2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பரபரப்பான திங்கட்கிழமை காலை நேரம். பேருந்து நிறுத்தத்தில் ஆங்காங்கே பள்ளி கல்லூரி மாணவிகள், மாணவர்கள், வேலைக்கு செல்லும் ஆண்கள் , பெண்கள் என சிறு சிறு குழுக்களாக அவரவர் பேருந்துக்கு காத்திருந்தனர். அதில் எந்த குழுக்களிலும் சேராமல் வைதேகி மட்டும் தனியாக ஆண்களின் குழுக்களுக்கு மத்தியில் நின்றிருந்தாள்.
அடுத்தடுத்து மாநகர பேருந்து,பள்ளி பேருந்து என காலை நேர நெரிசலில் நேரமாவதால் சில பேருந்துகள் நிறுத்தத்தில் நிற்காமலே சென்றுவிடும். இந்த இடத்தில் நின்றால் சட்டென பேருந்தில் ஏற வசதியாக இருக்குமென்பதால் அங்கே தான் வழக்கமாக நிற்பாள். பேருந்து வர இன்னும் சில நிமிடங்கள் ஆகலாம். அதற்குள் வைதேகியை உங்களுக்கு அறிமுகப்படுத்தி விடுகிறேன்.
இன்னும் 1 மாதத்தில் 36 வயதை தொடும் பேரிளம் பெண்.5 அடிக்கும் குறைவான உயரம். மாநிறத்திற்கும் அடர் கருப்பிற்கும் இடைபட்ட நிறம். மஞ்சள் பூசிய முகம். பரந்த நெற்றி அதில் மெரூன் கலரில் திலகம். திலகத்திற்கு கீழ் குங்குமகீற்று. பார்லர் செல்லாமலேயே வில் போன்ற புருவங்கள். பார்த்தவுடன் சுண்டியிழுக்கும் காந்த கண்கள். மூக்கு வாய் எல்லாம் சுமார் ரகம்தான். அதை ஈடு செய்வது போல் அழகான ஒற்றை மூக்குத்தி. தலையில் விரல் நீள அளவுக்கு மல்லிகை.PCOS மற்றும் ஹார்மோன் தொந்தரவால் அருகிலிருந்து பார்த்தால் மட்டும் தெரியும் மீசை. பேரழகி என்றில்லாவிட்டாலும் பார்ப்போரை இரண்டு மூன்று தரம் திரும்பி பார்க்க வைக்கும் அழகிதான். ஒரு தனியார் அலுவலகத்தில் பொறுப்பான பதவி. மனதை புரிந்து கொண்ட கணவன். பள்ளி செல்லும் இரு குழந்தைகள் என நிறைவான வாழ்க்கை.
அதோ பேருந்து வந்து விட்டது. இவள் பேருந்தில் ஏறி வழக்கமாக நிற்குமிடத்தில் நின்று கொண்டாள். டிக்கெட் வாங்கி பத்திரப்படுத்தி கொண்டாள்.அதுவரை ஓடிக் கொண்டிருந்த பாடலிலிருந்து “கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு ” பாடல் மாற்றப்பட்டது. பின் நடுவில் “சிங்கப் பெண்ணே” பாடல் என மாறி மாறி ஓடியது. அவளுக்கு தெரியும் இந்த பாடல் தன் கவனத்தை ஈர்க்க நடத்துனர் செய்த வேலை தான் என்று. தினமும் நடக்கும் கூத்து தான் இது. முகத்தில் எதையும் தெரிந்த மாதிரி காட்டி கொள்ளாவிட்டாலும் உள்ளுக்குள்ளேயே அந்த நடத்துனரை கலாய்த்துக் கொள்வாள். கண்ணா! நீ என்னோட ஸ்கூல் டேஸ்ல என்ட்ட சிக்காம போய்ட்ட. அப்ப தெரியும் நான் யார்னு. நானே பெரிய ரவுடிடா அப்புறம் தாண்டா இதெல்லாம் போங்கடா போய் புள்ள குட்டிகள படிக்க வைங்க என்று சொல்லிக் கொள்வாள்.
ஆனால் இன்று எதையும் ரசிக்கும் நிலையில் வைதேகி இல்லை. மனம் முழுக்க கெளசிக் தான் வியாபித்திருந்தான்.வைதேகி எப்படிப்பட்டவள் என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், நமக்கு கெளசிக்கை நன்றாக தெரிய வேண்டும்.
கெளசிக். இந்தப் பெயரை கேட்டாலே வைதேகியின் மனம் குளிர்ந்துவிடும். வைதேகியின் முறைப் பையன். இருவருக்கும் 8 வருட வித்தியாசம். அழகன். திறமைசாலி, அடுத்தவர்களை எளிதில் வசிகரிக்கும் தோற்றம் மற்றும் பேச்சு. சிறந்த நகைச்சுவை உணர்வுள்ளவன். பொது அறிவு, மிமிக்ரி, இசை ஞானம் என சகலகலாவல்லவன். நன்கு படித்து நல்ல வேலையில் வாயில் நுழையாத பெயர் உள்ள நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறான்.
சிறு வயது முதலே வைதேகிக்கு கெளசிக்கின் மேல் ஒரு தலை காதல்.அவனுக்கு பிடித்தவைகளை எல்லாம் தனக்கு பிடித்ததாக்கி கொண்டாள்.நாளை அவன் மனைவியாவதற்கு எந்த வகையிலும் இவள் பொருத்தமில்லாதவள் என யாரும் கூறிவிடக் கூடாது என்பதில் முனைப்பாக இருந்தாள். அதற்கேற்றார் போல் தன்னை தகவமைத்துக் கொண்டாள். ஆனாலும் ஏனோ கெளசிக்கிற்கு வைதேகியின் மேல் உள்ளூற ஒரு வெறுப்புதான். சரியாக பேச மாட்டான். முகத்திற்கு நேரே பார்ப்பதை கூட தவிர்ப்பான். ஆனால் வைதேகியால் திரும்ப தர முடிந்தது என்னவோ நிபந்தனையற்ற அன்பு மட்டுமே. பின் இருவருக்கும் வேறு வேறு நபருடன் திருமணமாகி பத்து வருடங்களுக்கு மேலாகி விட்டன. அதன் பின் நேரில் பார்க்கும் போதெல்லாம் கெளசிக் வைதேகி மீது வெறுப்பை காட்டுவதில்லை. ஓரளவு சகஜமாக பேசி வருகிறான். வைதேகி கெளசிக்கை நினைக்காமல் இருந்ததில்லை.
மூன்று மாதத்திற்கு ஒரு முறை வாட்சப்பில் நலம் விசாரிப்பாள். பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பாள். ஆனால் எந்த கபடமும் விரசமும் இல்லாத மழைத்துளி போன்ற அன்பு அது. 36 வயதுக்கே உரிய உடல் மற்றும் மன சோர்வு . இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் வைதேகியின் மனதில் ஒரு வித வெறுமை ஏற்பட்டது. இது நாள் வரை கெளசிக்கின் நினைவு வராமல் இல்லை. அதை அழகாக கையாண்டு வந்தாள். ஆனால் இம்முறை எவ்வளவு முயன்றும் ஒன்றும் பலனளிக்காமல் போகவே கெளசிக்கிடமே ஆயிரம் தயக்கத்துடனும் வெறுப்பை உமிழ்வானோ என அச்சத்துடனே தொலைபேசியில் பேசினாள். அதற்கு மாறாக கெளசிக்கோ நன்கு உரையாடினான்.
இன்று வரை கெளசிக், வைதேகியின் மீது என்ன மதிப்பு வைத்துள்ளான்? இவள் சிறுவயதில் கேட்ட எந்த கேள்விக்கும் அவன் பதில் கூறவில்லை என ஏகப்பட்ட கேள்விகள் வைதேகிக்குள். அதை எல்லாம் பேசவே மீண்டும் அவனை தொடர்பு கொண்ட போது இவளின் நோக்கத்தை தப்பாக புரிந்து கொண்ட கெளசிக் இவளின் அழைப்பை தவிர்த்து விட்டான்.
நடத்துனர் பஸ் நிலையம் வந்துட்டோம். காலைலயே தூக்கமா என கேட்ட பின்தான் சுதாரித்து கொண்டு இறங்கினாள். மறக்க நினைப்பதை மீண்டும் நினைத்து நினைத்து தன் ரணங்களுக்கு மருந்து போட்டுக் கொள்கிறது இந்த பாழாய் போன மனது.
அலுவலகத்தில் நுழைந்தவுடன் காசாளர் அழைப்பதாக தகவல் வந்தது. ஓ! இரு தினங்களுக்கு முன் சென்ட்ரல் எக்ஸைஸ் அலுவலகம் சென்று வந்த செலவு கணக்கை இன்னும் தாக்கல் செய்ய வில்லை. வவுச்சரில் கையெழுத்து போடும் போது காசாளர்” முதலாளி கூட கையெழுத்த சின்னதா தான் பேர மட்டும் எழுதுவாரு. நீங்க என்னடான்னா இவ்ளோ ஸ்டைலா போடறீங்க” என்றார். கொங்கு மண்ணிற்கேயுரிய நையாண்டி .
பதில் பேசாமல் இருக்கைக்கு திரும்பினாள். யாருமே அவளுடைய கையெழுத்தை பார்த்தால் சொல்லும் கமெண்ட் இதுதான். ஸ்டைலா இருக்கு. இந்த கிரெடிட்டும் கெளசிக்கிற்கு தான். கையெழுத்து கூட அவனைப் பார்த்து காப்பியடித்தது தான். பார்க்கும் சினிமாவிலிருந்து போடும் கையெழுத்துவரை எல்லாம் இடத்தும் அவன்தான். இதில் எப்படி கெளசிக்கை மறப்பது?
வேலையில் மனம் ஒட்டவில்லை. ஒருவேளை நம் கண்ணியத்தில் குறை கண்டிருப்பானோ? இல்லை தொந்தரவாக எண்ணியிருப்பானோ? இப்போதுள்ள நீ நலமா? நான் நலம் என்ற நிலையையும் நானே கெடுத்து விட்டேனே, நாம் அவனிடம் பேசுவது அவனுக்கு பிடித்துள்ளதா தொந்தரவாக இருக்குமா என ஆயிரம் கேள்விகள்.
அவளுக்கு தேவை நானிருக்கிறேன் என்ற பதில் இல்லை. “என்னாச்சு வைதேகி தான்?” மீதியை அவளே பார்த்துக் கொள்வாள்.எப்போதும் போல் அவள் மூளை ஆராய்ச்சியில் ஈடுபட்டு ஒரு வழி கண்டுபிடித்தது. தான் கெளசிக்கிடம் சொல்ல விரும்பியதையெல்லாம் ஒரு சிறுகதையாக்கி தன் முகநூலில் பதிவேற்றி என் முதல் சிறுகதை முயற்சி என லிங்கும் வாட்சப்பில் அனுப்பினாள். ஹை! ப்ளு டிக் ஆகிடுச்சி.சிறிது நேரத்தில் பச்சை கலரில் typing… என தெரிந்தது. இதயம் படபடக்க கண்கள் பனிக்க கெளசிக் என்ன பதில் அனுப்புவானோ என வைதேகி காத்திருக்கிறாள்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings