in ,

காற்றுக்கென்ன வேலி ❤ (நாவல் – பகுதி 14) – ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8   பகுதி 9    பகுதி 10   பகுதி 11    பகுதி 12    பகுதி 13

இதுவரை:

சஞ்சீவ் ஆராதனா காதல் திருமணத்தில் முடிந்து, சந்தோஷமாக வாழ்க்கையைத் துவங்குகிறார்கள். ஆனால் சிறு மனத்தாங்கலையும் ஏற்று, கடந்துவரப் பழகாத ஆராதனா, சஞ்சீவுடன் ஏற்படும் மனக்கசப்பால் காதல் வாழ்க்கையை உதறித் தள்ளிவிட்டு, தன் தந்தையின் பாசமே சிறந்தது என்று தன் வீட்டுக்கே வருகிறாள்.

மதன கோபால் தன் மகள் ஆராதனாவின் மனத்தை தன் விருப்பப்படி மாற்ற முயற்சி செய்கிறார். சஞ்சீவின் அம்மா பானுமதி, தன் மகன் மனத்தைக் கரைக்க முயல்கிறார். ஆராதனா சஞ்சீவ் நிலைப்பாடு என்ன? காதல் வாழ்க்கை பாதியில் முடிந்ததா? இல்லை காலத்தின் கையில் காயங்கள் ஆறியபின் புத்துணர்வு பெற்றதா?

பார்க்கலாம் வாருங்கள்.

இனி:

காதல் கசந்துவிடுமா? சஞ்சீவைப் பிரியும் முடிவை ஆராதனவால் எப்படி இவ்வளவு சுலபமாக எடுக்க முடிந்தது? கண்மூடித்தனமான அன்பும், காதலும்தான் ஆராதனாவின் தடுமாற்றத்திற்குக் காரணமா? தன் தந்தை மீது கண்மூடித்தனமாக அவள் வைத்திருந்த அன்பு, அவளின் ஆசைகளை, தேவைகளைப் பூர்த்தி செய்து, வாழ்க்கைப் படகை சுலபமாகச் செலுத்தும் துடுப்பாக உதவியது. அவள் எடுக்கும் முடிவுகள் சிலசமயம் தவறாகவும் இருக்கும் என்று அவள் என்றுமே உணர்ந்ததில்லை. அதற்கான சந்தர்ப்பமும் அமையவில்லை.

சஞ்சீவுடனான காதல் காலங்களிலும் அவளின் அநேகமான கருத்துக்கள் வரவேற்கப்பட்டன. சஞ்சீவ் அவளின் திறமைகளைப் பாராட்டினானே ஒழிய, அவள் குறைகளைப் பெரிதாகச் சுட்டிக் காட்டவில்லை. அதற்கான சூழ்நிலைக்கும் காதல் இடம் தரவில்லை போலும். அதனால்தான் தன் வீட்டில் வந்து தனிக்குடித்தனம் இருக்கலாம் என்று ஆராதனாவின் முடிவுக்கு சஞ்சீவ் எதிர்ப்பு தெரிவித்ததை அவளால் ஜீரணிக்க முடியவில்லை.

தன் கருத்துக்கு மாற்றுக் கருத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவமும், மனமும் இல்லாததால், ஆராதனாவுக்கு சஞ்சீவுடனான காதல் வாழ்க்கையை உதறித் தள்ளுவது அதிகம் வலிக்கவில்லை. அவளைப் பொறுத்தவரை அவள் நினைத்தது நடக்கவில்லை, அவள் ஆசை நிராகரிக்கப்பட்டது, அவள் கருத்து ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதெல்லாம்தான் அவளுக்கு மிகுந்த வலியைத் தந்தன. அதனால்தான் காதல் வாழ்க்கையை வேண்டாம் என்று விலகி வந்துவிட்டாள்.

காதல் வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பில் பிரிந்த சஞ்சீவ் மற்றும் ஆராதனா, தங்கள் காதல் நினைவுகளை மனதில் சுமந்தபடி தனித்தனியாக வாழ்க்கையை ஆரம்பித்தார்கள்.

ஆராதனாவுக்கு, தான் அவசரப்பட்டு காதல் சுழலில் சிக்கி, தவறான வாழ்க்கைத் துணையைத் தேடிக்கொண்டு விட்டோமோ என்ற கலக்கம் இருந்தது. கூடவே அப்பாவிடமிருந்து அவ்வப்போது கிடைக்கும் அறிவுரைகள் என எல்லாம் சேர்ந்துக் குழப்பிக் கொண்டிருந்தன. இருந்தாலும் வேலைக்குப் போகும் நேரத்தில் மட்டும் கொஞ்சம் தன் கவனத்தை திசை திருப்பிக் கொண்டாள்.

ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில், ஆராதனா தன் குழப்பத்திலிருந்து தெளிவு பெற்று, காதலைத் தேடி வருவாளா என்ற ஏக்கம் சஞ்சீவ் மனதில் இருந்தது. அவளைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த அந்த நாட்களை மனதுக்குள் பொக்கிஷம் போல வைத்துக்கொண்டு நாட்களைக் கடத்தினான்.

ஒரே வளாகத்தில் வேலைக்குச் செல்வதால், மீண்டும் சஞ்சீவை நேருக்கு நேர் பார்க்கும் சந்தர்ப்பங்கள் அமைந்து விடக்கூடாது என்று கலங்கினாள் ஆராதனா. ஆனால் சஞ்சீவ் ஆராதனாவை ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பார்த்து, பேசிவிட மாட்டோமா என்ற ஏக்கத்தில் தவித்தான்.

அந்த அலுவலக வளாகம் காதல் நினைவுகளை மறுபடியும் ஆராதனாவின் மனதிற்குள் சுழலவிட்டதால், வேலையை விட்டுவிட முடிவு செய்தாள். மதனகோபாலும் அதை அறிவுறுத்தினார். அவள் வேலை செய்யும் நிறுவனத்தின் சென்னைக் கிளைக்கு வேலையை மாற்றிக்கொண்டு வந்தாள்.

ஆராதனாவின் கைபேசி எண், அவள் எங்கே இருக்கிறாள் என்பது போன்ற தகவல்கள் சஞ்சீவ் மற்றும் அவன் குடும்பத்திற்குத் தெரிய வேண்டாம் என்பதற்காக நிறைய மெனக்கெட்டார் மதனகோபால். ஆராதனாவின் கைபேசி எண்ணை மாற்றினார். ஆராதனாவை மிகவும் அக்கறையெடுத்து பார்த்துக் கொண்டார்.

அப்பா, அம்மாவுடன் வசிக்க ஆரம்பித்தபிறகு, தோல்வியடைந்த திருமண வாழ்வின் கவலைகளில் இருந்து வெளியேவர முயற்சி செய்தாள் ஆராதனா. மதனகோபால் அவள் மனதை மாற்றுவதில் நிறைய முயற்சிகள் செய்தார். வேறு ஒரு புதிய வாழ்க்கைக்கு ஆராதனாவை சம்மதிக்க வைக்கவும், அவ்வப்போது தன் தரப்பில் என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமோ அதைச் செய்தார்.

ஆனால் அவளால் அதைமட்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்பா அடிக்கடி மறுமணம் குறித்துப் பேசுவதும் பிடிக்கவில்லை. அதற்காக சஞ்சீவுடன் சேர்ந்து வாழ்வது என்பதும் அவளுக்கு விருப்பமில்லை. இவளின் இந்தக் குழப்பமான முடிவு மதனகோபாலுக்கு மிகவும் கோபத்தைத் தந்தது.

“சஞ்சீவை மறக்க முடியலேன்னா அவன்கூடவே போய் வாழணும். இல்ல, அந்த வாழ்க்கையைத் தூக்கி எறிஞ்சுட்டு வேற ஒரு வாழ்க்கையைத் தேடிக்கணும். இப்படி ரெண்டுமே இல்லாம இது என்ன ஆராதனா?”

“அப்பா, ஏற்கனவே ஒரு இழப்புல இருந்து மீண்டுவர முடியாம தவிச்சுட்டிருக்கேன். இதுல எப்படி இன்னொரு வாழ்க்கையை என்னால யோசிக்க முடியும்? அதுவும் சட்டப்படி இன்னும் விவாகரத்து ஆகல. அதுக்குள்ள வேற கல்யாணம்னு பேசறீங்க.”

“என்ன பண்றது ஆராதனா? விவாகரத்து கேட்டா அந்த சஞ்சீவ் கொடுக்க மாட்டேங்கறான். நல்ல வசதியான புளியங்கொம்பா புடிச்சுப் போட்டா, வாழ்க்கை முழுக்க நல்லா இருக்கலாம்னு ஆசைப்பட்டான். அது கைநழுவிப் போயிடக் கூடாதுங்கறதுக்காக விவாகரத்துக்கு ஒத்துக்க மாட்டேன்னு அடம்புடிக்கறான். எப்படியாவது மனசு மாறி நீ வந்தா, உன்னை வச்சு என்னோட எல்லா சொத்தையும் அவன் ஆண்டு அனுபவிக்கலாம்னு நினைக்கறான் போல. அவன் விவாகரத்துக்கு ஒத்துக்கலேன்னா என்ன, நமக்கு வாழ விருப்பமில்லை, அவ்வளவுதான். அதனால நீ அதைப்பத்தி யோசிக்காதே.”

“அப்பா, எனக்கு எப்போ நீங்க சொல்ற மாதிரி இன்னொரு கல்யாணத்தைப்பத்தி யோசனை வருதோ, அப்போ நான் உங்ககிட்ட சொல்றேன். அதுவரைக்கும் மறுபடி மறுபடி என்கிட்ட இதைப்பத்தி பேசாதீங்க. நான் மறுபடியும் இந்த விஷயத்துல ஏமாறறதுக்குத் தயாரா இல்லை.”

இப்படி, பலமுறை அப்பாவுக்கும் மகளுக்கும் விவாதம் நடக்கும். நாட்கள் செல்லச் செல்ல, ஆராதனாவிற்கு தன் அப்பாவின் மேல் இருந்த மரியாதையும், பாசமும் லேசாகக் குறைய ஆரம்பித்ததுபோல் ஒரு உணர்வு. அப்பா எது சொன்னாலும் சரியாக இருக்கும், தனக்கு நல்லது மட்டுமே யோசிப்பார் என்று கண்மூடித்தனமாக இருந்த பாசத்தில் கொஞ்சம் தெளிவு பிறந்தது.

தன்னுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல், அப்பா வெறுமனே மறுமணத்தைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பதால், சென்னையில் அவர்களுடன் சேர்ந்து இருப்பதில் அவளுக்கு விருப்பம் குறைய ஆரம்பித்தது.

அவளுக்குத் தெளிவைத் தரும்படி இன்னொரு சந்தர்ப்பமும் அமைந்தது. தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்த ஒரு தனித்த இரவில், எதேச்சையாக தன் பெற்றோருக்கு இடையே நடந்த சம்பாஷணைகளைக் கேட்க நேர்ந்தது. பெற்றோராகவே இருந்தாலும், கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் உரையாடலைக் கேட்பது அநாகரிகம் என்பதால், அறைக்குத் திரும்பிவிட நினைத்தவளின் காதுகளில் அம்மாவின் அழுகுரல் விழுந்தது.

‘அம்மா ஏன் அழறாங்க? அப்பா அம்மாவுக்கு நடுல சண்டையா? என்னால ஏதாவது பிரச்சனையிருக்குமோ?’

அவளுள் எழுந்த கேள்விகள் அவளை அறைக்குத் திரும்பவிடாமல் அங்கேயே நின்று அவர்களின் உரையாடலைக் கேட்கத் தூண்டின.

“என்ன சரோ பேசறே நீ? இப்போ எதுக்கு அழறே? நீ என்னைப் புரிஞ்சுக்காம பேசறதுக்கு நான்தான் அழணும்.”

“நீங்கதான் புரியாம பேசறீங்க. உங்க பணத்தால சஞ்சீவை நீங்க விலைக்கு வாங்க நினைச்சீங்க. அதுக்கு ஒத்துக்காத சஞ்சீவ் கெட்டவராப் போயிட்டார். வீட்டோட மாப்பிள்ளையா வரச்சொல்லி கட்டாயப்படுத்தின நீங்க நல்லவராப் போயிட்டிங்க. வேடிக்கையா இருக்குங்க. நீங்க செஞ்சது தப்புன்னு எடுத்துசொல்ற என்னை நீங்கதான் புரிஞ்சுக்காம திட்டறீங்க. இதுல நான் உங்களைப் புரிஞ்சுக்கலன்னு சொல்றீங்க.”

“ஆமாம், சஞ்சீவை பெங்களூர்ல இருக்கற என் வீட்டுல வந்து தங்கிக்கச் சொன்னேன். இதுல என்ன தப்பிருக்கு. நமக்கிருக்கறது ஒரே பொண்ணு. அவளுக்கு நானே வரன் தேடிக் கல்யாணம் பண்ணி வச்சிருந்தா, அந்த மாப்பிள்ளை என் பேச்சுக்கு மறுபேச்சு பேசியிருப்பானா? என் கனவே அதுதான். நான் படிப்படியா கட்டி, இன்னிக்கு கம்பீரமா வளர்ந்து நிக்கற என்னோட தொழிலை என் காலத்துக்குப் பிறகு யார் பொறுப்பா பார்த்துப்பா சரோ? இதெல்லாம் நீ எப்பவாவது யோசிச்சிருக்கியா?

ஆராதனா காதல் விஷயத்தைச் சொன்னப்பவே இது இப்படித்தான் முடியும்னு எனக்குத் தெரியும். என் பொண்ணையும், என் தொழிலையும் கட்டிக் காப்பாத்தற ஒருத்தனை நானே தேடி ஆராதனாவுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிருந்தா, இந்தப் பிரச்சனை வந்திருக்காதில்ல. பொண்ணையும் குடுத்து, இவ்வளவு சொத்தையும் குடுக்கும்போது, வீட்டோட மாப்பிள்ளையா வரக் கசக்குமா என்ன? நான் நீன்னு என் நண்பர்கள் போட்டி போட்டுட்டிருந்தாங்க.

காதல் மண்ணாங்கட்டின்னு ஒருத்தனைப் புடிச்சுட்டு வந்து என் கனவெல்லாம் சிதைச்சுட்டா ஆராதனா. சரி, ஆசையா வளர்த்த பொண்ணாச்சே, அவளை அழவைக்க வேண்டாம்னுதான் கல்யாணத்தையும் பண்ணி வச்சேன். அப்போ நான் சொல்றதைக் கேட்கணும் இல்லையா? பணத்தால என்னை வாங்க நினைக்காதீங்க, உங்க பொண்ணை மட்டும்தான் காதலிச்சேன், உங்க பணத்தைக் காதலிக்கலேன்னு சினிமா வசனம் பேசறான் சஞ்சீவ்.”

“இந்த மாதிரி ஒரு மாப்பிள்ளை கிடைக்க நீங்க குடுத்து வச்சிருக்கணும். சொத்துக்கு ஆசைப்பட்டு ஆராதனாவைக் காதலிக்கற மாதிரி நடிச்சு, கல்யாணம் பண்ணபிறகு, நம்ம மகளைக் கொடுமைப்படுத்தி சொத்தெல்லாம் புடிங்கிக்கறவனா இருந்தா என்ன பண்ணியிருப்பீங்க? நாம மொத்த குடும்பமும் ஏமாந்துபோய் அழுதுட்டு உட்கார்ந்திருப்போம். ஆனா சஞ்சீவ் ஆராதனா மட்டும் போதும், காதல் மட்டும் போதும்னு சொன்னது உங்களுக்கும் உங்க மகளுக்கும் தப்பாத் தெரியுது. நல்லதுக்கே காலம் இல்லீங்க.”

“அதேதான் சரோ நானும் சொல்றேன். நல்லதுக்கே காலம் இல்ல. நான் ஒண்ணும் சஞ்சீவை அவன் குடும்பத்துல இருந்து பிரிச்சு கூட்டிட்டு வரலையே. என்கூடவே இருந்து என் பொண்ணையும் என் சொத்தையும் பார்த்துக்கோன்னு சொன்னேன். எனக்கும் வயசாகுதில்ல சரோ. என் காலத்துக்குப் பிறகு நம்ம கம்பெனியை யார் நிர்வகிப்பா? வெளியாள் யார்கிட்டயோ ஒப்படைக்கற பொறுப்பை ஆராதனகிட்டயும், அவளைக் கட்டிக்கறவன்கிட்டயும் ஒப்படைக்கலாம்னு நினைச்சேன். எல்லாமே தலைகீழாப் போச்சு.

ஆராதனாவை இன்னொரு கல்யாணம் பண்ணிக்கச் சொன்னா அவ அதுக்கும் ஒத்துக்க மாட்டேங்கறா. இப்பவும் என் தொழில்ரீதியான நட்பு வட்டத்துல அவளைக் கல்யாணம் பண்ணிக்க நிறைய பேர் கேக்கறாங்க. ஆனா எல்லாருமே நம்ம கம்பெனியை அவங்க கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர நோக்கத்தோட மட்டும்தான் கல்யாணம் பேசறாங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். என்ன பண்ணறது, என் நிலையை யாருமே புரிஞ்சுக்கத் தயாரா இல்ல.”

“உங்க நிலைமை எனக்குப் புரியாம இல்லை. ஆனா நீங்கதான் மத்தவங்க நிலையை சரியாப் புரிஞ்சுக்கல. உங்க நோக்கமும், ஆசையும் சரியா இருந்தாலும், உங்க அணுகுமுறை சரியில்லையே. அதான் சிக்கலே.”

“என்ன அணுகுமுறை சரியில்ல? இவ்வளவு பெரிய கம்பெனியை நிர்வகிக்கற எனக்கு, அணுகுமுறை தெரியலேன்னு நீ சொல்றே பார்த்தியா சரோ, அதான் வேடிக்கையா இருக்கு.”

“ஒரு நிர்வாகத்தை நிர்வகிக்கறது வேற, குடும்பத்தை நிர்வகிக்கறது வேற. உறவுகளைக் கையாளத் தனி பொறுமை வேணும். சில நாசூக்கு தெரியணும். உங்க அதிகாரத்தையும் பணத் திமிரையும் எல்லார்கிட்டயும் காட்டக் கூடாது.”

“என்கிட்டே வசதியிருக்கு, அதுக்குரிய திமிர் இருந்தா என்ன தப்பு. இது ஒண்ணும் சுலபமா எனக்குக் கிடைக்கல. நான் வசதியில்லாம இருந்தப்போ எவ்வளவு அவமானங்களைக் கடந்து வந்திருக்கேன் தெரியுமா? அந்தக் கசப்பான அனுபவங்கள்தான் என்னை கடுமையா உழைக்க வச்சுது. அதனாலத்தான் இப்போ நல்ல நிலைல இருக்கேன். யாருக்கும் அடிபணிய வேண்டிய அவசியம் இல்லை எனக்கு.”

‘சரி, எல்லாம் சரிதான். உங்களுக்குப் புரியற மாதிரி கேக்கறேன். நீங்க என்னைக் கல்யாணம் பண்ணினப்போ எங்க அப்பா நல்ல நிலைலதான் இருந்தாரு. நீங்க கஷ்டத்துலதான் இருந்தீங்க. இப்போ நீங்க சஞ்சீவ்கிட்ட சொன்ன மாதிரி எங்க அப்பா உங்களை வீட்டோட மாப்பிள்ளையா வரச்சொல்லியிருந்தா ஒத்துகிட்டிருப்பீங்களா? எங்கப்பாவோட சொத்தெல்லாம் நிர்வாகம் பண்ணச் சொல்லியிருந்தா, சரின்னு சொல்லியிருப்பீங்களா? அப்படிப் பண்ணியிருந்தா, நான் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தேன்னு இப்போ தலைநிமிர்ந்து சொல்ற மாதிரி சொல்லியிருக்க முடியுமா? முடியாதில்ல. அதேதான் சஞ்சீவோட நிலையும்.”

“நீ என்ன சரோ அந்த சஞ்சீவுக்கே ஆதரவா பேசறே?”

“யாருக்கும் ஆதரவா பேசல. நியாயத்தைச் சொல்றேன். முதல்ல இது ஆராதனாவோட வாழ்க்கை. அப்புறம்தான் உங்க நிர்வாகத்துக்கு சரியான நிர்வாகி வேணும்னு தேடறது. ரெண்டையும் ஒண்ணா நீங்க யோசிச்சதோட விளைவுதான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்.”

‘போதும் சரோ, என்னைக் குறை சொல்றதை இதோட நிறுத்திக்கோ. நான் கஷ்டப்பட்டு உருவாக்கின கோட்டையை நிர்வாகம் பண்ண நம்பிக்கையான ஒருத்தர் வேணும். அதுதான் எனக்கு முக்கியம். ஆராதனாவோட வாழ்க்கைன்னு தனியா என்ன இருக்கு? நம்மகூட இருக்கற வரைக்கும் அவளை நான் நல்லாத்தான் பார்த்துப்பேன். அவளா தேடிட்ட வாழ்க்கையை அவளே வேண்டாம்னு உதறிட்டு வந்துட்டா. இதுல என் பங்கு எதுவும் இல்லை. அவளை நான் பார்த்துப்பேன். ஆனா என் கோட்டை எனக்கப்புறம் என்னாகும்? அதுதான் எனக்கு ரொம்ப கவலையா இருக்கு. அதைத்தான் ரொம்ப யோசிக்கறேன். என்னைக் கொஞ்சம் தனியா விடு.”

இவை அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த ஆராதனா அதிர்ச்சியில் உறைந்து போனாள். அம்மாவின் லேசான விசும்பல் ஒலி மீண்டும் கேட்டது. அதற்குமேல் அங்கு நிற்க இயலாமல் தன் அறைக்கு வந்தவளுக்கு கண்ணீர் பெருகியது.

‘அப்பா, உங்க நிறுவனத்தை நிர்வகிக்க சரியான ஆள் வேணும்ங்கறதுக்காக நான் கல்யாணம் பண்ணிக்கணுமா? அப்போ என் வாழ்க்கை உங்களுக்கு முக்கியம் இல்லையா? சஞ்சீவை நீங்க விலை பேசினது எனக்குத் தெரியாதே அப்பா. எனக்குத் தெரியாம இதெல்லாம் செஞ்சுட்டு, நான் சஞ்சீவ்கூட சண்டை போடற மாதிரி பண்ணிட்டீங்களே பா. நான் உங்கமேல பாசம் வச்சதுக்கு, நம்பிக்கை வச்சதுக்கு இதுதான் பரிசா?

அம்மா, சாரி மா. உங்களை நிறைய காயப்படுத்திட்டேன். நீங்க இப்போ சிந்தற கண்ணீருக்கு நானும் முக்கிய காரணம் மா. ரியலி சாரி மா.’

கட்டிலில் சுருண்டு படுத்து வெடித்து அழுதாள் ஆராதனா. அந்த அழுகை அவளின் குழப்பங்களைக் கரைத்தது. தெளிவைத் தந்தது. இரவின் அழுகை அவளின் விடியலை மாற்றியது.

என்ன மாற்றம்? என்ன தெளிவு??

(தொடரும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நாலு பேரும் ஒரு சவமும் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    சைக்காலஜிகல் அப்ரோச் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை