in ,

பதவிப் பிரமாணம் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

மாலை ஏழு மணி.

தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர் பாலகிருஷ்ணனும், அவரது உதவியாளர் சண்முக நாதனும்.

இடைத்தேர்தல் நடைபெறும் அந்தத் தொகுதியில் ஆளுங்கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்த பாலகிருஷ்ணனின் வெற்றி நிலவரம் ஒரு பெரிய கேள்விக்குறியாகவே இருந்தது.

அதே போல், வெற்றி பெற்றால் கிடைக்கவிருக்கும் மந்திரி பதவியும் ஒரு ஊசலாட்டத்தில் தான் இருந்தது.

‘அண்ணே… எப்பவுமே இடைத்தேர்தல்னு வரும் போது ஆளுங்கட்சிக்குத்தாண்ணே சான்ஸ் அதிகம்…. அதனால கண்டிப்பா நீங்கதாண்ணே… ஜெயிப்பீங்க…” உதவியாளர் தன் விசுவாசத்தை வார்த்தைகளாக்கி விரித்தார்.

‘ம்ம்ம்… அதெல்லாம் சரிப்பா… மந்திரி பதவின்னு வரும் போது… அந்த மலையனூர் முருகு போட்டியா இருக்கானே?” பாலகிருஷ்ணன் தன் கவலையைக் கொட்டினார்.

‘ஆமாம்ண்ணே… நீங்க சொல்றது சரிதாண்ணே…. நம்ம கட்சி ஆளுங்களிலேய பாதிப் பேர் உங்களுக்கும்… பாதிப் பேர் அந்த மலையனூக்காரனுக்கும்தான் மந்திரி பதவின்னு பேசிக்கறாங்க…. ரெண்டு பேருமே சரிக்குச் சரியா இருக்கீங்கண்ணே… எனக்கே குறிப்பிட்டுச் சொல்ல முடியலைன்னா பார்த்துக்கங்களேன்…!.. கட்சித் தலைவர் தேவநாதன் கைலதான் இருக்கு… யாருக்கு மினிஸ்டர் போஸ்ட்ங்கறது”

‘ஏதாவது ஒரு புது டிரிக் பண்ணித்தான் மக்கள்கிட்ட ஓட்டைப் பிடுங்கி ஜெயிக்கணும்… அதே மாதிரி ஏதாச்சுமொரு தகிடுதத்தம் பண்ணித்தான் மந்திரி பதவியையும் ‘லபக்‘ பண்ணனும்… அதுக்காகத்தான் நம்ம ஆலோசகர் டேனியல் சாரோட மொபைல் நெம்பரை டிரை பண்ணிட்டே இருக்கேன்… கெடைக்கவே மாட்டேங்குது”

பாலகிருஷ்ணன் சொல்லியபடியே இன்னொரு முறை முயற்சி செய்ய, ரிங் போனது. ‘அட…பரவாயில்லை… ரிங் போவுது… ஹலோ… வணக்கம்… நான் பாலகிருஷ்ணன் பேசறேன்”

‘வணக்கம் சார்… எப்படி இருக்கீங்க?… எப்படிப் போயிட்டிருக்கு உங்க பிரச்சாரமெல்லாம்?” ஆலோசகர் டேனியல் உற்சாகமாய்க் கேட்க

‘ப்ச்…. ஒண்ணும் சொல்லிக்கற மாதிரி இல்லை… ஜெயிப்புக்கே ஹோப் இல்லே”

‘அய்யய்ய.. என்ன இப்படிப் பேசறீங்க?… நம்பிக்கை வேணும் சார்… வெற்றிக்கே அதுதான் சார் ஆதாரம்”

‘யோவ்… அதெல்லாம் பேச்சுக்கு நல்லாத்தான்யா இருக்கும்… நிஜத்துல வரும் போது வயத்தைக் கலக்குதுய்யா” பாலகிருஷ்ணன் தன் உண்மை மனநிலையை சற்றும் கூச்சமின்றிச் சொன்னார்.

‘ம்ம்ம்… ஓ.கே.சார்… நான் இப்பலே புறப்பட்டு அங்க வர்றேன்”

‘வாய்யா… வா… உன்கிட்ட ஆலோசனை கேட்கத்தான் நானும் காத்திட்டிருக்கேன்” சொல்லி விட்டு போனைத் துண்டித்தார்  பாலகிருஷ்ணன்.

அடுத்த அரை மணி நேரத்தில் பாலகிருஷ்ணன் வீட்டு ‘மெத்…மெத்‘ சோபாவில் தாடையைச் சொறிந்தவாறே யோசனையுடன் அமர்ந்திருந்தார் டேனியல்.

‘யோவ்… என்னய்யா நீ?… ஏதாச்சும் ஐடியா சொல்லுவேன்னு பாத்தா இப்படிச் சிலையாட்டமா உட்கார்ந்திட்டிருக்கே…” பாலகிருஷ்ணன் அவசரப்பட

‘சார் ஒரு ஐடியா… அதுக்கு நீங்க கொஞ்சம் நடிக்கணும்…. முடியுமா?”

‘யோவ்… ஜெயிக்கறதுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்… சொல்லுய்யா… குட்டிக்கரணம் போடணுமா?”

வாய் விட்டுச் சிரித்த டேனியல், ‘அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்… உங்களோட கடைசி பிரச்சாரக் கூட்டம் எங்கே… எப்போ?”

‘ம்ம்ம்…. பதிமூணாம் தேதி… மாலை நாலு மணிக்கு…. தெப்பக்குள மைதானத்துல… ஏன்…. எதுக்குக் கேட்கறீங்க?”

‘ஓ.கே…அந்த மேடைல…உங்களுக்கு மாரடைப்பு வருது…. நீங்க நெஞ்சைப் பிடிச்சுக்கிட்டு அப்படியே சாயறீங்க… உங்களை அள்ளிப் போட்டுக்கிட்டு உங்க பிரச்சார வேன்… ஜி.கே.ஹாஸ்பிடலுக்குப் போவுது… அங்க நீங்க தீவிர சிகிச்சைப் பிரிவுல அட்மிட் ஆகறீங்க… அடுத்த இரண்டாம் நாள் எலக்ஷன்… அன்னிக்கும் நீங்க தீவிர சிகிச்சைப் பிரிவுலதான் இருக்கீங்க…” டேனியல்  சொல்லிக் கொண்டே போக,

இடையில் புகுந்தார் பாலகிருஷ்ணன், ‘ஓ.கே… ஓ.கே… புரிஞ்சிட்டுது… புரிஞ்சிட்டுது… அனுதாப ஓட்டுக்கு அடி போடுறீங்க… அப்படித்தானே?”

‘கரெக்ட் சார்… கடைசி நிமிஷத்துல நடக்கறதுதான் மக்கள் மனசுல நிக்கும்… அதுதான் அவங்க ஓட்டைக் கூடத் தீர்மானிக்கும்…” நம்பிக்கையுடன் சொன்னார் டேனியல்.

‘பார்த்தியா…இதுக்குத்தான்யா நீ வேணும்கறது…” சொல்லிவிட்டு டேனியல்  முதுகில் தட்டிக் கொடுத்தார் பாலகிருஷ்ணன்.

சிறு வயதில் பள்ளி நாடகங்களில் நடித்த சிறு சிறு அனுபவங்களையும், சினிமாக்களில் பார்த்த மாரடைப்புக் காட்சிகளையும் உதவிக்கு அழைத்துக் கொண்டு, பதிமூணாம் தேதி மேடையேறி, அனல் பறக்க… ஆக்ரோஷம் தெறிக்க… விழிகள் பிதுங்க… கழுத்து நரம்புகள் புடைத்தெழ…தெப்பக்குள மைதானத்தில் பேசி முடித்த பாலகிருஷ்ணன், டேனியல்  ஐடியாபடி

திடீரென்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழுந்தார், துடித்தார். துடிதுடித்தார். திட்டமிட்டபடியே பிரச்சார வேன் அவரை அள்ளிச் சென்று, ஜி.கே.மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தது.

கட்சித் தலைவரும், கட்சியின் இதர முக்கியப் பிரமுகர்களும் மருத்துவமனைக்கு வந்து அவசரசிகிச்சைப் பிரிவிலிருக்கும் தங்கள் வேட்பாளரை காண முடியாமல் கவலையோடு திரும்பினர்.

பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் இந்தச் செய்தியை பரபரப்பாய் வெளியிட்டு எதிர்க்கட்சி வேட்பாளரை சோகத்தில் ஆழ்த்தின. பிரச்சாரம் ஓய்ந்தது.

வாக்குப் பதிவு தினத்தில் நிலவரத்தைத் தன் உதவியாளர் சண்முகநாதன் மூலம் தெரிந்து கொண்ட பாலகிருஷ்ணன், மகிழ்ச்சியில் மிதந்தார். ‘ஹா.. ஹா.. ஹா.. வெற்றிக்கனியும் எனக்கே… மந்திரி பதவியும் எனக்கே”

நான்காம் நாள் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவு அறிவிக்கப்பட்டதும், ஓடோடி வந்தார் உதவியாள்ர் சண்முகநாதன், ”அண்ணே…. நான் சொன்ன மாதிரியே நீங்க ஜெயிச்சிட்டீங்க”

‘பின்னே.. சாதாரண நடிப்பா நடிச்சேன்?…சிவாஜி கணேசனையே மிஞ்சுற அளவுக்கல்ல நடிச்சேன்?… சரி..சரி..மொதல்ல அந்த டேனியலைக் கூப்பிடு… இந்த ஐடியாக் குடுத்ததற்காக ஒரு பாராட்டு தெரிவிச்சிடலாம்”

மொபைலைத் தன் உதவியாளரிடம் நீட்டிய பாலகிருஷ்ணனின் முதுகுப் பகுதியின் இடதுபுறம் லேசாய் ஒரு வலி தெரிய, முகத்தைச் சுளித்தார்.

‘அண்ணே… டேனியல் சார்… லைன்லே” சண்முகநாதன் மொபைலைத் தர,

வாங்கிப் பேசினார் பாலகிருஷ்ணன். ‘யோவ்.. டேனியல்… இனிமேல் நீதான்யா என்னோட நிரந்தர அரசியல் ஆலோசகர்… படா கில்லாடிய்யா நீ… அந்த சாணக்கியனையே மிஞ்சிட்டே போ…”

முதுகிலிருந்த வலி லேசாய் இடம் மாறி நெஞ்சின் இடப்பகுதிக்கு வந்தது. தன் இடது கை கட்டை விரலால் வலிக்கும் பகுதியை இதமாய்த் தேய்த்துக் கொண்டார்.

‘பாலகிருஷ்ணன் சார்… உங்களை எதிர்த்து நின்னானே அந்த எதிர்க்கட்சி வக்கீல், டெபாசிட்டே காலியாம்”

‘ஹா…ஹா…ஹா…’ வலியின் தீவிரம் சிரிப்பை மட்டுப்படுத்த நிறுத்திக் கொண்டார்.

‘அப்புறம் சார்… உங்க தலைவர் அறிவிச்சிட்டார்… மினிஸ்டர் உங்களுக்குன்னு… மருத்துவமனையிலிருந்து திரும்பியதும்… பதவிப் பிரமாணமாம”

‘ஓ!… அ…ப்….ப….டி….யா….?’ வலி உச்சமாகி குரல் சற்று விநோதமாய் மாற, போனை அணைத்து விட்டு கட்டிலில் சாய்ந்து கொண்டார் பாலகிருஷ்ணன்.

ஐந்தே நிமிடத்தில் பெருக்கெடுத்த வியர்வையில் அவர் உடல் தெப்பலாய் நனைய, கண்கள் மேல் நோக்கிச் செருக, ‘அண்ணே…அண்ணே” தன் உதவியாளர் கூவுவது எங்கோ தூரத்தில் கேட்க, மெல்ல…மெல்ல..சிவலோகப் பதவியைப் பிரமாணம் செய்து கொண்டார் பாலகிருஷ்ணன்.

பத்து மாதங்களுக்குப் பிறகு, இடைத்தேர்தல் அறிவிப்பு வர, ‘வெற்றி என்னவோ கொஞ்சம் நெருடலாய்த்தான் இருக்கு… ஏதாச்சும் ஐடியாப் பண்ணித்தான் ஜெயிக்கணும் போலிருக்கு… என்ன பண்ணலாம் சொல்லுங்க டேனியல்”

ஆளுங்கட்சியின் சார்பில் நிறுத்தப் பட்டிருந்த மலையனூர் முருகு தன் அரசியல் ஆலோசகரிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    இன்னும் இருக்கு மனிதாபிமானம் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    மகா மார்பிள்ஸ் (நிறைவுப் பகுதி) – தி.வள்ளி, திருநெல்வேலி