2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
ஆபிசிலிருந்து கவின் வீடு வந்து சேர்ந்தபோது மணி இரவு பத்து! அவ்வளவு பெரிய சென்னை மாநகரிலே ஒரு சின்ன வீட்டில் தனியாக வாழும் பேச்சிலர். சின்ன வீடென்றால் குருவி கூடு அளவுக்கு தான் இருக்கும் என எண்ணிவிட கூடாது. ஹால், கிட்சன், ஒரு பெட்ரூம், ஒரு பாத்ரூம் என அவன் ஒரு ஆளுக்கு போதுமானதாகவே இருந்தது.
பையில் இருந்து சாவியை எடுத்து பூட்டை விடுவிக்க, அதுவும் அவனுக்கு கட்டுப்பட்டு வழி விட்டது. கதவைத் திறந்து அதனருகில் இருந்த டேபிளில் சாவியையும் போனையும் வைத்தான். அப்படியே பக்கத்தில் இருந்த லைட் ஸ்விட்சைப் போட்டான். அதுவோ இவனுக்கு கட்டுப்படாமல், ஹாலை கும்மிருட்டாகவே வைத்திருந்தது. அடுத்தது பேன் ஸ்விட்சைப் போட்டான். அதுவும் “என்னால் சுத்த முடியாது…” என்பது போல் அப்படியே நின்றது.
“மெயின்ல ஏதாவது பிரச்சனையோ… காலைல அந்த ஐயன் பாக்ஸ போட்டதால தான்…” என்று தன்னை தானே திட்டிக்கொண்டு மெயினை நோக்கி நடந்தான். மெயின் இருக்கும் இடம் தெரியும் சரி… அதை சரிப்பார்க்க ஏது வெளிச்சம்? அங்கே போய் நின்றபின் தான் அவன் புத்திக்கு அது உரைத்தது. டார்ச் லைட் பேட்டரி வேறு நேற்று தான் காலியானது. இருக்கவே இருக்கிறது செல்போன்! அதை எடுப்போம் என்று மீண்டும் கதவருகில் இருந்த டேபிளுக்கு வந்து அதில் கை வைத்தான்..
சாவி தான் இருந்தது… செல்போன் அங்கே இல்லை! ஒரு நொடி பகீர் என்றிருந்தது கவினுக்கு.
“டேபிள் நல்ல உயரம் தான். போன் கீழே விழுந்தா சத்தம் கேக்குமே… சரி… கதவ தொறந்து வீதிலேந்து வர வெளிச்சத்துல போன் எங்கன்னு பார்ரா கவின்…” என்று தானே சொல்லிக்கொண்டு கதவைத் திறக்க முயற்சித்தான். ஆனால் திறக்க தான் முடியவில்லை. ஏதோ ஒன்று வெளியிலிருந்து தடுப்பதுபோல் ஒரு உணர்வு! ஏதோ தப்பாக நடப்பதுபோல் தோன்றியது.
“யாரது…?? இந்நேரத்துல யாரு விளையாடுறது? கதவ திறங்க…”, எனக் கத்தினான்.
“நீ ஏன் தனியா கத்துற…” என்பதுபோல் அவன் ரூமுக்குள்ளிருந்து கொலுசு சத்தம்!!! அதைக் கேட்டு கவினுக்கு குப்பென்று வியர்த்துவிட்டது. ஒரு நொடி ரத்தமே உறைவது போல் இருந்தது. இதயமோ தாறுமாறாய் துடிக்க ஆரம்பித்தது.
என்ன நடக்கிறது என்று புரியாமல் திருதிருவென முழித்தபடி நின்றான். அப்போது தான் இந்த வீட்டை வாடகைக்கு பார்க்க வந்தபோது, பக்கத்து வீட்டுக்காரர் சொன்னது ஞாபகம் வந்தது.
“தம்பி… அந்த வீட்டுக்கா வரீங்க? வேணாம் தம்பி. முன்னாடி இருந்தவங்களே நைட் ஆனா ஏதோ விநோதமா சத்தம் கேக்குதுன்னு தான் காலி பண்ணாங்க. அந்த வீட்ல ஏதோ ஒரு தப்பு இருக்கு. நீங்க வேற வீடு பாத்துக்கோங்க தம்பி…”
அவரிடம் வீராப்பாய் அப்படியெல்லாம் ஒன்னும் இருக்காது என்று சொல்லி தைரியமாய் இந்த வீட்டில் நுழைந்தோமே… அதற்கு கிடைத்த தண்டனையா இது? அந்த பெரிய மனுஷன் சொன்னதை கேட்ருக்கலாமோ?? இப்போது என்ன செய்வது…
ஐந்து நிமிடங்கள் அப்படியே கழிந்தது. கதவையும் திறக்க முடியவில்லை! கொலுசு சத்தமும் நிற்கவில்லை!! கவினுக்கோ கத்த கூட முடியாமல் நாவெல்லாம் வறண்டு போய்விட்டது.
“இனியும் இப்படியே உட்கார்ந்து இருந்தால், ஒன்றும் மாறாது… என்ன தான் நடக்குதுன்னு பாத்துருவோம். கடவுளே!! நீ தான் துணையா இருக்கணும்!”, என்று அந்த ஆண்டவன் மேல் பாரத்தை போட்டு, ஒரு குருட்டு தைரியத்துடன் மெல்ல எழுந்து அந்த ரூமுக்குள் சென்றான்.
இவன் ரூமுக்குள் கால் வைக்கவும், கொலுசு சத்தம் சட்டென்று நின்றுபோனது. ஆனால், அந்த சிறிய ரூமோ மல்லிகை மணத்தால் நிரம்யிருந்தது!!! கவினுக்கு கால்கள் மெல்ல நடுங்க ஆரம்பிக்க, இதயமோ ராக்கெட் வேகத்தில் சென்றது.
“கண்டிப்பா இங்க ஏதோ ஒரு அமானுஷ்யம் இருக்கு… யாரோ ஒரு புண்ணியவான் நம்மள மதிச்சு கூப்டு சொன்னப்பவே ஓடிருக்கணும்… அத கேக்காம இப்படி வந்து மாட்டிகிட்டோமே!! இதுலேர்ந்து தப்பிக்க வழியே இல்லையா..?? கடவுளே… என்னை எப்படியாவது காப்பாத்து… அந்த மனுஷன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டுட்டு வேற இடத்துக்கு போய்ட்றேன்..” என்றபடி அங்கேயே மண்டியிட்டு கைகளால் முகத்தை மூடிக்கொண்டான்.
கண்ணீர் மெல்ல அவன் விழியோரத்தில் எட்டி பார்த்தது. அது விளிம்பை நெருங்கி, வழியப்போகும் நொடியில், அந்த ரூமில் பேன் ஓடும் சப்தம்!!!
டக்கென்று கைகளை விலக்கிப் பார்த்தான். அந்த ரூமில் மட்டுமில்லாமல், ஹாலிலும் லைட் எரிந்தது. அந்த கண்ணீரை ஆனந்த கண்ணீராய் நினைத்து, துடைத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் ஹாலுக்கு வந்தான்.
சோபாவில் சிரித்தபடி உட்கார்ந்திருந்தது அந்த உருவம்!!
“கவின்…. இவ்ளோ வேகமா எங்கடா போற?!”
திரும்பி பார்த்தவன் பயப்படுவதற்கு பதிலாய், சிரிக்க ஆரம்பித்தான்!
“அடப்பாவி!! நீயா?? உன் வேலையா இதெல்லாம்?”
“அனைத்தும் இந்த ராமனின் செயல்தான்”
“மண்ணாங்கட்டி!! எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா…” என்று அவனை செல்லமாய் அடிக்க ஆரம்பித்தான்.
கவின் வேலைப் பார்க்கும் அதே ஆபீஸில் கூட வேலைப்பார்க்கும் ராமும் அதே வீட்டில் இவனுடன் முன்பு இருந்தான். ஒரே காலேஜில் படித்து, ஒரே கம்பெனியில் வேலை கிடைக்கவும் ஆசை ஆசையாய் நண்பர்கள் இருவரும் ஒரே வீட்டில் குடியேறினர். பிறகு ராமின் அம்மா சென்னைக்கு வரவும், ராம் தாயுடன் வேறு வீட்டிற்கு செல்லும்படி ஆகிவிட்டது. தன்னிடம் இருந்த அந்த பழைய வீட்டு சாவியை வைத்துதான் இன்று இப்படி ஒரு ஆட்டம் ஆடியிருக்கிறான்.
“டேய்… டேய்.. போதும்டா… போய் தண்ணி எடுத்துட்டு வரேன் விடு…”, என்று லாவகமாய் கவினின் பிடியிலிருந்து தப்பி கிட்சனுக்குள் தாவினான் ராம்.
கச்சிதமாய் கவினின் போன் அந்த சோபாவில் இருந்து அழைத்தது.
“செல்போன இங்க வெச்சிருகான் பாரு…” என்று திட்டிக்கொண்டே அதை எடுத்து பேசினான்.
“ஹலோ”
“ஹலோ கவின்… நா ராமோட அம்மா பேசுறேன் பா…”, குரலோ அழுது ஓய்ந்ததுப்போல் இருந்தது.
“என்ன ஆச்சு ஆன்ட்டி? ஒரு மாதிரியா பேசுறீங்க.”
“தம்பி… ராமுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு பா… தூக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு வந்தேன். பாதி வழிலேயே அவன் நம்மளெல்லாம் விட்டுட்டு போ.. போய்ட்டான் பா…” என்று அழுகையில் வெடித்தாள்.
கவினுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. ஓடி சென்று கிட்சனுக்குள் பார்த்தான். உள்ளே யாரும் இல்லை.
பாதி குடித்து முடித்த ஒரு டம்ப்ளர் தண்ணீர் மட்டும் தான் இருந்தது!!!
அப்படியானால் இங்கே வந்தது???
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings