in ,

கால மாற்றம் (சிறுகதை) – ராஜேஸ்வரி

`2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

கண்விழிக்கும் போதே ஊதுபத்தியின் சுகந்த மணமும், காலிஃபிளவரின் மசாலாவும் நாசியை துளைத்து, மூளையை சுறுசுறுப்பாக்கியது. புத்துணர்வுடன் எழுந்த யாதவ், புன்சிரிப்பு முகத்துடன்,  தன் அறையின் அட்டாச்டு பாத்ரூமிற்குள் புகுந்தான்.

“என்ன லதா? பையனுக்கு ஏதோ ஸ்பெஷலா சமைக்கற போல” என்றபடியே சமையலறையை எட்டி பார்த்தார் யாதவ்வின் அப்பா பிரகாஷ்.

“ஆஃபிஸ் போற அவசரத்துல சரியா சாப்ட மாட்டான். ஏதோ அவனுக்கு பிடிச்சத செஞ்சா இரண்டு வாய்… கூட கொஞ்சம் வயித்துக்குப் போகும் அதனால தான்” என்றாள் லதா.

“ஏம்மா, அப்பாக்கு செய்யறதையே நானும் சாப்டுவேனே” ஈரத்தலையை துவட்டியபடியே சொல்லிக் கொண்டு, சமையலறைக்கு வந்தான் யாதவ்.

“டே, சும்மா உங்கம்மாவை வம்புக்கிழுத்தேன், நீ சாப்பிடு”. சிரித்துக் கொண்டே சொல்லி விட்டு அங்கிருந்து நகன்றார் பிரகாஷ்

“ஏம்மா, வேலையை இழுத்து விட்டுக்கறீங்க” என்றபடியே தன் தாயின் கைகளை மெல்ல பிடித்து விட்டான் யாதவ்.

“பரவாயில்லை,  காலைல சாப்பிடறது தான் உடம்புல ஒட்டும். ஏதோ என்னால முடிஞ்சது, உனக்குன்னு ஒருத்தி வர்ற வரைக்கும் செய்யறேன்” என்று தன் மகனை வாஞ்சையுடன் பார்த்தாள்.

தாயின் கண்களை வெட்கத்துடன் பார்த்து தலையை குனிந்து கொண்டான் யாதவ்.

“மனசுக்கு திருப்தியா சாப்பிட்டாதான் நாள் முழுக்க இன்வால்வ்மென்ட்டோட வேலை செய்ய முடியும்.”

“அம்மா ,யூ ஆர் சோ ஸ்வீட்,நீ ரொம்ப இன்ட்டலிஜன்ட்”

“சரி சரி ஐஸ் வைக்காத, ஏற்கனவே குளிர்காலமா இருக்கு. ஆஃபிஸுக்கு டைம் ஆச்சு சாப்பிட வா” என்றாவாரே அடுப்பில் வெந்து கொண்டிருந்த தோசையின் மேல் காலிஃபிளவர் மசாலாவைப் பரப்பினாள்.

‘யாதவ், நாளைக்கு சன்டே னால உன்னோட கசின் ரம்யாக்கு சீர் செய்ய, பட்டு சாரி வாங்க போகணும். அப்படியே அடுத்தவாரம் புதன்கிழமை உன்னோட பர்த்டேக்கு, ட்ரெஸ் வாங்கிடலாம்.” என்றார் சாப்பிட்டு முடித்த யாதவ்விடம்.

“சரிப்பா நான் போய்ட்டு வரேன்”. அம்மாவிற்கு டாடா காண்பித்து விட்டு , தன் பைக்கை ஸ்டார்ட் செய்தான் யாதவ்.

அம்மாவின் கைப்பக்குவம் வயிற்றை குளிர்விக்க, மனதை குளிர்விக்கும் காந்தக் கண்களைக் காண… இதுவரை கோழிக்குஞ்சு போல் ஒடுங்கியிருந்த மனப்பறவை,  வீடு இருக்கும் தெருவைத்  தாண்டியதும் ,கழுகாய் உருக்கொண்டு தன் பெரிய சிறகுகளை விரித்து எண்ண வானில் , பைக்கின் வேகத்தை விட வேகமாகப் பறக்கத் தொடங்கியது.

நகரத்தின் தொழிலகக் கட்டிடங்களின் வரிசையில், பிரமாண்டமாக நின்றிருந்த வண்ணமயமான, மல்டி நேஷனல் கம்பெனியின் வாசலில், செக்யூரிட்டியின் விறைப்பான சல்யூட்டை புன்னகையுடன் தலையசைத்து ஏற்றுக்கொண்டு பசுமை நிறைந்த பார்க்கிங் ஏரியாவில் உறுமும் இன்ஜினை ஆஃப் செய்து நிறுத்தினான்.

எதிரில் பார்க் செய்யப்பட்டிருந்த லேடிஸ் வண்டிகளில் நீல நிற ஸ்கூட்டியை கண்கள் தேடியது. கண்டதும்,  மனப் பறவை தன் சிறகுகளை படபடவென அடித்து குதூகளித்தது. தன் பைக்கின் கண்ணாடியில் பார்த்து, காற்று கலைத்த தன் கேசத்தை ஒழுங்குபடுத்தினான்.

நைட் ஷிப்ட் முடித்து,  வெளிவரும்நண்பர்களுக்கு ‘குட் மார்னிங்’வைத்தபடியே, லிஃப்ட்டை நோக்கி நடந்தான். லிஃப்ட்டில், கை  தானாக ஐந்தாவது ஃப்ளோரின் பட்டனை அழுத்த, கண்கள் இரண்டாவது ஃப்ளோரின் பட்டனை தொட்டது.

“செகண்ட்  ஃப்ளோர்”  என்ற மதுரக் குரலின் ஒலியைக் கேட்டதும், மனப்பறவை சிறகுகளை படபடவென அடித்து ‘என் தேவதை இருக்குமிடம்’ என்று கூக்கரலிட்டது.

‘பதினொரு மணி வரை காத்திரு’என்று பறவைக்கு கட்டளையிட்டான்.மனம் மீண்டும் கோழிக்குஞ்சாய் ஒடுங்கியது

தன் கேபினில் நுழைந்து ஏ.சி யின் ஆற்றலை சிறிது குறைத்தான் . கம்ப்யூடரை ஆன் செய்து, இயந்திரத்தோடு இயந்திரமாகி உறவாடத் தொடங்கினான்.

மணி பதினொன்றைத் தொட்டதும், ‘டீ பிரேக்’ என்ற அறிவிப்பைத் தொடர்ந்து அதுவரை மௌனத்தால் நிரம்பியிருந்த நூறு பேர் வேலை செய்யும், அந்த பிரமாண்டமான அறை ,
பேச்சுக்குரல்களால் நிரம்பியது. யாதவ்வின் மனப்பறவை ‘காருண்யா’ வைப் பார்க்கணும்’ எழுந்திரு, ‘…. எழுந்திரு’ என கூக்குரலிட்டது.

இயந்திரத்தோடு கட்டுண்ட எண்ணங்களை விடுவித்துக்கொண்டு அறையை விட்டு வேகமாக வெளியேறினான்.

சில்லென்ற குளிர் காற்று இறுக்கமான முகத்தை இளக்கியது. மூன்றாவது ஃப்ளோரின் நீண்ட தளத்தில் நடந்து,  பல வண்ணங்களில் ஒய்யாரமாக இருக்கும் நாற்காலிகளில், வழக்கமாக உட்காரும் இடத்தில் அமர்ந்து காருண்யாவை எதிர்பார்த்தான்.

ஃபோனை எடுத்து மெசேஜில் கண்ணை ஓட்டிய அவனுக்கு, காற்றோடு கலந்து வந்த லாவண்டர் மணம் காருண்யா அருகில் வந்ததை உணர்த்தியது. காத்திருந்த கண்கள் நான்கும் ஒரு செகண்ட் முட்டி மோதி கட்டித் தழுவின. தங்களின் நிலமைக்கண்டு இருவரும் சிரித்துக் கொண்டனர்.

‘ஹனி,  உனக்கு என்ன வேணும்?

‘காப்பச்சீனோ’

‘ஓ.கே.’

தனக்கு,  ஒரு ப்ளாக் காஃபியும், அவள் கேட்டதையும் வாங்கி வந்தான்.

‘யாதவ்’  உங்க வீட்ல பேசினியா?

“ம்…இல்ல , இனிமே தான்… எப்படி ஆரம்பிக்கிறதுனு தெரியல” என்றான் யாதவ்.

“நா உன்ன மாதிரி பயப்பட மாட்டேன்பா” என்றாள் காருண்யா.

“தைரியமா சொல்லிட்டியா?” ஆச்சர்யமான விழிகளுடன் வினவினான் யாதவ்.

“இல்ல, இன்னும் இல்ல.. ஒரே அழுகை , ஆர்ப்பாட்டம் தான், அடம் பிடிச்சு எனக்கு பிடிச்சத வாங்கிடுவேன். சின்ன வயசுலர்ந்து இத ஃபாலோ பண்ணிட்டு வரேன். கிடைக்கலைன்னா வீட்டையே ரெண்டாக்கிடுவேன். இந்த விஷயத்லயும் அதையே யூஸ் பண்ணலாம்னு இருக்கேன். எங்கப்பா, ‘பாவம் , தாயில்லா பொண்ணாச்சே’ன்னு சரின்னுடுவார்” சொல்லிவிட்டு கடகடவென சிரித்தாள்.

அவள் கண்களை விரித்து தலையை ஆட்டி ஆட்டி பேசுவதை  கேட்டு, ரசித்து தானும் அவள் சிரிப்பில் சேர்ந்து கொண்டான்.

“காவியக் காதலர்களே ,” எப்படி இருக்கீங்க? என்று கேட்டபடியே ஆர்ப்பாட்டமாய் வந்தமர்ந்தாள் ஹசீனா.

“எங்களுக்கு இப்படி ஒரு பேரா?” கேட்டான் யாதவ்.

‘அத விடு நாளைக்கு நான், என் லவ்ஸ் ப்ரணேஷ், …..   மற்றும் பலர் பீச் ரெஸார்ட் போறோம்,
‘நீங்க ரெண்டு பேரும் வருவீங்களா?

‘ம்ஹூம், …..வரல’ இருவரும் கோரஸாகப் பதில் சொல்லினர்.

“இதனால தான் உங்களுக்கு இப்படி ஒரு பேரு. ஹஹஹ…….” அதிர சிரித்தபடியே ஹசீனா அங்கிருந்து நகர்ந்ததும் ,

“நீ எங்கேயுமே என்னை கூட்டிட்டு போக மாட்டியா? ஐயயோ தெரியாத்தனமா உன்னை லவ் பண்ணிட்டேனே” சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு தலையில் கை வைத்தாள், காருண்யா.

“ஹேய், டோண்ட் ஒர்ரி பேபி, ஊரறிய நீ என் உறவானதும் நீ அண்டார்டிகா போணும்னாலும் கூட்டிட்டுப் போறேன் ‘.என்றான் யாதவ் கண்கள் மின்ன.

“அதானே பார்த்தேன், என்னோட செலக்க்ஷன்  தப்பா இருக்காதே, அப்புறம் அத்தை கிட்ட சொல்லிடு,.. அவங்களோட சண்டையெல்லாம் போட மாட்டேன். ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு, என்ன..கொஞ்சம்  பிடிவாதம் ஜாஸ்தி, அவ்வளவுதான்!” என்றாள் காருண்யா.

“இது போதாதா?” என்றான் யாதவ் சிரித்துக்கொண்டே.

“சரி, எப்போ பேசப்போற?” கேட்டாள் காருண்யா

“ம்….அம்மா அப்பா என்னை புரிஞ்சுப்பாங்கன்னு நம்பிக்கை இருக்கு, பட்.. எப்ப? எப்படி.? ஆரம்பிக்கிறதுனு தெரியல. நாளைக்கு பேசலாம்னு நினைச்சுகிட்டு இருந்தேன். ஷாப்பிங் போகணூம்னு சொன்னாங்க.”சொல்லிக் கொண்டிருந்தவன் “ஹே…. ஐ காட் அன் ஐடியா!”என்று முகம் பிரகாசமானான்.

“என்ன?  என்ன ஐடியா?” ஆர்வமாக கேட்டாள் காருண்யா.

“மண்டே சொல்றேன், ஒ.கே .? லஞ்ச்சுக்கு வர லேட்டாகும். எனக்காக வெய்ட் பண்ணாத. நீ சாப்பிடு. ஓகே.பை…டா…” என்றபடியே எழுந்தான் யாதவ்.

“ம்….பை..” என்றாள் காருண்யா யோசனையுடன் கையசைத்து. இருவரும் விலகி அவரவர் சீட்டுக்கு விரைந்தனர்.

வழக்கமான  ஞாயிற்றுக் கிழமை வேலைகள் முடித்து யாதவ் தன் தாய் தந்தையுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தி விட்டு, ஃபோனை எடுத்துக் கொண்டு தன் அறையில் அமர்ந்து காருண்யாவுக்கு சாட் செய்ய ஆரம்பித்தான்.

“யாதவ் “, ஒரு மூணு மணி போல கிளம்பலாமா?” கேட்டபடியே நுழைந்தாள் யாதவ்வின் அம்மா லதா.

“ஆமா, அப்ப கிளம்பினாதான் சரியாயிருக்கும், காருக்கு பெட்ரோல் போட்டு ரெடி பண்ணிட்டேன்” பின்னாடியே வந்தார் தந்தை பிரகாஷ்.

“நீங்க ரெண்டு பேரும் மட்டுமே போய்ட்டு வாங்களேன்” என்றான் யாதவ்.

“ஏம்ப்பா ,உடம்பு ஏதாவது சரியில்லயா?” என்றார் வாஞ்சையுடன் யாதவின் தந்தை.

“அதெல்லாம் இல்ல, புடவையை அம்மா செலக்ட் பண்ணுவாங்க , நீங்க எனக்கு பர்த்டே ட்ரெஸ் செலக்ட் செஞ்சு வாங்கிட்டு வாங்க” என்றான் யாதவ்.

“சின்ன வயசுலேர்ந்து நீ கேட்டதைத் தான் நாங்க வாங்கித் தந்துருக்கோம். நாங்க செலக்ட் பண்றது, உன் மனசுக்கு பிடிக்கலன்னா , பிறந்த நாள் முழுக்க உனக்குள்ள ஒரு வருத்தம் இருந்துகிட்டே இருக்கும். இப்ப உள்ள ட்ரெண்டு என்னனு எங்களுக்கு  தெரியாதே” என்றார் பிரகாஷ்.

“எங்க காலம் போலயா? பெரியவங்க எத வாங்கி கொடுத்தாலும், பிடிக்காட்டாலும் நாங்க மனச மாத்திகிட்டு ஏத்துக்குவோம்”. என்றாள் லதா.

“ஆமா..ஆமா”..ஆமோதித்தார் பிரகாஷ்.

“அப்போ அதே மாதிரியே நீங்களும் எனக்கு செய்ய வேண்டியதானப்பா. நீங்க ஏம்ப்பா எனக்கு பிடிச்ச ட்ரெஸ் வாங்கறீங்க? எனக்கு மட்டும் ஏம்மா, ‘நீ கஷ்டபட்டு எனக்கு பிடிச்சத சமைக்கற?” என்று விவாதத்தை ஆரம்பித்தான் யாதவ்.

“நீ எங்களுக்கு ஒரே பையன், உன்னோட சந்தோஷம் தான் எங்களுக்கு முக்கியம். அதுதான் எங்களுக்கும் சந்தோஷம்.” என்றார் பிரகாஷ்.

“யாதவ்..அப்பாவப் பாத்தியா’? தலைக்கு டை அடிச்சுருக்காரு, டீ ஷர்ட் வேற, கல்யாணத்துக்கு பைஜாமா வாங்கிக்கப் போறாராம், என்னையும் சுடிதார் போட்டுக்க சொல்றார்,…..ஹஹ்ஹா..அப்பா எப்படி மாறிட்டா பாரு” என்றபடி அம்மா  சிரித்தாள்.

“காலத்துக்கு தக்க மாறிக்க வேண்டியதுதான். எங்காலத்துல கை ஓடிய  எழுதுவோம். இப்போ எல்லாம் டிஜிட்டல் மயம். மாற்றம்கிறது வாழ்க்கையில நடந்துக்கிட்டே தான் இருக்கும். என்னோட தாத்தா கிராமத்துல வாழ்ந்தவரு. ஆனா என்னோட அப்பா படிப்புக்காக சென்னைக்கு வந்தாரு. என்னையும் படிக்க வெச்சாரு. வாழ்க்கையின் விதிப்படி தான் மனசும் போகும்.” என்றார் பிரகாஷ்.

“அப்பா, இவ்வளவு தெளிவா யோசிக்கற நீங்க என்னோட விருப்பத்தையும் ஏத்துப்பீங்க..னு எனக்கு நம்பிக்கை வந்துருச்சு”

“நீ…. என்ன சொல்ல வர்ற…?” யாதவ்வின் தாய் கொஞ்சம் பதட்டமானாள்.

சிறுது  நேர மௌனத்திற்கு பிறகு, யாதவ் மெதுவாக ஆரம்பித்தான்.

“ம்மா , ப்பா… இந்தப் பொண்ணு… நா வேலை பார்க்கிற ஆஃபிஸ்ல  வேல பார்க்கறாங்க.” போனில் புன்னகைக்கும் காருண்யாவின் புகைப்படத்தைக் காட்டியபடி மேலும் சொன்னான்.

“இரண்டு பேரும் ஒருத்தரையொருத்தர் பேசிப் புரிஞ்சுக்கிட்டோம். அவளுக்கு அப்பா மட்டும் தான். ரொம்ப  நல்ல பொண்ணு.” என்றான் யாதவ் மிக நிதானமான குரலில்.

“ம்..பார்த்தா நல்லப் பொண்ணாத்தான் தெரியுது.” என்றார் பிரகாஷ்.

அவர் மனம் அதிர்ச்சியடைந்ததை முகம் காட்டியது. அம்மா , வருத்தமான குரலில் கேட்ட , குடும்ப விவரங்களையும் சொன்னான்.

“ஆனா யாதவ் ,கல்யாண விஷயத்துல மாற்றத்தை ஏத்துக்கறது  ரொம்ப கஷ்டமான விஷயம். நாங்க ஏத்துக்குவோம். ஆனா நம்ம …உறவுக்காரர்கள் எல்லாரும்  ஏத்துக்கணுமே” என்றாள் அம்மா யோசனையுடன்.

“மாற்றத்தை நம்ம குடும்பமே முதல்ல ஆரம்பிப்போமே.. மா.. அப்புறம் …. இதுவும்  கால மாற்றத்தோட  ஒரு  செயல் தான்னு, மெல்ல மெல்ல எல்லார்க்கும் புரிய வைக்கலாம்.” என்றான் நம்பிக்கையுடன் யாதவ்.

“நீ சொல்றது சரி தாம்ப்பா. ஆனா இது சாதாரண விஷயம் கிடையாது. இது உன்னோட வாழ்க்கை மட்டுமில்ல. இதுல குடும்ப கௌரவம்,சமூக கட்டுப்பாடு, சம்பிரதாயம் எல்லாம்  இருக்குப்பா.” என்றார் சிறிது கோபம் கலந்த குரலில் பிரகாஷ்.

‘அப்பா.,  உங்க தாத்தா காலத்துல யாரும்  படிக்கல, ஆனா உங்க அப்பா படிக்கறதுக்கு ஒத்துக்கிட்டாரு, அதுவே ஒரு பெரிய சமூகமாற்றம் தானேப்பா.”என்றான் யாதவ்.

“ஆனா எங்கப்பா , கிராமத்துல நம்ம சமூகத்தை சேர்ந்த பொண்ணத் தான் கட்டிக்கிட்டாரு. நானும் , அப்படித்தான்” என்று லதாவை பார்த்தார் பிரகாஷ்.

“ஆனா, நா சின்ன வயசுலேர்ந்து பாக்கறேன்.நீங்க ரெண்டு பேரும் நிறைய சண்டை போட்டிருக்கீங்க. அதுலேயும் அம்மாவும், பாட்டியும் போட்ட சண்டையை என்னால மறக்கவே முடியாது.” என்று சிறிது குரலை உயர்த்தினான் யாதவ்.

“டே.ய்…இதெல்லாம்  சகஜமா எல்லார் வீட்லயும் நடக்கறது தாண்டா”.என்றார் பிரகாஷ்.

“அப்போ..ஒருத்தரையொருத்தர்மனச காயப்படுத்த மாதிரி பேசறது, உறவுகளை இழிவா…
விமர்சிக்கறது..இதெல்லாம் சாதாரண விஷயமா…ப்.பா…?

“டே..எல்லா சமூகத்துலயும் இது நடக்கறது தாண்டா…”என்றார் பிரகாஷ்.

“அப்படிப் பாத்தா எல்லாரும் ஒண்ணுதான்….. ஒரே குட்டையில ஊறிய மட்டைகள்தான்.” கோபமானான் யாதவ்.

“இப்ப நீ என்ன சொல்ற.? அவளைத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேங்கிறியா?

“ஆமா..,ப்பா..ஆனா இத உங்க கௌரவத்துக்கு இழுக்கா நினைக்காம . இதை ஒரு கால மாற்றமா ஏன் ஏத்துக்க கூடாது? என் பிறந்த நாளன்னைக்கு என் மனசு வருத்தப்படக் கூடாதுன்னு நினைக்கற நீங்க என் கல்யாணத்துல மட்டுமில்ல, நா வாழ்க்கை பூரா மன வேதனையோட வாழ்ந்தா பரவாயில்லயா?” என்று தன் பக்க நியாயத்தை கூறினான் யாதவ்.

சிறுது நேர மௌனத்திற்குபின் பிரகாஷ் “சரிப்பா….. அடுத்த வாரமே பொண்ணு பார்க்க போகலாம்.” என்றார்.

கால மாற்றத்திற்கான ஒரு கருவியாக யாதவ்-காருண்யாவின்  காதலை பிரபஞ்சம் தேர்ந்தெடுத்தது.

(முற்றும்)

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    போராடு … வாழ்வதற்கு (சிறுகதை) – வீ .சிவா

    நட்புக்கு மரியாதை (சிறுகதை) – முகில் தினகரன், கோவை