2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
முன்கதை சுருக்கம்:
கவியினியாள் தான் கர்ப்பமாக இருக்கிறோமா என்று பரிசோதிக்கிறாள். சோதனையின் முடிவு என்ன வந்தது. அதற்குப் பின் என்ன நடந்தது என்பதை காண்போம்.
இனி:
நவம்பர் மழை. இரவு முழுவதும் கொட்டித் தீர்த்திருக்கும் போல நனைந்து இருந்தது சாலை. மிதமான மண் வாசனை வீட்டிற்குள்ளும் புகுந்தது. காற்றில் அத்தனை குளுமை. தண்ணீரில் கை வைக்கவே முடியவில்லை. சில்லிப்பு தலைக்கு ஏறியது.
கிட்டில் சிறுநீர் சொட்டுகள் விட்டுவிட்டு என்ன வரப்போகிறது என்கிற எதிர்பார்ப்பில் தவித்துக் கொண்டிருந்தேன்.
அந்தக் காலம் மாதிரி மூன்று மாதங்கள் வரை பொறுத்திருந்து நாடி பிடித்துப் பார்க்கத் தேவையில்லை. வாந்தி மயக்கம் போன்ற அறிகுறிகள் வரும் வரை காத்திருக்க தேவையில்லை. மருத்துவமனைக்கு செல்லும் முன்பே வீட்டிலேயே தெரிந்து கொள்ளலாம். எத்தனை சுலபமாக மாறிவிட்டது பரிசோதனை.
அதுவும் இன்றோடு எனக்கு முப்பத்தி நான்கு நாட்கள் தான் ஆகிறது. அதற்குள்ளே சோதித்து தெரிந்து கொள்ளலாம். அதற்கே பொறுமை இல்லையே.
கிட்டையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஐந்து நொடிகளில் சி யை தொட்டது முதல் கோடு. அடுத்த இரண்டாவது நொடியே இரண்டாம் கோடும் வந்தது!
வியப்பு தாங்காமல் உற்றுப் பார்த்தேன். நிஜம் தான் இரண்டு கோடுகள் வந்து விட்டன.
என் வயிற்றில் ஒரு உயிர் உருவாகிவிட்டதா! எங்கள் உயிர்! என்ன அதிசயம்! நான் தாயகி விட்டேன் என்கிறதா இந்த இரண்டு கோடு!
உடம்பெல்லாம் என்னவோ போல் ஆகிறது. எப்படி விவரிப்பேன் வார்த்தையில். ஈடில்ல ஆனந்தம் அடைந்தேன். யாரிடமாவது இதை சொல்ல வேண்டுமே.
இறைவா உனக்கு எப்படி நன்றி சொல்லுவேன்.
இது நிஜம் தானே இல்லை மீண்டும் ஒரு முறை சோதித்து பார்க்கலாமா?
வேண்டாம். இது நிஜம் தான். என்னால் அதை உணர முடிகிறது. என் வயிற்றில் ஒரு உயிர் ஜனித்து விட்டது. என்னையும் என் கணவரையும் பிரதிபலிக்க எங்கள் மறு உயிர் வந்து விட்டது.
எல்லையில்லா மகிழ்ச்சியில் மூழ்கித் திளைத்து சம நிலைக்கு வந்துவிட்டு நிதானித்து மகிழ்ந்தேன்.
நான் அம்மா ஆகப்போகிறேன். இதை என் கணவரிடம் சொல்ல வேண்டுமே அவர் அருகே சென்று நின்றேன். அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். எழுப்பலாமா.. வேண்டாம் நாளை எங்கள் திருமண நாள் அப்பொழுதே சொல்லி விட வேண்டியது தான்.
இருந்தும் ஒரு நாள் முழுவதும் சொல்லாமல் எப்படி இருப்பது. அதுவும் சுவாரஸ்யம் தானே நாளை சொல்வோம். வேறு யாரிடமாவது சொல்ல வேண்டும் போல் இருக்கிறதே.. இல்லை என் கணவருக்கு தான் நான் முதலில் அதை சொல்ல வேண்டும். இன்று யாரிடமும் சொல்லாமல் இருக்கப்போகிறேன்.
தூக்கம் முழுவதும் தெளிந்தது. முகத்தை இன்னொரு முறை நீரில் கழுவிக் கொண்டேன். குளிர்ந்த நீர் கண்களில் பட்டதை அனுபவித்தேன்.
துண்டில் முகத்தை துடைத்துக் கொண்டே ஹாலிற்கு வந்தேன். மணி ஐந்து இருபது. நான் தூங்கி எழுந்து இருபது நிமிடங்கள் தான் ஆகிறதா.. இந்த இருபத்து நிமிடங்கள் தந்த சந்தோசம் இந்த ஜென்மம் முழுவதும் நினைத்து பூரிக்கலாமே.
அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். கதவை திறந்தேன். விடிய விடிய பெய்த மழையால் தெரு முழுவதும் நனைந்து இருந்தது. மழை வாசம் நாசியில் ஏறி உடலுக்குள் கூசியது.
இன்னும் நிலவின் ஆட்சி தான் இருந்தது. சூரியன் எழவில்லை.
மீண்டும் அறைக்குள் சென்றேன். எண்ணங்களை கட்டுப் படுத்த முடியவில்லை. ஆசையாய் சிறகடித்தது. நானும் அதன் போக்கில் பறந்தேன்.
பாடல் கேட்க வேண்டும் போலிருந்தது. ஹெட்செட்டை எடுத்து மாட்டிக்கொண்டேன். இதமான பாடல்கள் இரண்டை கேட்டேன். பின் கர்ப்ப காலப் பாடல்கள் கேட்க வேண்டும் போலிருந்தது.
‘தங்கக்கை வலை வைரக்கை வலை…
ஆரிராரோ ஆராரோ…
இந்த நாளிலே வந்த ஞாபகம்…
எந்த நாளும் மாறாதோ…’
பாடலை கேட்கக் கேட்க கண்ணில் இருந்து நீர் கசிந்தது
என் பிள்ளைக்காக கசிந்த முதல் ஆனந்த கண்ணீர்.
என் கணவர் அசையும் சத்தம் கேட்டு கண்களை வேகமாய் துடைத்துக் கொண்டேன்.
“என்ன ஹெட்செட் போட்டுட்டு உட்கார்ந்துருக்க” அவர் பேசப் பேச புதுவித வெட்கம் வந்தது
“எல்லாரும் தூங்கிறீங்க.. எனக்கு தூக்கம் வரல.. பாட்டு கேக்கறேன்” வெட்கத்தையும் என் தாய்மையையும் மறைத்துக் கொண்டு இயல்பாய் பேசினேன்.
“சண்டே இவ்ளோ சீக்கிரம் எழுந்து உக்கார்ந்துட்டு தூக்கம் வரலன்னு சொல்ற.. சரி பாட்டு கேளு நான் தூங்குறேன்”
என் கணவர் மீண்டும் உறங்கினார். சமையல் அறையில் இருந்து சத்தம் கேட்டது. என் அத்தை விழித்திருப்பார். நானும் சமையலறைக்குச் சென்றேன்.
“வா கவியினியாள். இவ்ளோ சீக்கிரம் எழுந்துட்ட.. இன்னிக்கு ஆபீஸ் லீவுல.. கொஞ்ச நேரம் தூங்கலாம்ல”
என் மேல் என் மாமியாருக்கு என்றுமே பாசம் உண்டு. மருமகளாக நடத்த வேண்டும் என்று நினைக்க மாட்டார். மகளாகவே நடத்துவார். அதற்காக சண்டை வராமல் இல்லை. மெல்லிய சண்டை அவ்வப்போது வரும் கருத்து வித்தியாசம் தோன்றும் பொழுது.
“தூக்கம் தெளிஞ்சிருச்சி அத்தை”
“என்ன குடிக்கிற.. டீயா.. காபியா”
அத்தை போடும் காபிக்கு தனி மணம் உண்டு. காபி குடிக்க வேண்டும் போல் இருந்தது. காபியை கேட்டு வாங்கிக் குடித்தேன்.
காலை உணவு செய்ய அவருக்கு உதவியாக இருந்தேன். அடிக்கடி எனக்குள் நானே சிரித்துக்கொண்டே வேலை செய்தேன்.
என் கணவரும் எழுந்து வர அவரோடு சேர்ந்து காலை உணவை சாப்பிட்டு முடித்தேன்.
வெளியில் ஏதாவது வேலை இருக்கிறதா என்று கணவர் கேட்டார். நிறைந்த மனதோடு இருந்த எனக்கு எதுவுமே தோன்றவில்லை.
இரவை நெருங்கியது நாள்.
“என்னங்க.. நாளைக்கு நம்ம கேக் கட் பண்லாமா.. வாங்கிட்டு வரிங்களா”
“என்ன கவியினி.. கேக் லாம் சாப்பிட மாட்டியே என்ன திடிர்னு”
“நம்ம வெட்டிங் டேக்கு கேக் கட் பண்ணும் போல இருக்கு.. வாங்கிட்டு வாங்களேன்”
“காலைல வாங்கிட்டு வரேன்”
“இல்லை இப்போவே வாங்கிட்டு வாங்க ஆதி.. நம்ம நைட் டுவல்க்கு கட் பண்லாம்”
“பன்னெண்டு மணிக்கு கேக் கட் பண்லாமா.. சர்ப்ரைஸ் நீயே கேட்டு வாங்கிக்றியா” என்று ஆதி கேட்டதும் உள்ளுக்குள் நினைத்து கொண்டேன்.
உண்மையான சர்ப்ரைஸ் இரவு பன்னிரண்டு மணிக்கு உனக்கு காத்திருக்கிறது ஆதி!
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings