2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
அந்த மணியன் பையன் டப்பால இருந்த எல்லாத்தையும் கட்டிலுக்கு மேலே பரப்பி வச்சிட்டு பேருக்கு எல்லா பொம்மையையும் துணியால துடைச்சிட்டு 100 ரூபாயை வாங்கிண்டு ஓடிப் போயிட்டான். அவன் அவசரம் அவனுக்கு.
இப்ப இந்த ஸ்லாட்டட் ஆங்கிள்களை போல்ட் போட்டு படியாக்கற வேலை என்னுதாம். எழுதப் படாத உத்தரவு.
விடிஞ்சவுடனே பல், கில் தேச்சிட்டு, காபி டிகாஷன் போட்டுட்டு, கம்பி கேட்ல தொங்கற பைல இருந்து பால் பாக்கெட்களை எடுத்து,ஒண்ணு காபிக்கு இப்ப காச்ச, இன்னொண்ணு ஃபிரிட்ஜ்ல.
பங்கஜம் இன்னும் எந்திரிக்கலை.எனக்கு மட்டும் காபி கலந்துண்டா போறும், அப்படின்னு நினைக்கறப்பவே உள்ளே இருந்து குரல்
” ஏன்னா பால்காரர் வந்தாச்சா, சாயந்தரம் வரைக்கும் கதவுல தொங்கப் போறது எடுத்து ஃபிரிட்ஜ்லயாவது வைங்கோ”
சரி மனையாளும் காபி குடிக்க ரெடின்னு சிக்னல் கொடுத்துட்டா.
சட் இந்த காபி கலக்கறப்ப, டாய்லட்ல இருக்கறப்ப, பாதி குளிக்கறப்ப, தட்டுல சாதம் போட்டு பிசையறப்ப இந்த மாதிரி டயத்துலதான் நம்ம மொபைல் ஃபோன் சந்தோஷ சத்தத்தோட அலறும்.
அவசரமா தடுக்கி விழுந்து ஓடிப் போய் எடுக்கறதுக்குள்ளே கட் ஆயிடும். சத்தம் கேக்கறதா உங்களுக்கும், சக்கரை டப்பாவை அப்படியே திறந்து வச்சிட்டு போன் கிட்ட ஓடினா வழக்கம் போல நின்னு போயிடுத்து. யாருனு பாத்தேன், இந்த கீழ் வீட்டு கோண்டுதான்.
கோண்டு நல்லவன்தான், என்னை மாதிரியே ரிடயர்ட் ஆயி,பொண்டாட்டி கிட்ட தினசரி அர்ச்சனை வாங்கிக்கறவன்தான்.தினம் கார்த்தால ரெண்டு பேரும் பக்கத்துல இருக்கற ஜனதா பார்க்ல போய் நடந்துட்டு வருவோம்.
அவனுக்கு அந்தக் காலந்துல டீசன்டா டான்ஸ் பண்ணுவாளே அந்த ஜெயமாலினி, விஜய லலிதா, ஜோதிலட்சுமி, அனுராதா, டிஸ்கோ சாந்தி, எல். விஜயலட்சுமி, சில்க் ஸ்மிதா இவங்க மேல எல்லாம் ஒரு கிரஷ். தினம் ஒரு டான்ஸ் சீக்வன்ஸ் பேசாம விட மாட்டான்.நல்ல கலா ரசிகன்.இதுக்கு மேல அவன் வர்ணிக்கறதை இங்கே எழுத முடியாது.
அவன்தான் இப்ப ஃபோன்ல ரெண்டு தடவை கூப்டுட்டான். சரி காபி குடிச்சிட்டு திரும்ப கூப்பிடலாம்னு திரும்பறப்ப, திருப்பி ஃபோன் சத்தம் அவனேதான். எடுத்த உடனே,” தந்தி டி.வீ பாருடா” ஃபோன் கட் பண்ணிட்டான்.
டயம் பாத்தேன், நியூஸ் டயம், சரி அதுதான் திரும்ப திரும்ப போடுவாளே, முதல்ல காபி சூடா சாப்பிட்டாதான் மூளையே வேலை செய்யும்.
ரெண்டு டம்ளர்ல ஸ்ட்ராங்கா காபி கலந்து ஒண்ணை சின்ன தட்லு மூடி வச்சிட்டு இன்னொண்ணை கைல எடுத்துண்டு ஈசிசேர்ல சாஞ்சிண்டு டி.வீ ஆன் பண்ணினேன்.
தந்தி டி.வீ தான். அதுல திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் சுத்தி சுத்தி காட்டறான்.முற்றிலும் மரத்தாலான மூலவர் .ஒரு கால் அடி பூமில, அடுத்த கால் அடி ஆகாயத்துல , மூணாவது அடி உம் தலை மேலேனு மஹாபலி மன்னன் தலையில் கால் வைத்து அழுத்தி அவர் அகந்தையை அழித்த கதைனு காட்சி பூர்வமாய் பக்தி மார்க்கம் ஓடிண்டிருந்தது. கோண்டுவுக்கு என்ன ஆச்சு இன்னிக்கு பக்தி மார்க்கமா போயிட்டான், மாமி காபி கொடுக்கலையா? உடனே ஃபோன் பண்ணினேன்,
“ என்னடா பாத்தயான்னான்”
“ ஆமாம் பாத்தேன் என்ன திடீர்னு பக்தி மார்க்கம் எடுத்துட்டே”ன்னேன்.
கொஞ்ச நேரம் அமைதி,அப்பறம்” கடவுளே எந்த சேனல் பாத்தே எதைப் பாத்தே”
“ நீ சொன்ன தந்தி சேனல்தான், பிரமாதமா இருந்தது உலகளந்த பெருமாள் கோவில்.மூலவர் சிலை தாரு மரத்துல செஞ்சதாம் ஜொலிக்கறார் பெருமாள்.”
“ அடப் பாவி நீ அடுத்த புரோக்ராமுக்கு போயிட்டே, இதுக்கு முன்னால சில்க் ஸ்மிதா பிறந்த நாள் இன்னிக்கு அவளைப் பத்தி காட்டினான். அவளோட பழைய படங்கள்ல இருந்து நிறைய கிளிப்கள்,இப்ப பாத்தாலும் கிறக்கம் வருதுடா.”
“ அட சீ அதுக்கா காத்தாலே இருந்து அஞ்சு ஃபோன் போட்டே?”
“ ஆமாண்டா, மிஸஸ் தூங்கிண்டிருந்தா, கமல் கூட நம்ம சில்க் ஆடி பாடறாளே ‘நேத்து ராத்திரி யம்மானு’ஒரு பாட்டு அதுல அவ ரெண்டு கண்களையும் பாத்து சொக்கிப் போயிட்டேன்படு பாவிகள், சின்ன கிளிப்பிங்தான் போட்டான்க”
“உனக்கென்ன கண்களை பாப்பே எல்லாத்தையும் பாப்பே, எனக்கு இன்னிக்கு படி கட்டலைன்னா போச்சு, இன்னிக்கு நான் வாக்கிங் வர முடியாது, வேலை இருக்கு ஈவ்னிங் பாப்போம் ஃபோனை வை அவ வரா“
பங்கஜம் வந்துட்டா “காபி போட்டுட்டேள் போல இருக்கே வாசனை மூக்கை துளைக்கறதே, பரவாயில்லை இத்தனை வருஷத்துல இதாவது கத்துண்டேளே, என்ன ஃபோன்ல உங்க கீழ்வீட்டு ஃபிரண்டா? ஏதோ சில்க் பில்க்னு பேசினேளே”
நல்ல பாம்புக் காது இதெல்லாம் நல்லா கேக்கும், “ இல்லைடி பங்கஜம் கொலுக்கு குழந்தைள் வந்தா காட்பரிஸ் சில்க் சாக்லெட் கொடுக்கலாமேனு ஐடியா கொடுத்துண்டிருந்தான்”
“ஓகோ அதுதானா, உவ்வே டம்ளர்ல மூடி வச்சிருந்தது காபியா, வாசனையெல்லாம் வந்தது இப்ப பூனை ஒண்ணுக்கு போன மாதிரி இருக்கு”
மனசுக்குள்ளே அதெல்லாம் டேஸ்ட் தெரியுமா, பலமா,” ஏம்மா கலந்து கால் மணி நேரமானா ஆறிப் போகாதா அதான், கொட்டிடேன் அது இதுனு சொல்லிண்டு குடிக்கறே”
“என்ன பண்றது வேஸ்ட் பண்றது எனக்கு பிடிக்காது”
“ அதுக்காக கழுதை, இல்லை இல்லை பூனை ஒண்ணுக்கு போறதை குடிக்க முடியுமா”
“ சரி ரொம்ப தமாஷா பேசறதா நினைப்போ, சகிக்கலை.
போய் ஸ்டெப்ஸ் வைக்கறதை பாப்போம் வாங்கோ.”
அட பரவாயில்லையே பங்கஜம் ஹெல்ப் பண்ணப் போறா.
கட்டில்ல பரப்பி வச்சிட்டு மீதியை தரைலயும் கிடத்திட்டு போயிட்டானே இந்த மணியன் கடங்காரன், இதை ஸ்டெப் வச்சு , துணி கட்டி, வரிசை தப்பாம அடுக்கறதுக்குள்ளே நாக்கு தள்ளுமே. இதை இடுப்புல கையை வச்சிண்டு பாத்து பாத்து மலைச்சுப் போய் நிக்கறேன்.
பங்கஜம் பக்கத்துல உரசினாப்பல நின்னுண்டா, “என்ன பங்கு காலங்காத்தால மூடுன்னேன்”
வெக்கப் படறப்ப இன்னமும் அழகாதான் இருக்கா என் பங்கஜம்.
“ ஐய்யே ஆளைப் பாரு குழந்தையில்லாத வீட்ல கிழவன் துள்ளி விளையாடினானாம்ன்ற கதையா. இந்த மியூசிஷயன் பொம்மை மதுரைக்கு போறப்ப வாங்கினோம் தானே 1990 தானே அந்த ஞாபகம் வந்தது,” சொல்லும் போதே அவ முகம் சிவந்தது.
“ஓகோ அந்த மதுரைக்கு போன ஞாபகமா?”
“ போங்கோன்னா, நீங்க ரொம்ப மோசம் எப்ப பாத்தாலும் எதையாவது பேசிண்டு”
ஆகா என் பொஞ்சாதிக்கு இன்னும் என் மேல ஆசைதான்னு நினைச்சிண்டேன்.
சட்னு 2022க்கு வந்துட்டா.”சரி சரி வழிஞ்சது போறும் வேலையை ஆரம்பிக்கலாம், இந்த தடவை ஒரு சேன்ஜ் எப்பவும் போல மாடிப் படி மாதிரி வைக்காம வேற ஷேப்ல வைப்போம் என்ன?
“இதுல வேற ஷேப் எப்படி வரும்?”
“மனசிருந்தா மார்க்கம் உண்டு, இன்ஜினியர் வேலை இத்தனை வருஷம் பாத்து என்ன பிரயோஜனம்”
“சரி மேலே சுவத்தை ஒட்டி ஒரு பென்ச், இப்படிக்கும், அப்படிக்குமா கீழே முக்கோணமா கைலயே போட்டு காட்டினேன் “
“அச்சோ புத்திதான் போறதே குடும்பக் கட்டுப்பாடு சின்னம் மாதிரி இருக்கும்”
“அப்ப எப்படி வைக்கணும்ன்றே”
“ஒரு வட்டமா வச்சா நன்னா இருக்காது?”
“ இந்த ஸ்லாட்டட் ஆங்கிள் தகர ஷீட் வச்சு வட்டம் போடுன்னா எப்படிடி போட முடியும்”
“ என்ஜினியர்னு சொல்லிக்கோங்கோ, வட்டம் போட நான் கத்துக் கொடுக்கணுமாக்கும்.”
வாத விவாதங்கள் முடிஞ்சு ஒருவழியா எப்பவும் போல ஏழு படி போல்ட்டி முடிச்சேன். ரெண்டு மணி நேரம் ஆச்சு நடுவுல பங்கஜம் ஹார்லிக்ஸ் கொண்டு வந்து கொடுத்தா, கஷ்டப் பட்டு துருப்பிடிச்ச நட் போல்டை மண்ணெண்ணைல அலம்பி போல்ட்டினப்ப, காசித்துண்டால நெத்தில வழியற வேர்வையை துடைச்சு விட்டா.என்னதான் பேசினாலும் பாசம் போகுமா.
மாம்பழக்கலர் பட்டுப் புடவையை கப்போர்ட்ல இருந்து எடுத்துக் கொடுத்தா படில போத்தி அலங்கரிக்க.”இந்தப் புடவை ஞாபகம் இருக்கா”
“ஏன் இல்லாம கும்மோணத்துல முதமுத உன்னை பொண்ணு பாக்க வரப்ப தளக்கா,புளக்கானு கட்டிண்டிருந்தயே.”
“ஆமாம் அப்ப எனக்கு 19 வயசு, புடவை கஷ்டப்பட்டு உங்களுக்காகதான் கட்டிண்டேன்” சொல்லும் போதே பங்குக்கு 20 வயசு கம்மி ஆயிடுத்து.
“ அப்ப ஏதோ பாடினயே, ‘சித்த சோரா யஷோதா கா பால் நவநீத நந்த கோபால்னு’அது என்ன லாங்வேஜ்னு இன்னும் புரியலை.”
“ அச்சோ பரவாயில்லையே இன்னம் ஞாபகம் இருக்கே”
“ அது மட்டும் இல்லை, கல்யாணத்துக்கு முன்னால உங்க ஊருக்கு வந்தது திருட்டுத்தனமா உன்னை பாத்தது, கல்யாண கலாட்டாக்கள், முதலிரவு எல்லாம் தெளிவா ஞாபகம் இருக்கு”
பங்கஜம் பழையநாளுக்கே போயிட்டா, கண்கள் கனவில் மிதந்தது. சரிப்பா கொலுப்படிதான் செட் பண்ணியாச்சே நாளைக்கு பொம்மை எடுத்து வச்சிக்கலாம் அவா அவா உங்க வேலையை பாருங்கோ.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings