2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
ஆபரேஷன் அறைக்குள்ளிருந்து வெளியே வந்த டாக்டர், “ஸாரி” என்று சொல்லி இரு கைகளையும் மேலே தூக்கிக் காட்டி விட்டு நகர, விஷயம் புரிந்து கத்தி அழ ஆரம்பித்தாள் தங்கமணி.
கிணறு வெட்டப் போன இடத்தில் வேட்டு வைக்கும் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் தாறுமாறாய் உருக்குலைந்து போன கணவனைத் தூக்கிக் கொண்டு அடிப்படை மருத்துவ வசதிகள் கூட இல்லாத அந்தக் கிராமத்தை விட்டு, மாட்டு வண்டியில் கிளம்பியவள் படாத பாடுபட்டு டவுன் ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்திருந்தாள்.
வராண்டாவில் அமர்ந்து அத்தனை தெய்வங்களையும் வேண்டினாள். தன் காதல் கணவன் எப்படியும் பிழைத்து விடுவான் என்கிற நம்பிக்கையில் காத்திருந்தவளை இடியாய்த் தாக்கியது டாக்டர் வந்து சொன்ன அவன் மரணச் செய்தி.
“ஏம்மா… இப்படிப் பண்ணிட்டே… கொஞ்சம் முன்னாடியே கொண்டாந்து சேர்த்திருந்தா காப்பாத்தியிருக்கலாமே அம்மா… அட்லீஸ்ட் உங்க ஊரிலேயே ஏதாவதொரு சின்ன ஆஸ்பத்திரில முதலுதவியாவது செஞ்சு… கொட்டும் ரத்தத்தை நிறுத்திக் கொண்டு வந்திருக்கலாமே அம்மா!… ” உதவி டாக்டர் வந்து சொல்ல,
“அய்யா… எந்த வித அடிப்படை மருத்துவ வசதியும்… போக்குவரத்து வசதியும் இல்லாத எங்க கிராமத்திலிருந்து கூட்டி வர்றதுக்குள்ளார இப்படி ஆயிருச்சுங்கய்யா” தலையிலடித்துக் கொண்டு அழுதாள் தங்கமணி.
பதிலேதும் பேசாது அந்த உதவி டாக்டர் நகர்ந்ததும், சற்றுத் தள்ளி “மலங்க… மலங்க” விழித்துக் கொண்டு நின்றிருந்த மகன் தினேஷை அருகில் அழைத்து அவனைக் கட்டிக் கொண்டு கதறினாள்.
சாதி விட்டு சாதி காதலித்து… குடும்பத்தார்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்டு எந்த உறவுக்காரர்களோடும் ஒட்டுதல் இன்றி தன் கணவன் மற்றும் குழந்தையோடு தனித்தே வாழ்ந்து வந்த தங்கமணி திக்குத் தெரியாத காட்டில் சிக்கிக் கொண்ட சிறுமியைப் போல் அச்சத்தில் நடுங்கினாள்.
எதிர்காலம் அவள் கண் முன் இருட்டுப் பள்ளமாய்த் தெரிந்தது. “என்னைத் தொட்டுத் தாலி கட்டுன என் ராசாவே போனப்புறம் இந்த உலகத்துல நான் எதுக்கு வாழணும்… என் மவராசன்கிட்டவே போறேன்…!..ராசா… நாங்களும் வந்துடறோம் ராசா”
தற்கொலை முடிவோடு நின்றவளின் காலைச் சுரண்டிய மகன் தூரத்தில் வந்து கொண்டிருந்த ஒரு டாக்டரைக் காட்டி “ம்மா..நானும் பெருசாகி… டாக்டர் ஆகறேன்மா.” என்று சொல்ல
மகன் முகத்தையே வெறித்துப் பார்த்த தங்கமணியின் மூளைக்குள் ‘பளீர்” என்று அந்த எண்ணம் தோன்றியது.
“ஆமாம்… இவன் சொல்றதுதான் சரி… என்னோட கிராமத்துல மருத்துவ வசதி இல்லாமப் போனதினாலதான் என் புருஷன் என்னை விட்டுப் போனான்… என் புருஷன் மாதிரி இனி யாரும் அதனால சாகக் கூடாது… அதுக்காக எப்பாடு பட்டாவது என் மகனை டாக்டராக்குவேன்… டாக்டராக்கி என் கிராமத்துல சகல வசதிகளோட கூடிய ஒரு பெரிய ஆஸ்பத்திரியைக் கட்டுவேன்… இது என் புருஷன் மேல் ஆணை”
உழைத்தாள்… உழைத்தாள்… உறுதியோடு உழைத்தாள்.
அதற்கேற்றாற் போல் தினேஷூம் படிப்பில் திறமையைக் காட்டினான். ப்ளஸ் டூ தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேறி மருத்துவப் படிப்புக்கான சீட்டை எளிதாய்ப் பெற்றான். அவன் தாய் தங்கமணி முன்னிலும் கடுமையாக உழைத்து மகனுக்கான படிப்புச் செலவுகளைத் தாங்க, மருத்துவப் படிப்பிலும் சாதனை மாணவனாகி தன் தாய்க்கும்… தன் கிராமத்திற்கும் பெருமை சேர்த்தான். ஒதுங்கிப் போன உறவுகள் ஒட்டிக் கொள்ள முயற்சித்தன. புன்னகை மற்றும் பெருமிதத்தோடு ஏற்றுக் கொண்டாள்.
இதோ… சாதாரண தினேஷாக இருந்தவன் “டாக்டர்.தினேஷ்.எம்.பி.பி.எஸ்.” ஆகி நாளை கிராமத்திற்கு வரப் போகின்றான். ‘என் மகன் வரப் போறான்… இந்தக் கிராமத்து ஜனங்களோட நோய் நொடிகளையெல்லாம் தீர்க்கப் போறான்” ஊர் முழுக்கச் சொல்லித் திரிந்தாள் தங்கமணி.
மறு நாள்?…
தினேஷ் வரவில்லை. மாறாய் தபாலில் அந்தக் கடிதம் வந்தது.
“அம்மா… எனக்கு அமெரிக்காவில் பெரிய ஆஸ்பத்திரியில் வேலை கிடைத்து விட்டது. லட்சக்கணக்கில் சம்பளம்… ஆகையால் நான் வரும் புதன்கிழமை புறப்படுகிறேன்… நீ கிராமத்து வீட்டிலேயே இரு… நான் இரண்டு வருடம் கழித்து வருகிறேன்… கடிதம் எழுதுகிறேன் – தினேஷ்”
ஏமாந்து போனது தாய் மட்டுமல்ல… தாய் நாடும்தான்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings