2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு
மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு
நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Click the picture below for complete details of the contest
இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…
பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5
“இன்னும் இரண்டு நாட்கள், இரண்டு நாட்கள்தான்” என்று அநேகமாக அந்த வீட்டில் இருந்த அனைவருமே மனதிற்குள் ஜபம் செய்து கொண்டிருந்தார்கள்.
ஜெயக்குமாரின் வருகை அந்த வீட்டில் ஒரு புயலைக் கிளப்பி விட்டிருந்தது. சம்பத் ஜெயக்குமாரைப் பயப்பார்வை பார்த்தான். ஷீலாவின் பார்வையில் லேசான வெறுப்பு இருந்தது. ஜானவியிடம் மட்டுமே ஜெயக்குமாரின் மீது பாசம் குறையாமல் இருந்தது.
உணர்வு எதுவாயினும், அது அவர்கள் அப்பாவின் மீதான கோபமாக மாறியதுதான் ஆச்சரியம்! நேரடியாகச் சண்டை போட்டுக் கொள்ளாவிட்டாலும் மறைமுகமான எதிர்ப்புகள் அந்த ஒரு வாரத்திலேயே தோன்ற ஆரம்பித்து விட்டன.
விஷ்ணுகுமார் நடப்பதைப் புரிந்து கொள்ளாமல் இல்லை. ஜெய் மீது எரிந்து எரிந்து விழுந்து கொண்டிருந்தார். ஜெய் அவரைப் பார்க்கும் போதெல்லாம் குறும்பாகப் புன்னகைப்பான். அன்பாக விசாரிப்பான்.
அதெல்லாம் எரிகிற நெருப்பில் எண்ணெய் விட்டது போலவே ஆகியது. அதனால் விஷ்ணுகுமார் அஞ்சனாவைப் பற்றிக் கேலி பேசுவார். ஜெய் உள்ளே கொதித்தாலும் பெரும்பாலும் பேசாமல் போய் விடுவான். அம்மா வழக்கம்போல் மௌனமாக இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
தீபாவளிக் கொண்டாட்டங்கள் விமரிசையாகவும் ஏதோ தயக்கத்தோடும் நடந்து முடிந்தது.
மறுநாள் மாலை அவ்வூர்ப் பிரமுகர்கள், நண்பர்கள் குடும்பங்களுக்கு அவர்கள் வீட்டு மொட்டை மாடியிலேயே ஒரு பார்ட்டி நடத்தப்பட்டது. உண்மையில் அது எல்லோரும் ஜெயக்குமாரையும் அஞ்சனாவையும் சந்திக்கும் வாய்ப்பாகவே பார்க்கப்பட்டதால் திரளான மனிதர்கள் வந்திருந்தார்கள்.
ஜெயக்குமார் ஒரு வாரமாக நடந்த விஷயங்கள் எதையும் காண்பித்துக் கொள்ளாமல் உற்சாகமாக வளைய வந்தான். பெண்கள் எல்லோரும் அஞ்சனாவைச் சூழ்ந்து கொண்டிருந்தார்கள். ஆண்கள் ஓரக்கண்ணால் அவளையே நோக்கினார்கள்.
ஜானவி “அண்ணா, அண்ணா” என்று நொடிக்கொருமுறை கூப்பிட்டுக் கொண்டு ஜெயக்குமாரைச் சுற்றிச் சுற்றி வந்தாள். தன் தோழிகளுக்கெல்லாம் அவனை அறிமுகம் செய்துவைத்து ஆனந்தப்பட்டாள்.
“என் அண்ணா சொன்னான், எங்க ஜெய் அண்ணா பாடினது. எஸ்.பி.பி ஸாரும் என் அண்ணாவும் மீட் பண்ணினபோது… எங்க ஜெய் அண்ணா ஃபிலிம்ஃபேர் அவார்ட் வாங்கினபோது அமிதாப் பச்சன் அவனை எப்படிப் பாராட்டினார் தெரியுமா?” என்று என்னென்னவோ விடாமல் பேசினாள்.
ஜெயக்குமார் ஏதாவது பாடியே ஆக வேண்டுமெனக் கூடியிருந்தவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.
ஜெயக்குமார் சிரித்துக் கிடாரைக் கையில் எடுத்தான். பிரபலமான சில பாடல்களை ஒரு மெட்லி போல் பாடினான். படபடவென்று ஒலித்த கரவோசை வெளியே கேட்டுக் கொண்டிருந்த சரவெடிச் சப்தத்தையும் விஞ்சியது.
அடுத்து அவ்வூர் பெண் ஒருத்தியைப் பாடக் கூப்பிட்டார்கள். அமர்க்களமாக உடையணிந்து வந்திருந்த அந்தப் பெண் கீச்சுக் குரலில் “மலரே, மௌனமா” என்று ஆரம்பித்தது.
ஜெயக்குமார் அமைதியாகக் கேட்டான். “அருமை” என்று பாராட்டினான்.
நன்றாகவே பாடுகிறாள். இப்படி நடிகை மாதிரி உடையலங்காரம் எதற்கு? ரியாலிட்டி ஷோக்கள் பண்ணும் கொடுமை இது, என்று நினைத்துக் கொண்டான்.
சற்றே திரும்பி அஞ்சனாவைப் பார்த்தான். வயலட் நிறப் பட்டுச்சூரிதாரில் தேவதை மாதிரி ஜொலித்தாள். “இவதான் அந்த நடிகையா?” என்ற விஷ்ணுவின் குரல் அப்போதும் கேட்பது போல் தோன்ற, சிலிர்த்துக் கொண்டான்.
கூட்டத்தில் விஷ்ணுவைத் தேடினான். அதோ!
அவர்களோடு பேசவில்லையே தவிர, அவர்களைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறார் அவர் என்று புரிந்தபோது அவனுக்குக் கோபம் வந்தது. ஹிப்போக்ராட்!
அவன் தோளை யாரோ தொடுவது உணர்ந்து திரும்பினான். சம்பத்! லேசாகப் புன்னகைத்தான்.
“ஜெய்! மகாபலிபுரத்தில் நடந்ததை அப்பாகிட்டச் சொல்ல மாட்டேல்ல?” கிசுகிசுப்பாய்க் கேட்டான் சம்பத்.
“சொல்ல மாட்டேன், நான் சொல்றதை நீ கேட்கற வரைக்கும்” என்று அதேபோல் முணுமுணுத்தான் ஜெய். “ஆனா, அப்பாவா தெரிஞ்சுக்கிட்டா என்னால ஒண்ணும் பண்ண முடியாது. ஸோ சீக்கிரம் அந்தப் பிரச்சனையைச் சரி பண்ணிடு.”
“அப்பாவா எப்படித் தெரிஞ்சுக்குவார்? உன்னைத் தவிர இந்த விஷயம் யாருக்கும் தெரியாது” என்றான் சம்பத்.
ஜெயக்குமார் சிரித்தவாறே நகர்ந்தான்.
“உன்னைத் தவிர இந்த விஷயம் யாருக்கும் தெரியாது” என்றான் சம்பத் மீண்டும். யோசனையாய், தனக்குத்தானே பேசிக் கொள்பவனைப் போல.
சற்றுத் தூரத்தில் ஷீலாவுக்கும் அவள் கணவனுக்கும் ஏதோ வாக்குவாதம் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும் ஜெயக்குமார் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.
“மை டியர் அப்பா, ஜெய் உங்களுக்குக் காலம் எல்லாம் நினைவிருக்கற தீபாவளிப் பரிசு தராமப் போக மாட்டான்” என்று சொல்லிக் கொண்டான்.
“என்ன ஜெய், தனக்குத்தானே பேசிக்கிட்டிருக்க?” மெல்லிய குரல் கேட்டுத் திரும்பினான். அஞ்சனா நின்றாள்.
“என்ன அஞ்சு?” என்று கேட்டான்.
“ஜெய், நான் சொன்னதை ஞாபகம் வெச்சிருக்கியா?” என்றாள் அஞ்சனா.
ஜெய் அவளை வெறித்தான். “இந்தச் சராசரிகளுக்கு நடுவே நீ வித்தியாசமானவன்னு நினைச்சேன், நீயும் ஒரு சராசரிப் பெண்தான், உனக்கும் பலவீனங்கள் இருக்குங்கறது எனக்கு அதிர்ச்சியா இருக்கு, அஞ்சு” என்றான்.
“ஏன், உனக்கு இல்லையா? நீ இங்கே இன்னும் தங்கறது உன் பலவீனம் தானே?” என்று கிண்டலாகக் கேட்டாள் அஞ்சனா. “நான் சொல்றதை நீ கேட்டா, எல்லாருக்கும் நல்லது” என்று தொடர்ந்தாள்.
“சே!” என்று அவளைவிட்டு விலகிப் போனான் ஜெய்.
இன்னும் அந்தக் கீச்சுக் குரல் பெண் பாடிக் கொண்டிருந்தது. யாரோ “க்ளாஸிக்கல் பாடு” என்று உத்தரவிட “கண்டேன், கண்டேன், கண்டேன் சீதையை” என்று பாடியது.
“தனித்துத் தன் உயிர்தன்னைத் தான்விட மகராசி” என்று உச்சஸ்தாயியில் சரணம் ஒலிக்கும்போது “ஐயோ” என்ற அலறல் கேட்டது.
அருகில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்த வக்கீல் பாண்டுரங்கன் ஓடி வந்தார். மொட்டை மாடியின் விளிம்பின் அருகில் விஷ்ணுவின் சக்கர நாற்காலி காணப்பட்டது. எப்போதும் அவரருகில் இருக்கும் காமாட்சி எங்கே? ஓ, அந்தப் பக்கம் நிற்கிறாள். ஷீலா அஞ்சனாவோடு வருகிறாள். அந்தப் பக்கம் யார்? ஜானவி.
அலறியது யார்?
பாண்டுரங்கன் கைப்பிடிச் சுவரினருகில் சென்று அண்ணாந்து பார்த்தார். இதயம் வாய்க்கு வந்துவிடும் போலிருந்தது. “ஐயோ!” என்று அவரும் கத்திவிட்டார்.
மொட்டைமாடி மேலிருந்து கீழே விழுந்து சந்தேகத்திற்கிடமின்றி உயிரை விட்டிருந்தான் ஜெயக்குமார்.
(தொடரும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings