2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
நிறைய பேர் நான் கொஞ்சம் காதல் கீதல்னு ஓவரா எழுதறேன்னு புகார், என்ன பண்றது சார் வயசுக் கோளாரு. நானும் பக்தி மார்க்கம், பூஜை புனஸ்காரம், தெய்வ தரிசனம்னு ஏதேதோ எழுதிதான் பாத்தேன், எனக்கே அது நம்ம ரூட் இல்லை, இதெல்லாம் எழுத பல ஜாம்பவான்கள் இருக்காங்கனு புரிஞ்சது.
மனைவி சுசீலா, “என்ன வாயெல்லாம் ஒரே பல்லு, ராத்திரி பூரா ஏதோ ஃபோனை நோண்டிண்டிருந்தேளே. முதல்ல கன்னா பின்னானு எழுதறதை நிறுத்துங்கோ, பக்கத்தாத்து பங்கஜம் உன் ஆத்துக்காரர் ரொம்ப ரொமாண்டிக் டைப் போல கிளுகிளுப்பா எழுதறாரேன்றா. கண்யமா எழுதுங்கோ வயசுக்கு தகுந்த மாதிரி போறும், கிளு கிளுப்பாமே, கட்டேல போறவ என்கிட்டயே தைரியமா சொல்றா, பனியன் போட்டுண்டு வெளியே நிக்காதீங்கோ ஒரு ஷர்ட் போட்டுண்டு போங்கோன்னா கேக்கணும், பெரிய தாராசிங்னு நினைப்பு” சொல்லிண்டே உள்ளே போயிட்டா.
ஹா உள்ளே போயாச்சு. அந்த பர்வதம் கதை சொல்லலைதானே உங்களுக்கு. அழகுன்னா அழகு அவ்வளவு அழகு. நான் அப்ப ஹைஸ்கூல் முடிச்சு காலேஜ் போக ரெடியான நேரம். என் வீட்ல இருந்து ஏழாவது வீடு என் பிரண்ட் சங்கரன் குடியிருக்கற வீடு. அவனும் நானும் தினம் செஸ் விளையாடுவோம் அவன் வீட்டு குட்டித் திண்ணைல உக்காந்து.
ஞாயித்துக்கிழமை சீக்கிரமே 11 மணிக்கு போயிட்டேன். அப்பல்லாம் காலிங்பெல் ஏது? ஒருக்களிச்சு சாத்தியிருந்த பிரம்மாண்டமான அந்த கதவை தள்ளிண்டு சங்கரானு கூப்டுண்டே உள்ளே நுழைஞ்சேன்.
ஹால்ல 5 அடி நீள ஊஞ்சல் அதுல உக்காந்து வீசி வீசி ஆடிண்டிருந்தா அந்தப் பொண்ணு. என் குரல் கேட்டதும் ஊஞ்சல் சடன் பிரேக் அடிச்சு நின்னது. வெள்ளை பாவாடை, நீலக்கலர் தாவணி, மேட்சிங்கா பிளவ்ஸ், நீளமா பின்னல், அழகு முகம் அலட்சியப் பார்வை. என்ன என்பது போல என்னை ஏறிட்டு பாத்தா.
இத்தனை நாள் ஒரு பெண்ணை இவ்வளவு அருகில் ரசித்து பார்த்ததோ, இல்லை பேசினதோ இல்லை. வாய் குளறியது, “நான், சங்கரன், செஸ் விளையாட எங்கே போனான்.”
களுக்னு சிரிப்பு ”என்ன வாய் தந்தி அடிக்குது, என்னை பாத்த பயமா”
சமாளிச்சிட்டேன் இப்ப, “எனக்கென்ன பயம், நீ பர்வதம், சங்கரனோட பெரிப்பா பொண்ணு. இப்ப 11 கிளாஸ் பரிட்சை எழுதிட்டு லீவுக்கு வந்திருக்கே, பெங்களூர்ல இருந்து. இந்த விவரம் போறுமா, இப்ப சொல்லு சங்கரன் எங்கே?”
“பரவாயில்லையே இந்த தெருவுல இருக்கற எல்லா பொண்ணு ஜாதகமும் மனப்பாடமோ, ஜாக்ரதையாகி இர பேகு உடுகா பட்டாஸ் தரா இதானே”
“ஏய் பொண்ணு , தைரியம் இருந்தா தமிழ்ல திட்டு, வேற பாஷைல பேசாதே”
“உன்னை ஏன் திட்டறேன், நான் ஏதோ செய்யுள் ஞாபகப் படுத்திண்டேன்”
நான் சந்தேகமா அவளைப் பாத்தேன், “அதோ உன் பிரண்டு”னு நமட்டு சிரிப்போட உள்ளே ஓடிட்டா.
“என்னடா இன்னிக்கு சீக்கிரம் வந்துட்டே, என் அரட்டைக் கள்ளி தங்கை என்ன சொல்றா”
“சங்கரா அவ ஏதோ கன்னடத்துல பேசறாடா, கேலி பண்றானு நினைக்கறேன். நம்ம ஊரு ஏதோ பட்டிக்காடு மாதிரியும் பெங்களூரு பெரிய சிடி மாதிரியும் நினைக்கறா போல.”
“சே சே பர்வதம் நல்ல பொண்ணு துடுக்கா பேசுவா அவ்வளவுதான்.”
நான் எப்ப சங்கரன் வீட்டுக்கு விளையாடப் போனாலும் எங்க விளையாட்டை ஒரு ஓரமா நின்னு பாப்பா. பாத்தா சின்ன புன்முறுவல் அவ்வளவுதான். ஒரு தடவை சங்கரன், “ஏய் பர்வதம் இவனோட நீ ஒரு கேம் விளையாடு, அம்மா ஏதோ வாங்கிண்டு வரச் சொன்னா ஓடிப் போய் வாங்கிண்டு வந்துடறேன்”
மறுப்பேதும் சொல்லாம உக்காந்தா. கத்துக்குட்டிதானேனு அலட்சியமா விளையாடினேன். 18 வது மூவ்ல என் கிங் சிறை பட்டார், எங்கும் தப்பிக்க வழியில்லை. பர்வதம், “சாரி டியர் செக் அண்ட் மேட்னு” சொல்லிட்டு நாக்கை கடிச்சிண்டா.
எழுந்து ஓடியே போயிட்டா. என் மரமண்டைக்கு அப்ப புரியலை. அப்பறம் ஸ்ட்ரைக் ஆச்சு, பேச்சு வாக்குல என்னை டியர்னு சொன்னது. என் உச்சி குளிந்து போச்சு. குமுதம், விகடன்லதான் காதல்னு படிச்சிருக்கேன், இதுவரை சீரியசா அதை யோசிச்சது இல்லை.
ஒரு வேளை இதுதானா அது. ரெண்டு நாள் கண்ல படலை. அப்பறம் பாத்தப்ப தலை குணிஞ்சிண்டு வெட்கத்தோட கால் கட்டை விரலால் பூமியில் கோலம் போட்டா. சங்கரன் கீழே குணிஞ்சு அடுத்த மூவ் யோசிக்கறப்ப, நான் அவளை பாத்து கண்ணாலயே என்னாச்சுனு கேட்டேன்.
ஒண்ணுமில்லைன்ற மாதிரி லேசா அழகா தலையாட்டினா. இடுப்புல இருந்து சின்ன காகித மடிப்பை எடுத்து அகல்விளக்கு வைக்கிற மாடத்துல வச்சிட்டு எனக்கு ஜாடை காட்டினா. புறப்படும் போது நைசா அந்த காகித மடிப்பை கவர்ந்து கொண்டதை பாத்து பர்வதம் பூத்த புன்னகை இன்னும் கண்ணுலயே நிக்கறது.
இப்ப சமையல் உள்ளை பாத்து, “சுசீ, சூப்பரா ரசம் வாசனை வருதுடி அமக்களம்.”
“என்ன ஏதாவது திரிசமம் பண்றேளா, முருங்கைக்கா சாம்பார்னா வைக்கறேன்”
“தெரியாதா என்ன உன் சாம்பார் எட்டூருக்கு மணக்குமே, நீ எவ்வளவு உஷாரா இருக்கேனு செக் பண்ணினேன்”
“இருங்கோ வந்து படிக்கறேன்”
நான் அவளை விட உஷார் ஆச்சே, பர்வதம் போர்ஷனை தனி பேப்பர்ல எழுதறேன். கடைசில சேத்தா போச்சு.
எங்கே விட்டேன், விளக்கு மாடத்துல இருந்து எட்டா மடிச்ச காகிதத்தை எடுத்துண்டு நேரா எங்க வீட்டு மொட்டை மாடிதான். ஒரே பரபரப்பு மனசு படபடனு அடிச்சிக்கறது, ஆர்வமா அந்த காகித மடிப்பை பிரிச்சேன்.
”நாளைக்கு 11 மணிக்கு ஹெட் போஸ்ட் ஆபீஸ் போறேன்” அவ்வளவுதான். இது என்ன லவ் லெட்டரா, அவ எங்கே போனா எனக்கென்ன. சப்னு போயிட்டது, கிண்டல் பண்ணி ஏமாத்திட்டாளே.
கீழே முகத்தை தொங்கப் போட்டுண்டு வந்தேன், அம்மா, “ஏண்டா வீட்டுக் காரியம் ஒண்ணு பண்றயா எப்ப பாரு அந்த கடங்காரன் சங்கரன் வீட்டு திண்ணையை கட்டிண்டு அழறே”
“நீ என்ன வேலை சொன்னே, எதை பண்ணலை ஏன் எப்ப பாத்தாலும் கத்திண்டே இருக்கே”
“உனக்கு வயசென்ன, எல்லாம் வாயைத் திறந்து சொல்லணுமா”
டக்னு புரிஞ்சது, “ஓ மை ஸ்வீட் மம்மி தேங்க் யூ வெரி மச், அம்மாவை தோளோடு கட்டிண்டேன். மிளகாப்பொடி, அரிசி மாவு அரைச்சிண்டு வரணும், காஞ்ச விறகா பாத்து ரெண்டு தூக்கு வாங்கிண்டு வரணும் அவ்வளவுதானே”
அம்மாக்கு ஒரே ஆச்சரியம் என்னாச்சு பையனுக்கு, திடீர்னு தேன் குடிச்ச நரியாட்டம் துள்ளறான்
பர்வதம் உஷார்தான். தனியா என்னை கூப்பிட்டிருக்கா, நான்தான் மடையன் புரியாம அவளை திட்டறேன்.
மறுநாள் தலைமை தபால் நிலையத்தில் போஸ்டல் ஆர்டர் வாங்க வந்த அவளை பாக்க போனேன். அவ வேலை முடிஞ்சது போல, பெஞ்ச்ல உக்காந்திருந்தா, நான் பக்கத்துல போய் உக்காந்தேன்.
என்னைப் பாத்து புன்முறுவல் பூத்த பாரு, “பரவாயில்லையே உஷார்தான் நீ”
நான், ”சொல்லு இப்ப என்ன விஷயம்”
அவ, ”ஒண்ணுமில்லை, எப்படி படிக்கறே, வருஷம் மும்மாரி பொழியறதா உங்க ஊர்ல, இன்னிக்கு உங்க வீட்ல என்ன சமையல்”
“ஏய் என்ன கிண்டல் பண்றயா, ஓ பாய்ஸ்தான் முதல்ல சொல்லணும் இல்லை?”
“என்ன, என்ன சொல்லணும் போ போய் செஸ் விளையாடு”
சட்னு அவ கையை கைல எடுத்துண்டேன். “ஐ லவ் யூ பாரு உன்னை பாத்ததுல இருந்தே எனக்குள்ளே என்னவோ பண்றது”
அவ நேரா என் கண்ணை பார்த்தாள், ”நிஜமா என்னை லவ் பண்றயா, சீக்கிரமா அதாவது படிச்சு முடிச்சவுடனே எங்காத்துக்கு என்னை பொண்ணு கேட்டு வருவீங்களா, நான் காத்திருப்பேன், ஐ லவ் யூ டூ”
ஆச்சு எனக்கும் ஒரு லவர் கிடைச்சிட்டா, அடுத்த 30 நாள் அவ சங்கரன் வீட்ல இருந்த வரை பார்வை பரிமாற்றங்கள், ஜாடை பேச்சுகள், சில சமயம் கடித பரிவர்த்தனை ரெண்டு தடவை மூணு பேருமா சினிமா, சின்னத் தொடுதல்கள் அவ்வளவுதான்.
ஊருக்கு போறதுக்கு முன்னால சங்கரனோட பாருவும் எங்க வீட்டுக்கு வந்தா, அம்மா கால்ல விழுந்து நமஸ்காரம் பண்ணினா. அம்மா அவளை அணைச்சிண்டு, “சமத்து குழந்தை நன்னா படிச்சு முன்னுக்கு வாடா கண்ணா”
அவங்க போனவுடனே அம்மா என்னைப்பாத்து, “ஓ இதுதானா விஷயம், கொஞ்ச நாளா மந்திரிச்சு விட்ட கோழியாட்டாம் திரியறயேனு பாத்தேன். அதுக்கெல்லாம் காலம் இருக்கு முதல் படிச்சு ஒரு உத்யோகத்தை தேடிக்கோ”
“போம்மா ஏதாவது சொல்லிண்டு” அன்னிக்கு சாயந்தரம் பெங்களூர் எக்ஸ்பிரெஸ்ல அவளை டிரெயின் ஏத்த சங்கரன், அவனோட அப்பா கூட நானும் போனேன்.
ஜன்னலோரம் உக்காந்த பாரு டிரெயின் புறப்படறதுக்கு முன்னால யாரும் பாக்காதப்ப என் கைகளை அழுத்திப் பிடிச்சா, கண் கலங்கியிருந்தது, எனக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.
அவ்வளவுதான் வருஷங்கள் ஓடினது, இப்ப சங்கரனோட அப்பாக்கு டில்லி பக்கம் எங்கயோ டிரான்ஸ்பர் அவனும் போயிட்டான். பர்வதம் பத்தி ஒரு தகவலும் இல்லை முடிந்தது ஒரு காதல் சகாப்தம்.
அவள் என்னை மறந்து போனாளோ, மறைந்து போனாளே.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings