கசக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்த கண்ணகி, செந்தாமரை வருவதைக் கண்டதும் அவசரமாய் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள். அவளது கண்களில் கண்ணீர் கோர்த்திருப்பதைக் கண்ட செந்தாமரை திகைப்புடன் அருகில் போய், ‘என்னாச்சு… கண்ணகி… ஏன் இப்படி கலக்கமா உட்கார்ந்திருக்கே…’ என்றார்.
மூக்கை உறிஞ்சிக் கொண்டவள் பரிதாபமாக பார்வையுடன், ‘அணுக்கு என்மேல என்ன கோபமோ தெரியலைங்க, என்கிட்டே முகம் கொடுத்தே பேசலை…‘ என்றாள். குரல் கரகரத்திருந்தது.
சேகருக்கு அணுவை கல்யாணம் செய்துவைத்து ஒரு மாதம்தான் ஆகிறது. செந்தாமரையினுடைய ஆபீசில் அவருடன் கூட வேலைசெய்யும் ராமன் என்பவரின் மகள்தான் அவள். அவர்களது வீட்டுக்குப் போகவர இருந்த பழக்கத்தில் அவரது பெண்ணை சேகருக்கு கேட்கப்போக அவர்களும் கொடுத்துவிட்டார்கள்.
யோசித்தார் செந்தாமரை. திடீரென்று என்னவாயிற்று அணுக்கு… ஏன் மாமியாரிடம் கோபம். ஆனாலும் மனைவியைத் தேற்றினார்.
‘சின்னப் பொண்ணு அது… விளையாட்டுத்தனமா இருந்திருக்கும். இதையெல்லாம் போயி பெரிசா எடுத்துக்கிட்டு. நீ என்ன குழந்தையா… முதல்லே கண்ணைத் துடைச்சிக்கிட்டு போயி டீ போட்டுக்கிட்டு வா… போ…’ என்று அவளை செல்லமாய் விரட்டினார்.
கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு, ‘அவ விளையாட்டுத்தனமா அப்படி செய்யலைங்க, வேணுமின்னேத்தான் அப்படி செய்யறமாதிரி தெரியுது…’ என்றபடி எழுந்து போனாள்.
‘அடடா… அதையே ஊதி ஊதி பெருசு பண்ணிடுவே போலிருக்கே.. நாம பெரியவங்க.. நாமதான் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போகணும்… பேசாம போ…‘ என்றுவிட்டு சோபாவில் உட்கார்ந்து டீ வி.யை போட்டார்.
xxxxxxxxx
காலையில் சட்னி அரைக்கும்போது வறமிளகாய் சேர்த்து அரைக்கச் சொன்னாள் கண்ணகி. அணு மிளகாயை எடுத்து காம்புகளைக் கிள்ளும்போது, ‘பார்த்துமா, அஞ்சாறு மிளகாய்க்கு மேல போட்டுடாதே… ரொம்ப காரமா இருக்கும் ‘ என்றாள் கண்ணகி. உடனே எனக்கும் தெரியும்… ‘ என்று சொல்லிவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள் அவள்.
சுருக்கென்றது கண்ணகிக்கு. காய்ந்த மிளகாய், அதிகமாய் போட்டால் காரமாகிப் போய்விடும் என்ற அர்த்தத்தில்தானே நாம் சொன்னோம். அதற்கு, ‘சரி அத்தே…‘ என்றால் ஆயிற்று. அதை விட்டுவிட்டு எல்லாம் எனக்கும் தெரியும் என்பது போல சொன்னால் என்ன அர்த்தம். நீ ஒன்னும் சொல்லத் தேவை இல்லை என்றுதானே அர்த்தம்.
வயது நாற்பத்தைந்து ஆகிறது. முப்பது வருஷமாக சமைக்கிறேன். எனக்குத் தெரியாதா எத்தனை பேருக்கு சட்னி அரைக்க எவ்வளவு தேங்காய், எவ்வளவு பொட்டுக்கடலை, எத்தனை மிளகாய் போடவேண்டும் என்று.
நேற்று பிறந்தவள், கல்யாணமாகி வந்து ஒருமாதம் கூட ஆகவில்லை. எல்லாம் எனக்கும் தெரியும் என்றால் என்ன அர்த்தம். பெரியவர்களிடம் எப்படி பேசுகிறோம் என்று பார்த்து பேசவேண்டாமா. இனி எல்லாவற்றையும் அவள் போக்கிலேயே விட்டுவிடவேண்டுமா… இதென்ன அடாவடித் தனம்.
யோசிக்க யோசிக்க கண்கள் கலங்கி டீயை ஒழுங்காக போடமுடியாமல் தடுமாறினாள் கண்ணகி.
xxxxxxxxx
டீயைக் கொண்டு வந்து கொடுத்தவள் மூக்கை உறிஞ்சிக் கொண்டாள். கொஞ்சம் எரிச்சல் பட்டார் செந்தாமரை. ‘இன்னுமா நீ அதையே நினைச்சிக்கிட்டே இருக்கே…மாடு மாடு… ’
‘அது மட்டும்னா பரவாயில்லைங்க…’ என்று அவள் நிறுத்த, நிமிர்ந்து பார்த்த செந்தாமரை, இன்னும் ஏதோ நடந்திருக்கிறது என்று யோசித்தபடி, ‘ சொல்லு ‘ என்பது போல பார்த்தார்.
‘டிபன் சாப்பிட்டிட்டு டீ குடிப்போமில்லையா. எப்போவும் எல்லாத்துக்கும் டீ கொண்டு வந்து கொடுப்பா, குடிப்போம். புருஷனுக்கு கொடுத்தா, உங்களுக்கும் கொடுத்தா, எனக்கு உண்டான டீயை அடுப்பு மேடையிலே வெச்சுட்டு அவள் பாட்டுக்கு போயிட்டா…’ என்றாள். அதில் கோபம் தெரிந்தது.
‘அடடா… அந்த நேரம் பார்த்து நீ அங்கே நின்னிருப்பே… அப்படியே நீ டீயை எடுத்துக்குவேன்னு நினைச்சுட்டே போயிருக்கும்… இதைப் போயி ’
உடனே குறுக்கிட்டு, ‘சரி அதை விடுங்க… வெளியே கிளம்பும்போது பிரிஜ்லேர்ந்து மல்லிப்பூ எடுத்தா… சாமிபடத்துக்கு கொஞ்சம் வெச்சா… எப்போவும் என்கிட்டே கொடுக்காம, மீதியை பிரிஜ்க்குள்ளேயே வெச்சிட்டு போய்ட்டா… ’
‘அடடா… நீ அப்புறமா குளிச்சிட்டு அப்புறமா எடுத்து வைச்சுக்குவேங்கற நினைப்புல கூட உள்ளேயே வெச்சிருக்கலாம்…. அதையெல்லாம் ஒரு தப்புன்னு நீ நினைக்கறே பார்… இன்னும் நீ நாலு பசங்களை பெத்திருந்து, நாலு மருமகள்கள் வீட்டுக்கு வந்திருந்தா எப்படித்தான் சமாளிச்சிருப்பியோ போ… நல்லவேளை ஒரு பையனோட நிறுத்திட்டோம்… ’ என்று சிரித்தபடி நக்கல் விட்டார் அவர்.
இவர் இப்படித்தான். எல்லாவற்றையுமே சாதாரணமாகவே எடுத்துக் கொள்கிறார். ஆனால் நமக்கு அப்படியில்லை. யாராவது சுருக்கென்று பேசினால் நெஞ்சில் நெருப்பு பட்ட மாதிரி இருக்கிறது. மனுஷர்னா கொஞ்சமாவது ரோஷம் இருக்கணும். இவரை மாதிரி எல்லாத்துக்குமே போயிட்டு போவுது போ என்று நம்மாளெல்லாம் இருக்க முடிகிறதா. யோசித்துக் கொண்டே, கணவனை பார்ப்பதும் டீயை குடிப்பதுமாய் இருந்தாள் கண்ணகி.
xxxxxxxxx
சாயங்காலம் வெளியே போயிருந்த சேகரும் அணுவும் வீட்டுக்குள் நுழைந்தார்கள். கண்ணகி வழக்கம் போல, ஏழு மணிக்கு கோவிலுக்கு கிளம்பினாள். திரும்பி வந்தவள் அர்ச்சகர் கொடுத்த பூவில் கொஞ்சத்தை சாமி படத்திற்கு வைத்துவிட்டு, கொஞ்சத்தை அறுத்து தனக்கு வைத்துக் கொண்டு மீதத்தை மருமகளிடம் கொடுத்து ‘ அம்மன் கோவிலுக்கு போயிட்டு வந்தேன்மா இதை வெச்சுக்கோ….‘ என்று சொல்லி நீட்டினாள். அவள் அதை வாங்கி தலையில் செருகிக் கொண்டாள்.
அதற்குள் அணு டீ போட்டுவைத்திருந்தாள். ட்ரேயில் நான்கு கப்களை வைத்து எடுத்துக் கொண்டு வந்து மாமனாருக்கு கொடுத்தாள், கணவனுக்கு கொடுத்தாள், அப்புறம் மாமியாரிடம் தட்டை நீட்டினாள். மருமகளை பார்த்து புன்னகைத்தபடியே கப்பை எடுத்துக் கொண்டாள் கண்ணகி. பதிலுக்கு தானும் புன்னகைத்தபடி ஒரு கப்பை எடுத்துக் கொண்டு தங்களது ரூமிற்கு போய்விட்டாள் அவள்.
டிபன் தயாரிக்க சட்னி போட்டாள் அணு. ‘அத்தை ஒரு நிமிஷம் வாங்களேன்… ‘ என்றாள். உள்ளே போனாள் இவள். ‘அத்தை அரை மூடி தேங்கா எடுத்து வச்சிருக்கேன். பொட்டுக்கடலை எடுத்து வச்சிருக்கேன். ஆறு காய்ஞ்ச மிளகா எடுத்து வச்சிருக்கேன்… சரியா…‘ என்றாள். பார்த்துவிட்டு சரிதான் போடும்மா… என்றுவிட்டு வெளியே வந்தாள் கண்ணகி.
டிபன் தயாராகி எல்லோருக்கும் டிபன் பரிமாறினாள் அணு. கண்ணகி நின்றுகொண்டு மகனுக்கு இட்லி எடுத்து வைத்தாள். ‘ அத்தை நீங்க உட்கார்ந்து சாப்பிடுங்க. நான் எதுக்கு இருக்கேன். நான் பரிமாரறேன்… ‘ என்றாள்.
இரவு சாப்பிட்டவுடன் கொஞ்ச தூரம் காலாற நடப்பார்கள் கண்ணகியும் செந்தாமரையும். நடந்துகொண்டே, ‘ இப்போ எப்படி இருக்கு… மருமகள்கிட்டே மாற்றம் எதுவும் தெரியுதா…‘ என்றார்.
‘அதை விடுங்க… அவளுக்கு சட்னி போடத் தெரியாம இல்லை. நல்லாத்தான் போடறா. வரமிளகாயைக் கொஞ்சம் அதிகமா போட்டுட்டா காரம் அதிகமாயிடுமேனு ஒரு எச்சரிக்கைதான் செஞ்சேன். மனசிலே ஏதும் வெச்சிக்கிட்டு பேசியிருக்கமாட்டா, ஒரு ஃப்ளோவுல அப்படி வந்திருக்கும்…. நடந்தது எல்லாமே எதேச்சையாவே கூட இருந்திருக்கலாம். நாந்தான் அதை தப்பா எடுத்துக்கிட்டு அவளையும் தப்பா புரிஞ்சுகிட்டு……சாரிங்க…’ என்றாள்.
செந்தாமரை புன்னகைத்துக் கொண்டார்.
கண்ணகி கோவிலுக்கு போயிருந்த சமயம் மருமகளைக் கூப்பிட்டு, ‘பாருமா… அத்தை சுயமாவே நல்லவதாம்மா… நீ சட்னி அரைக்க மிளகா போடும்போது எனக்குத் தெரியும்னு சொல்லிட்டியாம். ரொம்ப பீல் பண்ணினம்மா அத்தை. உங்கம்மா உனக்கு அட்வைஸ் பன்னமாட்டாங்களா. அப்படி எடுத்துக்கனும்மா… சரியா… ‘ என்று அவர் சொன்னதும்
‘ஸாரி அங்கிள், எனக்கும் அவருக்கும் லேசா மனஸ்தாபம் அதான் நான் கொஞ்சம் வேகமா பேசிட்டேனோனு நினைக்கிறேன். இப்போ எல்லாம் சகஜமாகிடுச்சு… நான் பார்த்துக்கறேன்‘ என்றாள்.
கடைஸியில், ‘நான் உன்கிட்டே இதுசம்பந்தமா பேசினது அத்தைக்கு தெரியவேண்டாம்மா‘ என்றார்.
அவள் சிரித்துக் கொண்டாள்.
நடந்துகொண்டே சிரித்துக் கொண்டாள் கண்ணகி.
திகைப்புடன் ‘என்ன… ‘ என்றார் இவர்.
‘ஒண்ணுமில்லே… சின்ன விஷயம். அதை தப்பா புரிஞ்சுக்கப் போக ஒரு நாளையே வீணடிச்சிடுச்சு பாருங்க… நான் இன்னும் பக்குவப்படனும்னு நினைக்கிறேன்‘ என்றாள்.
அவரும் சிரித்துக் கொண்டார்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
புரிந்தவர் துணையாக வேண்டும்