2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
ஒரு வருஷம்… ரெண்டு வருஷமல்ல… கிட்டத்தட்ட பத்து வருஷமா மூர்த்தி அந்த நந்தினி டிராவல்ஸ்ல் டிரைவராக வேலை பார்த்திட்டிருக்கார். ஆனாலும் முதலாளிகிட்ட அவருக்கு நல்ல பெயர் இல்லை. அதற்குக் காரணம் வேறு யாருமில்லை… அவருடன் பணிபுரியும் சக டிரைவர்கள்தான்.
அவ்வப்போது ஒண்ணுக்கு ரெண்டாய் அவரைப் பற்றி முதலாளியிடம் அவர்கள் பற்ற வைத்ததன் விளைவு?… இவர் சம்பளம் பல வருஷங்களாய் ஒரே நிலையில். மற்றவர்கள் சம்பளம்… இரு மடங்காய்… மூன்று மடங்காய்.
அட… இந்தப் பொறாமைக்காரனுகதான் எதையும் ஒண்ணுன்னா… ஒன்பதுன்னு சொல்றானுகன்னா… கேட்கிற மொதலாளிக்கு அறிவு எங்கே போச்சு?… எதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டாமா?… சொல்றவன் பேச்சைக் கேட்டு ஆடலாமா?… என் வயசுக்காவது மரியாதை குடுக்க வேண்டாமா?.. ச்சை… இவனையெல்லாம்…” பற்களை “நற… நற”வென்று கடித்தார் மூர்த்தி.
எல்லாவற்றிற்கும் உச்சம் போன வாரம் நடந்த அந்த நிகழ்ச்சிதான்.
டிராவல்ஸுக்கு புதிதாய் வாங்கப்பட்டிருந்த லேட்டஸ்ட் மாடல் காரை எவனோ ஒரு கற்றுக்குட்டி டிரைவர் ஓட்டிட்டுப் போய் எங்கோ இடித்துக் காயப்படுத்தி விட்டு அதை மூர்த்தியின் தலையில் போட்டு விட்டான். விஷயம் முதலாளி வரை போனதில், அதைச் சரி செய்வதற்கு ஆகும் மொத்த செலவையும் மூர்த்தியின் கணக்கில் அட்வான்ஸ் எழுதி விட உத்தரவிட்டார்.
அதிர்ந்து போனார் மூர்த்தி. “இது என்ன நியாயம்?… செய்யாத தப்புக்கு தண்டனையா?… முதலாளியை நேரில் பார்த்து விளக்கம் கேட்டே தீரணும்”
முதலாளியை நேரில் சந்திக்கச் சென்றவருக்கு அனுமதி மறுக்கப்பட, முதல் முறையாக முதலாளி மீது ஆத்திரம் ஏற்பட்டது. அவருக்கு அவ்வாறு அனுமதி மறுக்கப்பட்ட விஷயம் தெரிய வந்து சக டிரைவர்கள் அவரை சரமாரியாக கிண்டல் செய்த போது அவர் ஆத்திரம் கொலை வெறியாய் மாறியது.
தீர்மானித்தார். முதலாளியைக் கொலை செய்வதென்று.
எப்படி?
யோசித்தார்!
ஃப்ளாஷ் அடித்தது.
முதலாளியின் பர்ஸனல் காரின் டாஷ் போர்டினுள் எப்போதும் ஒரு வெளிநாட்டு விஸ்கி பாட்டில் இருக்கும் என்பதும், அவர் செல்ஃப் டிரைவிங் பண்ணும் போது அப்பப்ப அதைக் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துப் பருகுவார் என்பதும், அவருக்கு நன்றாகவே தெரியும்.
“கரெக்ட்… அதுதான் நல்ல ஐடியா… அவர் வைத்திருக்கும் விஸ்கி பாட்டிலை எடுத்து அதிலிருக்கும் சரக்கைக் கொட்டி விட்டு அதே பாட்டிலில் விஷம் கலந்த விஸ்கியை ஊற்றி வைத்து விட வேணடும்…! யாருக்கும் நம்ம மேல சந்தேகமே வராது..!”
மறுநாள் மதிய உணவு நேரத்தில் யாரும் இல்லாத சமயத்தில் முதலாளியின் அறைக்குள் சென்று அவரது பர்ஸனல் காரின் சாவியை எடுத்துக் கொண்டு வந்த மூர்த்தி, சுற்றும்முற்றும் பார்த்து விட்டு, காரைத் திறந்து டாஷ் போர்டினுள்ளிருந்த அந்த வெளிநாட்டு விஸ்கி பாட்டிலை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார். மெல்ல நடந்து வேஸ்ட் ஆயில் கொட்டி வைக்கும் பிளாஸ்டிக் டிரம் அருகில் சென்று அதனுள் அந்த விஸ்கியைக் கொட்டினார்.
பின்னர் தன் பாக்கெட்டில் வைத்திருந்த வேறொரு பாட்டிலை எடுத்து அதிலிருந்த விஷம் கலந்த விஸ்கியை இந்த பாட்டிலினுள் ஊற்றி விட்டு, மறுபடியும் கார் அருகே வந்து அதே டாஷ் போர்டில் அதே இடத்தில் அந்த விஷம் கலந்த விஸ்கி பாட்டிலை வைத்து விட்டு, வேக வேகமாய்ச் சென்று காரின் சாவியை முதலாளியின் அறையில் வைத்து விட்டு, “அப்பாடா… லன்ச் முடிச்சிட்டு யாரும் வர்றதுக்கு முன்னாடி காரியத்தை வெற்றிகரமா முடிச்சிட்டோம்” நெஞ்சில் கை வைத்து நிம்மதியானார்.
மாலை வாக்கில் முதலாளி வந்ததும் நல்ல பிள்ளை போல் அவரிடம் சென்று, ”பிரஷ்ஷர் அதிகமாயிருக்கு” என்றொரு பொய்யைச் சொல்லி வண்டி வண்டியாய் அர்ச்சனைகளையும், கூடவே மூன்று நாட்களுக்கு லீவும் பெற்றுக் கொண்டு வந்தவர், அன்றிரவே மனைவியையும் அழைத்துக் கொண்டு சொந்த கிராமத்திற்கு பஸ் ஏறினார்..
அவர் கிராமத்திற்குப் புறப்பட்டுப் போன மறுநாள், டிராவல்ஸ் முதலாளி அனுப்பிய ஆள் அவர் வீட்டிற்கு வந்து அவரை விசாரிக்க,
“அப்பாவும்…அம்மாவும் கிராமத்திற்குப் போயிருக்காங்களே…” மூர்த்தியின் மூத்த மகன் தர்மன் சொல்ல,
“அடடே… அவரைக் கையோட கூட்டிட்டு வா”ன்னு சொல்லி முதலாளி அனுப்பிச்சாரே… இப்ப என்ன பண்றது?” வந்தவன் கைகளைப் பிசைய,
“ஏன் சார்… என்ன பிரச்சினை?” மூர்த்தியின் மூத்த மகன் கேட்க,
“ஒண்ணுமில்லை… அவசரமா ஒரு சவாரி… வெளிநாட்டுக்காரங்க நாலு பேரு… உடனே ஊட்டி போவணுமாம்… டிராவல்ஸ்ல எல்லா வண்டிகளும் சவாரி போயிட்டதால மொதலாளி தன்னோட பர்ஸனல் காரையே எடுத்துக்க அனுமதி குடுத்துட்டார்… ஆனாலும் இன்னொரு பிரச்சினை… ஹில்ஸ் ஓட்டற அனுபவமுள்ள டிரைவர் இப்போதைக்கு உங்கப்பா மட்டும்தான்… அதான் அவர் வீட்டுல இருந்தா கூட்டிட்டுப் போகலாம்ன்னு”
சில நிமிடங்கள் யோசித்த மூர்த்தியின்ப் மூத்த மகன் தர்மன், “சார் ஒரு ஐடியா” என்றான்.
“என்ன?”
“சார் நானும் எங்கப்பா மாதிரி டிரைவர்தான்… ஜெயம் டிராவல்ஸ்”லதான் இருக்கேன்!.. எங்கப்பா மாதிரியே எனக்கும் ஹில்ஸ் ஓட்டறதுல நல்ல அனுபவம் இருக்கு!… நான் இப்ப ஃப்ரீயாய்த்தான் இருக்கேன்!.. உங்க முதலாளியைக் கேட்டுப் பாருங்க… அவர் சம்மதிச்சார்ன்னா… நானே வர்றேன்!” என்றான் தர்மன்.
அந்த ஆள் செல்போனில் முதலாளியிடம் பேசி விட்டு, “ஓ.கே… முதலாளி சம்மதிச்சிட்டார்… உடனே கிளம்பி என் கூட வா!”
நந்தினி டிராவல்ஸ் முதலாளியின் பர்ஸனல் காரில் வெளிநாட்டுக்காரர்களை ஏற்றிக் கொண்டு ஊட்டி மலை ஏறினான் மூர்த்தியின் மூதத மகன் தர்மன்.
இரவு பத்து மணி வாக்கில் ஊட்டியை அடைந்து, அவர்களை ஒரு உயர்தர லாட்ஜில் சேர்ப்பித்து விட்டு, காரிலேயே உறங்க ஆரம்பித்தான் அவன். ஊட்டிக் குளிர் அவன் உடம்பை ஊசியாய்க் குதத,
“அடேங்கப்பா… என்னமாக் குளிருது… ஒரு போர்வை கூட எடுத்திட்டு வராம உடனே புறப்பட்டு வந்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்ன்னு இப்பத்தான் புரியுது… ஆ.. ஆ… அடடா… தாங்க முடியலையே!… அட்லீஸ்ட் ஒரு குவார்ட்டராவது வாங்கிட்டு வந்திருக்கலாம்… இன்னேரத்துக்குப் போனா எந்தக் கடையும் திறந்திருக்காது!… ச்சை…”
தனக்குத்தானே பேசியபடி டாஷ் போர்டைத் திறந்தவன் கண்களில் அந்த வெளிநாட்டு விஸ்கி பாட்டில் பட,
“ஆஹா… ஆஹா.. ஃபாரீன் சரக்கு” முகம் பிரகாசமானது.
எதையும் கொறித்துக் கொள்ளாமல்… எதையும் கலந்து கொள்ளாமல் அபபடியே ராவாக அதை வாய்க்குள் கவிழ்த்துக் கொண்டு நிம்மதியாகப் படுத்தான்.
மறுநாள் செய்தித்தாளில்,
“டாக்ஸி டிரைவர் மர்ம சாவு!.. கொலையா?… போலீஸ் தீவிர விசாரணை!”
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings