2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4
ஒரு பெண் தான் தாயாகி விட்டதை தன் தாயிடம் சொல்லும்பொழுது எத்தனை மகிழ்ச்சி கொள்வாள். ஈன்ற மகளை தாயாகப் பார்க்கும் பொழுது அவள் எப்படியெல்லாம் பூரிப்பாள். அதை நேரில் காண வேண்டும். அம்மாவிடம் சொல்ல வேண்டும் போல் இருந்தது.
அத்தை மாமாவிடம் விஷயத்தை சொல்லிவிட்டு கோவிலுக்குச் சென்றோம்.
அத்தை இன்று அலுவலகம் செல்ல வேண்டாம் என்று கூறினார். இங்கிருந்து ஈரோடு சென்று வர வேண்டும். அங்கே ஒரு வீடு எடுத்து ஆதியும் நானும் தங்கியிருந்தோம். வார இறுதியில் சேலம் வந்துவிடுவோம். கடந்த வாரம் ஆதிக்கு சென்னையில் அலுவலக வேலைகள் இருந்ததால் நான் தனியாக ஈரோட்டில் இருக்க இஷ்டம் இல்லாமல் காலையில் அலுவலகம் சென்று விட்டு மாலையில் மீண்டும் சேலத்திற்கே வந்தேன். பெரிய தூரம் இல்லை இங்கிருந்து ஒன்றரை மணி நேரப் பயணத்தில் அலுவலகம். அதனால் நான் பல நாட்கள் காலையில் கிளம்பி மீண்டும் மாலையில் சேலத்திற்கே வந்து விடுவேன். ஈரோடு வீடு பெரும்பாலான சமயங்களில் பூட்டி தான் இருக்கும்.
இனி அடிக்கடி பயணிக்கக் கூடாது என்பதால் அத்தை விடுப்பு எடுத்துக் கொள்ளச் சொன்னார். தேவையானதை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு நாளை கிளம்பச் சொன்னார். நானும் கோவிலுக்குச் சென்றுவிட்டு அம்மா வீட்டிற்குச் செல்ல ஆசைப்பட்டதால் விடுப்பு எடுத்துக் கொண்டேன்.
அம்மாவிடம் நான் தாய் ஆகப்போவதை சொல்லத் துடித்தது மனம். கோவிலில் இருந்து கிளம்பி அம்மா வீட்டிற்குச் சென்றேன். அம்மா அப்பா தங்கை மூவருமே வீட்டில் தான் இருந்தார்கள். அம்மாவை கட்டியணைத்து கூறினேன். என் அம்மா கண்கலங்கி நின்றார்.
“கடவுளே.. உன் கருணைக்கு நன்றி.. எங்கள கை விட மாட்டப்பா.. சந்தோஷமான செய்திய குடுத்துருக்க” சாமி படத்திற்கு முன் ஓடிச்சென்று மகிழ்ந்து வணங்குகினார். விபூதி வைத்துக் கொண்டு வந்து எனக்கும் வைத்தார்.
“அம்மா இவ்ளோ சந்தோசப் பட்ற.. அப்போ நீ எதிர்பாத்தியா”
“ஆமாடி.. உனக்கு மனசு கஷ்டப்படக்கூடாதுனு பொறுமையா பெத்துகோன்னு சொல்லுவேன்.. உள்ளுக்குள்ள நீ எப்போ தாய் ஆவணு ஏங்குனேன். எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் புள்ளை குட்டிங்க வேணும்ல.. அதும் பெத்த தாய்க்கு தன் மவள நிறை மாசமா பாக்க எவ்ளோ ஆசை இருக்கும்” அம்மாவின் வார்த்தையில் சொக்கி நின்றேன்.
தங்கையிடம் கூறினேன். அவளும் கண்கலங்கினாள்.
சித்தி ஆகப்போகிறோம் என்பதில் இவளுக்கு இவ்வளவு சந்தோசமா! அவளுக்கே குழந்தை பிறக்க போகிறதாய் மெய்சிலிர்த்து நின்று கொண்டிருந்தாள் தங்கை அமுதினி. அப்பாவின் மகிழ்ச்சி ஒருபுறம் பாதுகாப்பாக இருக்கச் சொல்லும் பதட்டம் ஒருபக்கம்.
மூவரும் என்னைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தனர். அந்த பார்வை எனக்குப் புதிதாக இருந்தது.
“எப்போ ஹாஸ்பிடல் போற மாதிரி” அம்மா கேட்டார்
“தெரிலம்மா.. போகணும்”
“ரெண்டு மாசம் முடியட்டும்.. அம்பது நாளாச்சம் ஆகட்டும்.. அப்புறம் போங்க.. எப்படியும் போனா ஸ்கேன் பாப்பாங்க”
“சரிம்மா”
“யார்டையும் சொல்ல வேணாம். ஜாக்கிரதையா ஆபீஸ் போய்ட்டு வா” என்றார் அப்பா
“சரிப்பா”
“குட்டி குழந்தை வர போறா.. நான் தான் குளிக்க வைப்பேன். சாப்பாடு ஊட்டுவேன். நல்லா பாத்துக்குவேன் கவியினி”
“பெத்து குடுத்தட்றேன்.. நீயே வளத்து அமுதினி” என்றேன் தங்கையிடம் சிரித்துக் கொண்டே.
ஜாக்கிரதையாக இரு.. பத்திரமாக இரு.. பாதுகாப்பாக இரு..
இப்படி இவர்கள் கூறியதில் இன்னும் சற்று கவனம் வந்தது. அந்த கவனத்தோடும் மகிழ்ச்சியோடும் பாதுகாப்பாக அடுத்த நாள் ஈரோடு சென்றோம்.
படி ஏறும் பொழுது இறங்கும் பொழுது வண்டியில் பயணிக்கும் பொழுது கவனமாக இருந்தேன். அலுவலகத்தில் பிறரிடம் பேசும்பொழுது அவர்கள் தன் மாற்றத்தை இப்போதைக்கு கண்டுபிடிக்கக்கூடாது என்பதிலும் உன்னிப்பாக இருந்தேன்.
நற்பத்தி ஐந்து நாட்கள் ஆனது. திடீரென ஒரு குழப்பம் ஏன் எனக்கு எந்த அறிகுறியும் தெரியவில்லை. வாந்தி, மயக்கம் எதுவும் இல்லையே. உண்மையில் நான் கர்ப்பமாகத் தான் இருக்கிறேனா!
அந்தக் குழப்பம் பயத்தை ஏற்படுத்தியது. மனதிற்குள் கற்பனை கோட்டை கட்டிவிட்டோம். எல்லாருக்கும் ஆசை வளர்த்தி விட்டோம். ஏன் இன்னும் எந்த வித அறிகுறியும் தெரியவில்லை. குழப்பத்தோடே அலுவலகத்திற்கு கிளம்பினேன். பக்கத்து வீட்டு அக்கா என்னைக் கண்டதும் என் அருகில் வந்தார்.
“கவியினியாள் என்ன உன் முகம் லட்சணமா இருக்கு. பூரிப்பா இருக்கியோ”
பக்கத்து வீட்டு அக்கா இப்படி கேட்டதும் எனக்கு சந்தோசம் தாங்கவில்லை. என் முகத்தைப் பார்த்தே கண்டுப்பிடித்து விட்டாரா. வயிற்றில் வளரும் குழந்தையின் லட்சணம் முகத்தில் தெரிகிறதா. பிறகு ஏன் நான் அடிக்கடி சந்தேகிக்கிறேன்.
முதல் வேலையாக இந்த வாரவிடுமுறையில் ஊருக்குச் சென்று நிச்சயம் மருத்துவமனையில் பரிசோதித்து விட வேண்டும். அப்பொழுது தான் மனம் மீண்டும் குழப்பம் அடையாது.
வெள்ளிக்கிழமை இரவு சேலத்திற்கு வந்தோம்.
“நாளைக்கு ஹாஸ்பிடல் யார்ர கூட்டிட்டு போலாம்ங்க” ஆதியிடம் கேட்டேன்
“நானும் நீயும் போலாம்”
“இல்லை ஆதி.. முதல் தடவை போறோம் பெரியவங்க யாரையாவது கூட்டிட்டு போலாம். எனக்கும் பயமா இருக்கு”
“ஆமா அதும் கரெக்ட்டா இருக்கும். அம்மாவ கூட்டிட்டு போலாம்”
“எந்த ஹாஸ்பிடல் போலாங்க. குழப்பமா இருக்கு”
“இப்போதைக்கு வீட்டுப் பக்கத்துலயே பாப்போம். அப்புறம் எந்த ஹாஸ்பிடல் பெஸ்ட்னு செக் பண்ணிட்டு முடிவு பண்ணலாம்”
வீட்டிற்கு பக்கத்தில் உள்ள மருத்துவமனைகளில் என் அக்காவிற்கு சுகப்பிரசவம் ஆன மருத்துவமனை ஒன்றிற்கு பரிசோதனைக்குச் சென்றோம்.
பதினைந்து, இருபது கர்ப்பிணி பெண்கள் மருத்துவமனை முழுவதும் நிறைந்து இருந்தனர்.
ஒவ்வொருத்தர் கைகளில் இருந்த கண்ணாடி வளையல்களையும் ஆசையாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். நிறைமாதமாக சிலர் இருந்தனர். முழுதாக வளர்ந்திருக்கும் உயிரை தாங்கி நின்று கொண்டிருந்தனர். அதை காணக் காண பெண்மை வழிந்தது ஓடியது நெஞ்சுக்குள்.
ஒல்லியான உடல்வாகு வயிறு மட்டும் பெரிதாய் ஒரு பெண் நடந்து கொண்டிருந்தார். குண்டாக ஒரு பெண் இருக்கையில் அமர முடியாமல் கையால் முதுகை தாங்கிப் பிடித்து நின்று கொண்டிருந்தார்.
டோக்கன் நம்பருடன் பெயரையும் சேர்த்து அழைத்துக் கொண்டிருந்த பெண்ணிடம் சென்றேன்.
“செக் அப்க்கு வந்துருக்கேன்”
“ஃபைல் இருக்கா?”
“இப்போதான் முதல் தடவை வந்துருக்கேன்”
“என்ன விஷயமா பாக்கணும்”
“ப்ரெக்னென்ட்டா இருக்கேன்”
“அங்க போய் உங்க டீடெயில்ஸ் சொல்லி டோக்கன் வாங்கிக்கோங்க. பாத்துக்கலாம்”
அந்த பெண் கைகாட்டிய இடத்திற்குச் சென்றேன்.
வரவேற்பில் அமர்ந்திருந்த பெண் என் விவரங்களை கேட்டார்.
“என்ன விஷயமா வந்துருக்கிங்க”
“நாள் தள்ளி போயிருக்கு. செக் பண்ணனும்” இந்த முறை என் அத்தை அந்த பெண்ணிடம் கூறினார்.
“வீட்ல செக் பண்ணிங்களா”
“கிட்ல பாசிட்டிவ்னு வந்தது”
“ஓ சரி.. உங்க பேரு, வயசு சொல்லுங்க”
“கவியினியாள், 27”
“போன் நம்பர் சொல்லுங்க”
விவரங்களை கேட்டுக்கொண்டார்.
எடை இயந்திரத்தில் ஏறி நிற்கச் சொன்னார். நாற்பத்தி எட்டு கிலோ இருந்தேன். திருமணத்திற்கு முன் நாற்பத்தி ஐந்து கிலோ இருந்தேன். ஒருவருடத்தில் மூன்று கிலோ ஏறியிருக்கிறேன். இன்னும் கூட எடை போட ஆசை தான். ஏறினால் தானே! கர்ப்ப காலத்திலாவது நானும் பூசின உடல்வாகு பெற விரும்பினேன்.
இரத்த அழுத்தத்தை பரிசோதித்து எழுதிக் கொண்டார். அந்த சீட்டை என் கையில் கொடுத்துவிட்டு அதோடு டோக்கனையும் கொடுத்தார்.
இருபத்தி ஏழு என்றிருந்தது.
இப்பொழுது தான் நான்காவது டோக்கன் கொண்ட பெண்மணி உள்ளே சென்றார். இன்னும் இருபத்தி இரண்டு பேர் செல்லும் வரை காத்திருக்க வேண்டுமா!
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings