2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
https://sahanamag.com/2023-24-tamilshortstorynovelcontest-prizemoney10000/
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
“மேம் பீட்சா” வாசலில் நின்றிருந்த டெலிவரி பாய் கையிலிருந்த பீட்சாவை நீட்டினான்
“நான் ஆர்டர் பண்ணலயே யார் நேம்ல இருந்து ஆர்டர் வந்துருக்கு” அவனிடம் கேட்டாள் சித்ரா
“சித்ரா மேம்”
“என் நேம்ல இருந்தா! சரி வெச்சிட்டு போங்க”
“கேஷ் மேம்”
“எவ்ளோ ஆச்சு”
“முன்னூறு ரூபாய் மேம்”
பணத்தை கொடுத்து பீட்சாவை வாங்கிக் கொண்டு உள்ளே வந்தாள் சித்ரா
உள்ளே வரும்பொழுது சித்ராவின் எழுபது வயது தாயார் பாப்பாத்தி பீட்சாவை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றார். அவள் பின்னாடியே சித்ராவின் மகள் ஹாசினியும் அறைக்குள் சென்றாள்.
இருவரும் பீட்சாவை பிரித்து ஆளுக்கொரு துண்டை எடுத்து உண்ண ஆரம்பித்தனர். சித்ராவும் உள்ளே நுழைந்தாள்.
“போன வாரம் தானமா பீட்சா சாப்டா.. இன்னிக்கு என்ன மறுபடியும்.. இப்போல்லாம் நீ அடிக்கடி சாப்ட ஆரம்பிச்சிட்ட.. எனக்கே தெரியாம என் போன்ல இருந்து வேற ஆர்டர் போடற”
“அன்னிக்கு சாப்பிட்டது கார்ன் அண்ட் சீஸ் மா.. இன்னிக்கு சாப்டறது பார்ம் ஹவுஸ் பீட்சா மா” சித்ராவின் மகள் பதில் அளித்தாள்
“பாட்டி கூட சேர்ந்து நீயும் ரொம்ப கெட்டு போய்ட்ட.. இனிமே என்னை கேக்காம ஆர்டர் போடாதீங்க”
“சரி மா.. கூல்.. நீயும் ஒரு பீஸ் எடுத்துக்கோ சூப்பரா இருக்கு” குடைமிளகாயை ரசித்து கடித்துக் கொண்டே ஹாசினி கூறினாள்.
சித்ராவின் கோவம் குறையவில்லை. எதுவும் பேசாமல் வெளியேறினாள்.
“ஏன் பாட்டி.. நீ எப்போவும் காய்கறி, கீரை, சூப்ன்னு ஹெல்த்தியா தான சாப்பிடுவ.. என்னை கூட ஸ்னாக்ஸ் சாப்டா திட்டுவல்ல.. அப்புறம் ஏன் நீ பீட்சா சாப்பட்ற” பேத்தி ஆர்வமாக கேட்டாள்
“ஆமா.. இப்போவும் நான் பரோட்டா மைதா பொருள தொட மாட்டேன். ஆனா இத மட்டும் விட முடில”
“அதான் ஏன் பாட்டி?”
“எனக்கு அப்போ ஒரு ஏழு எட்டு வயசு இருக்கும்…”
“என்ன பாட்டி கதை சொல்ல போறீங்களா?”
“அப்போ காரணம் சொல்ல வேணாமா”
“சரி சொல்லுங்க.. “
“என் சின்ன வயசுல நாங்க இருந்த ஏரியால நிறைய ஆங்கிலேயர்கள் இருந்தாங்க.. அப்போ தான் சுதந்திரம் கிடைச்ச புதுசு. நிறைய வெள்ளைகாரங்க கிளம்பி போய்ட்டாங்க.. சிலர் இங்கயே இருந்தாங்க அப்படி இங்கயே இருந்த ஒரு வெள்ளைக்காரங்க எங்க வீட்டு பக்கத்துல இருந்தாங்க. அவங்க வீட்டுல இருந்து சமைக்கும் போது ஒரு மணம் வரும்”
“என்ன வாசனை பாட்டி”
“எனக்கும் அப்போ என்னனு தெரியல.. அப்புறம் ஒரு நாள் நாங்க வெளிய விளையாடிட்டு இருக்கும் போது குதிரை வண்டில அவங்கலாம் எங்கயோ வெளிய போகும் போது கைல ஏதோ வெச்சி சாப்பட்டுட்டே போனாங்க. நானும் என் தோழிகளும் அந்த வண்டி பின்னாடியே ஓடினோம். அப்போ அவங்க வண்டிய நிறுத்திட்டு அவங்க கைல இருந்த ஒரு துண்டு பண்ண என்கிட்ட குடுத்தாங்க.. அதுல அந்த மணம் வீசுச்சு.. அதுல காய்லாம் வெச்சிருந்தாங்க.. எனக்கு அது ரொம்ப பிடிச்சது. அத இன்னொரு வாய் கடிக்க போகும் போது என் அம்மா பாத்துட்டாங்க.. ஓடிப் போய் வாங்கி சாப்பிட்றியான்னு தட்டி விட்டுட்டாங்க”
“அப்புறம் பாட்டி.. மறுபடியும் அவங்க கிட்ட நீ அதை வாங்கி சாப்பிட்டியா”
“இல்லை. அதுக்கப்புறம் நான் அந்த வீட்டு பக்கமே போகல.. கல்யாணம் பண்ணி குடுத்தாங்க வேற ஊருக்கு போய்ட்டேன்.. அந்த வெள்ளைக்காரங்களும் கொஞ்ச நாள்ல அங்க இருந்து போய்ட்டாங்க.. நானும் அத மறந்துட்டேன்”
“நீ சாப்பிட்டது என்ன பாட்டி அது தான் பீட்சாவா”
“எனக்கும் தெரில.. நீங்கல்லாம் ஒரு நாள் என்னை வெளிய கூட்டிட்டு போய் பீசா வாங்கித் தந்திங்கள்ல அப்போ எனக்கு அத சாப்பிடும் போது அந்த மணம் நியாபகம் வந்தது. எனக்கு சின்ன வயசு நியாபகம் மறந்துட்டே வருது ஹாசினி. ஆனா இத சாப்பிடும் போது நண்பர்களோடு ஓடி விளையாண்டு வாங்கின சந்தோசம்.. மறந்து போன எங்கம்மா முகம் கண்ணு முன்னாடி வருது. ஏதோ ஒரு பழைய வாசனை என்னை சூழுது. வெள்ளைக்காரங்ககிட்ட வாங்கிச் சாப்பிடலமா என் பொண்ணு எனக்கு வாங்கித் தரான்னு எங்கம்மாட்ட பேசிட்டே சாப்பிட்றேன் ஹாசினி. மனசுக்கு சந்தோசமா இருக்கு”
பாப்பாத்தி பாட்டி கூறியதை கேட்டுக் கொண்டே உறங்கிப் போனாள் ஹாசினி
அறைக்கு வெளியே தன் அம்மா பேசுவதை கேட்டுக்கொண்டு நின்றிருந்தாள் சித்ரா. அவள் மனம் ஏனோ கலங்கியது.
அம்மா இருந்த அறைக்குள் நுழைந்தாள். பாப்பாத்தி இவள் உள்ளே வருவதை பார்த்தாள். இரண்டு துண்டுகள் போக மீதி பீட்சா அப்படியே இருந்தன. அதில் ஒன்றை தானும் எடுத்து சாப்பிட்டாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்த பாப்பாத்தி முகம் மலர்ந்து சிரித்தப்படி அவளும் ஒரு துண்டை எடுத்துக் கடித்தாள். இருவரின் மனமும் மகிழ்ச்சியில் நிறைந்தது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings